காந்தி படுகொலையை கொண்டாடும் இந்துத்துவம்

பொதுவாக ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருக்க வேண்டும். அவை இரண்டும் எதிரெதிர் பக்கங்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. ஒருவேளை இரண்டும் ஒரே பக்கத்தில் அச்சாகியிருந்தால் அந்த நாணயம் செல்லாக் காசாகி விடும்.  ‘தேசத்தந்தை’ என்று கூறி காந்தியாரை வணங்கிவிட்டு, அவரைக் கொன்ற கோட்சேவையும் வழிபடும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சார்பு இந்துத்துவ அமைப்புகள் இந்த நகைமுரணைத்தான் அரேங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

காந்தியாரை படுகொலை செய்ததற்காக நாதுராம் விநாயக் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோர் நவம்பர் 15, 1949 அன்று தூக்கிலிடப்பட்டனர். காந்தியாரை படுகொலை செய்ததை ‘தியாகம் செய்ததாகக்’ கூறி கொலையாளிகளே பகிரங்கமாக பொறுப்பேற்றிருந்தனர்.  “1948 ஜனவரி 30-ம் தேதி பிர்லா ஹவுஸ் மைதானத்தில் காந்தியார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நான்தான்” என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தவன் நாதுராம் கோட்சே. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாதுராமின் தம்பி கோபால் கோட்சே, “காந்தியின் படுகொலை கையில் துப்பாக்கியை எடுத்து சுடுவது போன்ற சாதாரண சம்பவம் அல்ல, அது ஒரு வரலாற்று சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்வது இல்லை” என்று ‘காந்தி வத் அவுர் மை’ (Gandhi Vadh aur mai) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளான்.

இவ்வாறு காந்தியார் படுகொலையை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட கோட்சேவும் அதற்கு உறுதுணையாய் இருந்த சாவர்க்கரும்தான் இன்று இந்துத்துவ அமைப்புகளால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்துக்களுக்கும் இந்துத்துவத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மழுங்கடித்து அனைவரையும் ஒற்றை இந்து ராச்சியத்திற்குள் கொண்டு வரத் துடித்தவர் சாவர்க்கர். சாவர்க்கரிடம் கருத்தியல் ரீதியான பயிற்சியைப் பெற்றவர்கள்தான் காந்தியாரின் கொலையாளிகள். இந்து தேசியவாத அமைப்புகளில், குறிப்பாக சாவர்க்கர் தலைமையிலான இந்து மகாசபையில் தீவிர பங்கு வகித்ததன் மூலம் இந்துத்துவாவின் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டவர்கள்.

தற்போதைய இந்துத்துவ அமைப்புகளின் தந்தையாகக் கருதப்படும்  சாவர்க்கர், ‘இந்துத்துவ நமக் கிரந்தம்’ என்ற புத்தகத்தில் (1923) தீவிரமான இந்துத்துவ கொள்கையை முன்வைத்தார். சாவர்க்கர் சிறையில் இருந்தபோது இந்தியாவை இந்து நாடாக அறிவித்து இந்த புத்தகத்தை எழுதியதாகக் கூறுவார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து பல சலுகைகளைப் பெற்ற சாவர்க்கருக்கு சிறையில் புத்தகம் எழுதுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.  காந்தியாரின் எழுச்சியை மடைமாற்றுவதற்காகவே  அத்தகைய நேரத்தில் சாவர்க்கரின் ‘இந்து-ராஷ்டிரா’ முழக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது. (சாவர்க்கர் அந்த புத்தகத்தை எழுதி முடிக்கும்போது இந்து-இந்துத்துவா இரண்டிற்கும் இடையே இருந்த வேறுபாட்டை முற்றிலும் மறைத்து விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்துத்துவா என்பதை இந்து பிரிவினைவாதத்தின் வடிவத்தில் எழுதினார் சாவர்க்கர்).

இவ்வாறு காந்தியாருக்கு எதிராக ஆங்கிலேயரால் வளர்க்கப்பட்டவர்தான் சாவர்க்கர். சாவர்க்கரின் இந்து மகாசபா உறுப்பினராகவும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) உறுப்பினராகவும் இருந்து தனது இந்துத்துவ கருத்தியலை வளர்த்துக் கொண்டவர்தான் நாதுராம் கோட்சே. 

காந்தியார் படுகொலை நிகழ்ந்த பின், அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல், ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை மற்றும் சாவர்க்கர் போன்றோருக்கு இந்த கொடூரமான குற்றத்தில் நேரடித் தொடர்புடையதாக  இருப்பதாகக் கடிதம் எழுதியுள்ளார். ஜூலை 18, 1948 அன்று, இந்து மகாசபா தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் அவர்  எழுதி உள்ளது: “ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை – இந்த இரண்டு அமைப்புகளும், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்பாட்டின் விளைவாக நாட்டில் இதுபோன்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடக்கக்கூடிய சூழல் உருவானது. இந்து மகாசபையின் தீவிரவாதப் பிரிவினரே இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று எழுதி உள்ளார். இன்று இந்துத்துவ அமைப்பினர் கொண்டாடும் வல்லபாய் படேல் போன்றோரே, சாவர்க்கர் குறித்து கூறியவைதான் இந்த வார்த்தைகள்.

ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியும் கூட காந்தியார் கொலையின் முக்கிய சதிகாரரான சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து மே17 இயக்கத் தோழர் ஹரிகரன் அவர்களின் விரிவான கட்டுரை: https://may17kural.com/wp/indian-justice-serving-part-1-gandhi-assasination-case/

காந்தி படுகொலையில் சாவர்க்கரின் தொடர்பு குறித்து விசாரிக்க, நீதிபதி கபூர் தலைமையில் ஒரு ஆணையம் 1965-ல் அமைக்கப்பட்டது. 1969-ல் அந்த ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் ‘காந்தியார் கொலை வழக்கில் சாவர்க்கர் ஈடுபட்டார்’ என்று தெளிவாகக் கூறப்பட்டது. ஆனால் ஆணையத்தின் அறிக்கை வருவதற்குள் சாவர்க்கர் இறந்து போனார். (பிப்ரவரி 26, 1966)

வெளிநாடுகளில் ‘காந்தி தேசம்’ என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் தற்போதைய உண்மை நிலவரம் அதற்கு நேர்மாறாக இருப்பதுதான் கசப்பான உண்மை. காந்தியாரின் கொலையாளிகளான கோட்சேவையும் சாவர்க்கரையும்  போற்றவும், அவர்களுக்கு வழிபாடுகள் செய்யவும் இந்துத்துவ அமைப்புகள் முனைகின்றன. காந்தியார் உயிர்நீத்த நாளில், கோட்சேவின் நினைவுக்  கூட்டங்களை நடத்துகின்றன இந்த அமைப்புகள். காந்தியாரின் கொலையை ‘வதம்’ (பேய்களைக் கொல்வது என்று பொருள்) என்று அகம் மகிழ்கின்றன.

மோடி பிரதமரான சில மாதங்களுக்குள், நாடாளுமன்ற உறுப்பினருமான சாக்ஷி, கோட்சேவை ‘தேசபக்தர்’ என்று அறிவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் “காந்தி ஒரு மோசமான பாவி” என்றும் வடஇந்தியாவில் சில இந்துத்துவ அமைப்புகள் பரப்புரை செய்வதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. காந்தியாருக்கு ‘தேச துரோகி’ பட்டம் வழங்கிய இந்த அமைப்புகள் இன்றும் அவரது கொலையை விழாவாகக் கொண்டாடி வருவதுதான் ‘காந்தி-தேசத்தின்’ இன்றைய நிலையாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே சாவர்க்கரின் வழி வந்தவரும், தமிழ்நாட்டின் ஆளுநருமான  ஆர்.என். ரவியும் சமீபத்தில் பேசினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்களிப்பே முக்கியமானது என்றும், காந்தியின் பங்கு மிகவும் குறைவானது எனவும் சர்ச்சையாகப் பேசினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். நபரான ரவி,  காந்தியை மட்டம் தட்டுவதற்காக நேதாஜியை உயர்த்திப் பேசுகிறாரேத் தவிர, நேதாஜி மீது பெரும் பற்றெதுவும் இல்லை என்பதாகவே வரலாறு இருக்கிறது. ஏனென்றால், இவரது பிதாமகரான சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இந்துக்களின் படையைத் திரட்டியவர். அதே சமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போசு அவர்கள் ஆங்கிலேயரை எதிர்க்க இந்தியர் படைகளைத் திரட்டியவர். வெள்ளையர் எதிர்ப்பில் இருநூறாண்டுகளுக்கு மேல் வீரம் பதிந்த தமிழ் மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மூலமாக சுபாசு சந்திர போசு படையில் சேர்ந்தனர். சாவர்க்கரின் இந்துப் படையும், நேதாஜியின் இந்தியர்கள் படையும் மோதும் போது, உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்துக்களாகவே இருந்தனர் என்பதே பெரும் சோகம். இதனை ஆங்கிலேயரின் விசுவாசியாக நிகழ்த்தியவர் சாவர்க்கர். இவ்வாறு நேதாஜியை எதிர்த்து நின்ற வரலாற்றைக் கொண்ட சாவர்க்கரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட ஆர்.என். ரவி நேதாஜியை எந்த தார்மீக அடிப்படையில் புகழ்வார்? ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவக் கூட்டத்தின் வேலைத்திட்டமான, கோட்சேவை தேசபக்தராக சித்தரித்து காந்தியைக் கொன்றதை நியாயப்படுத்தும் செயல்திட்டங்களின் ஒரு பகுதியே ஆளுநர் ஆர்.என். ரவி காந்தியை குறைத்து மதிப்பிட்டதும், நேதாஜியை புகழ்ந்து பேசியதும் ஆகும்.

பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் காந்தியின் மீது விமர்சனம் இருந்ததேத் தவிர, அவரை எதிரியாக எந்நாளும் கருதியதில்லை. ‘இருந்த காந்தியார் ஆரியர் காந்தியார். ஆனால் இறந்த காந்தியார் நம் காந்தியார். ஆரியம் அழிந்து விடுமே எனப் பயந்த ஆரியரால் கொல்லப்பட்ட காந்தியார்’ என்று கூறினார் பெரியார். காந்தியின் சிந்தனைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருந்தாலும் இது தவறான செயல், வருத்தப்படக்கூடியது என்று வருந்தினார் அம்பேத்கர். ஆனால் கோட்சே பக்தர்கள், அம்பேத்கர் காந்தியின் மீது வைத்த விமர்சனத்தை முன்வைத்து கோட்சேவை நியாயப்படுத்தும் செயலை செய்கின்றனர். நேதாஜியை புகழ்ந்து காந்தியை மட்டப்படுத்தும் ஆர்.என். ரவியின், அதே வகையிலான மற்றொரு பிரிவாக இந்த சூழ்ச்சியையும் செய்கின்றனர். இதனை சமூக வலைதளங்களில் பரப்பி தலித் மக்களை தன் பக்கம் இழுக்கின்றனர். கோட்சே என்னும் கொலை பாதகனை தேசபக்தராக முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவாரக் கூட்டத்தினர் எந்த இழிசெயலையும் கையிலெடுக்க தயாராகவே இருக்கிறார்கள். 

இந்திய வெகுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற காந்தியார் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் சித்பவன் பார்ப்பனனான கோட்சேவிற்கும், அவனது குருவான சாவர்க்கருக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியது. பார்ப்பன மேலாதிக்கம் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்ட வர்ணாசிரமத்தின் மேல் இடி விழப் போவதாக உணர்ந்தார்கள். மனிதர்களை பிறப்பால் ஏற்றத்தாழ்வை கற்பித்த, சமத்துவக் கருத்தியலுக்கு எதிரான சனாதனத்திற்கு ஆபத்து என்றால் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் எப்படி பார்த்துக் கொண்டிருக்கும்? காந்தியை ஆறு முறைக்கும் மேல் கொலை முயற்சி செய்து இறுதியில் கொன்று வீழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் கூட்டம். 

காந்தியின் கொலை நியாயப்படுத்தப்பட்டால், எந்த தலைவரின் கொலைக்கும் ஒரு நியாயத்தைக் கற்பித்து எவரையும் கொலை செய்யும் அநீதியையும் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் நீதியாக கட்டமைத்து விடுவார்கள். இதை உணர்ந்தே பெரியார், சனாதனத்தை சீர்திருத்த முயன்றதே காந்தியின் படுகொலைக்குக் காரணம் என ஆணித்தரமாகக் கூறினார். பார்ப்பன சூழ்ச்சியை உணர்ந்து என்று தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாரோ அன்று பார்ப்பனர்களால் கொல்லப்பட்டார் எனப் பேசினார். பெரியாரின் கண் கொண்டு பார்க்கத் துவங்குவதால்தான் ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவார கும்பல்கள் பெரியாரின் மீது வன்மத்தைக் கொட்டுகின்றனர். சனாதனவாதிகள் நிகழ்த்திய காந்தியின் கொலையை எவரும் மறந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்தியாவிற்கு ‘காந்தி தேசம்’ எனப் பெயரிடலாம் எனவும் வலியுறுத்தினார் பெரியார். 

காந்தியின் மீது கோட்சாவால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்பது ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவாரக் கூட்டமான சனாதனவாதிகள் நிகழ்த்திய, இந்திய மக்கள் எவராலும் மன்னிக்க முடியாத கொடுஞ்செயல். காந்தியார் உச்சரித்த ‘ஹேராம்’ தனிப்பட்ட அவரின் பக்தியின்பாற்பட்டது. சனாதனக் கூட்டம் முன்னிறுத்தும் ‘ராம ராச்சியம்’ காந்தியின் படுகொலையிலிருந்து தொடரும் ஜனநாயகப் படுகொலையின் வழியது என்பதை இந்திய மக்களின் மனதில் பதியச் செய்வதே காந்தியைக் கொன்ற பார்ப்பனீய சனாதனக் கூட்டத்திற்கு உரிய தண்டனையாக இருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »