அழிந்து வரும் வளங்கள், ஒரு சூழலியல் எச்சரிக்கை 

மனிதகுலம் இங்கு பிழைத்து வாழ்தலுக்கான “ஆசை” இன்று “பேராசையாக” மாறிவிட்ட நிலை தான் தற்போது இந்த பூமிபந்து சந்தித்து வரும் பல சூழலியல் (Ecology) மற்றும் சுற்றுச்சூழல் (Environmental) பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக உள்ளது.

மனிதகுலம் பூமியில் இருக்கும் நீர், கரிமங்கள்,  கனிமங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்வதில் பல தலைமுறைகளின் தேவையை அறிய கடந்த கால பயன்பாடுகளை அளவிட வேண்டியது அவசியமாகிறது.  அப்படி ஒரு சமூகவியல் கூட்டு நிகழ்வாக (Sociological phenomenon) கடந்த தலைமுறை சுற்றுசூழலில் ஏற்படுத்திய பாதிப்புகளை அறிவதன் மூலம் நாம் சூழலியல் பாதிப்புகளை உணர முடியும். 

ஆங்கிலத்தில் ‘Shifting Baseline Syndrome’ என்று அழைக்கப்படும் இந்த சொல்லாடல் சூழலியல் துறையில் ஒரு முக்கியமான சொல்லாடல் ஆகும். இந்த சொல் மனிதகுலத்தின் ஒரு தலைமுறையின் மனநிலையையே அளவிட்டு பார்க்கும் சொல்லாக இருக்கிறது.

பொதுவாக ‘தளக்கோடு’ (Baseline) என்பது ஒரு தொடக்கநிலைக்கான அடிப்படை அளவீட்டை குறிக்கக்கூடிய சொல்லாகும்.   சுற்றுச்சூழல் துறையில் இந்த சொல் நிகழ்காலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களின் அளவீட்டை குறிக்கக்கூடிய சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.   அதாவது, ஒரு நிலக்கரி சுரங்கத்தில் இன்றைய நிலக்கரி அளவினை கணக்கில் எடுத்துக்கொண்டு,  எவ்வளவு வேகத்தில் நிலக்கரியானது தோண்டப்படுகிறது என்பதையும் கணக்கில் கொண்டு,  50 அல்லது 70 வருடம் கழித்து (அதாவது ஒரு தலைமுறையின் பயன்பாட்டுக்குப் பின்)  மொத்தம்  நிலக்கரி அளவில் எவ்வளவு மீதம் இருக்குமோ அதுவே எதிர்காலத்திற்கான தளக்கோடாக (Baseline) கருதப்படும்.   ஆகவே, இந்த அளவீடு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில்  எவ்வளவு இயற்கை வளங்கள் அத்தலைமுறை மனிதர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்,  அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு மீதம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட கூடிய ஒரு முக்கியமான அளவுகோலாக கருதப்படுகிறது. 

மாறும் தளக்கோடுகள் 

மனித சமூகமானது, இயற்கை வழங்கியுள்ள வளங்களை அந்தந்த தலைமுறையின் அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப பயன்படுத்தி வருகிறது. 1000 வருடங்களுக்கு முன்பு பெட்ரோல் முதலிய எரிபொருள்களின் பயன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம்.   ஆனால், அன்று வேறு விதமான இயற்கை வளங்களை – மரம்,  நீர்,  சில வகை உலோகங்கள் –  பயன்படுத்தினர்.    இதன் காரணமாக இயற்கை வளங்களில் ஒரு பகுதி ஒரு தலைமுறையின் காலத்தில் பயன்பாட்டுக்கு உள்ளாகி குறைந்து போவது இயல்பான நிகழ்வுதான். அடுத்த தலைமுறை தன் முன்னோர்கள் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து  பயன்படுத்திக்கொள்ள தொடங்குகிறது. இந்த  மனநிலையை ‘Shifting Baseline Syndrome’ (தளக்கோடு மாற்றிடும் நோய்க்குறி) என்று சூழலியல் அறிஞர்கள் அழைக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, 01.04.2022 நிலவரப்படி இந்தியாவில் மொத்த நிலக்கரி கையிருப்பு 361.41 பில்லியன் டன்  இருப்பதாக இந்திய ஒன்றிய அரசின் இணையதளம் கூறுகிறது.  அதே நேரத்தில் 2020 வருடத்தை ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டு நிலக்கரி பயன்பாடு 12% அதிகரித்து வருடத்திற்கு 1 பில்லியன் டன் நிலக்கரி தேவை என்கிற நிலையை எட்ட தொடங்கியுள்ளது.  இது ஜனவரி 2023 காலத்தில் 1.078 பில்லியன் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது 2030குள் இன்னும் 2.5% அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

இந்த 361.41 பில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு என்பது நாம் தற்பொழுது நமக்கு முந்தைய தலைமுறை மக்களிடமிருந்து பெற்ற அளவாகும்.   ஒருவேளை இதே வேகத்தில் நாமும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் நிலக்கரியின் அளவு 360.93 பில்லியன் டன்  அளவுக்கு இருக்கும். அதாவது நம்ம தலைமுறை ஏறத்தாழ 480 மில்லியன் டன் நிலக்கரியை பயன்படுத்தியிருக்கும். அடுத்த தலைமுறையும் ‘இவ்வளவு தான் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்ற மனநிலையை உருவாக்கிக் கொண்டு  360.93 பில்லியன் டன்  நிலக்கரி அளவை தொடக்கநிலையாக கொண்டு அந்த இயற்கை வளத்தை பயன்படுத்த தொடங்கும்.   இப்படி ஒவ்வொரு தலைமுறையும் தன் முந்தைய தலைமுறை தனக்கு விட்டுச்சென்ற இயற்கை வளத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டு பயன்படுத்த தொடங்கும் மனநிலையை தளக்கோடு மாற்றிடும் நோய்க்குறி (Shifting Baseline Syndrome) என்று சூழலியல் அறிஞர்கள் பெயர் சூட்டுகின்றனர்.

உலகில் எந்த ஒரு விலங்கும் செய்திடாத ஒரு செயலை, இயற்கைவள திருட்டு, மனித குலம் செய்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.   இதன் விளைவாக இன்று உலக அளவில் இயற்கை வளங்களின் அளவு அதிவேகமாக குறைந்து வருகிறது.   நவீன நாகரிகப் போக்கில், பெருமளவில் நடக்கும் குடியேற்றங்களும்,  நகரமயமாக்கல்,    கட்டாய சந்தை தன்மையின் காரணமாக தேவைக்கு அதிகமான உற்பத்தியும்,  தொழிற்சாலைகள் வாகனங்கள் போன்றவற்றின் பெருக்கமும்  இத்தகைய அதீத இயற்கை வள பயன்பாட்டிற்கு காரணமாய் அமைகின்றன.

கடல்சார்  உயிரியல் அறிஞர்  திரு. டேனியல் பாலி அவர்கள் முதன் முதலில் 1995ல் இச்சொல்லை பயன்படுத்தத் தொடங்கினார்.  குறிப்பாக, கடல்சார் உயிரினங்களின் அளவு வெகு வேகமாக குறைந்து வருவதை சுட்டிக்காட்டிய அவரது இந்த கருத்து, கடல்சார் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து இயற்கை வளங்களுக்கும் பொருந்தும். சில உதாரணங்களை உற்று நோக்குவதன் மூலம் இது எவ்வளவு  ஆபத்தான மனநிலை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

வேளாண் நிலங்களின் நிலை

உலக அளவிலான வேளாண்மை  நிலங்களின் பரப்பளவு (கீழே உள்ள படத்தை கவனிக்க)  1965ல் முதல் 1990 வரை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. அதன் பின் மிக வேகமாக குறைந்து இருப்பதை கவனிக்க முடியும். 1990 காலகட்டங்களில் ‘தாராளமயம்’ (Liberalization) என்ற முதலாளித்துவக் கொள்கை உலக அளவில் புகுத்தப்பட்டது.  இதன் விளைவாக பல்வேறு நாடுகளில் வேளாண்மை தொடர்பான சட்டதிட்டங்களும்,  பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளும், மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய  சட்டங்களும் உருவாக்கப்பட்டன   என்பது குறிப்பிடத்தக்கது.

