களப்பணியில் வெற்றிகண்ட மே 17 தோழர்கள்

போக்சோவில் கைதான நாகை ஆசிரியரின் குற்றப் பின்னணி என்ன?

உலகெங்கும் எளிய மக்கள் இருக்கும் அதே நிலையில்தான் நாகை மாவட்டம் திருக்குவளை தாலுக்கா வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சரண்யா மற்றும் சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் உள்ளனர். நெருக்கடியான சூழலில் யாரை அணுகுவது, யாரிடம் ஆலோசனை கேட்பது, நேர்மையாளர் யார், பொய்யர்கள் யார், எதார்த்த அரசியல் களம் எப்படி என்று ஏதுமறியா நிலை தான் அவர்களது நிலையும். அப்படிப்பட்ட தம்பதியினரின் 7 வயது பெண் குழந்தை, பள்ளி தலைமை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றால் அந்த பெற்றோரால் என்ன செய்திருக்க முடியும்?

அந்த பிஞ்சு குழந்தை வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட காருகுடி தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த பள்ளியில் மொத்தம் எட்டு மாணவர்களே பயிலுகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தமிழ்செல்வன் என்பவரும் தேவகி என்ற ஒரு பெண் ஆசிரியையும் பணிபுரிகின்றனர். இந்த தலைமையாசிரியர் குடிப்பழக்கம் உடையவர். பள்ளி அலுவல் நேரத்திலேயே மது அருந்திவிட்டு பள்ளிக்கு வரும் பழக்கமுடையவர்.

அந்த தலைமை ஆசிரியர் சக பெண் ஆசிரியைக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த ஆசிரியை, தான் தப்பித்துக்கொள்ள பள்ளியில் பயின்று வரும் அந்த 7 வயது சிறுமியை இதில் பலியிட முடிவு செய்கிறார். தலைமை ஆசிரியர் மது அருந்திய நிலையில் பள்ளிக்கு வரும் பொழுதெல்லாம் அந்த ஆசிரியை சிறுமியை தலைமையாசிரியருடன் தனிமையில் விட்டு வந்து விடுவார். தலைமை ஆசிரியரின் பாலியல் இச்சைக்கு ஆசிரியை அந்த சிறுமியை பலிகடவாக்கியுள்ளார். இது தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் ஒன்று என்று பின்னர் உள்ளூர் நபர் ஒருவர் அந்த ஆசிரியையிடம் விசாரிக்கும் போது தான் தெரியவந்தது.

குழந்தையின் பெற்றோருக்கு 2022 மே மாதம் நான்காம் தேதி தான் தங்கள் ஒற்றை மகளை யாரோ பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதற்காக குளிப்பாட்டும் போது குழந்தையின் உடலில் சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அது குறித்து அந்த குழந்தையிடம் விசாரிக்கையில் காத்திருந்தது அதிர்ச்சி. தான் பயிலும் பள்ளியின் ஆசிரியரே இப்படி ஒரு மிருகத்தனமான செயலை செய்திருப்பதை அந்த ஏழு வயது குழந்தை வெளிப்படுத்தியது.

குற்றவாளி தலைமை ஆசிரியர்

இதற்கு முன்னர் அந்த பெண் குழந்தையை அந்த பெண் ஆசிரியை அடித்து உடலில் காயம் ஏற்படுத்தியுள்ளார். அதனை பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை நேரடியாக பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியையிடம் கேட்டுள்ளார். அவரை அந்த பெண் ஆசிரியை, ‘என்னிடம் பேசாதே. நீ எல்லாம் என்னுடன் பேச தைரியம் வந்துவிட்டதா?’ என்று வசைபாடி அனுப்பியுள்ளார். அதன்பின், சில நாட்கள் அக்குழந்தையை பள்ளி கட்டிட வாசல் அருகில் தனிமைப்படுத்தி உட்கார வைத்துள்ளார். பின்னர் தலைமை ஆசிரியர் உட்காரும் பகுதியில் அமர்த்தியிருக்கிறார். அந்த பெண் குழந்தையின் மேல் ஆசிரியைக்கு இருந்த முன் வெறுப்பினாலும், தலைமை ஆசிரியரின் பாலியல் தொல்லையிலிருந்து தப்பிக்கவும் அந்த குழந்தையை அவரிடம் அனுப்பி நாசப்படுத்தியுள்ளார். அந்த தலைமை ஆசிரியர், ‘குளத்து நீரில் தள்ளி உன்னை கொன்றுவிடுவேன்’ என்று அந்த குழந்தையை மிரட்டியதால் பயந்துபோன சிறுமியும் பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை.

தங்கள் குழந்தை தலைமை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்த பெற்றோர், தங்கள் குழந்தை மீதான தலைமை ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து கேட்க நேரடியாக பள்ளிக்கு செல்ல, விவகாரம் வெளியே தெரிய தொடங்குகிறது. அப்பகுதியை சேர்ந்த மே 17 இயக்கத் தோழர்களுக்கு இந்த விவரம் தெரியவர, பிரச்சனையை அவர்கள் கையிலெடுத்தனர்.

இதற்கிடையே, தலைமை ஆசிரியரின் குழந்தை மீதான பாலியல் குற்றச் சம்பவம் வெளியில் தெரிய வர, அது பரவிடாமல் குழந்தையின் பெற்றோரை மிரட்டுவது, பணத்தைக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் வாயை மூடுவது போன்ற செயல்களில் அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஈடுபட்டுள்ளார். மேலும், சில கட்சி பொறுப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர். பிரச்சனை மாவட்ட துணை கல்வி அலுவலர் (AEO) வரை சென்றதும், அவர் பெற்றோரிடம் பேசி ஆசிரியர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்வதாக கூறி விவகாரத்தின் சூட்டை தனிக்க முயற்சித்துள்ளார். பின்னர், கட்சியினர், தலைமை ஆசிரியர் மற்றும் AEO ஆகியோரிடையே கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. இறுதியில், கட்சியினரிடம் ரூபாய் 10 லட்சம் பேரம் பேசி முடித்து, அந்த பணத்தை பலருக்கு பங்கு போட்டு பிரித்து எடுத்துக்கொண்டனர். பெற்றோரை மானம் மரியாதை என்று அச்சுறுத்தி, பேசாவிடாமல் செய்துவிட்டனர். இதனால் அவர்கள் காவல்துறையை அணுகவில்லை என்பதும் தெரியவந்தது.

மே 17 இயக்கத் தோழர்கள் பிரச்சனையை கையிலெடுத்த பின்பு, தலைஞாயிறு புத்தூர் ஒன்றிய செயலர் அவர்களை தொடர்புகொண்டு சம்பவங்களை எடுத்துரைத்த பிறகு, சமூகநலத்துறை, பத்திரிக்கை நண்பர்கள், CPI(M) மாதர் சங்கம் போன்றவர்களிடம் செய்தியை தெரியப்படுத்தினர். இதற்கிடையில் மே 17 இயக்கத் தோழர் உயர் மட்ட காவல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். மற்றொரு தோழர் பெற்றோர்களை தொடர்புகொண்டு பேசியபோது அவர்கள் ஊக்கமடைந்தனர்.

மே 17 இயக்கத் தோழர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் வந்த குழந்தைகள் காப்பகம் பணியாளர்களையும், பத்திரிக்கை நண்பர்களையும் காருகுடி வரவழைத்தனர். ஆனால், கட்டபஞ்சாயத்து செய்தவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை உண்மையை சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் அவர்கள் நடந்த உண்மையை மறைத்து ஆசிரியர் கண்டிக்க மட்டுமே செய்தார் என்று கூற, வந்திருந்த பத்திரிக்கையாளர்களை கட்சியினர் மிரட்டி அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து மே 17 இயக்கத் தோழர்கள், மயிலாடுதுறையை சேர்ந்த வழக்கறிஞர் வேலு.குணவேந்தன், மண்டல செயலாளர் விசிக, உதவியுடன் குழந்தைகள் நல ஆணையத்தை  (Child Welfare Commission – CWC) தொடர்பு கொண்டு, தலைமை ஆசிரியரால் 7 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தகவல் அனைத்தையும் தெரிவிக்கின்றனர்.  தகவல்கள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு, காவல்துறையை தொடர்பு கொண்டு வழக்கு பதியப்படுவதை உறுதி செய்கின்றனர். மேலும், தேசிய எஸ்சி-எஸ்டி ஆணையத்திடமும் புகார் அளிக்கின்றனர்.

மறுநாள் காலை எஸ்சி-எஸ்டி கமிஷனை சேர்ந்த திரு.பிரபாகர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகிறார். அதே நேரத்தில் CWC ஆணையத்தை சேர்ந்தவர்களும் அங்கு வருகின்றனர். இது, மாவட்ட ஆட்சியர், எஸ்பி, ஐஜி வரையிலும் விவகாரம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதும் அவர்களுக்கு மிகுந்த அழுத்தத்தை கொடுத்துள்ளது என்பதை மே 17 இயக்கத் தோழர்கள் உணர்ந்தே இருந்தனர்.

குழந்தையும் பெற்றோரும் அன்று மாலை நாகை மகளிர் காவல் நிலையம் அழைத்து செல்லப்படுகின்றனர். குற்றவாளியான ஆசிரியர் மீது அன்று இரவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார். பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். வழக்கின் முதல் தகவல் அறிக்கை இரவு 9 மணி அளவில் பதியப்படுகிறது.

அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படும் தருவாயில், நேரடியாக களத்தில் இறங்கிய மே 17 இயக்கத் தோழர்கள், நிகழ்வுகளை மிகவும் நுணுக்கமாக கண்காணித்து புலப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவதை உறுதி செய்தனர்.

களத்தில் மிக சிறப்பாக பணியாற்றிய மே 17 இயக்கத் தோழர்களின் உழைப்பினால் இது சாத்தியமாயிற்று. சமூக பிரச்சனை என்பது தன்னை சுற்றியுள்ள சமூகத்தின் பிரச்சனையுமே. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று, உள்ளூர் எதிர்ப்புகளையும் மீறி, சமூக அமைப்புகளை தட்டி எழுப்பி, சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை புறந்தள்ளி, அரசு அதிகார வர்க்கத்தை வேலை வாங்கி இதனை சாதித்துள்ளனர். இன்று வெளியே வந்துள்ள இந்த பிரச்சனையின் பின்னால் மே 17 இயக்கத் தோழர்களின் கடுமையான உழைப்பு உள்ளது என்பதை இச்சமூகம் அறிந்திருக்காது. இது போன்ற சமூக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் புது உத்வேகத்தை அளித்துள்ளதாக களத்தில் பணியாற்றிய மே 17 இயக்கத் தோழர்கள் கூறுகின்றனர்.

பிரச்சனை இதோடு முடிந்துவிடவில்லை, குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக உடந்தையாக இருந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமெனவும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட AEO உள்ளிட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், அக்குழந்தையின் குடும்பத்தினருக்கும், பள்ளி மாணவர்களுக்கும் உளவியல் சிக்கல் ஏற்படாத வண்ணம் உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், குழந்தையும், பெற்றோரும் பாதுகாப்புடன் எதிர்காலத்தை கழிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனவும் அரசிடம் மே பதினேழு இயக்கம் கோருகிறது.

முதல் தகவல் அறிக்கையில் விடுபட்ட சம்பவங்களை இணைத்து, குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தரும் வரை ஓயப்போவதில்லை என்று களத்தில் பணியாற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் கூறுகின்றனர். மாமேதை கார்ல் மார்க்ஸ் கூற்றுப்படி, “மனிதர்களுக்கு இடையிலான உறவின் மதிப்பீடு உற்பத்தியின் மதிப்பின் அடிப்படையில் அமைவது தான்” என்பது இந்த நிகழ்வில் தெரிகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் போலவே பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் தான், அதே உள்ளூர் உறவு முறையினர் தான். இருந்தபோதும், மாமேதையின் கூற்றுப்படி பாதிக்கப்பட்ட மனிதர்கள் “உற்பத்தி உறவுகளின்” படிநிலையில் கீழ்நிலையில் இருப்பவர்கள். உடலுழைப்பு தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் தான் அவர்கள் அறியப்பட்டனர். தந்தை பெரியாரின் வழியில் சமதர்ம சோசலிச சமுதாயம் படைக்க பாடுபடுவோம்.

Leave a Reply

Your email address will not be published.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »