அனைத்து சாதியினரும் ராக்கெட் ஏவ முடிகிறது. ஆனால், அர்ச்சகர் ஆக முடிவதில்லை.
‘சந்திரயான்’ என்கிற பெயர் தான் சமீப காலமாக இந்தியச் செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் விவாத பொருளாக உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) நிலவை ஆய்வு செய்வதற்காகச் சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியது. கடந்த ஜூலை 14 அன்று எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஆகஸ்டு 23 அன்று நிலவின் மேற்பரப்பில் லேண்டர் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு நிலாவிற்கு விண்கலத்தைச் செலுத்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியா அடைந்துள்ளது. இதில் கூடுதல் சிறப்பம்சமாக நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கிய முதல் நாடு என்கிற பெருமையும் இந்தியா அடைந்துள்ளது. இவை தான் கடந்த சில நாட்களாக இந்தியாவின் பெருமைகளாக நாடு முழுவதும் பேசப்படும் செய்திகள்.
ஆனால் இந்த சாதனையின் மூலம் சாமானிய மக்களுக்குக் கிடைக்கப் போவது என்ன? என்ற கேள்வியைக் கேட்பது கூட இங்கு தேசவிரோத குற்றமாக பார்க்கப்படக் கூடிய சூழலில் தான் நாடு உள்ளது. பாஜகவின் ஆட்சியாளர்கள் ஏதோ அவர்களே ராக்கெட் அறிவியலைப் படித்து அவர்களே அதைத் தயாரித்து விண்ணில் ஏவியது போல சந்திரயான் -3 விண்கலத்தின் ‘அறிவியல் வெற்றியை’ உரிமை கோரி பேசிவருகின்றனர்.
பாஜகவின் ஆட்சியில் இந்தியாவின் சனநாயகம் தோல்வியடைந்துள்ளது; பத்திரிகை சுதந்திரம் தோல்வியடைந்துள்ளது; சமூக நீதி தோல்வியடைந்துள்ளது என்று ஒட்டுமொத்த இந்தியச் சமூகமே தோல்வியடைந்ததுள்ளது. இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி அவர்களோ தோல்வியைப் பற்றி கவலைப் படாத 56 இன்ச் அகன்ற கனவு பாரதத்தின் இரட்சகர். இந்தியச் சமூகமே தோல்வியடைந்ததுள்ளது, அதனால் என்ன சந்திரயான் விண்கலத்தின் அறிவியல் வெற்றியடைந்தது! இந்தியர்களாக நாம் இதில் பெருமை கொள்வோம்! இதைத்தான் பாஜக ஆட்சியாளர்கள் செய்துவருகிறார்கள்.
ஜூலை 14 அன்று எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் பாதுகாப்பாக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்குக் காரணம் ‘ஆஞ்சநேயர்’ தான் என்று பேசியவர்கள் தான் இவர்கள். அறிவியல் மனப்பான்மை இல்லாத, சாதி மற்றும் மத மன நோய் பிடித்த, சனாதனத்தைப் பரப்பும் இந்த ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் தான் விண்வெளி அறிவியல் வெற்றியைக் கொண்டாடுகிறது. இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி வியாபாரம் நடத்தும் கருத்து முதல்வாதிகள், பொருள்முதல்வாததின் அடிப்படையான ஆய்ந்து அறியும் ‘அறிவியல் வெற்றியை’ கொண்டாடுவது என்பது எவ்வளவு முரணானது!
சிவன் தலையில் தான் நிலா இருப்பதாகச் சொல்லுபவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் நிலாவில் ரோவர் (Rover) தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்று பெயரிடுகிறார்கள். அரசியலில் மதத்தைக் கலந்தால் என் நடக்கும், அது யாருக்குப் பயன்படும் என்பதற்கு இந்தியாவின் அரசியலே சாட்சி. அதே போல தற்போது அறிவியலில் மதத்தைக் கலக்கும் வேலையை பாஜக திட்டமிட்டு செய்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மருத்துவர்கள் மாநாட்டிலேயே, இந்து புராணங்களைக் குறிப்பிடும் போது, பிளாஸ்டிக் சர்ஜரியின் முதல் உதாரணம் விநாயகர் என்று தான் நம்புவதாகப் பேசியவர் தான் இந்த நாட்டின் பிரதமராக இருக்கிறார்.
சந்திராயன்-3 பாதுகாப்பாக நிலவில் தரையிறங்க ராக்கெட் அறிவியல் ஏதும் தெரியாத இந்தியாவின் சாதாரண மக்கள் மத வழிபாடுகளை நடத்தியதை நாம் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் அது பெரிய அளவில் இல்லை என்றாலும் வட இந்தியாவில் மக்கள் ஒன்று கூடி ஒரு ‘தேசிய கடமையை’ செய்வது போல வழிபாடுகளை நடத்தினார்கள். சாமானிய மக்களின் மத உணர்வுகளோடு, இந்தியாவின் அறிவியல் வெற்றிப் பெருமிதம் மெல்லியதாக இணைக்கப்பட்டு வரும் ஆபத்தை நாம் உணர வேண்டும்.
இந்தியாவின் அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களின் வரிப் பணத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3ன் ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு எப்படி ‘சிவசக்தி’ என்று ஒரு மதம் சார்ந்த பெயரை வைக்க முடியும். இந்த வெற்றியை எப்படி ஒரு கட்சி சொந்த கொண்டாட முடியும்? அறிவியலில் மதத்தைக் கலக்கும் இந்த திட்டமிட்ட செயல்பாடுகள் பாஜகவிற்கு தான் பலனைக் கொடுக்கும். எப்படித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை அல்லது தீவிரவாத எதிர்ப்பு தாக்குதல் என்கிற நாடகங்களை பாஜக நடத்துகிறதோ, அது போல நாளை ராக்கெட் அறிவியலையும் தேர்தல் நேரங்களில் பயன்படுத்தி மக்கள் உணர்வுகளைக் கையாளும் ஆபத்து ஏற்படும்.
சந்திரயான் வெற்றியை வட இந்திய மாநிலங்கள் மத உணர்வுகள், இந்தியப் பெருமிதம் என்கிற வகையில் கொண்டாடிய நிலையில் சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய விண்வெளி திட்டங்களில் தமிழர்களின் பங்களிப்பைத் தமிழ்நாட்டின் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும் தமிழர்கள் கொண்டாடுவதையும் நாம் பார்த்தோம்.
சாதாரண பள்ளிகளில் அதுவும் மாநில கல்வித் திட்டங்கள் கீழே படித்த தமிழர்களே தொடர்ந்து ISRO திட்ட இயக்குநர்களாக இருந்து பல கட்ட சாதனைகளைச் சாத்தியப்படுத்தியுள்ளனர். இன்று ‘நீட்’ போன்ற தகுதித் தேர்வுகளைக் கொண்டு வருவதன் மூலம் திறமையான தமிழர்கள் தங்களுக்கான இடத்தை அடையமுடியாத சூழல் உருவாகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என்கிற அரசியல் மையபட்ட விவாதங்களைத் தமிழ்நாடு நடத்திவருகிறது.
இதில் நாம் சற்று நுணுக்கமாகப் பார்க்க வேண்டிய மற்றொரு செய்தி உள்ளது. அதாவது, 16-11-1992 அன்று வழங்கப்பட்ட இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பின் படி, கல்வி, மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் உயர் மட்ட பதவிகள், அணு ஆற்றல், விண்வெளி, படைத்துறை ஆகியவற்றின் உயர் மட்ட பதவிகள், வானூர்தி வலவர்கள் மற்றும் சக வலவர்கள் முதலான பதவிகள் மற்றும் இந்திய அரசு அறிவிக்கும் இதுபோன்ற பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் தான் தமிழர்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (ISRO) தங்களுக்கான இடத்தை போராடி அடைந்துள்ளனர். பார்ப்பனிய இந்தியா கொடுக்க மறுக்கும் இடத்தை கூட தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல் சாத்தியப்படுத்தியுள்ளது.
விண்வெளி போட்டி என்பது முன்னேறிய நாடுகள் தங்களது விண்வெளி ஆற்றலை வெளிப்படுத்தி அவர்களுக்குள் யார் அதிக ஆற்றல் வாய்ந்தவர்கள் என்பதை காட்ட நடைபெறும் போட்டி. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்கு பிறகு அமெரிக்கா-சோவியத் ரசியா இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த போட்டியினாலேயே உயிரை பணயம் வைத்து நிலவில் மனிதன் கால் வைக்க முடிந்தது. முதலில் காலடி வைத்தது என்ற பெருமையைத் தவிர அமெரிக்க மக்கள் இதனால் அடைந்த பயன் என்ன? அமெரிக்காவிற்கே ஒரு பலனையையும் அளிக்காத நிலையில், தொய்வடைந்த முன்னேற்றத்தை கொண்டிருக்கும் இந்தியா இந்த விண்வெளிப் போட்டியில் பங்கெடுப்பது மக்களுக்கு எந்த வகையில் பலனளிக்கப் போகிறது? அசுர முன்னேற்றத்தை கொண்டு வளர்ந்த நாடாக மாறி, அறிவியல், பொருளாதாரம், வணிகம் என அனைத்திலும் அமெரிக்காவுடன் போட்டி போடும் நிலைக்கு மாறியுள்ள சீனா என்ற புலியை கண்டு இந்தியா என்ற பூனை சூடு போட்டுக்கொண்டுள்ளது எனலாம்.
மனிதவளக் குறியீடு, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, தனிநபர் வருமானம், மோசமான உள்கட்டமைப்பு, பின்னோக்கி செல்லும் பொருளாதாரம் என மூன்றாம் உலக நாடு போல இந்தியா தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விண்வெளிப் போட்டி இந்திய மக்களுக்கு எந்தவிதத்திலும் எவ்வித முன்னேற்றத்தையும் அளிக்கப் போவதில்லை. மக்களுக்கு பயன்படாத, மக்கள் வாழ்வை முன்னேற்ற பயன்படாத எந்த அறிவியலும் வீண் வேலையே.
அனைத்து சாதியினரும் சேர்ந்து பலகட்ட சோதனைகளுக்குப் பின்னர் நிலாவிற்கு ராக்கெட் அனுப்ப முடிகிற நாட்டில் தான் பலகட்ட சட்ட போராட்டத்திற்குப் பிறகு தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதே தமிழ்நாட்டின் நிலையாக இருக்கிறது. சந்திரயான் மூலம் ஏவப்பட்ட ரோவர் எனும் நிலவை ஆராய்ச்சி செய்யக்கூடிய வாகனம் ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை தரையிறக்கப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 22-08-2023 அன்று தான் உறுதிப்படுத்தியது. அதாவது நிலவில் தரையிறங்கியதற்கு முதல் நாள் தான் கருவறை நுழைவு உறுதிப்படுத்தப்பட்டது.
பெரியார் மனதில் தைத்த முள் நீங்க சுமார் 60 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 10 ஆண்டுகள் முயற்சி செய்து நிலாவிற்கு விண்கலத்தை அனுப்ப அறிவியல் தடைகளைத் தவிர வேறு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், 1930-ல் தந்தை பெரியார் பேசியது, அதைத் தொடர்ந்து இத்தனை ஆண்டு காலமாகப் போராட்டம் நடத்தி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதைத் தமிழ் நாடு சாத்தியப்படுத்தியுள்ளது. உண்மையில் நிலவில் இறங்குவதை விடவும் தமிழர்கள் கோயில் கருவறைக்குள் நுழையச் சந்தித்த சோதனைகளும், நடத்திய போராட்டங்களுமே பெரியது. பெரியார் பணி பெரியது.