அம்பலப்படுத்திய இசுரேலிய இயக்குநர்
“’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு மோசமான மத வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சார திரைப்படம். இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டது மிகவும் அதிர்ச்சிக்கும், கலக்கத்திற்கும் ஆளாக்கியிருக்கிறது” என்று அவ்விழாவின் நடுவரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. மோடி இந்தப் படத்திற்காகத் தான் ஒரு விளம்பரத் தூதராகவே மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் எந்த நாட்டு பிரதமர்களும் இதுவரை செய்யாத அளவிற்கு, மோடி நாடாளுமன்றத்திலேயே இதனை வானளாவப் புகழ்ந்து பேசினார். மோடி மட்டுமல்ல, பாஜகவின் முக்கியத் தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் சாமானிய இந்துக்களின் மனதிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை உருவாகும் வகையில் கொண்டாட்ட வழிமுறைகளைக் கட்டமைத்தனர். அவர்களின் நோக்கத்தின் படியே பல திரையரங்குகளில் உணர்ச்சி தூண்டப்பட்ட பலரால் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டு சர்ச்சைகள் வெடித்தன.
இவ்வாறு இந்துத்துவ கும்பலின் அடாவடிகளால் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் தான் இன்று சர்வதேச திரைப்பட வல்லுநர்களால் அருவருப்பாக பார்க்கப்பட்டிருக்கிறது. மதிப்புமிக்க திரைப்படங்களின் விழாவில் சற்றும் பொருத்தமற்ற மனக்கசப்புகளைத் தருவதாக இந்த காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இருக்கிறது என்று நடுவரான நடாவ் லபிட் குறிப்பிடும் அளவிற்கு மத வெறுப்புணர்வை இது விதைத்திருக்கிறது.
நாடாவ் லபிட் இஸ்ரேலின் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தத்துவம் மற்றும் இலக்கியம் பயின்றவர். நாவலாசிரியர். பல ஆவணப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இவருடைய திரைப்படங்கள் கோல்டன் பியர் போன்ற பல விருதுகளைக் குவித்தவை. 2016-இல், கேன்ஸ் திரைப்பட விழாவின் விமர்சகர்கள் வாரத்தில் நடுவர் மன்ற உறுப்பினராக பணியாற்றினார். இஸ்ரேலை நாட்டைச் சார்ந்தவரான இவர், பாலஸ்தீனத்திற்கு எதிராக செயல்படும் இஸ்ரேலையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார். “இஸ்ரேலிய கூட்டு ஆத்மா ஒரு நோய்வாய்ப்பட்ட ஆத்மா. எந்த கேள்வியும் எழுப்பாத, எந்த சந்தேகமும் இல்லாத இஸ்ரேலிய இளைஞர்களால் அதன் ஆழமான சாராம்சங்கள் அழுகி விட்டது..” – என்று தனது நாட்டையே கடுமையாக சாடியவர்.
இந்த திரைப்படத்தின் காட்சிகள் மதவெறியைத் தூண்டும் பிரச்சாரத் தன்மையுடையது என்று துணிச்சலாக எதிர்த்துப் பேசிய நாடாவ் லபிடின் பேச்சைக் கேட்டதும், ஆர்.எஸ்.எஸ்.-பாஜக, சங்பரிவாரக் கும்பல்கள் ஆர்ப்பரித்தனர். அவரை மோசமாகப் பேசினர். நடுவர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டனர். இதனால் இந்த திரைப்பட விழாக் குழுவிற்குத் தலைமையேற்ற மற்ற நடுவர்கள் அஞ்சியதால், இந்தக் கருத்து நாடாவ் லபிட்டின் தனிப்பட்ட கருத்து என அறிக்கை கொடுத்தனர். ஆனால் நாடாவ் லபிட், “எனது கருத்துக்கள் நடுவர்களாகப் பங்கேற்ற அனைத்து திரைப்பட குழு உறுப்பினர்களாலும் கூறப்பட்டவையே. திரையிடல் அறையில் அமர்ந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த திரைப்படம் ஒரு மோசமான மத வெறுப்புணர்வு விதைக்கும் படமே என்கிற உணர்வுகளே இருந்தன. விழாக்குழு உறுப்பினர்கள் அழுத்தம், பயம் அல்லது பதட்டத்தின் காரணமாகவே நான் கூறியதை தனிப்பட்ட என் ஒருவருடைய கருத்தாக சொல்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.” என ஊடகத்தில் பேட்டியளித்தார். மற்ற உறுப்பினர்களும் இதே கருத்தைத் தான் கொண்டிருந்தார்கள் என்பதை நிரூபிக்க என்னிடம் மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளது எனவும் அழுத்தமாகக் கூறினார்.
அதன் பிறகும், பாஜகவினரின் நெருக்கடிகள் தொடரவே தனது கருத்தால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார் நாடாவ் லபிட். ஆனால் அந்த திரைப்படம் பற்றி தான் சொன்ன கருத்து மறுக்க முடியாத உண்மை தான் எனவும் உறுதியாகக் கூறினார்.
“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” – விவேக் அக்னிஹோத்ரி என்கிற பிஜேபி ஆதரவாளரான தீவிர இந்துத்துவவாதியின் இயக்கத்தில் 2022, மார்ச் 11-ஆம் தேதி வெளிவந்தது. பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். 1990 களில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பண்டிட்கள் எனப்படும் புரோகிதர்கள் வெளியேறிய நிகழ்வினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
காசுமீரின் முந்தைய வரலாறு என்பது பல கொடுமைகளையும், கொடூரங்களையும் உள்ளடக்கியது. 1947-இல் ஜம்மு காசுமீரின் மன்னராக இருந்த ஹரிசிங்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சேர்ந்து அந்தப் பகுதியில் இஸ்லாமியார்களின் பெரும்பான்மையை இழக்க வைத்து இந்துக்களின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கலவரத்தைத் திட்டமிட்டு உருவாக்கினர். சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வரை அதில் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்கள் மன்னராலும், சங்பரிவாரக் கும்பல்களாலும் திட்டமிடப்பட்டவை என்பதை காந்தியடிகளே உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்த இரத்தம் தோய்ந்த வரலாறெல்லாம் திரைப்படமாக்கினாலும் வெளிவரும் வாய்ப்பு குறைவு. இந்திய ஒன்றியத்தின் பார்ப்பனிய வர்க்கத்தின் பிடியிலிருக்கும் ஒன்றிய தணிக்கைத் துறை இதனை வெளியிட அனுமதிக்காது. தங்களுக்கு சாதகமானவற்றை மட்டும் தூக்கி வைத்துக் கொள்பவர்கள், ஆர்.எஸ்.எஸ் கும்பல்களால் பச்சைப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட 2009-ல் நடந்த குஜராத்தில் இஸ்லாமிய இனப்படுகொலை நிகழ்வுகளை தீண்டவும் மாட்டார்கள். பாபர் மசூதியை இடித்த வெறியாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கும்பல்களால் படுகொலைக்கு உள்ளான இஸ்லாமியர்கள் பற்றிய உண்மைகள் எல்லாம் திரைப்படமாகுமா?
காசுமீர் அரசியலில் டெல்லி அரசின் ஆதிக்கம், காசுமீர் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை போன்றவற்காக ஜனநாயக வழியில் போராடிய அமைப்புகளை முடக்க இந்திய உளவுத்துறையினால் தூண்டி விடப்பட்ட சில அடிப்படைவாதக் குழுக்களே, எல்லா பண்டிட்டுகளும் காசுமீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்திய உளவுத்துறையின் சதிவேலைகளுக்கு ஈழத்தில் தமிழினப் போராளிகளை துண்டாடிய நிகழ்வுகளே நமக்கு சான்றாக இருக்கும் போது, இந்த சம்பவத்தையும் அதனுடாகவே நாம் புரிந்து கொள்ளலாம்.
மத அடிப்படைவாதிகளால் மக்கள் இடம்பெயரும் சூழலும், நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டங்களின் பின்னாலும் திரைமறைவில் நடக்கும் அரசியல் கண்ணிகளை நாம் கோர்த்துப் பார்க்காமல் போனால் அதன் உண்மையான முடிச்சு தெரிய வருவது சிரமம். அதன்படி, 1989-இன் இறுதியிலும், 1990-இன் ஆரம்பத்திலும் இந்துத்துவ பண்டிட்டுகள் வெளியேறுகிறார்கள். அந்த சமயத்தில் பிஜேபி ஒன்றிய அரசின் கூட்டணியில் இருந்தது. அன்று காஷ்மீரின் ஆளுநராக மக்மோகன் என்பவர் இருந்தார். அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். நபர். அன்றைய சூழ்நிலையில் இடம்பெயர்ந்த பண்டிட்டுகளுக்காக பாஜகவோ, ஆளுநர் மக்மோகனோ ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. எந்த நிகழ்வையும் தங்கள் இந்து முஸ்லிம் வெறுப்புணர்வு அரசியலுக்கு சாதகமாக்கி இந்துத்துவத்தை வளர்த்த பாஜக கட்சிக்கு இந்த சம்பவம் ஒரு வாய்ப்பாக இருந்ததே தவிர அவர்களின் மேல் அக்கறை ஏற்படவில்லை. அப்படி வெளியேறிய பண்டிட்டுகளை காசுமீர் இஸ்லாமிய மூத்தத் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து, “நீங்கள் போக வேண்டாம். நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். தயவு செய்து வாருங்கள்” என வேண்டிக் கேட்டுக் கொண்ட வரலாறுகளும் நடந்தது. ஆனால் அவையெல்லாம் பேசப்படுவதேயில்லை.
அன்றைய காலகட்டத்தின் நிகழ்ந்த அரசியலை இணைத்துப் பார்க்காமல் தனிப்பட்ட ஒரு மத அடிப்படைவாதக் குழுவின் செயல்பாட்டை அந்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்கிற காரணத்திற்காக ஒட்டுமொத்த மக்களின் மதத்தையே தீவிரவாதத்துடன் அடையாளப்படுத்துவது என்பது ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் அணுகுமுறை. இது மத வெறுப்புணர்வை விதைத்து வாக்காக அறுவடை செய்ய நினைக்கும் பாஜகவினர் சூழ்ச்சி.
பிஜேபி ஆர்.எஸ்.எஸ்.-க்கு உதவுபவர்கள் தற்போது கலைப்படைப்பு எனும் முகமூடி அணிந்து வருகிறார்கள். சமீபத்தில் வருகிற பெரும்பாலான பாலிவுட் படங்கள் இஸ்லாமிய வெறுப்பையும், இந்துத்துவ ஆதரவும் உடைய படங்களாக வருகிறது. குறிப்பாக அக்ஷய் குமார், கங்கனா ராவத், இவர்களின் படங்கள் இந்துத்துவாவை பரப்பும் வகையிலே எடுக்கப்படுகிறது.
இவர்களும் வெளிப்படையாக இந்துத்துவா கருத்துகளையும், பாஜக ஆதரவு கருத்துகளையும் பேசுகிறார்கள். இதுபோன்ற கும்பல்கள் இப்போது மெல்ல தமிழ் சினிமாவை நோக்கியும், தெலுங்கு சினிமாவை நோக்கியும் வருகிறார்கள்.
இவர்களின் நோக்கமே பெரும்பான்மை இந்துக்களிடையே இஸ்லாமியர்களைப் பற்றியான தவறான கண்ணோட்டத்தை வெகுசன ஊடகமான திரைத்துறை வழியாக பரப்ப நினைப்பதுதான். இதனை திரைப்பட கருத்தாக்கங்களின் நுணுக்கங்கள் அறிந்த ஆளுமைகள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். அதனைத்தான் சர்வதேச திரைப்பட விழாக்குழுவின் நடுவரான நடாவ் லபிட்டும் சுலபமாக புரிந்து கொண்டார். “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” மத வெறுப்புணர்வைத் தூண்டும் அருவருப்பான திரைப்படம் என்னும் உண்மையை அந்த விழாவிலேயே போட்டுடைத்தார். இந்த படத்தை உண்மையான வரலாற்றுத் திரைப்படம் என மெச்சிய மோடி கும்பலின் மூக்குடைத்தார்.