வழக்கறிஞர்களின் முன்னோடி பாரிஸ்டர் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் – இந்தியாவின் அரசியலமைப்பை வரைவு செய்தவராக, மக்கள் தலைவராக, பொருளாதார வல்லுநராக நம்மில் பலர் இவரை அறிந்திருந்தாலும், ஒரு வழக்கறிஞராக இவரது திறமைகளை மிகக் குறைவாகவே நாம் அறிவோம்.

இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஒன்றியம் விடுதலை அடைந்த காலகட்டம் வரை, உயர்சாதி வகுப்பினர் மட்டுமே சட்டம் பயிலவும், வழக்கறிஞர்கள் ஆகும் சூழ்நிலையும் இருந்தது. இந்திய அரசியல் வரலாற்றிலும் இவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அப்படிப்பட்ட சமூகச் சூழலில்தான் வழக்கறிஞராக தடம் பதித்தார் அண்ணல் அம்பேத்கர்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வழக்கறிஞராக பணியாற்றிய காந்தி, ஜின்னா, நேரு போன்ற அரசியல் சார்ந்த முக்கிய ஆளுமைகள் பலர் வணிக சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் சட்டம் படிப்பதற்கும், வழக்கறிஞராக பணியாற்றுவதற்கும் தேவையான பொருளாதார பின்புலம் அவர்கள் குடும்பங்களிலிருந்தே கிடைத்தது. ஆனால் இவர்களைப் போலன்றி, அண்ணல் அம்பேத்கர் தனது குடும்பத்தின் வறுமையான சூழ்நிலை காரணமாக பொருளாதாரப் படிப்பை முடித்து ஒரு வேலையில் சேர்ந்த பிறகே வழக்கறிஞராகப் பயிற்சி பெற முடிவு செய்தார்.

தனது அரசியல் மற்றும் சமூகப் பணிகளுக்குத் தேவையான களத்தைக் கட்டமைப்பதற்கு தனது வழக்கறிஞர் பணியை மிகவும் முக்கியமானதாகக் கருதினார் அண்ணல் அம்பேத்கர். காலனித்துவதிற்கு அடிமையாக இருந்த இந்தியாவில் ‘சட்டம்’ மட்டுமே அரசாங்க ஒடுக்குமுறைகள் மற்றும் உயர்சாதி ஒடுக்குமுறைகள் இரண்டிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

உலகெங்கிலும் சட்டக் கல்வியில் சேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள், அதன் கடினமான கட்டமைப்பினாலும் அதிக கல்வி கட்டணங்களாலும் தங்கள் கல்வியைத் தொடர இயலாமல் போகிறது. எனவே தனது கல்விக்கிருந்த பொருளாதார தடையை நீக்குவதற்காக தானே நிதி திரட்டி அதன்மூலம் கல்விக் கட்டணத்தை செலுத்தினார் அண்ணல். தனது பள்ளிப்பருவத்தில் மற்ற உயர்சாதி சிறுவர்களுடன் சேர்ந்து உட்காரவோ, தண்ணீர் குடிக்கவோ அனுமதி மறுக்கப்பட்ட அம்பேத்கருக்கு, அவரது முயற்சியாலும் அறிவுத்திறமையாலும் 1916-இல் லண்டனில் புகழ் பெற்ற கிரே சட்டக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தது. ஆனால் அவர் பெற்று வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், தனது படிப்பை இடைநிறுத்தி இந்தியா திரும்ப நேரிட்டது. மீண்டும் வேலைக்கு சென்று, பொருளீட்டி, மிகவும் சிக்கனமாக வாழ்ந்து தான் சேமித்த பணத்தில் லண்டனில் தனது கல்வியை முடித்தார் அண்ணல்.

வெற்றிகரமாக தனது படிப்பை முடித்தாலும், வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு அவரிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே தன் தோழர் ஒருவரிடம் கடன் பெற்று, ஒரு சிறிய அலுவலகத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், இந்தியாவில் இருந்த வழக்கறிஞர் பணியிடங்கள் அனைத்தும் பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினரால் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. ஆங்கிலேயர் வெளியேறிய பின், நீதித்துறையில் இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டாலும், உயர்சாதி வகுப்பினர் மட்டுமே சட்டம் பயின்று வழக்கறிஞராகும் சூழல் இருந்தது. ஏனெனில் அப்போது ஒரு வழக்கறிஞராவதற்கு, சாதி மற்றும் பொருளாதார மூலதனம் மிகவும் முக்கியமான காரணிகளாக இருந்தன. இந்திய ஒன்றியம் விடுதலை அடையும் வரை, நீதிமன்றங்கள் பார்ப்பன மேலாதிக்கத்தின் இருப்பிடமாக இருந்தன. மேலும் மநு (அ)தர்மத்தின் பிற்போக்குச் சட்டங்களை நேரடியாக அமல்படுத்தின. எனவேதான் “வழக்கறிஞராக பணி செய்வதில் எந்தப் பயனும் இல்லை, ஏனென்றால் அது உயர்சாதி சமூகத்திற்கு சாதகமாக உள்ளது. ஆனாலும் சமூகப் பணிகளைச் செய்வதற்காக சட்டப் பயிற்சியைத் தேர்ந்தெடுத்தேன்” என்று கூறினார் அண்ணல்.

இத்தகைய ஆதிக்கம் நிறைந்த சட்டப்பயிற்சியைத் தேர்ந்தெடுத்ததற்கு, அவர் வாழ்க்கையில் அனுபவித்த பல்வேறு ஒடுக்குமுறைகளும் அனுபவங்களுமே காரணமாக இருந்தன. எனவே “அனைவருக்கும் சமமான களம் இங்கில்லை” என்பதை உணர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்காடும் ஒரு வழக்கறிஞராக அண்ணல் அம்பேத்கர் தனது சமூகப் பணியைத் தொடங்கினார்.

அவரது அரசியல் நண்பர்கள், வழக்கறிஞர் பணியை இலாபகரமான தொழிலாகக் கையாண்ட போது, அண்ணல் அம்பேத்கர் சமூக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மற்றும் பொதுநல வழக்குகளுக்காக வாதாடினார். ஆதரவற்ற மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் அதிகமான வழக்குகளை வாதாடியவர் அம்பேத்கர். “ஏழைகளின் வழக்கறிஞர்” என்று அறியப்பட்டவர், மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்கினார். வழக்குகளுக்காக மும்பை நீதிமன்றதிற்கு வரும் அவரது கட்சிகாரர்களுக்கு உணவளித்து அவருடைய சிறிய குடியிருப்பில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்வார்.

அண்ணல் அம்பேத்கர் குறுகிய காலத்திலேயே மிகவும் முக்கியமான வழக்கறிஞராக உருபெற்றார். அவர் வழக்காடிய மிக முக்கியமான வழக்குகளில் ஒன்று ‘சாவதர் குளப் போராட்டம்’.

மராட்டிய மாநிலத்தில் உள்ள மஹத் எனும் இடத்தில், உயர் சாதியினர் மட்டுமே பயன்படுத்தி வந்த சாவதர் குளத்தில் அனைத்து மக்களும் நீர் எடுப்பதற்காக நடந்தது இந்தப் போராட்டம். அந்தக் குளம் சட்டப்பூர்வமாக அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்றும், “அது தனிப்பட்ட சொத்து அல்ல, மஹத் நகராட்சியின் சொத்து” என்றும் அவர் வெற்றிகரமாக நிறுவினார். இவரின் வாதத் திறமையால் இந்த வழக்கில் “நீண்ட காலமாக உயர்சாதி இந்துக்கள் தலித்துகளை ஒதுக்கி வைப்பதற்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் வழங்கப்படவில்லை” என்று விசாரணை நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது.

அண்ணல் முதன்முதலில் ஆஜரான கிரிமினல் வழக்கும் ஒரு புரட்சிகரமான வழக்கே. பிலிப் ஸ்ப்ராட் என்ற ஆங்கிலேய கம்யூனிஸ்ட், “இந்தியா மற்றும் சீனா” என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரத்தை எழுதியதற்காக தேசத்துரோக குற்றத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அம்பேத்கர் வழக்கு தொடர்ந்தார். அவர் இந்திய தேசியவாதிகளை “முட்டாள்கள், ஏகாதிபத்திய எஜமானர்களின் வேலைக்காரர்கள்” என்றும், “அகிம்சை விவேகமற்றது. அடிப்படை சமூக மாற்றத்திற்கு வன்முறை அவசியம்” என்றும் வாதிட்டார். சீன மாதிரியான கோமிண்டாங் வழிகளைப் பற்றி படிக்குமாறு இந்தியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பிலிப் ஸ்ப்ராட் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கில், F.S.தலயார்கான் உதவியுடன் வாதிட்டார் அம்பேத்கர். அவரது வாதத்தில், அந்த துண்டுப்பிரசுரம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது என்றும், அதில் “ஆங்கிலேய மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை கோரப்பட்டது” என்றும் வாதிட்டார். அவரது வாதத்தினால் ஸ்ப்ராட் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் “ஒரு மனிதன் அரசாங்கத்தை விமர்சிக்கலாம்” என்ற அவரது வாதம் முக்கியமானது. ஏனெனில் அரசாங்கத்தை விமர்சித்தாலே வழக்குகள் பாயும் என்ற நிலையை இன்றும் சமூக ஆர்வலர்கள் எதிர் கொண்டிருக்கின்றனர்.

அண்ணல்அம்பேத்கர் மக்கள் தலைவராக உருவெடுத்த பின்னர், தனது வழக்குரைக்கும் பணிக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும், குறுகிய காலத்தில் மிகச் சிறந்த வழக்கறிஞராக தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் என்பதற்கு மேற்கூறிய இரு வழக்குகளுமே சிறந்த சான்றுகள்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காட்டப்படும் சாதிய பாகுபாடுகள் குறையவில்லை என்பதை அண்மையில் கிளாமங்கலம் கிராமத்தில் நடந்த நிகழ்வுகள் எடுத்துக் கூறும். இரட்டைக்குவளை முறை, பட்டியலின மக்களுக்கு மளிகை பொருட்களை விற்கக் கூடாது, முடி திருத்தக் கூடாது என ஊர்க் கட்டுப்பாடு விதிப்பது போன்ற ஒடுக்குமுறைகள் அங்கு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு நடக்கும் ஒடுக்குமுறைகளை காணொளி மூலம் வெளியுலகிற்கு ஆதாரப்பூர்வமாக நிரூபித்தது மே 17 இயக்கம். பல்வேறு தரப்பிலிருந்தும் இன்னல்களைச் சந்தித்த போதும் தொடர்ந்து அங்கு களத்தில் நிற்கும் மே 17 இயக்கத் தோழர்கள் அங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக நிற்கின்றனர்.

இதே போன்று எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றார்களோ, அங்கு அவர்களுக்காக குரல் கொடுக்க அமைப்புகளும் வழக்கறிஞர்களும் முன் வர வேண்டும். அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (திச.6) சமூக நீதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடும் வழக்கறிஞர்களின் முன்னோடியாக அவரை நினைவு கூறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »