செஞ்சோலை குழந்தைகள் படுகொலை – உதவிய இஸ்ரேல் மீது வழக்கு

இஸ்ரேலிய கிபிர் போர் விமானம், இலங்கை வான்படை.

இலங்கையில் இறுதி கட்ட போரின் போது, ​​இலங்கைக்கு இஸ்ரேல் ஆயுதங்களை விற்றது எனவும், இலங்கை இராணுவம் அங்கு கடுமையான அட்டூழியங்களைச் செய்தபோது அதற்கு ஆதரவாக இஸ்ரேல் இருந்தது எனவும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேல் உடந்தையாக இருந்ததைப் பற்றி வழக்கு தொடரவும், விசாரிக்கப் படவும் வேண்டும் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான ஈடே மேக் (Eitay Mack) என்பவர் இஸ்ரேலிய மனித உரிமை ஆர்வலர்களான Yesh Gvul, Torat Tzedek உடன் சேர்ந்து சேகரித்த ஆதாரங்கள் அடிப்படையில் நீண்ட கட்டுரை ஒன்றை அல்ஜசீரா ஊடகத்தில் எழுதியுள்ளார்.

Attorney Eitay Mack
இஸ்ரேலிய வழக்கறிஞர் மற்றும் செயல்பாட்டாளர் ஈடே மேக்.

பிப்ரவரி 2002 முதல் மே 2009 வரையான இலங்கை போரில் இஸ்ரேலிய தலையீடு குறித்து தகவல்களை சேகரித்த இவர்கள், இலங்கைக்கு உடந்தையாக இருந்த இஸ்ரேலை தற்போது அம்பலப்படுத்தி உள்ளனர். அதிலும் குறிப்பாக ஈவு இரக்கமின்றி இலங்கை விமானப்படை, “செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின்” மீது குண்டு வீசி 60 அப்பாவி குழந்தைகளைக் கொன்று, பல குழந்தைகளை காயப்படுத்திய கொடூர நிகழ்வை நடத்தப் பயன்படுத்திய விமானம் இஸ்ரேல் வழங்கியது என்ற உண்மையை அம்பலப்படுத்தி உள்ளார்கள். 

சமீபகாலமாக இவர்கள் அனைவரும், இஸ்ரேலின் நிறவெறி கொள்கைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களைத் தடுப்பதற்கான வேலைகளைச் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக, ஐநா சபையும், மனித உரிமை அமைப்புகளும் இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரச படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் போர்க்குற்றங்களைப் பற்றிய ஆதாரங்களை சேகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்களே ஒழிய, இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக சர்வதேச நாடுகளும் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆதாரங்களை சேகரிக்க அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, இவ்வாறு சிங்கள இலங்கைக்கு உடந்தையாக இருந்த நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று எனவும், இஸ்ரேலின் இராணுவ தொழில்நுட்பத்தை கணிசமான அளவில் 2000ம் ஆண்டில் கொள்முதல் செய்து, ஆசியாவிலே இஸ்ரேலின் மிக முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவராக இலங்கை திகழ்ந்தது. மேலும், இலங்கையின் சிங்களப் படைக்கு இஸ்ரேல் பயிற்சி அளித்தது எனவும் ஈடே மேக் ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

Kfir Eelam Tamil children01
Kfir Eelam Tamil children02
கிபிர் தாக்குதலுக்கு அஞ்சி பதுங்குகுழியில் தஞ்சமடைந்த மாணவர்கள்

இலங்கைக்கு இசுரேலிய விமானங்கள்

அமெரிக்கா வியட்நாம் போரின் போது பயன்படுத்திய பழைய கண்காணிப்பு ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) 1970களின் நடுப்பகுதியில் வாங்கி அவற்றை உருவாக்கத் தொடங்கிய இஸ்ரேல், அதை 1980களில் நடந்த லெபனான் போரில் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியது. அதன் பின்னர் தாக்குதலை நடத்தும் வகையான முன்மாதிரிகளை உருவாக்கிய இஸ்ரேல், அவற்றை காசா பகுதியில் நடந்த தாக்குதல்களில் பயன்படுத்தியது. 

இப்படி உலக பிரபலமான இந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானங்களை 1990கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமடைந்திருந்த போது, இலங்கை அரசு இஸ்ரேலிடம் இருந்து வாங்கியது. இஸ்ரேலிடம் வாங்கிய முக்கிய இராணுவ ஆயதங்களில் இந்த ஆளில்லாத விமானமும் ஒன்றாகும்.

இஸ்ரேலின் UAV-கள் “இலங்கை போரில் முக்கிய பங்காற்றியது” என இதனைக் குறித்து இலங்கை இராணுவத்தினர் கூறியுள்ளனர். அதேபோல இலங்கையின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பலமுறை அவர்களின் நேர்காணல்கள் மற்றும் அறிக்கைகளில், இலங்கை படைகள் தாக்குதல் நடத்த தொடங்கும் முன்னர், “பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படா வண்ணம்” அதை உறுதி செய்வதற்காக தாக்குதல் நடத்த இருக்கும் பகுதியில் மக்கள் யாரும் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க இந்த ஆளில்லாத விமானம் மூலம் படம்பிடித்த காணொளிகளைப் பயன்படுத்தி “பொதுமக்களுக்கு தீங்கு நிகழாது” தாக்குதல் தொடுத்ததாக கூறியுள்ளனர்.

ஆனால், உண்மையில் பொது மக்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை ஐநா அமைப்பு சேகரித்தது குறிப்பிடத்தக்கது. ஐநாவின் ஆதாரத்தின்படி, போரின் கடைசி மாதங்களில் மட்டும் 40,000 முதல் 75,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை பாதுகாப்புப் படையினரால் திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2015ல் வெளியான ஐநா அறிக்கையில், இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டால் “அது பொதுமக்களின் உயிரை எடுக்கும், மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் என்று அறிந்தே, சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி அரசு மற்றும் இராணுவத் தலைவர்கள் அதை ஏற்றுக்கொண்டு உள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வேறுவிதமாக கூறுவதானால், இஸ்ரேலிய UAV-கள் பொது மக்களின் மரணங்களைத் தடுக்க உதவவில்லை, மாறாக அவை அவர்களைக் கொல்வதற்கு உதவி இருக்கிறது.

இனப்படுகொலைக்கு ஆயுத உதவி

இலங்கையில் மனிதகுலத்திற்கு எதிராக போர்க் குற்றங்களைப் புரிந்ததில் ஆளில்லாத விமானம் போன்றே, மற்ற இஸ்ரேலிய ஆயுதங்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்ததுள்ளன.

Sencholai_students massacre
செஞ்சோலை மாணவர் படுகொலை நினைவஞ்சலி

இஸ்ரேலில் இருந்து கிபிர் (Kfir) போர் விமானங்கள், துவோரை (Dvora) மற்றும் ஷால்டாக் (Shaldag) போர்க்கப்பல்கள், பீரங்கி அமைப்புகள் மற்றும் கேப்ரியல் (Gabriel) எனும் கடலிலும் ஏவப்படும் ஏவுகணைகள் ஆகியவற்றை இலங்கை வாங்கியுள்ளது. இந்த கனரக ஆயுத தாக்குதலுக்கான உளவுபார்க்க இஸ்ரேலிய ஆளில்லா விமானம் பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் பொது இடங்கள் மீதும் குண்டுகளை வீசி தாக்கி இனப்படுகொலையை நிகழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை விமானப்படை இந்த கிபிர் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிரபலமான ஒன்று ஆகஸ்ட் 14, 2006ல் செஞ்சோலை சிறுமிகள் காப்பகத்தின் மீது குண்டு வீசி 60 குழந்தைகளைக் கொன்று, பல குழந்தைகளை காயப்படுத்திய சம்பவமாகும். 

உலகின் மற்ற நாடுகளும் இந்த கொலைகார இலங்கைக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கியுள்ள போதிலும், “இஸ்ரேல் ஆயுதங்களை வழங்கியதில் தனித்து நிற்கிறது. இதன் மூலம் (இஸ்ரேல்) நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது” என இஸ்ரேலிய ஆய்வாளரான ஷ்லோமி யாஸ் (Shlomi Yass) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போருக்குப் பின்னர் இஸ்ரேலின் தூதுவராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை அதிகாரி டொனால்ட் பெரேரா இந்த தகவலை உண்மை என உறுதிப்படுத்தியுள்ளார். 21.7.2010 அன்று டொனால்ட் பெரேரா இஸ்ரேலிய Ynet செய்தி இணையத் தளத்திற்கு அளித்த பேட்டியில், “பல ஆண்டுகளாக இஸ்ரேல், பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் போரில் தகவல் பரிமாற்றம், இராணுவ தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்கி எங்களுக்கு உதவியது. கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை இஸ்ரேலிடமிருந்து உதவியாக பெற்றுள்ளோம்” என கூறியதன் மூலமாக ஷ்லோமி யாஸ் கூறியது உண்மையென உறிதிப்படுத்திக் கொள்ளலாம்.

கள்ளமெளனம் காக்கும் சர்வதேசம்

போரில் நடந்த மனித உரிமை மீறல் அட்டூழியங்கள் குறித்து சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் பல சான்றுகள் மற்றும் பல அறிக்கைகள் இருந்தபோதிலும், அதற்கு பொறுப்பான இலங்கை மீதோ அல்லது இஸ்ரேலை போல இலங்கைக்கு மறைமுகமாக உதவிய பிற நாடுகள் மீதோ இதுவரை எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போர் நடந்தபோது பொதுமக்களை காக்க வேண்டிய ஐநா அவர்களைப் பாதுகாக்க தவறியது. இந்த தோல்வி, அதன் அறிக்கையை கூட காக்க இயலாது 2011ல் அவை ஊடகங்களுக்கு கசிந்ததில் பிரதிபலித்தது. இதையெல்லாம் கடந்து, போருக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தராமல் மீண்டும் தோல்வியுற்று நிற்கிறது ஐநா அவை.

அதுபோல, மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தும் மேற்கத்திய நாடுகள் கூட தமது பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் நலன்களுக்காக இலங்கையுடன் “வழக்கம் போல வணிகத்தை” தொடரவே விரும்புகின்றன. 

இதன் வாயிலாக உலகெங்கிலும் உள்ள சர்வாதிகாரிகள் மற்றும் அடக்குமுறை ஆட்சிகளுக்கு தெரிவிக்கப்படும் சமிக்ஞை (signal) என்னவெனில் பொது மக்கள் மீது தாக்குதல்களை தைரியமாக மேற்கொள்ளலாம், கேட்க யாரும் வரமாட்டார்கள் என்பதேயாகும். இதனால்தான் போர்க்குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகளையும், அவர்களின் வெளிநாட்டு கூட்டாளிகளையும் அவ்வளவு எளிதில் விட்டுவிடக் கூடாது என்கிறார் ஈடே மேக்.

இலங்கைக்கு உடந்தையாக இருந்து குற்றம் புரிந்த இஸ்ரேலிய நிறுவனங்கள், இஸ்ரேலிய அதிகாரிகள், மற்றும் தனிநபர்கள் மீது சர்வதேச மற்றும் இஸ்ரேலிய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் விசாரணையை துவங்க போதுமான ஆதாரங்கள் உள்ளன. இலங்கையில் நடந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட இஸ்ரேலியர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை தொடங்குமாறு இஸ்ரேலின் சட்ட அதிபரிடம் கோரிக்கையை முன்வைக்க தீர்மானித்து உள்ளோம். அதோடு சர்வதேச மன்றங்களிலும் இதையே செய்வோம் எனவும் ஈடே மேக் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட நடவடிக்கைகளை தொடர்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றபோதிலும் நாங்கள் இதனை கைவிட மாட்டோம். ஒருவேளை இலங்கையில் நடந்த குற்றங்களை உலகம் பெரிதாக எடுத்துக் கொண்டிருந்தால், இன்று சிரியாவில் பஷார் அல் அசாத், தெற்கு சூடானில் சல்வா கீர், மியான்மரில் மின் ஆங் ஹ்லைங், உக்ரைனில் விளாடிமிர் புடின் ஆகியோர் எந்த குற்றங்களையும் செய்திருக்கமாட்டார்கள். அதோடு இஸ்ரேலும் காசாவிலும், மேற்குக் கரையிலும் எந்தவித குற்றங்களையும் செய்திருக்காது என இஸ்ரேலிய செயற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலை போராளிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதில் தொடங்கி இனப்படுகொலையை நிகழ்த்துவது வரை; அதன் பின்னரான போர்க்குற்ற விசாரணை என அனைத்தையும் மேற்குலக நாடுகள் தங்கள் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை மையப்படுத்தியே செயல்படுத்தி வருகின்றன. 

ஈழம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர் நிலப்பரப்பை ஒட்டியுள்ள கடலைச் சுற்றிதான் மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் வணிக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் மிக முக்கிய பிராந்தியங்களாக அம்பந்தோட்டா, திரிகோணமலை அமைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதே அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் நோக்கமாக உள்ளது. இதற்கு தடையாக இருந்த காரணத்தாலேயே இந்நாடுகள் கூட்டாக சேர்ந்து ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »