பணி வாழ்வையே பொது வாழ்வாக்கிய ஐயா சா.காந்தி

குறள்:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பொருள்: தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

தம் அன்பு மக்களின் அறிவாற்றலை நினைத்து பெருமை கொள்ளும் தாய்க்கு நிகராக தந்தையின் பங்களிப்பும் இருப்பது தமிழ்ச் சமூகத்தின் இயல்பு. அவ்வாறே மே பதினேழு இயக்கத்திற்கு தந்தையாகவும், நண்பராகவும், தோழராகவும், ஆசானாகவும் விளங்கும் ஐயா சா.காந்தி அவர்களின் 55 ஆண்டு பணிநிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பு (PESOT) மற்றும் தமிழ்நாடு மின்வாரிய என்ஜினீயர்ஸ் யூனியன் அமைப்புகளால் நடத்தப்பட்டது.

35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிசெய்த பொறியாளர் ஐயா சா.காந்தி அவர்கள், பணி ஒய்வு பெற்று 20 ஆண்டுகள் ஆகியும் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர். ஐயா அவர்கள், தான் பணி புரிந்த காலத்தில் செய்த பொதுவுடைமை செயல்களின் பட்டியல் மிக நீளமானது. அரசுப்பணி என்பது மக்கள் பணி என்ற குறிக்கோளுடன் செயலாற்றி பல குடிசைப்பகுதிகளில் மின்சார வசதியைக் கொண்டு சென்றவர் ஐயா சா.காந்தி. இதற்காக சில ஆதிக்க சக்திகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாது அவர்களை துணிந்து எதிர்த்தவர்.

2000-ஆம் ஆண்டு மின்சாரத் துறையை தனியாரிடம் கொடுக்கும் மசோதாவை கடுமையாக எதிர்த்து, தொழிற்சங்கங்களுடன் இணைந்து சட்டப் போராட்டத்தை நடத்தினார் ஐயா சா.காந்தி. அவரின் 55-ஆம் ஆண்டு பணிநிறைவு பாராட்டு வாழ்த்தரங்கம் கடந்த ஜூன் 25-ம் நாள், சென்னை தி. நகர், சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.

மே 17 இயக்கத் தோழர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக, தனியார்மயத்தின் பேராபத்துகளை விளக்கும் ஆசானாக விளங்கியவர் ஐயா சா.காந்தி அவர்கள். தந்தையின் அரவணைப்பு குழந்தைக்கு மனதளவில் துணிவைக் கொடுக்கும் என்பதை தோழர் திருமுருகன் காந்தியின் சிறை நாட்களில் உணர்த்தியவர். பொதுவுடைமை கோட்பாடுகளை சமூகத்தில் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைபிடித்தவர். இதன் மூலம் தன் இரு குழந்தைகளையும் சிறந்த மனிதர்களாக உருவாக்கியதே இதற்குச் சான்று.

விழாவிற்கு வருகை புரிந்த அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் நிர்வாகிகளும் ஐயா அவர்களுடன் பணிபுரிந்த சிறப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சிறந்த போராளியாக விளங்கிய ஐயாவின் உயர்ந்த பண்புகளை அவரது சிறுவயது நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிந்த தோழர்கள் உரையில் இருந்து அறிய முடிந்தது.

நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு ஐயா சா. காந்தி அவர்களை சிறப்பித்தனர். “தந்தையும் மகனும் திருக்குறளில் கூறியது போல் இணைந்து களப்பணியாற்றி ஒரு போராளிக் குடும்பமாக இருக்கிறார்கள்” என்று பாராட்டினார் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள்.

விழாவில் பேசிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் ஐயா சா. காந்தி குறித்து பேசும்போது, “சிறந்த தொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்தவர். தொழிற்சங்கங்கள் அரசியல் களத்தில் நின்று மக்களுக்காகப் போராட வேண்டும் என்று வழிகாட்டியவர்” என்று கூறினார். “போராளிகள் ஒருகாலத்திலும் அடக்குமுறைக்கு அடிபணிந்து விடக் கூடாது என்பதை பாடமாக்க கற்று கொடுத்தவர்” என்று SDPI கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் நெல்லை முபாரக் அவர்கள் தனது உரையில் கூறினார். “ராமேஸ்வரத்தில் உள்ள கடைக்கோடி மீனவ கிராமங்களை பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அங்கு மின்சாரம் வழங்கப்பட காரணமாக இருந்தவர் ஐயா சா. காந்தி” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தோழர் ஜவாஹருல்லா அவர்கள் கூறினார்.

தனது இணையர் இறை நம்பிக்கை கொண்டவராக இருந்த போதும் அவரது விருப்பதைத் தடுக்காமல் அவருக்கு உதவியாக வாழ்ந்து, பெண்ணுரிமைக்கு முன்னிடம் கொடுத்த சிறந்த பெரியாரியவாதியாக இருப்பவர் ஐயா சா.காந்தி அவர்கள். “மின்துறையில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் தமிழ்நாடு மின்சார வாரியம் பல கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது. மேலும் நெருக்கடியான நேரங்களில் ஐயா சா. காந்தி அவர்களுக்குத் துணை நின்ற அவரின் வாழ்விணையர் செல்வமணி அவர்கள் அங்கு படமாக அல்ல, அனைவருக்கும் பாடமாக இருக்கிறார்” என்று உரையாற்றினார் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

மின்சாரத்துறை குறித்து பல புத்தகங்களை எழுதிய அவர், புத்தகங்களை மட்டுமே தன் பெரும் சொத்தாக மதிப்பவரும் கூட. விசிக தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் உரையாற்றும்போது, “கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்தும் தொழிற்சங்கத் தலைவராக அல்லாமல் இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவர் கொண்ட கரிசனையை அவரின் நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த மண்ணின் கனிம வளங்களையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் என்கின்ற விரிந்த பார்வை அவரின் நூல்களில் இருக்கிறது” என்று கூறினார்.

ஈழத்தில் நடந்துகொண்டு இருந்த இனப்படுகொலைக்கு தொடக்கமான கருப்பு ஜூலை நாட்களில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன் குழந்தைகளுக்கு கருப்பு கொடியை பள்ளி சீருடையில் அணிவித்து அனுப்பினார் ஐயா. சிறு வயதிலிருந்தே இன உணர்வையும், சமூக அவலத்தை எதிர்க்கும் அற உணர்வையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்த தமிழ் தேசியவாதியாக இருப்பவர் அவர்.

“போராட்டமே வாழ்கையாகக் கொண்டவர் ஐயா சா. காந்தி. மின்துறையில் பல கோடி ரூபாய்க்கு இழப்புகள் ஏற்படும் சட்ட மீறல்களை சுட்டிக்காட்டி இன்றும் போராடிக் கொண்டிருப்பவர். தன்னுடைய மகனின் போராட்டக் குணத்தை ஊக்குவித்தவர்” என்று உரையாற்றினார் மதிமுக தலைவர் ஐயா வைகோ அவர்கள்.

55 ஆண்டுகள் மின்சாரத்துறை குறித்த அனைத்துத் தகவல்களையும் மாநில அளவில் மட்டுமல்ல ஒன்றிய அளவிலும் விளக்கிக் கூற வல்லவர் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். “கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற போது, போராட்டக்காரர்கள் மீது அவதூறு பரப்புவதற்காக நாளொன்றுக்கு 13 மணி நேர மின்தடை அரசினால் செய்யப்பட்டது. அப்போது ‘தமிழ்நாட்டின் மின்தேவையை எப்படி பூர்த்தி செய்ய முடியும்’ என்பது குறித்து முக்கியமான நூலை எழுதி வெளியிட்டவர் ஐயா சா. காந்தி அவர்கள்” என்று கூறினார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் தோழர் பொறியாளர் சுந்தர்ராஜன் அவர்கள்.

தமிழ்நாட்டின் நிலக்கரி வழங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ஒன்றிய திட்டங்களையும், மின்துறையில் நடைபெற்ற ஊழல்களையும் மக்கள்முன் அம்பலப்படுத்தியவர். தொழிற்சங்கப் பணத்தை மிக சிக்கனமாக செலவு செய்தவர். அதற்காக இரவு நேரம் நெடுந்தொலைவு பயணம் செய்யவும் அவர் தயங்கியதில்லை. இப்படி தனது பணி வாழ்வையே பொது வாழ்வாக்கிய ஐயா காந்தி அவர்களின் வாழ்த்தரங்க விழாவை தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் தொழிற்சங்க தோழர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

நிகழ்வுக்கு வந்திருந்த தோழர்களில் பலர் ஐயாவின் சிறந்த பண்புகளை சிறப்பாக பகிர்ந்து கொண்டனர். ஐயா சா.காந்தி அவர்கள் உரிய நேரத்தில் சிறந்த அறிவுரைகள் வழங்கி வாழ்க்கையில் அவர்களை நல்லநிலையில் உயர்த்தியதை நினைவு கூர்ந்தனர். பலருக்கு கல்வி கற்க உதவியதுடன் உடனிருந்து நல்வழிப்படுத்தியதால் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக நன்றிடன் உரையாடினர்.

தன்னைப் பாராட்டுவதை சிறிதும் விரும்பாமல், நீண்ட நாட்கள் ஒப்பு கொள்ளாமல் ஐயா காந்தி அவர்கள் தட்டி கழித்து வந்த பாராட்டு வாழ்த்தரங்கம் ஒரு குடும்ப நிகழ்வைப் போன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டதில் மே 17 இயக்கம் பெருமிதம் கொள்கிறது. நிகழ்வுக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றியையும் உரித்தாக்குகிறது.

நன்றி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »