“செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா, இல்லையா?
முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?“
– டெல்லி அரசு இந்தியை முழுமூச்சாக திணிக்க எண்ணிய போதெல்லாம் பாரதிதாசனின் தமிழுணர்ச்சி எழுச்சி வரிகள் போல தமிழர் நெஞ்சங்களும் கொதித்தது. மொழிப்போர் மூண்டது. தாய்மொழி காப்புப் போரில் தன்னுயிர் தந்து தமிழர்களின் நெஞ்சுரத்தை வலுவாக்கிய ஈகியர்களுக்கான நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்தித் திணிப்பு என்பதனை ஒரு மொழியின் ஆதிக்கம் என்று மேம்போக்காக கருதவில்லை பெரியார். அது பண்பாட்டுப் படையெடுப்பு என பேசினார். இந்தித் திணிப்பின் ஊடாக சமஸ்கிருதத்தைப் புகுத்தி அதன் கலாச்சாரத்தை, தன்மையை உருவாக்கி ஆரியப் பண்பாட்டை உயர்ந்த நிலையில் தக்க வைக்க வேண்டும் என்பதே பார்ப்பனர்களின் எண்ணம் என எழுதினார். பெரியார் 1926-ம் ஆண்டிலேயே ‘குடி அரசு’ இதழில், ‘ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி வடமொழி உயர்வுக்கு வகை தேடவே பார்ப்பனர்கள் இந்திய திணிக்கிறார்கள்’ என்று எதிர்த்து எழுதினார். 1938-ல் பள்ளிகளில் அன்றைய முதல்வரான பார்ப்பனரான இராஜாஜி இந்தியைத் திணித்து ஆரிய பண்பாட்டுப் போரை மூட்டினார். தமிழறிஞர்கள் வெகுண்டெழுந்தனர். பெரியாரின் பின் அணிதிரண்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 73 பெண்கள், 32 குழந்தைகள் உட்பட 1271 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட தாளமுத்து, நடராசன் ஆகியோர் சிறையிலேயே மாண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் ஈகியர்களானார்கள். நாடார் சமூகத்தைச் சார்ந்த தாளமுத்துவும், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த நடராசனும் தமிழரின் பண்பாட்டுப் போரில் இணைந்து நின்றார்கள். சிறையிலேயே தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். ஒன்றாகவே புதைக்கப்பட்டார்கள். தமிழினத்தின் விதைகளானார்கள்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எழுச்சியும், அன்றைய அரசியல் சூழலும் இராஜாஜியை பதவி நீங்கச் செய்தது. வடநாட்டு பண்பாட்டுப் படையெடுப்பாளர்களும் இந்தியைத் திணிப்பதை நிறுத்தவில்லை. இந்தியை விரட்டுவதை உயிர் மூச்சாகக் கொண்ட தமிழர் பண்பாட்டுக் காப்பாளர்களும் ஓயவில்லை என்பதாகவே கடந்த காலங்கள் அமைந்தது. மீண்டும் 1948-ல் பள்ளிகளில் விருப்பப்பாடம், 1950-ல் அரசு நிர்வாகத்தில் அலுவல் மொழி எனவும், 1965-ல் இந்தி மட்டுமே அலுவல் மொழி என டெல்லி அரசாங்கம் இந்தி படையைத் திரட்டி டெல்லி வந்தது. தன்மானத் தமிழர்கள் தங்களை ஈகியர்களாக்கி பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தினர். 1965, ஜனவரி 25-ல் ‘தமிழ் வாழ்க – இந்தி ஒழிக’ என முழக்கமிட்டு தீக்குளித்தார் கீழ்ப்பழுவூர் சின்னச்சாமி. அவரின் நினைவாக ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் நாள் மொழிப்போர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஒரு இனத்திற்கு உயிராக இருக்கு தாய்மொழி அழியும் நிலை ஏற்பட்டால் அந்த இனமே அழிந்து விடும் என்பதே வரலாறாக இருக்கிறது. சிறையில் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் விடுதலை ஆகலாம் என்ற நிலை இருந்தாலும் தாய்மொழி ஊட்டிய தன்மானத்துடன் அதனை மறுத்து சிறையிலேயே இறந்த தாளமுத்துவும், நடராசனும் தாய்மொழியின் அரண்களானார்கள். தமிழ்காப்புப் போரில் வரிசையாக கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, மாணவரான சிவகங்கை ராஜேந்திரன், அய்யம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகியோர் தாய்மொழிக்காக உயிர் கொடுத்து பண்பாட்டுப் பாதுகாவலர்களானார்கள். இவர்கள் குறிப்பிட்ட சாதியினர் அல்ல. பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
“சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்
பாதி துலங்குவதில்லை”
– புரட்சிக் கவிஞரின் பாடலுக்கு உயிர் கொடுக்க கிளம்பிய பட்டாளங்களாய் தமிழர் பண்பாட்டுப் போரில் சாதியைத் துறந்து தமிழர்களாய் நின்று உயிர் ஈந்தார்கள்.
வடமொழியான இந்தியின் ஊடாக வரும் பார்ப்பனியத்தின் பண்பாட்டுப் படையெடுப்பு பல வழிகளில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்பதை தொலைநோக்காக சிந்தித்தவர் பெரியார். அதனை வேரோடு அழிக்கவே கட்டாய இந்தியை எதிர்க்க வேண்டும், தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டும் என இரண்டு தீர்மானங்களை 1937-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நிறைவேற்றினார். 1938-ல் பெரியார் உள்ளிட்ட தலைவர்களைக் கொண்ட இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டது. காங்கிரசு கட்சியினருக்கு கருப்புக் கொடி, முதல்வர் வீடு முன்பு மறியல், இந்தி கற்பிக்கும் பள்ளிகளுக்கு முன்பாக மறியல், இந்தி எதிர்ப்பு பிரச்சாரம், போராட்டங்கள் என பல திட்டங்கள் அதில் வகுக்கப்பட்டன. இதன்படி 1938ம் ஆண்டு ஆகஸ்ட் 1ல் இந்தி எதிர்ப்புப் படை ஒன்று திருச்சியில் பயணத்தை ஆரம்பித்தது.
“இந்திக்கு இங்கு ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்தும் ஒரு லாபமுண்டோ? – என்ற புரட்சிக் கவிஞரின் எழுச்சி வரிகளை, உணர்ச்சி கொதிக்கச் செய்யும் பல பாடல்களை தாங்கள் செல்லும் ஊர் முழுவதும் உரத்து முழங்கி வந்தது அந்தப் படை. சென்னைக் கடற்கரையில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கும் அதிகமாக திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் 42 நாட்களுக்கு பின்பு இந்தி எதிர்ப்புப் படை வந்து சேர்ந்தது. அந்த கூட்டத்தில்தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என வீறு கொண்டு முழங்கினார் பெரியார். திரண்டிருந்த கூட்டம் ஆரவாரம் செய்தது. இந்த முழக்கம் அன்றைய முதல்வராக இருந்த இராஜாஜியை சீற்றமுற வைத்தது.
பெரியாரைக் கைது செய்து சிறையில் அடைத்தாலொழிய இந்த மக்கள் திரளைக் கட்டுப்படுத்த முடியாது என நினைத்தார் இராஜாஜி. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மருத்துவர் தருமாம்பாள், நீலாவதி அம்மையார் போன்ற திராவிட இயக்கப் பெண்களும் களத்தில் குதிக்க இராஜாஜி கொதித்தார். 1938, டிசம்பர் 8ம் நாளில் பெரியாரைக் கைது செய்தார். தமிழர் பண்பாட்டுப் போரை வார்த்தைகளால் நீதிமன்றத்தில் நின்றும் நடத்தினார் பெரியார். நீதிபதியை நோக்கி, “தாங்களும் பார்ப்பனர் வகுப்பைச் சார்ந்தவர்தான்…. அடக்குமுறை காலத்தில் நீதிமன்றத்தில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் கோர்ட்டார் அவர்கள் திருப்தி அடையும் வகையில் தங்களால் எவ்வளவு அதிக தண்டனையை கொடுக்க முடியுமோ அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க இடமுண்டோ அதையும் கொடுத்து வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாய் கேட்டுக்கொள்கிறேன்” – நியாயமான இலட்சியம் அடைய கஷ்ட நஷ்டம் அடைதல் என்னும் விலையைக் கொடுக்கிறேன் என மொழிப்போரின் தலைமகனாய் அரச அதிகாரம் கொடுத்த இன்னல்களின் முன்நின்றார் பெரியார். இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தி மட்டுமே அலுவல் மொழி என 1965-ல் டெல்லி ஆதிக்க அரசு அறிவித்ததும் தமிழ்நாட்டின் மாணவர்களின் கொந்தளிப்பு அதிகமானது. சாரை சாரையாக மாணவர்கள் எழுச்சி கொண்டனர்.போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை அனுப்பியது டெல்லி அரசு. அமைதியாக இந்திய அரசின் நிறுவனங்கள், அஞ்சல் நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் முன் போராட்டம் நடத்திய மாணவர்களை காவலர்கள் தடி கொண்டு தாக்கினர். இதனால் சினமுற்ற மாணவர்கள் கல்வீசித் தாக்கினர். இராணுவம் துப்பாக்கியுடன் சீறியது. கொத்துக் கொத்தாக மாணவர்களை சுட்டுக் கொன்றது இராணுவம். மாணவர்கள் இறப்பதைக் கண்டு பொது மக்களும் கோவம் கொண்டு தாக்க ஆரம்பித்தனர். தீ வைத்தனர். தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். இவையெல்லாம் பெரியாரை துக்கமடையச் செய்தது.
இந்தியை எப்பொழுதும் தமிழ்நாட்டில் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அன்றைய முதல்வராக இருந்த காமராசரின் உறுதிமொழி இருக்க, இந்தப் போராட்டம் வேண்டாம் என்பதே பெரியாரின் நிலைப்பாடாக அன்றைய காலகட்டத்தில் இருந்தது. இதனால் பெரியார் இந்தப் போராட்டங்களில் பங்கெடுக்கவில்லை. இருப்பினும் மாணவர்களின் எழுச்சி தகித்துக் கொண்டிருந்ததை அடக்க முடியவில்லை. ‘தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்ற புரட்சிக் கவிஞரைப் படித்த மாணவர்களல்லவா? எப்படித் தணிவார்கள்? தமிழன்னையைக் காக்க தன்னிகரில்லாத உயிரைக் கொடுத்தார்கள். ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை அழிக்க தமிழர் பண்பாடு காக்கும் அணிகலன் ஆனார்கள். வரலாற்றேடுகள் இந்தப் பெயர்களைப் பொறிக்காது போனாலும் தமிழன்னையின் ஆன்மாவில் பதிந்து வாழ்கிறார்கள் இந்த மொழிகாப்பு ஈகியர்கள்.
இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையாகக் மும்மொழிப் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்து இந்தியை நுழைக்கப் பார்க்கிறது. உள்ளறிவுக்கு தாய்மொழியும், உலக அறிவுக்கு ஆங்கில மொழியும் போதும் என்பதே தமிழர்களின் தொடர்ச்சியான நிலைப்பாடு. ஆனாலும் ஒரே நாடு, ஒரே மொழி என ஓர்மையைக் கொண்டு வரத் துடிக்கும் பாஜக அரசு இந்தியைப் புதிய வடிவங்களில் திணிக்கத் துடிக்கிறது. இவர்கள் எந்த வழியில் கொண்டு வந்தாலும், “இந்தி ஒரு வளமற்ற மொழி. அதனை இணைப்பு மொழியாகக் கொள்வது என்பது, நாங்கள் இருவரும் கைகோர்த்து உலவினோம் என்று கையிழந்த ஒருவரும் கையுள்ள ஒருவரும் பேசிக் கொள்வதற்கு சமம். விழியற்ற ஒருவனைக் காட்டி அவன் தான் என்னை அழைத்துச் சென்று வழிகாட்டினான் என்று விழி உள்ள ஒருவன் சொல்வதைப் போலவும், எருக்கப்பூவை மாலையாகத் தொடுத்து இந்த மல்லிகைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வீதியில் உலாவுவது போலவும் கேலிக்கூத்தாக அமையும்” என்ற அண்ணாவின் உரைவீச்சுகள் உயிர்ப்போடு இருக்கும் காலம் வரை எக்காலத்திலும் டெல்லி அரசினால் இந்தியை நுழைக்க முடியாது.
தமிழ்த் தேசிய இனம் நடத்திய போராட்டங்களும், ஆதிக்கவாதிகள் நுழைக்கத் துடித்த இந்தியை விரட்டியடித்த தன்னிகரில்லா உயிர் ஈகங்களும் மற்றைய தேசிய இனங்களையும் விழிப்படையச் செய்திருக்கிறது என்றே சொன்னால் மிகையல்ல. இந்தி மொழி தங்களின் தாய்மொழியினை கொன்றழித்தது தெரியாமல் இந்தியைப் பேசிக் கொண்டிருப்பவர்களும் இந்தி ஒரு கொலைகார மொழி என்பதை இன்று அறிய ஆரம்பித்துப் போராடுகிறார்கள். தாய்மொழி உரிமைக்காக தேசிய இனங்களாக இணைகிறார்கள். தங்கள் மொழி உரிமைக்காகக் களம் காண்கிறார்கள்.
காலத்திற்கேற்ற எதிர்ப்பு வடிவமாக ‘இந்தி தெரியாது போடா’ என தமிழ்நாடும் சொல்லிவிட்டது. இருப்பினும் ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவார் போன்ற ஊடுருவி அழிக்கும் கலையறிந்த நாசகார சக்திகள் திராவிட இயக்கங்களைக் கொச்சைப்படுத்தி, அவர்களின் உரிமைப் போராட்டங்களை இழிவுபடுத்தும் வகையில் தரகர்களை இறக்கியிருக்கிறார்கள். அவர்கள் பெரியாரின் தமிழ்தேசியத்தை மறுக்கும் தமிழ் தேசியவாதிகளாக களம் இறங்கியிருக்கிறார்கள். எதிரிகளும், கைக்கூலிகளும் தமிழ்நாட்டில் என்றும் வெல்ல முடியாது என்பதற்கு கடந்த கால போராட்ட வரலாறுகள் சான்றுகளாக இருக்கிறது. குறிப்பாக சாதி வேறுபாடுகளைத் துறந்து தன்னினத்திற்காக, தமிழுக்காக ஓரணியில் திரண்டு நடத்திய தமிழர் பண்பாட்டுப் போரான மொழிகாப்புப் போர் தூணாக இருக்கிறது. ஈகியர்கள் அதைக் காத்து நிற்கிறார்கள்.
மொழிப்போர் ஈகியரின் ஈகங்களை மறவாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நம்முன் இருக்கிறது. தமிழ்த்தேசிய இனத்தின் ஜனநாயக சக்திகள், இந்தியத் தேசிய இனங்களின் மொழி உரிமைகளுக்கும் குரல் கொடுக்கும் படையாக தனது பணியினை பெரியாரிய வழியில் தொடர்கிறது. மொழிகாப்பு ஈகியர்களை நினைவிலேந்தி தமிழர் பண்பாட்டுப் படையாக முன்னணியில் நிற்கிறது.