“நம்மூர் பொண்ணுங்க துப்பாக்கிய காட்டுனா கூட நெஞ்ச நிமித்திட்டு நிப்பாங்க. ஆனா துணிய கழட்டுனா மானத்துக்கு பயந்து ஓடிருவாங்க.” என்ற இச்சமூகத்தின் மனநிலையையும் அதற்கான பதிலையும் எந்தவித ஆர்ப்பரிப்பும் இல்லாமல் நமக்கு தந்து சென்றுள்ளது, நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி உள்ள “அனல் மேலே பனித்துளி” திரைப்படம்.
நாள்தோறும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளும், தாக்குதல்களும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடத்தல், பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை, ஆசிட் வீச்சு, வரதட்சணை கொலை என பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையே ஜீரணிக்க முடியாத அளவில் இருக்கும் பட்சத்தில் பதிவு செய்யப்படாதவை எண்ணிலடங்காதவை. கடந்த ஆறு ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்கள் 26.35% அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இக்கொடுமையில் உயிர் இழந்தவர்களின் வேதனை ஒரு புறம் இருக்க, உயிர் பிழைத்தோர் இச்சமூகத்தாலும், காவல் துறையாலும், நீதிமன்றத்தாலும் அவமதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்கையே கேள்விக் குறியாக மாறிவிடுகிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சிப்பதில் வரும் சிக்கல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தாண்டி, எப்படி இந்த கடினமான கட்டத்தை எதிர் கொண்டு கடந்து வர வேண்டும் என்பது தான் இப்படத்தின் முக்கிய கரு.
ஸ்போர்ட்ஸ் பொருட்கள் விற்கப்படும் ஷோரூம் ஒன்றில் வேலை பார்க்கும் ஆற்றல் மிக்க பெண்ணாக அறிமுகமாகிறார் மதி (ஆண்ட்ரியா). தன்னுடன் பணிபுரியும் பெண்ணிற்கு அவள் காதலனால் ஏற்படும் சிக்கலை தைரியமாக தீர்த்து வைக்கிறார். இதற்கு இடையில் இவருக்கு சரண் (ஆதவ் கண்ணதாசன்) உடன் திருமணம் நிச்சயிக்கபடுகிறது. இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் பெண்ணின் திருமணத்திற்காக கொடைக்கானல் செல்கிறார் மதி. திருமணம் முடிந்து ஊர் சுற்றிப் பார்க்க செல்லும் அவரை மூன்று பேர் கடத்தி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குகின்றனர். தனக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று காவல் நிலையத்தை அணுகும் அவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.
குற்றம் செய்தவர்களை தண்டிக்க யாரை நாடிச் சென்றாரோ, அந்த காவல் துறையில் இருக்கும் மூன்று நபர்கள் தான் குற்றவாளிகள் என்று தெரிந்து கொள்கிறார். பின்னர் அவர் அதே காவல் நிலையத்தில் இருக்கும் மேலதிகாரிகளை அணுக முற்பட, கடைசியில் அதுவும் தோல்வியிலேயே முடிகிறது. எந்த சூழலிலும் மதி உண்மையை வெளியே சொல்லிவிடக் கூடாது என்று அவரை நிர்வாணமாக படம்பிடித்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவிடுவேம் என்று காவல்துறையினர் அவரை மிரட்டி சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சென்னை வந்தடைந்த மதி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார். சிகிச்சையளித்த மருத்துவர், “பாலியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருபார்கள். தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போன கையறு நிலை, ஒரு வித அருவருப்பு என பல்வேறு எண்ணத்தில் மன உளைச்சலில் இருப்பார்கள். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணமும் அது முடியாது போகும் நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் வரும். எனவே அவரை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.” என உடன் வந்தவர்களிடம் அறிவுரை சொல்லி அனுப்புகிறார்.
இவ்வளவு மன உளைச்சலையும், போராட்டங்களையும் கடந்து மதி எப்படி இதை எதிர்கொண்டு கடந்து வருகிறார் என்பதே பெண்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்.
பெண்கள் தங்கள் குழந்தை பருவத்திலிருந்தே தன்னுடல் மீது கட்டமைக்கப்படும் எழுதப்படாத கலாசாரங்களுக்கும், சட்டங்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். குடும்ப மானத்தையும், கொளரவத்தையும் அவர்களின் உடல் மீது வைத்து தன்னுடல் மீது தங்களுக்கே அச்சம் ஏற்படும் விதத்திலும், பெண்களின் உடலை அவர்களுக்கே எதிரானா ஆயுதமாக மாற்றும் இழிசெயலிலும் சமூகத்தின் குடும்ப கட்டமைப்பு பெரும்பங்கு வகிக்கிறது.
ஒரு குற்றம் நடந்தால், அவள் என்ன உடை அணிந்திருந்தாள், அந்த நேரத்தில் அவள் அங்கு என்ன செய்துக்கொண்டிருந்தாள், என்று பாதிக்கப்பட்ட பெண்ணையே பலர் குற்றவாளிக்குவார்கள். இப்படி ஆகிவிட்டதே என்று சிலர் இது போன்ற கொடுமைகளை எளிமையாக கடந்து சென்று விடுவார்கள். பாதிக்கப்பட்ட பெண் பெற்ற தாயிடம் கூட இதைப்பற்றி வெளிப்படையாக கூற முடியாத சூழல் தான் இன்று வரை உள்ளது.
அறியாத நபர்கள் மட்டுமல்லாது உறவினர்கள், நண்பர்கள், உடன் பிறந்தவர்கள், தந்தை என வரைமுறை இன்றி அனைவரும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் போது,பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையே இப்படி குற்றச்செயலில் ஈடுபடுவது என்பது புதிதானது அல்ல. நம் சமூகத்தில் இது போன்ற அவலங்கள் இன்னும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கின்றன. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க காவல் நிலையம் வரும் பெண்களையே காவல்துறையினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடுமையான சம்பவங்கள் தான் நினைவுக்கு வருகிறது.
இது போன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கதாபாத்திரமாக நடிக்கும் போது அந்த காட்சிக்கும், நிஜத்திற்கும் இருப்பது மிக மெல்லிய இடைவெளியே. இப்படிப்பட்ட வேடத்தில் நடிக்கும் கதாநாயகிகள் ஒரு கட்டத்தில் கதாபாத்திரமாகவே உணர்ந்து மனஉளைச்சலுக்கு உள்ளாகி அதில் இருந்து வெளி வருவதற்கே சிரமப்படுவார்கள். நடிப்பில் இருந்து வெளிவருவதே கடினமான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் இது போன்ற கொடுமைகளை நிஜ வாழ்வில் எதிர்கொள்பவர்களுக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவருவது எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்பதை இச்சமூகத்தில் வாழும் அனைவரும் உணர வேண்டும். அதனை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்றாலும் அவர்களின் மனநிலையை மேலும் சிதைக்கும் விதமாக நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற நேரத்தில் மனமுடைந்து மூலையில் உட்கார்ந்திருக்கும் பெண்களை காப்பாற்ற , அவர்களுக்கு பக்கபலமாக துணை நிற்க ஒரு கதாநாயகன் தோன்றி அவர்களை அந்த பிரச்சனையில் இருந்து மீட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுத்து, அந்தப் பெண்ணுக்கு புது வாழ்க்கை பிறக்க வழி செய்து கொடுப்பது போன்ற திரைப்படங்கள் தான் காலம் காலமாக உருவாக்கப்படுகிறது. அத்தகைய திரைப்படங்களுக்கு நடுவே, தனக்கு ஆதரவாக நிற்கும் சரணிடம், “நீ என் கூடவே இருந்தா நான் உன்னையே அதிகம் சார்ந்திருக்க கூடும் என பயமா இருக்கு, இதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லும் வசனம் பெண்கள் தன் வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் தைரியம் இழக்காமல் எவ்வளவு தன்நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை ஆழமாக கடத்தி செல்கிறது.
அனைத்தையும் தாண்டி, சென்னையில் ஒரு வழக்கறிஞரை வைத்து வழக்கு தொடுக்கும் ஆண்ட்ரியாவை பழிவாங்கும் நேக்கில் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். மானத்திற்கு பயந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரமாட்டார் என்று நினைத்த அவர்களுக்கு பதிலடியாக, “என் உடம்பு எனக்கு தான ஆயுதமா இருக்க முடியும்? என்னை மிரட்ட அவர்கள் என் உடம்பையே பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன்.” என அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்கிறார்.
ஒரு பெண்ணுக்கு இது போன்று கொடுமைகள் நடக்கும் போது அதை வெளியில் சொன்னால் குடும்ப மானமே போய்விடும் என்று சொல்லி சொல்லியே பெண்களை பயமுறுத்தி அடக்கி வைக்கின்றனர். இதற்கு சிறந்த பதிலாக, “உயிரை விட மானம் பெருசு தான். ஆனா என்னை பொருத்த வரைக்கும் மானம்கிறது என் உடம்புலயும் நான் போடுற டிரஸ்லையும் இல்ல; நான் வாழுற வாழ்க்கைல தான் இருக்கு.” என்கிறது. இதனை பாதிக்கப்படும் பெண்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, இதுநாள் வரையில் கற்பிக்கப்பட்ட அனைத்து பிற்போக்கான கருத்துக்களையும் தூக்கியெறிந்து விட்டு இனி வரும் காலங்களில் எதற்கும் அஞ்சாமல் இது போன்ற அநியாயங்களை தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.
ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என தமிழ் சினிமாவில் பொதுவாக கையாளப்படும் பாணியில் இல்லாமல் ஒரு சுயாதீன திரைப்படமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது அனல் மேலே பனித்துளி. குறிப்பாக இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவில் செயற்கையான முறையில் ஒளியூட்டப்பட்ட தன்மை இல்லாமல் இருப்பது, ஒவ்வொரு காட்சியின் ஓரம் இருட்டில் அக்காட்சியில் நின்று கொண்டு அந்நிகழ்வை பார்ப்பது போலான ஒரு உணர்வை உருவாக்குகிறது.
நாம் வாழும் சமூகத்தின் பிரதிபலிப்பே சினிமா. நாம் தினமும் சந்திக்கும் நபர்களே யதார்த்த சினிமாவில் கதாப்பாத்திரங்களாக வலம் வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுமைப்பெண் எனும் திரைப்படத்தில், தவறுதலாக சிறைப்படுத்தப்பட்ட தன் கணவரை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வர பல பணிகளை செய்து, போதுமான பணம் திரட்டி, பிணையில் வெளிக் கொண்டு வருவார் மனைவி. ஆனால் கணவன் சிறையிலிருந்த நேரத்தில் பணம் திரட்ட தினந்தோறும் இரவு பகலாக வேலை செய்ய வெளியே செல்லும் மனைவியை, கணவன் வீட்டார், “கணவன் இல்லாத சமயத்தில் மனைவி இப்படி தினமும் தனியாக செல்லலாமா? இவள் கண்டிப்பாக அந்த பணத்தை தவறான வழியில் தான் சம்பாதித்து இருப்பாள்.” என்று முத்திரையிடுவார்கள். சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த பின்னர், கணவனிடம் அவரின் வீட்டார் இதைக்கூற, தன் மனைவி பெரும் சிரமப்பட்டு அவரை வெளிக்கொண்டு வந்ததைத் தாண்டி அவரும் தன் மனைவி மீது சந்தேகப்படுவார்.
30 வருடங்கள் கழித்து வெளியான அனல் மேலே பனித்துளியில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட மதியை திருமணம் செய்ய நிச்சயிக்கப்படும் சரணின் வீட்டார் இப்படிப்பட்ட பெண் நம் வீட்டிற்கு வேண்டாம் என்று கூறும் பொழுது அதை பொருட்படுத்தாமல் அவர்களை எதிர்த்தே மதியுடன் நிற்கிறார். நம் சமூகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவர்களின் நிலையை புரிந்து உறுதுணையாக இருப்பதாக திரையில் ஒரு கதாப்பாத்திரம் தோன்ற 30 வருடங்கள் ஆகிறது. நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் ஒரு சாமானிய பெண்ணின் வாழ்வில் அப்படி ஒரு ஆதரவு சுலபத்தில் கிடைப்பதில்லை. ஒரு சமூகம் விடுதலை அடைவதற்கு மிக முக்கிய காரணிகளுள் ஒன்று பெண் விடுதலை. அதனை நோக்கி நாம் ஒன்றாக பயணித்தால் மட்டுமே பெண் விடுதலை சாத்தியமாகும்.