படம் 1: வேளாண் நிலங்களின் அளவு. உலக வங்கி.

அதே சமயம் உலக அளவிலான காடுகளின் அளவு அதே காலகட்டத்திற்குப் பிறகு படுவேகமாக குறைந்தும் போனது. (கவனிக்க கீழே உள்ள படம்) ஆனால் இதுபற்றிய போதுமான விழிப்புணர்வு பொதுசமூகத்திடையே இல்லாமல் கடந்து சென்று கொண்டுள்ளதை நாம் கண்டு வருகிறோம்.

படம் 2: காடுகளின் அளவு, உலக வங்கி.

குறைந்து போகும் மீன்வளம் 

கடலோர வாழ்விடங்களில் வாழும் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்விற்கும்,  உணவிற்கும் மட்டும் மீன் பிடித்துக் கொண்டிருந்த காலம் போய் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தன. இவை மீனை பதப்படுத்தி வைக்க முடியும் என்கிற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூர்வீக மக்களின் மீன்பிடி உரிமைகளை மீறி மிகப்பெரிய கப்பல்கள் மூலம் மீன் பிடி தொழிலை செய்தன. இதனால் கடல் மீன் வளம் படுவேகமாக குறையத் தொடங்கியது. கடல்சார்  உயிரியல் அறிஞர்  திரு.டேனியல் பாலி இது பற்றிக்  கூறும்பொழுது, “நவீன மீன்பிடி நிறுவனங்களின் மரபுசார் மீன்பிடி அறிவு இல்லாமையும்,  அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் கிடைக்கும் சந்தைக்காக அதீத மீன் பிடித்தல் (Overfishing),  மற்றும் அறிவியல் தன்மையை தவிர்த்துவிட்டு மீன்பிடிப்பது ஆகிய மூன்று காரணங்களும் கடல் மீன் வளம் வேகமாக காணாமல் போவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன” என்று  ‘தொலைந்து போகும் மீன்கள் (Vanishing Fish: Shifting Baselines and the Future of Global Fisheries)’  என்ற அவரது நூலில் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க கடல் உயிரியல் அறிஞர்   ஜெரிமி ஜாக்சன் (Jeremy Jackson) இதுபற்றி தனது கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆய்வறிக்கையில் கூறும்பொழுது, “கடல் சார்ந்த வாழ்விடங்களின் சூழலை மனிதர்கள்  மிகக்கடுமையாக சீர்குலைத்து விட்டனர்” என்று வேதனையோடு குறிப்பிடுகிறார்.  இன்றும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மீன் பிடி பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளில் முன் போல மீன்கள் கிடைப்பதில்லை என்று கூறுவதை நாம் கேட்கமுடியும்.

இயற்கையைச் சுரண்டும் மனித இனம்

இந்த கருத்தாக்கம் கனிம வளம், கடல் வளம்  மட்டுமல்லாமல்  பிற அனைத்து வளங்களுக்கும் பொருந்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.   எடுத்துக்காட்டாக, ‘நமது பெற்றோர்கள் காலத்தில்  எத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தன? தற்போது எவ்வளவு நம் கண்ணில் தென்படுகின்றன?’ என்பதை கணக்கிட்டுப் பார்த்தால் எப்பேர்பட்ட ஓர் உயிரியல் அழிவிற்கு மனிதர்களின் நவீனத்துவம் வழிவகை செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பறவைகளை பாதுகாக்கும் ராயல் சொசைட்டி (Royal Society for the Protection of Birds) என்ற நிறுவனத்தின்  2020ஆம் ஆண்டு ஆய்வின்படி இந்தியாவில் இருந்த சிட்டுக்குருவிகளின் 60 விழுக்காடு அழிந்துவிட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, ஆந்திர பிரதேசத்தில் இருந்த 80 விழுக்காடு சிட்டுக்குருவிகள் தற்போது அழிந்துவிட்டன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மிக முக்கியமாக காடுகளின்  அழிவு மனித குலத்தின் இருத்தலை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.  கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் 4.30 கோடி   ஏக்கர்  காடுகள் உலக அளவில் அழிக்கப்பட்டுள்ளன.  இது தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பின் மூன்றரை மடங்கு அளவாகும்.

படம் 3: பிரேசில் காடுகள் அழிப்பப்பட்ட அளவு.

இந்தியாவைப் பொருத்தவரை பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள்  தொடங்குவதற்கும்,  புதிய நவீன குடியிருப்புகள் கட்டுவதற்கும்  காடுகள்  தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன.   2001 முதல் 2010 வரை மட்டும் அழிக்கப்பட்ட காடுகளின் பரப்பளவு 15,376.23 ஏக்கர்கள் ஆகும்.  அதேபோல், 2011 முதல் 2018வரை அழிக்கப்பட்ட காடுகளின் பரப்பளவு 21,529.71 ஏக்கர்கள் ஆகும்.  

இந்நிலையில் கடந்த ஜூன் 5, 2021 ஆம் தேதி ‘தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு (Standing Committee of the National Board for Wildlife – SC-NBWL)’ ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய ஒன்றியத்தின் 11 மாநிலங்களில் பல்வேறு செயல் திட்டங்களுக்காக ஏறத்தாழ 1800 ஏக்கர்கள்  வனப்பகுதி உயிரினங்களின் வாழ்விடங்களை திருப்பி விடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.   அதாவது வேலிகள் போடுவதன் மூலமாகவோ, மரங்களை வெட்டுவதும் மூலமாகவோ அந்தப் பகுதியில் வாழும் உயிரினங்களை வேறு இடத்திற்கு  திருப்பி விடுவதன் மூலமாக அந்த பகுதியை கட்டுமான பணிக்கு பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு எடுத்துள்ளது.   இதில் வேடிக்கை என்னவென்றால்  இந்த குழுவின் சட்டப்படி ஆண்டிற்கு ஒரு முறையாவது ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கையில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒருமுறை கூட இக்குழு கூடவில்லை.  ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இக்குழுக்களின் வேலை இயற்கை வளங்களையும்,   அது சார்ந்த உயிரினங்களையும் பாதுகாப்பதா அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் தரகு வேலை பார்ப்பதா என்ற கேள்வியே மிஞ்சுகிறது.

தற்போது உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு நோய்க் கிருமிகள் விலங்குகள்  கொல்லப்படுவதாலும்,  காடுகள் அழிக்கப்படுவதாலும் ஏற்பட்ட துணை விளைவுகள் என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.   அதேபோல் அதீதமான இயற்கைவள சுரண்டல்கள்; அதிலும் குறிப்பாக சுரங்கம் அமைத்து எடுக்கப்படும் நிலக்கரி,  பெட்ரோல்,   இரும்பு முதல் தங்கம் வரையிலான உலோகங்கள்  ஆகியவை பூமியின் இறுகிய தன்மைக்கு பெரும் பாதகமாக அமைந்து போகின்றன.   இதன் காரணம் நிலநடுக்கம்,  பெருவெள்ளம்  போன்ற இயற்கை சீற்றங்களின் போது மண்ணின் நிலைத்தன்மை இல்லாத காரணத்தினால் நிலச்சரிவு தொடங்கி பெரும் நிலவெடிப்புகள் வரை பல்வேறு பேரழிவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.  

எதிர்கால  சந்ததியினர் வாழ்க்கைக்கு தேவையான இயற்கை வளங்கள் விட்டுச்செல்ல வேண்டுமென்ற அக்கறையில்லாத மன நிலையும் இதற்கு காரணமாகவுள்ளது.   இம்மனநிலையை, தளக்கோடு மாற்றிடும் நோய்க்குறி   என்று அழைக்கப்படுகிறது.  இது மருத்துவம் சார்ந்த நோயல்ல; மாறாக இது சூழலியல் சார்ந்த ஒழுங்கீனம். இது தொடர்ச்சியான பிரச்சாரங்கள் மூலமும்,  இயற்கை வளங்கள் சார்ந்த அரசின் கொள்கை மாற்றங்கள் மூலமும்,  எதிர்கால சந்ததியினர் பற்றிய  சமூகத்தின் விழிப்புணர்வின் மூலம் மட்டுமே சீரமைக்க  முடியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »