140 கோடி மக்கட்தொகை கொண்ட இந்தியாவில் தேசிய இனம், மதம், மொழி என பன்முகத் தன்மையுடன் பல்வேறு பிரிவுகளில் மக்கள் வேறுபட்டுள்ளனர். இந்தியர்கள் அனைவரும் சமம் என்றும் அனைவரது உரிமைகளையும் பாதுகாக்க இந்திய அரசியலமைப்பில் பல்வேறு தனிநபர் உரிமைச் சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன. இந்த சட்டங்களை புறக்கணித்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சிறுபான்மையினரை குறி வைத்து, குறிப்பாக இசுலாமியர்களின் உரிமைகளை மறுக்கும் வகையில், தனது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கையைப் பரப்புவதற்காக, பொது சிவில் சட்டம் என்ற ஆர்.எஸ்.எஸ்.-சின் நீண்டநாள் திட்டத்தை கையிலெடுத்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
ஒன்றிய பாஜக அரசு பதவியேற்ற நாளிலிருந்து இசுலாமியர் உள்ளிட்ட மத சிறுபான்மையினரையும், தமிழர்கள் உள்ளிட்ட மொழித் தேசிய இன சிறுபான்மையினரையும் ஒடுக்குவதற்காக சட்டங்களை இயற்றி வருவது தொடர்கிறது. மத சிறுபான்மையினரை, குறிப்பாக இஸ்லாமியர்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் CAA-NRC-NPR போன்ற சட்டங்களை கொண்டு வந்தது போல, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரின் தனிநபர் உரிமைகளை நசுக்க தற்போது பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform Civil Code – UCC) எனும் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருகிறது.
ஒரு நாடு – ஒரே மொழி, ஒரு நாடு – ஒரே கல்விக்கொள்கை, ஒரு நாடு – ஒரே ரேஷன் வரிசையில் மாநில உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் பாஜக கொண்டு வரத் துடிக்கும் ஒரு நாடு – ஒரே சட்டம் தான் பொது சிவில் சட்டம். இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றவும், இந்து மத சட்டத்தையே அனைத்து மதத்தினருக்குமான பொதுவான சட்டமாகவும் மாற்றவே பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இதனை நோக்கமாக கொண்டே, இந்துத்துவ கருத்தாக்கங்களை அடிப்படியாக கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளதை காண முடிகிறது.
காலனிய அடிமைத்துவ முறையிலிருந்து இந்தியா விடுதலைப் பெற்றதாகக் கூறிக் கொண்டாலும் இன்றும் அந்த அடிமைத்துவத்தின் எச்சங்களாக உள்ள உபா (UAPA) சட்டம் போன்ற கருப்பு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதைப் போன்றே பொது சிவில் சட்டம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, குறிப்பாக பிரான்சிலிருந்து சட்ட வடிவத்தை மாதிரியாகக் கொண்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் மத நம்பிக்கை, பாரம்பரிய வழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட குழு மக்களுக்குப் பொருந்தும் சட்டங்களாக தனிநபர் சட்டங்கள் இருந்து வந்துள்ளன. இந்து மதத்தில், வாரிசு, திருமணம், தத்தெடுப்பு, இணை பெற்றோர், குடும்பச் சொத்தைப் பிரித்தல் தொடர்பான விடயங்களுக்கு தனிநபர் சட்டங்கள் இருந்தன. இந்து திருமணச் சட்டம் – 1955, இந்து வாரிசுரிமைச் சட்டம் – 1956, இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டம் – 1956, மற்றும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் – 1956 போன்றவை இவற்றில் சில.
அதே போன்று இசுலாமிய மதத்தில், திருமணம், வக்ஃப்கள், உயில், வாரிசு, விவாகரத்து போன்ற விடயங்களுக்கு தனிநபர் சட்டங்கள் இருக்கின்றன. இப்படி இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு தனிமனிதச் சட்டங்கள் இருக்கும்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது எதெற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது. மதச் சிறுபான்மையினராக உள்ள இசுலாமியர் மற்றும் கிறிஸ்தவர்களின் தனிநபர் சட்டங்களை, இந்துக்களின் தனிநபர் சட்டங்களுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஈடுபடுவதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
பாஜக தனது 2019 தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சி அமைத்தவுடன் காசுமீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்குதல், ராமர் கோவில் கட்டுதல் வரிசையில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியது. அப்போது தில்லி சாஹின்பாக் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் CAA எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. தமிழ்நாட்டிலும் நடந்த மக்கள் எழுச்சி போராட்டங்களில் மே 17 இயக்கம் பெருமளவில் பங்கெடுத்தது. இதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
தற்போது 2024 தேர்தலுக்கு அச்சாரமாகவும், அதில் தனது இந்துத்துவ வாக்கு வங்கியை பெருக்குவதற்காகவும், தான் ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் துடிக்கிறது பாஜக. இதன் வெளிப்பாடாகவே பாஜக ஆளும் பல மாநிலங்களின் முதல்வர்கள் இந்த சிவில் சட்டத்தை ஆதரித்து வருகின்றனர். குறிப்பாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் என பலர் அமித் சாவின் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கின்றனர்.
மேலும் இந்த சட்டத்தின் கீழ் இரண்டு குழந்தைகள் மேல் உள்ள குடும்பங்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை மறுப்பது, அரசின் மானியங்களைப் பெறுவதற்கான உரிமையை ரத்து செய்வது போன்றவற்றை உத்தரகாண்ட் அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு சிறுபான்மையினர் மீது குடியுரிமை சிக்கலோடு தனி நபர் உரிமைகளையும் நீர்த்துப் போகச் செய்கிறது பாஜக. இப்படியாக பெரும்பான்மை இந்துத்துவ ஆட்சியை திணிக்க விரும்புகிறது பாஜக.
UCC சட்டத்தை போலவே இருக்கும் ‘கோவா மாநில சிவில் சட்டத்தை’ பாஜக தனக்கு சாதகமான வாதமாக கூறி வருகிறது. 1867-ஆம் ஆண்டு கோவா பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகும், போர்த்துகீசிய சிவில் சட்டம் அங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் இந்த சட்டம் கோவாவில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் சமமாக மாற்றப்படவில்லை. இதனால் அங்கிருந்த ஆதிக்க சமூகங்களின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. கோவாவில் உள்ள UCC-இன் படி, பெண்களுக்கும் ஆண்களுக்கும் சொத்துரிமை சமமாக இருந்தாலும் சொத்தின் நிர்வாக உரிமைகள் இன்னும் ஆண்களின் கைகளில் உள்ளன. ஒரு ஆண் தனது மனைவியின் அனுமதியின்றி சொத்தை வாடகைக்கு விடலாம் எனும் பிரிவு UCC-இல் இருக்கும்போது, அது எவ்வாறு ‘அனைவருக்கும் சமமான’ சட்டமாக இருக்க முடியும்? (இந்த சமத்துவமின்மை காரணமாகவே, கோவாவில் நடைமுறையில் உள்ள இந்த சட்டம், அதன் பிறப்பிட நாடான போர்ச்சுகலிலேயே 1966-இல் மாற்றப்பட்டிருக்கிறது.)
இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னோடியாக, கடந்த டிசம்பர் 2022-இல், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பாஜக எம்.பி கிரோடி லால் மீனா, பொது சிவில் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் செயல்திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது” என்று குற்றம் சாட்டிய மதிமுக எம்.பி. ஐயா வைகோ அவர்கள், “காஷ்மீரை முடித்துவிட்டார்கள்; இப்போது அவர்கள் பொது சிவில் சட்டத்திற்கு வந்துள்ளனர்.” என்றார். மேலும் இந்த சட்டம் சிறுபான்மை மக்களைக் கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
தற்போது இந்தியாவின் சட்ட ஆணையம், UCC குறித்து பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடமிருந்து பரிந்துரைகளைக் கோரி இருக்கிறது. இந்த சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கையாகவே நாம் இதை கருத வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் மத உரிமையும், அதன் வழிமுறைகளை பின்பற்றவும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த உரிமைகளைப் பறிக்கும் நோக்கோடு சட்டங்கள் கொண்டு வருவது பாஜகவின் வாடிக்கையாகி விட்டது. தனிநபர் சட்டங்கள் பலவற்றை முடிவுக்கு கொண்டு வர பெரும் உள்நோக்கத்தோடு பொது சிவில் சட்டத்தை முன்நகர்த்துகிறது பாஜக.
இந்து மத உரிமை சட்டம் இந்தியாவின் அனைவருக்கும் பொதுவானதாக மாற்றப்படும் போது, அது இந்துக்களையும் பாதிக்கும். ஏனெனில், இந்து மதம், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கொண்ட சாதிய படிநிலையை திணிக்கக் கூடியதாகவும், மனிதகுலத்திற்கு எதிரான சனாதன சட்டமான மனுஸ்மிருதியை நடைமுறைப்படுத்துவதுமே நோக்கமாக இருக்கும். இது சாதிரீதியிலான பாகுபாட்டையும், ஒடுக்குதலையும் அதிகரிக்கும். குறிப்பாக பெண்கள் இதுநாள் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும். தமிழர்களை சூத்திரர்களாக கருதும் பார்ப்பனியத்தின் அடிப்படையில் அமைக்கப்படும் சட்டத்தில் தமிழர்கள் ஒடுக்கப்படும் நிலை ஏற்படும். நாம் இதனை அனுமதித்தால், இது 2000 ஆண்டுகால ஆரிய-திராவிடப் போரை முடிவுக்கு கொண்டுவரக் கூடும். இன்று மத சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் இந்த அநீதி நாளை மொழி சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் இழைக்கப்படும் என்பதை நாம் உணர்ந்து, அறவழியில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குரல் எழுப்புவோம்.