இந்தியாவின் அரசியல் என்பது அதன் ’சனநாயக மறுப்பை’ அடிப்படையாகக் கொண்டது. இப்பண்பை அது பார்ப்பனிய பாசிசத்திலிருந்து உள்வாங்கியது. இந்த பார்ப்பனியப் பண்பை கேள்வி எழுப்பி உடைத்து நொறுக்கும் முயற்சிகள் தான் சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால மக்கள் போராட்டம். இது தேசிய இன விடுதலையாக, பழங்குடி போராட்டமாக, விவசாயிகள் எழுச்சியாக, நக்சல்பாரிகளாக, இசுலாமியர் போராட்டமாக, தலித்துகள் எழுச்சியாக, இந்தி எதிர்ப்பாக, இட ஒதுக்கீட்டு போராட்டமாக எழுந்த ஒவ்வொரு மக்கள் திரள் போராட்டமும் பார்ப்பனியத்தின் சனநாயக விரோதத்தை கேள்வி எழுப்பியது. வர்க்கமும், வர்ணமும் இணைந்து பிணைந்து நிற்கும் இந்திய சனநாயகம் அடிப்படையில் சாமானியர்களுக்கு எதிரானது.
இந்திய சனநாயகத்தின் இந்த மக்கள் விரோத பண்பை கேள்வி எழுப்பும் கோட்பாடாகவே திராவிடம் வளர்ந்தது. இந்தியாவின் இதயமாக, மூளையாக விளங்கும் பார்ப்பனியத்தை ஒவ்வொரு முனையிலும் எதிர்த்து நின்று அம்பலப்படுத்தியது. திராவிட நாடு, சுதந்திரத் தமிழ்நாடு என திராவிடர் இயக்கம் மேற்கொண்ட கோரிக்கைகளின் அடிப்படை என்பதே இந்திய பார்ப்பனியத்தின் சனநாயக விரோத கட்டமைப்பிலிருந்து தமிழர்களையும், பிற பாட்டாளிகளையும் காக்கவேண்டுமென்பதே.
வீதியில் ஒளித்த இந்த முழக்கங்களை சட்டம் இயற்றும் பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்குள் கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத்தருவோம் எனும் முழக்கத்துடனேயே திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தன. ஆட்சியில் அமர்ந்தாலும் அதிகாரவர்க்கமெனும் நிர்வாக அமைப்புகள் வலிமையான பார்ப்பனிய கட்டமைப்புகளாக நின்றிருந்தன. இந்த கட்டமைப்புகள் ஆட்சியிலிருந்து மட்டுமே அம்பலப்படுத்தப்படக்கூடியவை அல்ல. ஆட்சி அதிகாரம் மட்டுமே இவற்றை மாற்றிவிடக்கூடியவை அல்ல என்பதை தெளிவுபடுத்தியவர் தந்தைப் பெரியார். இதனாலேயே மக்களுக்காக வீதியில் முழங்கும் அரசியலை விட்டு அவர் வெளியேறவில்லை. காமராசரை ஆதரித்து நின்றாலும், அவர் ஆட்சியிலும் போராடினார்.
இந்தியாவில் மக்கள் திரண்டு போராடுவதென்பதே பார்ப்பனியத்தை அச்சுறுத்தக்கூடியது. இதனாலேயே ஒவ்வொரு மக்கள் எழுச்சியையும் பார்ப்பனியம் அடக்கமுயன்றது, அரச பயங்கரவாதத்தை ஏவியது. இந்த அடக்குமுறைக்கு அதிகாரிகளை பயன்படுத்தியது, நீதிமன்றங்களைக் கொண்டு தம்மை நியாயப்படுத்தியது, ஆளுனர்களைக் கொண்டு மிரட்டியது, இராணுவத்தை வைத்து ஒடுக்கியது. இந்தியாவிற்குள்ளாக சனநாயகம் தழைக்கக்கூடாது என்பதற்காக அண்டை நாடுகளில் கூட அடக்குமுறையை ஏவுவதற்கு துணை நின்றது.
இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவை அதிகாரத்தை கைப்பற்றும் காங்கிரஸ், பாஜக எனும் தேசியக்கட்சிகளாக மாறின. இந்த நடவடிக்கைகளை கேள்வி கேட்காத மாநிலக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டன. மக்கள் உரிமைகளை முன்வைத்து மேலெழுந்த மாநிலக்கட்சிகள், இந்த அடக்குமுறைக்கு அச்சப்பட்டே தமது ஆட்சிகளை நடத்தமுடிந்தது. மீறியவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்கள். இதுவே இந்திய குடியரசு.
இந்திய பார்ப்பனியத்தின் அடக்குமுறையை கேள்வி எழுப்பாமல் தமக்குள்ளாக முரண்பாடுகளை வளர்த்து மோதிக்கொள்பவர்களை இந்திய அரசு அரவணைக்கும், வளர்த்தெடுக்கும், ஆட்சிக்கட்டிலுல் அமரவைக்கும். சக மக்களை சாதியாக, மதமாக, இனமாக முரண்பட்டு மோதிக்கொள்ளவைக்கும் அமைப்புகள் மீது அடக்குமுறைகளை ஏவாது. மாறாக நியாயம் கேட்கும் அமைப்புகள், உரிமைக்காக குரல் எழுப்புபவர்கள், சிந்திப்பவர்கள் தேசவிரோதிகளாக மாற்றப்படுவதன் அடிப்படையே இது தான்.
தம் மாநிலங்களுக்குள் எழும் சனநாயக குரல்களை முடக்கி, ஒடுக்குவதைச் செய்தால் மட்டுமே ஒரு மாநிலக்கட்சியினுடைய ஆட்சி பிழைக்கும். புரட்சிகர கருத்துக்களைப்பேசிய, போராடிய கட்சிகள் தேர்தல் களத்தில் நுழைந்து ஆட்சி அமைக்க முயலும் போது தன்னியல்பாக அடக்குமுறை நிறுவனங்களாக மாறிவிடுவதும் இதன் அடிப்படையிலேயே. இதனாலேயே ‘நாங்கள் ஆட்சி அமைத்தால், நான் முதல்வரானால்’ எனப் பேசும் கட்சிகளை இயக்கங்கள் நம்புவதில்லை. ஆட்சியை கைப்பற்றவோ, முதலமைச்சர் ஆவதற்கு ஆசைப்படாத கட்சிகள் இவ்வகையிலேயே மக்களோடு போராட்டங்களில் பங்கேற்கின்றன, அடக்குமுறையை எதிர்கொள்கின்றன. வழக்குகளை சந்திக்கின்றன.
இப்படியாக இருக்கும் இரண்டு வகைக் கட்சி குழுக்களில் மே 17 இயக்கம் இரண்டாம் வகையாக மக்களோடு நிற்கும், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள், இசுலாமிய கட்சிகள் ஆகியவற்றோடு கைக்கோர்த்து நின்றது, நிற்கிறது. ‘நான் முதல்வரானால் உங்கள் பிரச்சனைகளை தீர்த்துவிடுவேன்’ என வாக்குறுதி கொடுக்கும் பெரிய கட்சிகளுக்கு உள்ளே உருவாகி வளர்ந்து இருக்கும் ’சனநாயக விரோத கட்டமைப்புகளை’, ‘பார்ப்பனியத்தோடு சமரசம் செய்து கொள்ளும் நடவடிக்கைகளை’ கணக்கில் எடுத்துக் கொள்வதாலேயே எங்களால் அதிமுக, திமுக போன்றவற்றை ஆதரிக்க இயலுவதில்லை. மாறாக, மக்களோடு நின்று போராடும் சிறுதேர்தல் கட்சிகளின் பிரதிநிதிகள் சட்டமன்றம், பாராளுமன்றங்களுக்குள் சென்றால் ’சனநாயக கோரிக்கைகளும் அங்கே பேசப்படும்’ என்பதாலேயே இக்கட்சிகள் ஆதரவிற்குரியவை ஆகின்றன.
இக்கட்சிகள் ஈழத்தை ஆதரித்து நிற்பதும், அதற்காக அடக்குமுறைகளை எதிர்கொள்வதற்கான காரணம், தமிழீழப்போராட்டம் என்பது சனநாயத்தை உருவாக்க நடக்கும் போராட்டம். அது சிங்களப்பேரினவாதத்தை மட்டும் அச்சுறுத்தவில்லை. அடிப்படையில் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கும் அச்சுறுத்தலை உருவாக்கியது. இதனாலேயே இந்திய பார்ப்பனியம் ராணுவத்தை அனுப்பியது. இந்தியப் பார்ப்பனிய பத்திரிக்கைகள் புலிகளை கொச்சைப்படுத்தினார்கள். இந்திய அதிகாரிகள் புலிகளை தடை செய்தார்கள். இந்திய நீதிமன்றங்கள் தண்டனைக் கொடுத்தார்கள். இந்திய அறிவுசீவிகள் புறக்கணித்தார்கள். இவையெல்லாம் இந்தியப் பார்ப்பனியத்தினை கட்டிக்காக்கும் கட்டமைப்புகள். இந்தக் கட்டமைப்புகள் அனைத்தையும் எதிர்த்து அம்பலப்படுத்தியவர் தந்தைப் பெரியார் அவர்கள். இதனாலேயே இவர் நமக்கான வழிகாட்டி ஆகிறார். இக்கட்டமைப்புகளோடு சமரசம் செய்து ஆட்சியை அமைக்கும் கட்சிகளால் சலுகைகளைப் பெற்றுத்தரலாமே ஒழிய, நிரந்தர தீர்வை பெற்றுத்தர இயலாது. இந்த கட்டமைப்பிற்கு எதிராக நாம் அமைக்கும் மாநில ஆட்சி என்பது ‘நிழல் தரும் மரமாகலாம், பார்ப்பனிய புயலுக்கு ஒதுங்கும் குடையாக இருக்காது’.
இந்த பார்ப்பனிய கட்டமைப்பினை அம்பலப்படுத்தவும், எதிர்கொள்ளவும் நமக்கு இருக்கும் ஒற்றை வழிமுறை ‘கருத்துச் சுதந்திரம்’ என்பதே. இச்சுதந்திரத்தைத்தான் நாம் போராட்டங்கள், ஒன்று கூடல்கள், கருத்தரங்குகள் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். இதனாலேயே இவைகளுக்கு காவல்துறை அனுமதி வாங்கவேண்டுமென்கிறது பார்ப்பனிய கட்டமைப்பு. குடியரசு நாடுகளில் கருத்துரிமையை பாதுகாக்கவே காவல்துறை இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் பார்ப்பனியத்தால் நிர்வகிக்கப்படும் காவல்துறையிடமிருந்து தான் கருத்துரிமையை மீட்க போராட வேண்டி உள்ளது.
இதே சமயம், இஷா யோகாவில் கூட்டம் நடத்தலாம், பல்லாக்கு ஏறலாம், மந்திரிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கலாம், பூசை செய்யும் உரிமையை மறுக்கலாம் இவையெல்லாம் பார்ப்பனியத்தின் உரிமைகள். இவற்றை நடத்த எந்த சிக்கலையையும், அரசின் எந்த நிறுவனமும் கொடுக்க முடியாது. ஏனெனில் பார்ப்பனியத்தை வளர்த்து எடுக்கவே இவை உருவாக்கப்பட்டன. இந்தப்பார்ப்பனியமே இந்தியாவின் அதிகார மையம், இதுவே இந்திய முதலாளியத்தின் முதுகெலும்பு.
இந்த பார்ப்பனிய கட்டமைப்பை பாதுகாத்து மாநில அரசுகள் பிழைத்துக் கொள்கின்றன. இந்த பார்ப்பனியத்தை கேள்வி எழுப்பும் சனநாயக அமைப்புகள் மீது இதனாலேயே அடக்குமுறையை ஏவி தம்மை நியாயப்படுத்த பிரச்சாரங்களை கட்டவிழ்க்கின்றன.
ஆர்,.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பு பார்ப்பனியத்தை பாதுகாப்பதாலேயே இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ். என்பது கண்ணுக்கு புலப்படும் பார்ப்பனிய நிறுவனம். இதை இந்திய அரசிடம் அவர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. இந்திய அரசு விசாரணை செய்வதில்லை. இந்த நிருவனத்தை மாநிலக்கட்சிகள் எதிர்த்துப் பேசுவதுமில்லை, செயல்படுவதுமில்லை.
இப்படியான ஒரு தேசத்தில் கட்சிகளின் எல்லைகளைப் புரிந்தே அதற்குரிய ஆதரவையும், எதிர்ப்பையும் நாம் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்த தேசத்தின் ஆன்மாவாக செயல்படும் பார்ப்பனியத்தோடு சமரசம் செய்து பிழைக்கும் நிலையை விரும்பாதவர்கள் மக்கள் இயக்கங்களாக, சாமானியர்களுக்கான தேர்தல் கட்சிகளாக இயங்குகின்றன. இந்தியாவில் முழுமையான அதிகாரத்தை விரும்புகிறவர்கள் பார்ப்பனியத்தோடு உறவாடாமல் இயங்க இயலாது. இதை மறைக்கவே பிற சனநாயக இயக்கங்கள் மீது அவதூறு பரப்புவதும், அடக்குமுறை ஏவுவதுமாக தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
ஈழப்படுகொலைக்கான நினைவேந்தல் என்பது அடிப்படையில் சாமனிய தமிழ் மக்களுக்கான சனநாயக உரிமையைக் கோரும் வடிவம். ஈழ விடுதலைக் கோரிக்கை என்பது சனநாயகக் கோரிக்கை. இதனாலேயே திராவிட இயக்கம் இக்கோரிக்கையை ஏற்று நின்றது. ஈழத்திற்கும், காசுமீருக்கும், மலேசியாவிற்கும், சோவியத்திற்கும், கோவாவின் விடுதலைக்குமென திராவிட இயக்கம் ஆதரவளித்ததும், உலக விடுதலைப் போராட்டங்களை தமது மேடைகளில் முழங்கியதற்குமான காரணம், திராவிட இயக்கத்தின் சனநாயக மரபும், கோட்பாடும் அடிப்படை காரணம். ‘விடுதலை’ உணர்வே திராவிடர் இயக்கக் கோட்பாட்டின் அடிப்படை. அம்மரபே திராவிட மாடல் ஆகும். இந்தியப் பார்ப்பனியத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப நடத்தப்படும் ஆட்சி அதிகாரம் என்பது அக்கட்சிகளின் ‘மாடலாக’ இருக்கலாம், அது திராவிட மாடலாக மாறுவது சற்று அதிகப்படியான சிரமத்தை அவர்களுக்கு கொடுக்கும். அச்சிரமத்தை அவர்கள் ஒருக்காலும் மேற்கொள்ளப்போவதில்லை.
‘ஒற்றை மெழுகுவர்த்தியை ஏந்துவதைக் கண்டு ஏன் பார்ப்பனியம் அஞ்சுகிறதென்றால், அது இருண்டுகிடக்கும் இத்தேசத்தில் சிறிதளவேனும் ஒளியைக் கொடுத்துவிடும் அபாயம் உண்டு’. இப்படியாக மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு அஞ்சிக்கிடக்கும் பார்ப்பனியத்திற்கு சேவை செய்யவில்லையெனில் மாநில அதிகாரம் பறிபோய்விடுமென்பது நிதர்சனம். ஏனெனில் இந்தியாவின் குடியரசு என்பது ‘பார்ப்பன சனாதன சர்வாதிகாரத்தின் மறுவடிவம்’. இதை திமுகவோ, அதிமுகவோ எதிர்கொண்டு வென்றுவிடுமென்று நாம் எதிர்பார்க்க இயலாது.
பார்ப்பனியத்தை வெல்ல கோட்பாட்டு புரிதல் மட்டும் போதாது, பார்ப்பனிய அடக்குமுறையை எதிர்கொள்ளும் துணிச்சலும் வேண்டும். அறிவுசீவித்தனம் மட்டும் போதாது, மக்களை கைவிடாது வன்முறையை எதிர்க்கும் நேசம் வேண்டும். இதை தந்தைப்பெரியார் எமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். வழக்குகளுக்கும் சிறைகளுக்கும் அச்சப்படாத தோழர்களால் நிறைந்திருக்கும் எமது மே பதினேழு இயக்கம் என்றும் மக்களோடு நிற்கும், போராடும்.
ஏனெனில், மக்கள் எழுச்சியைத்தவிர பார்ப்பன பாசிசத்தை வெல்ல வேறெந்த யுக்தியையும் வரலாறு நமக்கு சொல்லித்தரவில்லை.
கருத்தியல் ரீதியாக மக்களை
கட்டியெழுப்புவதே உங்கள் முன்
உள்ள தலையாகிய பணி.
தி.மு.க. ஈழப்போரில் நடந்து கொண்ட
விதம் எல்லோருக்கும் தெரிந்ததே.
பார்ப்பனியம் அதிகாரங்கள் அதிகாரவர்க்கங்களுடன் பொருளாதாரங்களுடன்இரண்டற
கலந்தது.
மார்க்ஸ் பெரியார் வழியில் விஞ்ஞான
பூர்வமாக சமூகத்தை அணுகி தமிழ்
மக்கள் விடுதலையை தொடர்ந்து
முன்னெடுக்க எனது வாழ்த்துக்கள்.