‘ஸ்டெர்லைட்’ அகர்வால் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது

sterlite condemn statement

15 தமிழர்களை படுகொலை செய்த ‘ஸ்டெர்லைட்’ அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது! ஆக.6-ம் தேதி சென்னை பள்ளி நிகழ்விற்கு வரும் ‘கொலைகார ஸ்டெர்லைட்டின்’ அனில் அகர்வாலுக்கு எதிராக மே 17 இயக்கம் போராடும்! – மே பதினேழு இயக்கம்.

நச்சுக்காற்றை வெளியிட்டு வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போராடிய 15 அப்பாவித் தமிழர்களை அன்றைய மோடி-அதிமுக அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் படுகொலை செய்ததை தமிழர்கள் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் தமிழர்களை படுகொலையை செய்துவிட்டு தமிழ்நாட்டிற்குள் நுழைவதை அனுமதித்து விடுவோமா? வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஒரு பள்ளி நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ள அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தமிழர்கள் அனுமதிக்க முடியாது. மீறி நுழையும்பட்சத்தில், அனைத்து முற்போக்கு ஜனநாயக ஆற்றல்களையும் ஒன்றிணைத்து ஜானநாயகரீதியிலான போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை கூறிக்கொள்கிறோம்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வேதாந்தா குழுமத்தின் நிறுவனரான மார்வாடி அனில் அகர்வால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களில் ஸ்னோலின் உள்ளிட்ட 15 அப்பாவி தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இருந்தவர். இவரது வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி, ஒடிசா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், கோவா மற்றும் ஜாம்பியா, லைபீரியா, தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் ஆலைகளை நிறுவி செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி போலவே இதன் நிறுவனங்கள் செயல்படும் இடங்களில் எல்லாம் உள்ளூர் சட்டவிதிகளை மீறி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும், மனித உரிமைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதால் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றன.

ஒடியாவின் டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் புனிதமாக கருதும் நியாம்கிரி மலைகளை குடைந்து 2014-ல் பாக்சைட் தாது எடுக்க முயன்றதை அப்பழங்குடியினர் கடுமையாக எதிர்த்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள அலுமினிய உருக்காலையில் 2009-ல் நிகழ்ந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கோவாவில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி இரும்பு தாதுக்களை ஏற்றுமதி செய்தது. பஞ்சாப் அரசிக்கு அதிக விலைக்கு மின்சாரம் விற்று முறைகேட்டில் ஈடுபட்டது. ஒடிசாவில் அலுமினிய உருக்காலை கழிவுகளை ஆற்றில் கலந்து சுற்றுச்சூழலை நாசம் செய்தது. இது போல, ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழலை நாசம் செய்தும், அயர்லாந்தில் தொழிலாளர்களின் மனித உரிமை மீறலிலும் அனில் அகர்வாலின் வேதாந்தா ஈடுபட்டுள்ளது.

தூத்துக்குடியில் இதன் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து சுற்றுச்சூழல் முறைகேட்டில் ஈடுபட்டது. 2013-இல் இதன் ஆலையிலிருந்து வெளியேறிய கந்தக காற்று தூத்துக்குடி நகரை கடுமையாக தாக்கியது. இதனைத் தொடர்ந்து மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இதன் உச்சகட்டமாக 2018-இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஸ்னோலின் உள்ளிட்ட 15 பேரை படுகொலை செய்யப்படுவதற்கு பின்னணியில் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் செயல்பட்டுள்ளது. அதன் பின்னரும் தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டது.

இவ்வாறு மனிதகுல விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால், வரும் ஆகஸ்ட் 6 அன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள ‘சுரானா ஹைடெக் இன்டர்நேஷனல்’ என்ற பள்ளியை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்க உள்ளார். தமிழர்கள் 15 பேரை படுகொலை செய்துவிட்டு தமிழ்நாட்டிற்குள் வந்துசெல்லலாம்  என்ற எண்ணம் தமிழர்களை அவமதிக்கக்கூடியதாகும். அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்க வேண்டும். அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்கு நுழைய அனுமதி இல்லை என்பதை தமிழர்கள் நாம் உரக்க கூறுவோம்.

அனில் அகர்வால் சென்னை வரும் திட்டத்தை கைவிட வேண்டும். மீறி தமிழ்நாட்டிற்குள் நுழையும்பட்சத்தில், அனைத்து முற்போக்கு ஜனநாயக ஆற்றல்களை ஒன்றிணைத்து ஜனநாயகரீதியிலான போராட்டத்தை முன்னெடுப்போம் என மே பதினேழு இயக்கம் கூறிக்கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010
19/07/2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »