ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டை ஆதரித்து தெரிவித்த கருத்திற்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் கணக்கில் பதிவு செய்த கருத்து.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் திடீரென ‘இடஒதுக்கீடு’ உரிமைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை தோழர்களும், தமிழ்நாடு ஊடகங்களும் ஆச்சரிய செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. சன் நியூஸ் தொலைக்காட்சி தனிசெய்தியாக வெளியிட்டிருக்கிறது. இதன் பின்னணி பேசப்படாமல், இச்செய்தி பரவுவது ஆர்.எஸ்.ஸிற்கு வலிமை சேர்ப்பதாக அமையும் என்பதை அறிந்தும் இந்த செய்தி வெளியீடு நடப்பது வருத்தத்திற்குரியது.
மராத்தியத்தில் உயர்சாதி பட்டியலில் ‘மராத்தா சாதி’ மக்கள் இணைக்கப்பட்டதால் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘நாங்கள் விவசாயிகள், ஆகவே உயர்சாதிகள் அல்ல, எமக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும்’ எனும் போராட்டத்தை நீண்டநாட்களாக நடத்தி வருகிறார்கள். இதற்காக இடஒதுக்கீடு செய்த மராத்திய அரசின் சட்டத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
முன்னதாக 2014ல் ஆட்சியிலிருந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மராத்தா சாதிக்கு 16%, இசுலாமியருக்கு 5% என இடஒதுக்கீட்டை கொடுத்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து நடந்த வழக்கில், இந்த ஒதுக்கீடு செல்லுபடியாகாது, இது அரசியல் சாசன வரையறைக்கு முரணானது என அறிவித்தது.
இச்சமயத்தில் RSS எடுத்த நிலைப்பாடு என்பது ‘சாதிரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை, இசுலாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்’ என்றார்கள். இச்சமயத்தில் RSS-இன் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்யா எனும் பார்ப்பனர், ‘..மராத்தா சாதிக்கு இடஒதுக்கீடு தேவையில்லை..’ என அறிவித்தார்.
இது பி.ஜே.பி-யின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால் உடனே ஆர்.எஸ்.எஸ், இது அவரது தனிப்பட்ட கருத்து என்றது. 2015 பீகார் தேர்தலின் போது இடஒதுக்கீடு பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஆர்.எஸ்.எஸ்-சின் மோகன்பகவத் பேசினார். ஆனால் இவர்களது குரல் மராத்திய அரசியலைப் பொறுத்து மாறுபட்டே ஒலிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தனது மராத்திய ஆதரவு தளத்தை இழக்க விரும்பவில்லை.
மராத்தா சாதியினர் காங்கிரஸ், என்.சி.பி (சரத்பவார்), சிவசேனை(உத்தவ்) நோக்கி நகரும் ஆபத்தை ஆர்.எஸ்.எஸ்-சும் மராத்திய பார்ப்பனரான பட்னாவிசும் உணர்ந்தே இருக்கின்றனர்.
உச்சநீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீடை நிராகரித்தது. இதுகுறித்து பாராளுமன்றம், ராஜ்யசபையில் பெரும்பான்மை வைத்திருக்கும் பாஜகவால் ‘உயர்சாதி இந்துக்களுக்கான’ EWS இடஒதுக்கீடு போல சிறப்பு சட்டத்தை கொண்டுவர இயலுமென்றாலும், பாஜக இதை கடந்த 9 வருடங்களில் செய்யவில்லை.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மராத்தா போராட்டம் மிகத் தீவிரமடைந்திருக்கிறது. மராத்தியத்தின் பேருந்து போக்குவரத்து முடங்கியது. இப்போராட்டத்தில் காவல்துறை வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதான குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதற்கு பட்னாவிஸ் வருத்தம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது.
மராத்தா சாதியினர் மராத்திய தேர்தலில் முடிவெடுக்கும் வலிமை கொண்டவர்கள். இவர்களைப் பகைத்துக் கொண்டால் பாஜக பெரும் தோல்வியை சந்திக்கும். மேலும் கடந்த 2019 தேர்தலில் மராத்தா-பீகார் மாநிலத்தின் 88 தொகுதிகளில் 80 தொகுதியில் பாஜக கூட்டணி (பாஜக+சிவசேனா+நிதிஷ்குமார்) வெற்றி பெற்றதே மோடி அதிகப் பெரும்பான்மையை பெறக் காரணமாக அமைந்தது. தற்போது இக்கூட்டணி கட்சிகள் எதிர்நிலையில் இருப்பதால் மராத்தியத்தில் பாஜகவின் வெற்றி என்பது நெருக்கடியை சந்தித்துள்ளது. மேலும் பாஜகவின் மூத்த தலைமைகளில் மராத்திய பார்ப்பனர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் (பட்னாவிஸ், நிதின்கட்கரி) உள்ள மாநிலத்தில் பாஜக தோற்றால் ஆர்.எஸ்.எஸ் தனது பிடியை இழக்க நேரிடும் என அஞ்சுகிறது. இதனாலேயே ஆர்.எஸ்.எஸ் மராத்தியத்தின் அரசியலுக்காக இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக புலம்புகிறது. மேலும் ‘..இசுலாமியர், கிருத்துவருக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, சாதி ஒடுக்குமுறை எதிர்கொண்ட இந்துக்களுக்கு கொடுங்கள்..’ என தனது பிரித்தாளும் அரசியலை முன்வைக்கிறது. இந்து மதத்தினருக்கே இடஒதுக்கீடு என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. கர்நாடகத்தில் அதிகாரத்தை கைப்பற்றியதும் இசுலாமியருக்கான 4% இடஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்து லிங்காயத்துகள், வொக்கலிகா சாதிகளுக்கு பிரித்து கொடுத்தது. இச்சாதிகள் பாஜக வெற்றிக்கு காரணமானவர்களாக அப்போது இருந்தார்கள். இதை நினைவில் கொள்வது நல்லது.
‘..இடஒதுக்கீட்டிற்கு, தாம் முழுமையாக ஆதரிக்கிறோம்..’ என 2014-15ல் போட்டிபோட்டுக்கொண்டு மோகன் வைத்யாவும், ஹோஸ்போலே எனும் ஆர்.எஸ்.எஸ்-இன் தலைமைகள் அறிக்கை வெளியிட்டார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. எனவே இது புதுவிடயமோ, தலைகீழ் மாற்றமோ அல்ல. இது ‘மராத்தா சாதி’ ஓட்டுக்கான பித்தலாட்டம்.
இந்த மராத்திய நெருக்கடியை மறைக்கவும், திசைதிருப்பவும் சந்திராயன், பாரத்-இந்தியா, சனாதனம் என பிரச்சனையை மடைமாற்ற முயன்று கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியை தமிழர்களுக்கு தெளிவாக அம்பலப்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இடஒதுக்கீட்டை ஆதரித்து தலைகீழ் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். 2000 ஆண்டு சாதி அடக்குமுறையை அங்கீகரித்திருக்கிறார் என ஏதோ ஆர்.எஸ்.எஸ் சீர்திருத்தப்பட்ட அமைப்பு எனும் பிம்பத்தை ஏன் தமிழ்நாட்டு ஊடகங்கள் கட்டமைக்கின்றன. ஆர்.எஸ்.எஸ்.-க்கு சாதகமான இப்பிரச்சாரத்தை தமிழக ஆளும் வர்க்க ஊடகங்கள் தனியே கட்டம்கட்டி செய்தி வெளியிடுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்-பாஜக பித்தலாட்டங்களை சமரசமில்லாமல் வீதியில் இறங்கி அம்பலப்படுத்தி போராடுபவர்களை தமது ஊடக செய்திகள், ஊடக விவாதங்களில் நீக்கம் செய்திருக்கும் இந்த ஊடகத் தலைமைகளுக்கு மேல் சொன்ன ‘RSS இடஒதுக்கீட்டு ஆதரவு’ பித்தலாட்ட விவரங்கள் தெரியாததல்ல. இருந்தும் இவை விவரமாக பேசப்படவில்லை. இதுபோன்ற RSS பித்தலாட்டங்களை கடந்த காலங்களில் ஊடக விவாதங்களில் அம்பலப்படுத்திய மே 17 இயக்கம் போன்ற அமைப்புகளை ஊடக நீக்கம் செய்வதன் பின்னணியை பொதுச்சமூகம்தான் கேள்வி எழுப்ப வேண்டும்.