கொங்கு மண்டலமான கோவை மாநகரத்தை ஒரு மலராக கற்பனை செய்து கொண்டால், இந்த நூலின் ஆசிரியரை ஒரு தேனீயாக எண்ணிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இனிமையான தேன்கூடாக இந்நூலினில் கோவையைச் சுற்றி வந்து கண்டறிந்த வரலாற்றினைத் தொகுத்து தந்திருக்கிறார்.
இந்த புத்தகத்தில் மொத்தம் 10 கட்டுரைகள் உள்ளன. இந்தப் பத்திலும் நூலாசிரியரான பா. மீனாட்சி சுந்தரம் அவர்கள், தேடியலைந்து கண்டறிந்த கல்வெட்டுகளைப் பற்றி விளக்கமாகப் பதிவு செய்கிறார்.
முதல் கட்டுரையில், எளிய மக்களிடம் இன்றளவும் மதப் பாகுபாடு இல்லாமல் மற்றவர்களின் வழிபாடுகளை மதிக்கும் தன்மை இருப்பதை தௌலத் நிஷா என்கிற இஸ்லாமிய பெண் மூலம் உணர்த்துகிறார். ஆநிரைகளை வேட்டையாட வந்த புலியிடம் சண்டையிட்டு மாண்டு போன வீரனின் நினைவாகப் பொறிக்கப்பட்ட புலிக்குத்திக் கல்லை தெய்வமாக வணங்கும் உறவினர்களே குடும்பத்தோடு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்து போக, தெளலத் நிஷாவோ தினமும் புலிக்குத்திக் கல் முன்பாக வாசலைக் கூட்டி கற்பூரத்தை ஏற்றி வைத்திருப்பதை அறிந்ததும் நூலாசிரியரைப் போல் நமக்கும் உள்ளுக்குள் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. மாண்டு போன வீரர்களுக்கு முன்னோர்களுக்கு நடுகல் வைப்பதற்கு முன் வழக்கமாக பின்பற்றும் சடங்கு முறைகளை தொல்காப்பிய நூற்பா கூறுவதை விளக்குவதும் சிறப்பு.
‘அவளைக் கண்ணுற்ற அழகிய மாலைப் பொழுது’ – காதல் உணர்வு பொங்க எழுதப்பட்டிருக்கும் என்று படிக்கத் துவங்கினால், வரலாற்றுத் திரிபு ஒரு கல்வெட்டுக்குள் எப்படிப் புதைந்திருக்கிறது என்பதைச் சொல்லி திகைக்க வைத்திருக்கிறார். ‘மஞ்சள் அப்பிய முகத்துடன், நெற்றியில் திலகமணிந்து, தன் செவ்விதழில் சிறு புன்னகை ஒன்றைச் சிந்தியவாறு’ என்று அலங்காரமாய் காட்சியளிக்கும், ஆழியாற்றின் கரையில் அமர்ந்திருக்கும் ‘ஆதாளி அம்மன்’ என்கிற தெய்வத்தை வர்ணிக்கிறார். அந்த தெய்வத்தின் ஒப்பனையை கலைத்துப் பார்த்தால் உண்மையில் அது ஒரு சமணத் தீர்த்தங்கரர் சிலை. அவரின் முகமே சுண்ணமும், மஞ்சளும் பூசப்பட்டு பெண் கடவுளாக மாற்றப்பட்டிருக்கிறது. பீடத்தில் சிங்க உருவம் பொறித்திருக்கும் சமணத் தீர்த்த்தங்கரரான மகாவீரர் ஆதாளி அம்மனாக ஒப்பனை ஏற்றப்பட்டிருக்கிறார். இதனைப் படிக்கையில், பெருங்கோயில்களுக்குள் வீற்றிருக்கும் ஆயிரம் ஆண்டுகள் முன்பான சிலைகளின் ஒப்பனையற்றத் தோற்றத்தை கூர்ந்து நோக்கினால் இப்படியான வரலாற்றுத் திரிபுகள் தான் நிகழ்ந்திருக்குமோ என்கிற எண்ணம் தோன்றியது. கருவறைக்குள் நுழைந்தால் இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்து விடுமோ என்கிற காரணத்தாலும் கூட ஒருவேளை பார்ப்பனர்கள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை மூர்க்கமாக எதிர்க்கிறார்களோ என்றும் கூட தோன்றியது.
‘மொக்கை போடாதே’ நண்பர்களுக்குள் இயல்பாய் புழங்கும் வார்த்தை. இந்த வார்த்தையுடன் ஒட்டிப் போகிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த குட்டகத்தில் உள்ள மொக்கணீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலை ஒரு பெண் கட்டியிருக்கிறார் என்பதும், மொக்கணி என்று அழைக்கப்படும் குதிரையின் மூக்குப்பை எப்படி சிவலிங்கமாக மாறியது என்கிற வாய்வழிக் கதையும் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டியது.
‘திருநிழல்’ – ‘ஆயிரத்து நூறாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் ஒரு கால இயந்திரம்’ என கல்வெட்டுகளை நூலாசிரியர் பிரமித்து வர்ணிக்கிறார். அவர் கூறியது முற்றிலும் பொருத்தமே. 1100 ஆண்டுகளுக்கு முன்பாக ஆட்சி செய்த மன்னன் அமைத்த நிழல்படையை ‘திருநிழல்’ என நான்கடி வெண்பாவாக ஒரு புலவர் வடித்திருப்பது கால இயந்திரமான கல்வெட்டில் தானே. முதலாம் ஆதித்த சோழன், கி.பி 9-ம் நூற்றாண்டில் மேற்குக் கடற்கரையும், கிழக்குக் கடற்கரையும் இணைத்த பெருவழியில் பயணித்த தனது நாட்டின் வணிகர்களைக் காக்க ஒரு நிழற்படையை கட்டியமைத்த வரலாற்றை, புலவன் செதுக்கிய பாடலின் வழியாக கண்டறிந்து தமிழ் சமூகத்திற்கு ஆதாரங்களுடன் அர்ப்பணித்திருக்கிறார் தொல்லியல் அறிஞரான பூங்குன்றன். அந்தக் கல்வெட்டைத் தேடி பயணித்ததை விவரித்த விதம் ஒரு வரலாற்றுப் புதையலை தொல்லியல் அறிஞர்களும், கல்வெட்டு ஆய்வாளர்களும் தமிழ் சமூகத்திற்கு அளிக்க எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை உணர வைக்கிறது.
ஏழு வயதில் பொட்டுக் கட்டப்பட்டு, இன்று பெருமாட்டியாக திருச்சியில் ஒரு முருகன் கோயிலில் ஆலயப்பணி செய்யும் கடைசி தேவதாசியாக வாழும் முத்துக் கண்ணம்மாளுடனான நேர்காணல், சாதி வேறுபாடு கடந்து உமையாயி என்னும் தேவதாசி செய்த சமூகப்பணி பற்றிய ஆவணம் என ஒரு கட்டுரையில் விரிகிறது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பற்றி ஒரு கட்டுரை. சமத்துவம் போதித்த சமணர்களை ஆசிரியர்களாகக் கொண்ட கங்க மன்னர்கள் கொங்கு நாட்டை ஆண்டதையும், அன்று நிறுவிய சமண ஆலயங்கள் எல்லாம் சிவன் ஆலயங்களாக மாற்றப்பட்டதும், திருமூர்த்தி மலை இந்துக் கடவுளர்களான மூம்மூர்த்திகள் பெயரால் ஆக்கிரமிக்கப்பட்டு திரிமூர்த்தி ஆன தெய்வத் திருட்டினையும் கோவை கிழார் ‘கொங்கு நாடும் சமணமும்’ – எனும் நூலில் விவரித்திருப்பதாக கூறிய தகவல்கள் முற்றிலும் அறியாத ஒன்றாக இருந்தது. பாறையில் உள்ள சமணத்துறவி பொறிப்பின் மீது மஞ்சள் நீரை அள்ளி தெளிப்பது ஒரு சடங்காக்கியிருக்கிறார்கள் பார்ப்பனர்கள். ஏனென்றால் மஞ்சள் நீர் பாறை பொறிப்புகளை அழித்து விடும் என்பதற்காக. சமணத் தீர்த்தங்கரரான மகாவீரர் ஆதாளி அம்மனாக மாற்றப்பட்டதைப் போல சமணக் கடவுளான அருகனாகிய திருமூர்த்தி இங்கு ‘அமணலிங்கேசுவரர்’ என்ற சிவனாகியிருக்கிறார். தலபுராணம் என்று ஒரு ஆபாசத்தை எழுதி வைத்து தெய்வத் திருட்டினை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.
இந்துக் கடவுளர்கள் பற்றியும் இலக்கியங்களைப் படைத்த கொங்கு நாட்டு இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்களை அறிமுகப்படுத்துகிறார். இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல எனக் கூச்சலிடும் இந்துத்துவவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்ச் சான்றோர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறார். கண்பார்வையற்ற காசிம் புலவர் வெள்ளம் பற்றியான இரண்டு பாடல் தொகுப்புகள் இயற்றியிருக்கிறார் என்பது படிக்கும் போது வியப்பு மேலிடுகிறது.
ஒரு யானைக்கு சேர மன்னனான ‘கணைக்கால் இரும்பொறை’ பெயரை வைத்திருக்க வேண்டும் என்பதை, சேர மன்னர்கள் யானைகளுக்கு கொடுத்த வரலாற்று முக்கியத்துவம் வழியாக உணர்த்தும் கட்டுரை ஒன்று. கடவுளாக வழிபடும் கணபதி பற்றியான ஒரு உண்மையான வரலாற்றுப் பதிவை செய்ததால், கணபதியை அவமானப்படுத்தி விட்டதாக மதவாதிகள் கூச்சலிட ஆரம்பித்துப் பின்னர், அதுவே தான் பணியாற்றிய பத்திரிக்கையிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள காரணமாக இருந்தது என்று கூறும்போது, மதவாதிகளின் நம்பிக்கைகளால் உண்மைகளைப் பேசுபவர்கள் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தன்னையே சான்றாக்கி சொல்கிறார்.
உளப்பகுப்பாய்வு அறிஞர் சிக்மெண்ட் பிராய்டு கூறியுள்ளபடி, ஒருவரின் நனவிலி மனத்திலிருந்த ஆசையின் வெளிப்பாடால் கோவையில் எமனுக்கு கோயில் எழுப்ப காரணமான நிகழ்வை எடுத்துக் கூறும் ஒரு கட்டுரை.
இவ்வாறு பத்து கட்டுரைகளை, இலக்கிய நடையுடனும், எளிய மொழியிலும் எடுத்துரைத்த நூலாசிரியரான பா. மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஆங்கிலம், தமிழ் என இரு மொழியிலும் கட்டுரையாசிரியராக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, கவிஞராக பணியைத் தொடர்பவர். கல்வெட்டு ஆய்வாளர்களுடனும், அறிஞர்களுடனும் தொடர்ந்து பயணித்து, அவர்கள் கண்டறிந்த வரலாறுகளை வாசகர்கள் எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக்கியவர்.
பத்து கட்டுரைகள் மட்டுமல்ல இன்னும் கோவையைப் பற்றி அறியப்படாத பல செய்திகளும் இந்த புத்தகத்தில் உள்ளன.
“திருநிழலும் மண்ணுயிரும்”- தொல்லியல் பெருவழியில் திருநிழலாய் தொடரும் புத்தகம்.
புத்தகம் கிடைக்குமிடம்:
திசை புத்தக நிலையம்
எண் 5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 86
கைபேசி எண் – 9884082823
Location: https://goo.gl/maps/fZXqRjz6n1u461fc7