மோசடி முதலாளிகளுக்கு மோடி அரசின் “சமரசத் தீர்வு”

rbi

குசராத்தின் பனியா மார்வாடி நிறுவனங்கள் வங்கியிடமிருந்து பெற்று ‘வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல்’ (wilful defaulters) ஏமாற்றிய பல்லாயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்வதற்கான ஒரு சமரசத் தீர்வை வங்கிகளுக்கு முன்மொழிந்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்திய ஒன்றியத்தின் 140 கோடி மக்கள் தொகையில் சில ஆயிரமே உள்ள மோசடி நிறுவனங்களுக்கு இப்படியொரு சலுகையை வாரி வழங்கி வழக்கம் போல மக்கள் மீது மோடி அரசு சுமையை ஏற்றியிருக்கிறது.   

இதற்கான சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி 8.6.2023 அன்று வங்கிகளின் வாரியத்திடம் அனுப்பியிருக்கிறது. அதன்படி, மோசடி நிறுவனங்கள் வாங்கிய கடனை, வங்கியானது ஒரு சமரசத் தீர்வின் மூலம் தள்ளுபடி செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறது. இதற்கு முன்புவரை வங்கியிடமிருந்து கடன் வாங்கியவர்கள், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாகவே கருதப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையின்படி குற்றவாளிகள் ஏமாற்றி வாங்கிய கடனை வங்கிகள் தள்ளுபடி செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் வாங்கிய தொகையிலிருந்து சொற்பத் தொகையை திருப்பி செலுத்தினாலே, அந்த குற்றவாளியின் CIBIL மதிப்பீடு (வங்கியின் நன்மதிப்பீடு)  மேலும் உயர்ந்து, மீண்டும் வங்கியிடமிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு கடனை வாங்கிக் கொள்ளலாம். இப்படி ஒரு விசித்திரமான கொள்கையை கொள்ளை நிறுவனங்களான  குஜராத்தி பனியா மார்வாடி முதலாளிகளுக்காக ரிசர்வ் வங்கி மாற்றியிருக்கிறது.

இதே ரிசர்வ் வங்கி 2019-ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில்  மோசடி நிறுவனங்கள் மற்றும் ‘வேண்டுமென்றே கடன் செலுத்தாத’ (wilful defaulters) நிறுவனங்கள்  சலுகை அடிப்படையில் மீண்டும் கடன் வாங்க தகுதியற்றவர்கள் என்றே கூறியது. ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாக சமரசத் தீர்வு என்ற பெயரில் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இப்போது வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையை வங்கியின் நிதி மற்றும் பொறுப்புக் கூறல் விதிகளுக்கு எதிரானது என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AlBOC) மற்றும் அகில இந்திய ஊழியர் சங்கங்கள் (AlBEA) போன்றவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற கடன் தகவல்களை பராமரிக்கும் வரவாக்கத் துறையான ‘டிரான்ஸ்யூனியன் சிபில்’ (Transunion ClBlL) அறிக்கை, ரூ 3,40,570 கோடி அளவில் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத 15778 கணக்குகள் உள்ளன என தெரிவிக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் மட்டும் கிட்டத்தட்ட 85% அளவில் ரூ 2,92,666 கோடி அளவில் திருப்பிச் செலுத்தப்படாத கடன்கள் உள்ளன என கூறுகிறது. இவையெல்லாம் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் இருந்தும் வேண்டுமென்றே செலுத்த மறுக்கும் கடனாளர்களின் கடன் தொகைகள் ஆகும். 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பெரு நிறுவனங்களின் 10.7 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனே கூறுகிறார். குஜராத்தி பனியா மார்வாடி நிறுவன முதலாளிகளுக்கான ஆட்சியாக மோடி தலைமைப் பதவியில் அமர்ந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 12 லட்சம் கோடி தள்ளுபடிசெய்யப்பட்டிருக்கிறது. இதில் 80% அளவிற்கு பொதுத்துறை வங்கிகளின் கடன்களே ஆகும்.

வங்கியில் கடன்களை வாங்கி குறிப்பிட்ட தவணைகளில் வட்டிகளை செலுத்தி வந்தவர்கள் இயற்கை பேரிடர்கள், எதிர்பாராத நிதி நெருக்கடிகள், மருத்துவ நெருக்கடிகள், வேலையின்மை, அரசாங்க கொள்கைகளால் ஏற்படும் இழப்பு போன்ற காரணங்களால் தவணை மற்றும் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அரசின் கொள்கைக்கேற்ப வங்கியே அந்தக் கடனைத் தள்ளுபடி (Waive Off) செய்யும். குறிப்பாக, விவசாயக்கடன்கள் இப்படியாக தள்ளுபடி செய்வதாக சொல்லப்பட்டாலும் இம்முறையின் வாயிலாக தொழில் கடன் தள்ளுபடிகளே அதிக பங்கை பெறுகின்றன.

தனி நபர்களுக்கு உரிய காரணம் கூறினாலும் வங்கிகள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் பல்லாயிரம் கோடி கடன்களை வாங்கிக கொண்டு குறிப்பிட்ட தவணைகளை கட்டாமலிருக்கும் கடனை “செயல்படா சொத்துகள்” (NPA) என வங்கிகள் நிர்வாக வசதிக்காக தள்ளுபடி செய்து (Write Off) அரசாங்கத்திடம் அந்த நிதிக்கான பொறுப்பை ஒப்படைத்து விடும். அப்படியாக மோசடி செய்த குஜராத்தி பனியா மார்வாடி முதலாளிகளின் பட்டியலைத் தான் 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் இந்திய ஒன்றிய அமைச்சகத்திடம் வழங்கினார். அப்போது அவர்களின் மீது குற்றவியல் விசாரணைகள் நடைபெறும் என நிதி அமைச்சகம் அறிவித்தது. ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் மோசடி நிறுவனங்களின் பட்டியலை பொது வெளியில் வெளியிடாத போக்கு வங்கிகளிலுள்ள பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்த பனியா, மார்வாடி நிறுவனங்களைக் காப்பாற்றி வருகிறது. இந்த நிறுவன முதலாளிகளே பாரதிய ஜனதா கட்சிக்கு “தேர்தல் பத்திரம்” மூலம் மறைவாக நிதி அளிப்பவர்களாகவும் அக்கட்சியின் தேர்தல் கால செலவினங்களை மேற்கொள்பவர்களாகவும் உள்ளனர்.

இந்த மார்வாடி பனியா முதலாளிகளை காட்டிக் கொடுத்தால் தனது கட்சி வளர்ச்சிக்கு ஆபத்து என்பதால் பட்டியலை மோடி அரசு வெளியிடவில்லை. உச்சநீதிமன்றம் 2016-ம் ஆண்டிலேயே வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் கடனைத் தள்ளுபடி செய்வது மிகப் பெரிய மோசடி என்று கூறி இருந்தது. அதற்குப் பிறகும் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து,  உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை அளித்ததை அடுத்து முகுல் சோக்சி, நீரவ் மோடி, மல்லையா போன்றவர்களின் 100 நிறுவனங்கள் பெயர்களை வெளியிட்டது. அதுவும் ரகுராம் ராஜன் அனுப்பிய பட்டியலில் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டிருந்தார்கள்.

வங்கியை ஏமாற்றும் கடன்காரர்களுக்கு சலுகை வழங்கும்  இப்படியொரு மோசமான வழிகாட்டுதலின் மூலம், நேர்மையாக வங்கிக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கும் மோசடி செய்யும் மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சாதாரண மக்கள் வங்கியின் மீது நம்பிக்கை வைத்து செலுத்தும் வைப்புத் தொகைகளே பெரு நிறுவனங்களுக்கு கடன் தொகையாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வைப்புத் தொகைக்கான வட்டி விகித வீழ்ச்சி போன்ற பல பாதிப்புகளை அவர்கள் சந்திக்கிறார்கள். குறைந்த அளவு கடன் வாங்கும் எளிய மக்கள் மீதுஅதிக வட்டி விகிதங்களை திணிக்கிறார்கள். வங்கி கணக்குகளில்  குறைந்தபட்ச தொகையினை பராமரிக்கவில்லை என்பதற்காக பிடித்தம் செய்வது, மின்னணு பரிமாற்றத் தொகையில் பிடித்தம், GST வரியாக பிடித்தம் என வங்கிக் கணக்குகள் வைத்திருக்கும் அனைவரிடத்திலும் வங்கிகள் பணத்தைப் பறிக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர இந்துக்களுக்கு சுமையும், பணக்கார பெரு நிறுவன முதலாளிகளுக்கு தள்ளுபடியும் என்பதாக மோடி அரசு செயல்படுகிறது. 

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து, அந்த தனியார் நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களை வாங்குவதற்தாக வங்கி மூலமாக பல்லாயிரம் கோடிகளை கடன்களாக அளிக்க வைப்பது; அந்த கடனைத் திருப்பி செலுத்தாது போனால் அவற்றை தள்ளுபடியும் செய்தல் என இவ்வளவு சலுகைகளையும் குஜராத்தின் பனியா மார்வாடி நிறுவனங்களுக்காக செய்தது போதாதென்று, இனி கடனைத் தள்ளுபடி செய்வதோடு மறுபடியும் கடனை வாங்கிக் கொள்ளலாம் என்கிற சமரசத் தீர்வையும் மோடி அரசு வழங்கியிருக்கிறது.

சர்வ அதிகாரமும் கொண்ட ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும் கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களிடம் எதற்காக சமரசத் தீர்வை முன்வைக்க வேண்டும், என்பதே சாமானிய மக்களின் கேள்வியாக இங்கு எழுகிறது. இந்த வலைப்பின்னல் சூதாட்டத்தில் உழைக்கும் மக்களின் பணமே நகர்த்தப்படுகிறது. தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டிய ரிசர்வ் வங்கியை தங்களின் விருப்பம் போல செயல்பட வைக்கவே அத்துறைக்கு தகுதியற்ற ஒரு அதிகாரியை அதன் ஆளுநராக மோடி அரசு நியமித்தது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு பல தரப்பில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பினை அடுத்து 21-06-2023 அன்று மறுப்பு விளக்கம் அளித்தது. இதன்படி, வேண்டுமென்றே கடனை தவறுபவர்கள் 12 மாதங்கள் அல்லாமல் 5 ஆண்டுகள் வரை மீண்டும் வங்கி கடனை பெற முடியாது என்று தெரிவித்துள்ளது. 

2024 தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இப்படியான ஒரு குழப்ப நிலையை ரிசர்வ் வங்கி உருவாக்கி உள்ளதை அரசியலாக நோக்க வேண்டிய காரணமும் உள்ளது. ஏனென்றால், ஹிண்டன்பெர்க் அறிக்கையை தொடர்ந்து மோடியின் நிதியாளர் அதானி சொத்துக்கள் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால், பாஜகவுக்கு 2024 தேர்தலுக்கு தேவையான நிதி திரட்டுவதில் கடும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதன் காரணமாகவே பிற மார்வாடி பனியாக்களிடம் இருந்து நிதி திரட்ட இத்திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகின்றன.

நம் பிள்ளைகளுக்கான கல்விக் கடனோ, தொழில் துவங்குபவர்களுக்கான தொழில் கடனோ என நம் அடிப்படைத் தேவைக்காக கடன் வாங்கி திருப்பிச் செலுத்துவது தாமதமானால் மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை நிலைக்கு கூட செல்ல வைக்கும் வங்கிகள் தான் பல்லாயிரம் கோடிகளை அபகரித்து, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத குஜராத்தி மார்வாடி பனியா முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. அதானியின்கொள்ளையை ஹிண்டன்பெர்க் ஆய்வு அம்பலப்படுத்தியும் தொடர்ச்சியாக தேசபக்தி நாடகமாடி  தப்பிக்கிறார். 

மேலும், பாரதிய ஜனதா கட்சி  ஆட்சி அதிகாரத்தை ஏற்ற 2013-2014 தேர்தலின் போது அதன் சொத்து மதிப்பு ரூ.780.754 கோடியாக இருந்தது. அதன் மதிப்பு தற்போது சுமார் ஆறு மடங்கு உயர்ந்து ரூ. 4,847 கோடியாக உள்ளது. நாட்டிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட கட்சியாக பாஜக மாறியுள்ளதை இந்த சமரச தீர்வு திட்டத்தோடு இணைத்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 

இந்தியா முதலாளிகளுக்கானதே என்பதை மோடி அரசு ஒவ்வொரு பெருநிறுவனங்களுக்காக மேற்கொள்ளும் நகர்வுகளின் மூலமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு கடுமையாக வளர்ந்து வருகிறது. நூறு கோடிகளுக்கு மேல் சொத்து வைத்திருக்கும் முதலாளிகள் இந்தியாவின் 60% சொத்துக்களை தங்களிடம் குவித்து வைத்துள்ளதாக ஆக்ஸ்போம் ஆய்வு கூறுகிறது. ஆனால் உலகில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் பட்டியலில்  இந்தியா முதல் இடத்தில உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான வறுமையில் பல கோடி இந்துக்களை கடந்த 9 ஆண்டுகளாக வதைத்து வருவது தான் ஆர்எஸ்எஸ் பாஜக போற்றும் ராம ராஜ்ஜியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »