விதியே விதியே என்செய் நினைத்தாய் என் தமிழ்ச் சாதியை…

2009-ஆம் ஆண்டு தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தமிழ்நாட்டில் பெரும் நெருப்பை உருவாக்கும் சிறு பொறியாய் அமைத்தது முத்துக்குமாரின் ஈகம். இனப்படுகொலை நடந்த 15-ஆம் ஆண்டில், மாவீரன் தமிழீழம் அடைய அறிவாயுதம் ஏந்தி தொடர்ந்து போராட வேண்டும் என்று முத்துக்குமார் சொல்லிச்சென்ற கூற்றை நினைவுகூர்ந்து முத்துக்குமாரின் ஈகத்தை உலகத் தமிழர்கள் அனைவரும் நினைவிலேந்துவோம்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசு நடத்திவரும் இனப்படுகொலையை பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் சென்னை கொளத்தூரை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் “தமிழீழத்தில் நடந்தேறும் இனப்படுகொலையை தடுக்க குரல் கொடுங்கள்” என்று தமது இறுதி முழக்கத்தை கடிதமாய் எழுதி வைத்துவிட்டு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தன்னுயிரை ஈகம் செய்தார். “விதியே விதியே என்செய் நினைத்தாய் என் தமிழ் சாதியை” என்று தலைப்பிடப்பட்ட அந்த கடிதம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகத்தமிழர்கள் இருக்கும் இடம் எங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ‘நம்மால் என்ன செய்து விட முடியும்?’ என்று மனம் வெதும்பிக் கொண்டிருந்த தமிழீழ உணர்வாளர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் சொடக்கிட்டு எழுப்பியது. முத்துக்குமாரின் ஈகத்தினை பெருமைப்படுத்த தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தரப்படும் ‘மாவீரர்’ என்ற பட்டம் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் முத்துக்குமாருக்கு கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை மாவீரர் முத்துக்குமார் ஈகம் செய்த ஜனவரி 29 ஆம் நாள் “தமிழரின் தாகமான தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்காமல் இன்னுமொரு ஆண்டும் கடந்து போய்விட்டதே” என்று ஈழ உணர்வாளர்களை சிந்திக்க தூண்டும் நாளாகவே அமைந்திருக்கிறது. தன்னுயிர் கொடுத்து தமிழ் சமூகத்தை அறிவாயுதம் எந்தச் செய்த அந்த மகத்தான மாவீரரை நினைவுகூர்தல் தமிழீழ கோரிக்கையை தமிழ்நாட்டில் நகர்த்தி செல்ல மிக முக்கிய கருவியாக உள்ளது.

மாவீரர் முத்துக்குமார் எழுதிய கடிதத்தின் ஆழம் அளப்பரியது. அது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் கடிதம் அல்ல; அல்லது மனஉறுதி இல்லாமல் வாழ்க்கைக்கு பயந்து தமது முடிவை தேடிக் கொள்ளும் ஒருவரின் இறுதி எழுத்தும் அல்ல. அது ஓர் மரண சாசனம். தமிழ் சமூகத்திற்கும் ஈழச் சமூகத்திற்கும் யார் எதிரி, எது எதிரி என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள இறுதி சாசனம். அதில் தமிழ் தேசிய அரசியலில் எது உள்ளடங்கும், எது வெளியேற்றப்பட வேண்டும் என்பது அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. மாவீரர் முத்துக்குமாரின் கடிதம் கேள்விக்கணைகளால் தொடுக்கப்பட்ட நெருப்பு ஆறு. அதை நீந்தி செல்ல நினைப்பவர்களுக்கு நெஞ்சில் உறுதியும், உண்மையும், சுய விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் ஆற்றலும் தேவை. இல்லாவிட்டால் அந்த நெருப்பாற்றில் சுண்டு விரலை கூட வைக்க முடியாது.

மாவீரர் முத்துக்குமாரின் கடிதமே “கள்ள மவுனம் சாதிக்கின்ற இந்திய ஏகாதிபத்தியத்தை” கேள்விக்குள்ளாக்கித்தான் தொடங்குகிறது. இலங்கை சிங்கள பௌத்த இனவெறி அரசின் ஈழத் தமிழர்கள் மீதான போர் என்பதே இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் வழிகாட்டுதலின் பெயரில்தான் நடக்கிறது என்பதை அக்கடிதம் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிவிக்கிறது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை இன்றளவும் காரணம் காட்டி ஈழத் தமிழரையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்தும் பச்சை பொய்யர்களுக்கு முத்துக்குமாரின் கடிதம் முகத்தில் அறந்தார் போல் பதில் சொல்லுகிறது. “தமிழீழத்திற்கு உதவி செய்து தமிழர்கள் நெஞ்சில் தெய்வத்தை போல் நிலைபெற்று இருக்கும் இந்திரா காந்தியின் மகனாகிய ராஜீவ் காந்தியையா விடுதலைப்புலிகள் கொலை செய்வார்கள்?” என்று தர்க்க வாதத்தை முன் வைக்கும் இக்கடிதம், “ஜெயின் கமிஷன் அறிக்கை புலிகளை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் குற்றவாளி என்கிறதே, நீங்கள் எல்லாம் குற்றவாளியா?” என்று தமிழர்களைப் சிந்திக்கத் தூண்டுகிறது.

தேர்தல் அரசியலில் இருப்பவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள் என்று மாவீரர் முத்துக்குமார் முரசறைந்து தெரிவிக்கிறார். “பணம், அடியாள் பலம் ஆகியவற்றால் மிரட்டல் அரசியல் செய்துவரும் இவர்கள் நாளை நம் மீது பாய மாட்டார்களா?” என்று கேள்வி கேட்கிறார். அந்த கேள்வி இன்று ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் பக்கத்தில் சாட்சியாக நிற்கிறது.

“காகிதம் எதையும் சாதிக்காது மக்களே” என்று ஏட்டளவிலும் பேச்சளவிலும் வீரவசனம் பேசிவிட்டுப் போகும் வாய்ச்சவடால்காரர்களை புறந்தள்ளுகிறார் மாவீரர் முத்துக்குமார். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். அதுபோல் ஏட்டில் மட்டும் எழுதி வைக்கப்பட்ட புரட்சி, மக்கள் களத்தில் செயல்படாத நபர்களால் எப்படி நடைமுறைக்கு கொண்டு வரப்படும்?

இந்த கடிதத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களையும், மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் மனதார புகழ்ந்து வாழ்த்துகிறார் மாவீரர் முத்துக்குமார். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எப்பொழுது ஒரு இடர்பாடு நேர்ந்தாலும் முதலில் களத்தில் இறங்குவது சட்டக் கல்லூரி மாணவர்களாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்களாகவும் தான் இருக்கிறார்கள் என்பதை நினைவு கூர்ந்து “இத்தகைய உணர்வுகள் மேலோங்காமல் இருப்பதற்குதான் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே சாதிய மோதல்களை அரசு எந்திரங்கள் உருவாக்குகின்றனவா?” என்று கேள்வி எழுப்பிச் சென்றுள்ளார். தமிழீழ இனப்படுகொலையை நிறுத்த கோரி உண்ணா நோன்பு இருந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த கல்லூரி மாணவர்களை பாராட்டும் அதே வேளையில் “உண்ணாவிரதத்தை விட்டு வெளியே வந்து களம் காணுங்கள்” என்று அறைகூவல் விடுத்தார். தனது ஈகத்திற்குப் பிறகு “மீதமிருக்கும் உடலையும் ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி போராடுங்கள்”, “அறிவாயுதம் ஏந்தி போராடுங்கள்” என்று கட்டளையிட்டுச் சென்றார் மாவீரர் முத்துக்குமார்.

அதேபோல் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை நினைவு கூர்ந்து “இறந்த பிறகு என் உடலுக்கு பிணக்கூறு செய்யப் போவது நீங்கள் தானே, அதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று இறப்பையும் தாண்டி சிந்தித்தார் மாவீரர் முத்துக்குமார். “என் உடலுக்கு பிணக்கூர் செய்வது இருக்கட்டும். நம் சகோதரர்களாகிய ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று அவர்களிடத்திலும் கேள்வி எழுப்பி சென்றிருந்தார்.

“தமிழீழம் என்பது தமிழீழத்தின் தேவை மட்டும் அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட” என்று புவிசார் அரசியலின் புரியாத பக்கங்களை எளிமையாக தனது கடிதத்தில் எடுத்துரைத்திருந்தார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தடுக்கப்பட வேண்டும் என்றால் தமிழீழத்தின் விடுதலை வரலாற்றுக் கட்டாயம் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் சிங்கள “சிப்பாய்களிடம் கற்றுக் கொள்ளப் போகும் பாலியல் வன்முறைகளை இந்திய ராணுவம் வடகிழக்கு மாநிலங்களாகிய அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அப்பாவி பெண்களிடத்தில் தானே பரிசோதித்துப் பார்ப்பார்கள்!” என்றும், “புலிகளை ஒடுக்கிய வழிமுறைகளை தானே வடகிழக்கு போராளிகள் மீது நடத்திப் பார்க்கிறார்கள்” என்றும் உலகளாவிய கூலிப்படை ராணுவத்தின் வன்முறை அரசியலை பாமரனுக்கும் புரியும் வண்ணம் பேசிச் சென்றார். அவர் இந்திய ஊடகங்களையும் விமர்சிக்காமல் விட்டு வைக்கவில்லை. இலங்கை செய்யும் அட்டகாசங்களை கண்டுகொள்ளாமல் தமிழர்கள் மீது வீண்பழி சுமத்தும் இந்திய ஊடகங்களை காரி உமிழ்ந்து விட்டே சென்று இருக்கிறார்.

தமிழ்நாட்டில் குடியேறி வாழும் வெளி மாநில மக்களிடமும் தமிழ் ஈழ ஆதரவு கோரிக்கையை கேட்டிருந்தார் மாவீரர் முத்துக்குமார். “வெளி மாநிலச் சகோதரர்களே, உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை தமிழீழத்திற்காக எங்களோடு கைகோர்க்கச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டது மட்டுமல்லாமல், அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் வட இந்தியாவில் உருவாகியிருந்த நவநிர்மான சேனா, ஸ்ரீராம் சேனா போன்ற இனவெறி அமைப்புகள் தமிழ்நாட்டிலும் உருவாகும் என்று எச்சரித்து இருந்தார்.

அவர் எச்சரித்தது போலவே இன்று தமிழ்நாட்டில் தூய தமிழ் தேசியம் என்ற பெயரில் போலி தமிழ் தேசிய குழுக்கள் உருவாகி வருவதை பார்க்க முடிகிறதா, இல்லையா?

காவல்துறை என்பது அரசின் வன்முறைக் கருவி தான் என்று எல்லோருமே பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மாவீரர் முத்துக்குமாரோ தமிழ்நாட்டுக் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் கோரிக்கை வைத்துச் சென்றார். அவர்களை இந்திய உளவுத்துறை எவ்வாறு அவமதித்து நடத்துகிறார்கள் என்று வேதனைப் பட்டார். “ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது உங்கள் கண்காணிப்பில் தானே” என்று சொல்லி சொல்லி காட்டுவதை மீண்டும் நினைவு படுத்தினார். அதே நேரத்தில் இந்திய உளவுத்துறைக்கு ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டதை குறிப்பிட்டு “இந்த இந்தியத்திற்கா நீங்கள் வேலை செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது அபரிதமான அன்பு வைத்திருந்த மாவீரர் முத்துக்குமார் அதனை ஒற்றை வரியில் நமக்கு வெளியிடுகிறார். தனது கடிதத்தில் “உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கு இல்லையே!” என்ற வரிகளை சொல்லி தமிழ்த் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் தேசியத் தலைவர் பிரபாகரன் என்று குன்றின் மேல் இட்ட விளக்காய் ஓங்கி உரைக்கிறார்.

சர்வதேச சமூகத்தை கேள்விக்கு உள்ளாக்கும் மாவீரர் முத்துக்குமார் இறையாண்மை என்ற சொல்லின் மேல் கட்டமைக்கப்பட்ட நவீன புனிதத்தை உடைத்தெருகிறார். “இறையாண்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்குதல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது” என்ற வரிகள் தோழர் தமிழரசனின் வரிகளான “இந்தியா ஒரு தேசிய இனங்களின் சிறைச்சாலை” என்ற வரிகளை நினைவுபடுத்துகிறது. மேலும் சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கும் மணிப்பூர், காஷ்மீர் மக்களின் மீதான ஒடுக்கு முறைகள் முத்துக்குமாரின் வரிகளை உண்மையாக்குகின்றன.

ஆயுதம் தூக்குவது மட்டுமே தீவிரவாதம் ஆகி விடுமா என்று சர்வதேச சமூகத்தை கேள்விக்குள்ளாக்கிய முத்துக்குமாரின் கடிதம் “சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்ட்லரிகள் மட்டுமல்ல இப்பொழுது எம்மக்களை கொலை செய்வது சர்வதேச சமூகத்தின் மௌனமும் தான்” என்று விமர்சனம் செய்கிறது.

இறுதியாக தமிழீழ இனப்படுகொலையை நிறுத்த வேண்டும், தமிழீழத்திற்கு எதிராக செயல்படும் ஐநாவின் அன்றைய பொதுச் செயலாளரான பான் கீ முன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமிழீழ மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு பயங்கர மன்னிப்பு கோர வேண்டும், படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்பது உட்பட 12 கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதத்தை தமிழக மக்களின் கைகளில் கொடுத்துவிட்டு நமது உயிரை ஈழத் தமிழர்களுக்காக ஈகம் செய்திருந்தார்.

மாவீரர் முத்துக்குமாரின் ஈகம் நடந்தேறி 15 ஆண்டுகள் ஓடி விட்டன. இன்றளவும் தமிழீழத்தின் மீது அவதூறு பேசவும் குறைமதியாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு காலங்காலமாய் உதவி செய்திருந்த திராவிட இயக்கத்தினரையும், பெரியாரிய உணர்வாளர்களையும் கொச்சைப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழ் இளைஞர்கள் தமிழீழ உணர்வாளர்களாக மாறுவதே ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிரான செயல் போல கட்டமைக்கிறார்கள். இவர்கள் ஒரு புறம் என்றால் இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு “தமிழ்நாட்டில் முதல்வராகி தமிழ் ஈழத்தை வாங்கி கொடுத்து விடுவேன்” என்று வாய்ச்சவடால் விடும் காகிதப் புலிகளும் பெருகிவிட்டார்கள்.

இந்நிலையில் முத்துக்குமாரின் ஈகத்தின் காரணமாக பிறந்த மே 17 இயக்கம் தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க சமரசம் இன்றி களத்தில் நிற்கிறது. இந்த நாள் மாவீரர் முத்துக்குமார் விதைக்கப்பட்ட நாள் மட்டுமல்ல மே 17 இயக்கம் எழுந்த நாளும் ஆகும்.

இனப்படுகொலை நடந்து 15 ஆண்டுகள் ஆனாலும் கூட, இன்றும் தமிழ்நாட்டில் ஈழவிடுதலைக்காக தமிழ்நாட்டு தமிழர்கள் பல்வேறு துரோகங்களுக்கு இடையிலும், பல்வேறு அரசு, அடக்குமுறைகளுக்கு இடையிலும் உறுதியாக நிற்கிறார்களென்றால் அதற்கு முத்துகுமார் மூட்டிய நெருப்பே காரணம். தமிழீழ விடுதலை என்ற உலகத் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை சாத்தியமாக்க போராடுவதே நாம் முத்துகுமாருக்கு செலுத்தும் வீரவணக்கமாக இருக்கும். இந்நாளில், முத்துக்குமார் கற்றுக்கொடுத்த அரசியலைக் கொண்டு நாம் தமிழீழத்தை மீட்டெடுக்க உறுதியேற்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »