ஏன் கொண்டாட வேண்டும் இராவணன் திருவிழா?

இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் இருந்த அயோத்தியில் இன்று இராமனின் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. ராமராச்சியம் அமைப்போம் என்ற காட்டுக் கூச்சலுடன் ரதயாத்திரை நடத்திய ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவாரக் கூட்டம் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. இந்த இந்துத்துவ மதவெறிக் கும்பல் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இராமனை உயர்த்திப் பிடித்து மாற்று மதத்தவரின் உணர்வுகளை சிதைத்து இராமன் கோயில் திறப்பு விழா கொண்டாடுகிறது. இந்தப் படுபாதகத்தை அறம் போற்றும் தமிழர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த இராவணன் திருவிழா.        

இராமாயணம் என்பது கற்பனைகளால் உருவாக்கப்பட்ட கதை என அறிவியல் பூர்வமாகவும், வரலாற்று அறிஞர்கள் வழியாகவும் நிறுவப்பட்டு விட்டது. இருப்பினும் அந்த புனைவுக் கதையின் பாத்திரமான இராவணனை நாம் கொண்டாடுவது குறித்து பலருக்கும் கேள்விகள் எழுகிறது. இராமாயணத்தின்படி, இராமன் என்னும் வட நாட்டு அரசன் கடவுளாக்கப்பட்டான். தமிழர்களின் அரசனாக தென்னாட்டை ஆட்சி செய்த இராவணன் இரக்கமில்லாதவனாக சித்தரிக்கப்பட்டான். அதாவது ஆரியத்தை எதிர்த்த நம் தமிழ் மன்னர்கள் யாவரையும் அரக்கர்கள் என்கிற சொல்லைக் கட்டமைத்து இழிவுபடுத்திய கதையே இராமாயணம்..

இராமன் ஆரியப் பண்பாட்டின் அடையாளமாகவும், இராவணன் திராவிடப் பண்பாட்டின் குறியீடாகவும் கொண்டே இராமாயணம் எழுதப்பட்டது. இந்தியம் முழுமையும் வாழ்ந்த திராவிடப் பழங்குடிகளை வடநாட்டில் வீழ்த்திய ஆரியம், தென்திசைக்கு படையெடுத்து வந்த போது இங்கு ஆரியத்தை எதிர்த்து நின்றுப் போரிட்ட தென்னிந்திய அரசர்களின் மொத்தக் குறியீடே இராவணன்.

ஆரியத்தின் குள்ளநரித்தனமான இந்த சூழ்ச்சியை உணர்ந்தே பெரியார் முதற்கொண்ட திராவிடத் தலைவர்கள் வெகுண்டெழுந்தார்கள். தமிழர்களின் பண்பாட்டை மறக்கடித்து பக்தி என்கிற போர்வையின் மூலம் ஆரியப் பண்பாடு நுழைந்த வழியைத் தேடினார்கள். தமிழர் பண்பாட்டின் வேர்களை ஆராய பழந்தமிழ் நூல்களைத் திரட்டினார்கள். தமிழர்கள் இயற்கையோடு வாழ்ந்த வாழ்வியல் நெறி கொண்டவர்கள் என்பதைக் கண்டறிந்தார்கள். புராண இதிகாசப் பக்கங்களையும் புரட்டினார்கள். பொய்கள் புளுத்துக் கிடப்பதைக் கண்டதோடு, தமிழர்களின் மானமும், அறிவும் இதற்குள் அழுந்திக் கிடப்பதை அறிந்தார்கள். தமிழர்களின்  மரபாகத் தொடர்ந்து வரும் அறம் இவர்களிடம் விழித்தது. தங்கள் சிந்தனைகளால், எழுத்துக்களால், உரைகளால், கவிகளால், இலக்கியங்களால், கலைகளால் எனத் தமிழின் வடிவங்கள் அனைத்திலும் சீற்றத்தைக் கொட்டினார்கள். தமிழர் பண்பாட்டு மீட்பை இராவணன் என்னும் குறியீட்டைக் கொண்டே மீட்க முடியும் என நினைத்தே இராவணனைக் கொண்டாடினார்கள்.

“தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடா!
அன்றந்த இலங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையோன்
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!”

– என பாரதிதாசன் உளம் குளிர்ந்து கவி வடித்தார்.

புலவர் குழந்தை அவர்கள் இராவணனைக் காவிய நாயகனாகக் கொண்டு இராவணக் காவியம் படைத்தார். 1948-ல் காங்கிரசால் தடை செய்யப்பட்டு 1971-ல் தடை நீக்கப்பட்டு வெளிவந்தது. இராமனைப் புகழ்ந்து பாடப்பட்ட இராமாயணத்தில் உள்ள பாடல்களைப் போலவே இராவணனைப் புகழ்ந்து 3100 பாடல்களை இலக்கிய, இலக்கண மரபு மீறாமல் கவிநயத்துடன் எழுதியுள்ளார். தமிழர்கள் பண்பாட்டின் சின்னமாக இராவணனை தீட்டினார. கம்பராமாயணத்தை சொற்சுவைக்காக தாங்குகிறோம் என தமிழர் பண்பாட்டை நெறித்துக் கொண்டிருந்த அன்றைய புலவர்களிடையே, புலவர் குழந்தை அவர்கள் சொற்சுவை சிறிதும் குறையாத வகையில் இராவண காவிய வரிகளை செதுக்கினார்.  

இராவண காவியச் சிறப்பை அண்ணா கூறுகையில்,

“ தமிழரின் புத்துணர்வுக்கான போர்முரசு! காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்தி விட்டோம்; எனவே, இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறைகூவல்; தமிழர்க்கு உண்மையை உணருமாறு கூறும் அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்” என புலவர் குழந்தையின் இராவணக் காவியத்திற்கு பாராட்டுரை எழுதினார். 

தந்தை பெரியார் அவர்கள் “இராமாயண பாத்திரங்கள்” என்ற நூலின் முன்னுரையில் “இராமாயணம் நடந்த கதை அல்ல; அது ஒரு கட்டுக்கதையே. அக்கதையின்படி, இராமன் தமிழன் அல்ல; இராமன் தமிழ்நாட்டவனும் அல்ல; அவன் வட நாட்டான். இராமன் கொன்ற மன்னன் இராவணனோ, இலங்கை அரசன், தென்னாட்டவன்… தமிழ்நாட்டு ஆண்களை குரங்கு, அரக்கன், இராக்கதர் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களை அரக்கிகள் என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.. தமிழ்நாட்டில் இராமாயணத்தையோ, இராமனையோ வைத்திருப்பதானது மனித சுயமரியாதைக்கும், இனமரியாதைக்கும், தமிழ்நாடு சுயமரியாதைக்கும் மிக மிகக் கேடும் இழிவும் ஆனதாகும்…தமிழன் சுயமரியாதை வளர்ச்சி பெற்ற பிறகு தமிழர்களை இழிவுபடுத்தி, கீழ்சாதி மக்களாக்கிய ஆரியச் சின்னங்களையும், ஆரியக் கடவுள்கள் என்பதற்கான உருவங்களையும் அழித்து ஒழிக்க வேண்டியது சுத்த ரத்த ஓட்டமுள்ள தமிழன் கடமையாகும்” என்று எழுதுகிறார்.

திராவிட இயக்கம் இராமாயணப் புரட்டை ஒரு பிரச்சார இயக்கமாகவே முன்னெடுத்தது. இராமாயண நூல்களை அடுக்கி அதிலுள்ள பொய்மைகளை மேடை தோறும் அம்பலப்படுத்தினார் பெரியார்.  உத்திரப்பிரதேசம் கான்பூரில் 1944-ல் நடந்த அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் தலைமை தாங்கிய பெரியார், சாதியின் ஆணிவேர்களான இந்து மதம், சாத்திரங்கள், வேதங்கள், இதிகாசங்கள் ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூற, அங்குள்ள மக்களும், “இராவணாக்கி ஜே, சம்புகிக்கி ஜே, இராமன் நாஸ்தி, சீதே நாஸ்தி” என முழங்கியிருக்கின்றனர்.

திராவிடப் பழங்குடியினரே இந்தியா முழுமைக்கும் விரவி இருந்தார்கள் என்பதற்கும், இராவணன் திராவிடப் பழங்குடி இனத்தைச் சார்ந்தவனே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. தமிழின் வேர்ச்சொல் அகராதியின்படியும் இராவணன் என்னும் பெயரே அதற்கு எடுத்துக்காட்டு. தமிழ் சொற்களில் ‘ர’ எனும் ரகரம் முதன்மையாக வராது. அதற்கு முன்பு அ அல்லது இ என்ற எழுத்துகள் வரும். அரவணன் என்பதே சரியானது. அரவணன் என்பதன் வேர்ச்சொல்லின்படி, அரவம் என்றால் பாம்பு என்பது பொருள். அரவணன் என்பதற்கு நாகர்களின் தலைவன் என்று பொருள். அம்பேத்கர் அவர்களின் ஆய்வும் நாகர்களான தமிழர்களே இந்தியம் முழுமையும் இருந்தவர்கள் என்று சொல்கிறது. இவற்றை இணைத்துப் பார்க்கும் போது திராவிடப் பழங்குடிகளான நாகர்களே இம்மண்ணுக்குரியவர்கள் என்பதே தெளிவாகிறது.

மேலும், கோண்ட் என்னும் பழங்குடி இனத்தவர் இராவணனைத் தங்கள் பரம்பரையினராக கருதுகிறார்கள். இவர்கள் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, பீகார், ஒடிசா, தெலுங்கானாப் பகுதிகளில் பரவலாக இருக்கின்றனர். இவர்கள் இராவணனுக்கு சிலை எழுப்பி இன்னமும் பூசை செய்கின்றனர். கோண்ட் இன மக்களின் நாட்டுப்புறக் கதைகளின்படி ஆரிய வருகைக்கு முன்பு இந்த நிலமானது ராவணன், ஜடாசுரன், பணாசுரன், மகிசாசுரன்

போன்ற அரசர்கள், சூர்ப்பனகை, மண்டோதரி, தாடகா போன்ற இளவரசிகள் என 88 சம்பூக்களால் ஆளப்பட்டதாக தங்கள் மரபுவழிக் கதைகளாக சொல்கின்றனர். ஜார்கண்ட் மாநில அசுர் பழங்குடியினரும், உத்திரப்பிரதேசத்தில் சசானி நகரம், அலிகார் நகர் மற்றும் பிஸ்ரிக் கிராம மக்களும் இன்னமும் இராவணனுக்கு விழா எடுக்கின்றனர். பிஸ்ரிக்கில் இராவணனுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆந்திராவில் காக்கிநாடாவிலும் ஒரு கோயில் உள்ளது.

“இராம லீலா” என்ற பெயரில் தமிழர்களின் அரசனாம் இராவணன் உருவம் கொளுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நிறுத்தப்படாவிட்டால் “இராவண லீலா” நடத்துவோம் என்று  திராவிடர் கழகம் சார்பாக அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் டெல்லி அரசாங்கம் இது மதச்சார்பின்மைக்கு எதிரான விழா அல்ல, மக்கள் விழா என பதில் அளித்தது. இதனால் இராவண லீலாவை கொண்டாட டிசம்பர் 25, 1974-ம் ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும் ஆரியப் பொம்மைகளான இராமன், சீதா, லட்சுமண உருவங்கள் அமைக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது. திராவிட இயக்கத்தின் அன்னை மணியம்மையார் அவர்கள் இராவண லீலாவை தொண்டர்களின் விண்ணதிரும் முழக்கத்தின் இடையே நடத்திக் காட்டினார். அவரையும் காவல் துறை கைது செய்தது. டெல்லி அரசின் இந்துத்துவ சார்பு நிலைக்கு அன்றே பதிலடி கொடுக்கப்பட்டது.

பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தவே சனாதனம் உருவாக்கப்பட்டது. இதன் வடிவமாக இராமனை ஆராதிக்கின்றனர். சனாதனத்தின் எதிர்வடிவமாக தமிழர்களின் மரபுவழியாக வந்ததே அறம். அறங்களின் தொகுப்பையே எளிமையாக திராவிடம் என்று அழைக்கிறோம். இவற்றையே சமத்துவம் நோக்கிய திராவிடத் தலைவர்கள் பேசினார்கள். அந்த தொகுப்புகளே சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன ஒழிப்பு, மூடத்தன ஒழிப்பு, சுயமரியாதை, சமூகநீதி போன்றவையாக பரிணமித்தது. இராமன் என்கிற கதாபாத்திரத்தை முன்வைத்து சனாதனத்தை பேசிய போது, இராவணன் என்கிற கதாபாத்திரத்தைக் கொண்டு திராவிடத் தலைவர்கள் தமிழர் அறம் பேசினார்கள்.

சம்புகன் என்னும் சூத்திரன் தவம் செய்து சாதி தர்மத்தை மீறியதால் தலையை வெட்டியது இராமனின் சனாதனம். சீதையை சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனத்தை நிறுவியது இராமனின் சனாதனம். சூழ்ச்சி செய்து வாலியைக் கொன்ற இராமனின் ஆரிய தர்மமே சனாதனம். தனது காதலைத் தெரிவித்த சூர்ப்பனகையின் மூக்கினை அறுத்த ஆணாதிக்கத் திமிர்தான் சனாதனம். ஆனால் இராவணனை முன் வைத்து திராவிடத் தலைவர்கள் முன்வைத்தது தமிழர் அறம். இராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரங்களையும் கேள்விக்குள்ளாக்கினர். நீதிதேவனிடம் இராவணன் சொற்போர் புரியும் வகையில் நீதிதேவன் மயக்கம் என்னும் நூலை எழுதினார் அண்ணா. தன் மேல் சுமத்திய இரக்கம் என்னும் பொருளில்லா அரக்கன் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்க ஒவ்வொரு இராமாயணப் பாத்திரத்தின் ஊடாகவும் நின்று கேள்வி எழுப்பிய வகையில் எழுதப்பட்ட நூல் இது. கம்ப ராமாயணத்தின் பாத்திரங்கள் ஒருவரிடம் இரக்கம் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இராவணன் வாதாடியதாக அந்நூல் அமைந்தது. இரக்கத்தின் ஊற்றாக இராமனை முன்னிறுத்தியதை இராவணன் பாத்திரத்தின் ஊடாக அறிஞர் அண்ணா தோலுரித்தார். தமிழரின் நீதி என்பது ஆரிய சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட நேர்மை உடையது என்பது ஒவ்வொரு சொல்லாடலிலும் கலந்திருந்தார் அண்ணா.

ஆரிய பார்ப்பன இலக்கியக் கூட்டம் அவரவர் கற்பனைக்கு ஏற்ப புனைந்து எழுதப்பட்ட இராமயணங்கள் மட்டுமே 300 -க்கும் மேலாக இருக்கின்றன. ஒரு இராமாயணத்தில் சீதையின் தந்தை இராவணன். பெளத்த இராமாயணத்தில் சீதையே கிடையாது. பல நாடுகளிலும் இதன் கதை வெவ்வேறாக உள்ளன. வால்மீகி  இராமாயணம், துளசிதாசர் இராமாயணம், கம்ப இராமாயணம் என இந்தியாவில் எழுதப்பட்டு இராமாயணங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கதையமைப்பைக் கொண்டவை.

இந்தப் புரட்டுக்கும், புளுகலுக்குமாக படைக்கப்பட்ட நாயகனே இராமன். அவன் பிறந்த இடம் என்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து வன்முறை வெறியாட்டத்தை ஆர்.எஸ்.எஸ், பாஜக இந்துத்துவ கும்பல் நடத்தியது. அதே இடத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயிலை கட்டி எழுப்பி மத வெறுப்புணர்வு அரசியலுக்கு வலுவான அடித்தளம் போட்டிருக்கிறது. ஒரே கடவுள் என்று இராமனைக் கட்டமைத்து, மக்களிடையே ராமபக்தியை வெறி கொள்ளும் அளவு ஊட்டி, இஸ்லாமியரை, கிறித்துவரை, மாற்று தெய்வ வழிபாட்டாளர்களை குறிப்பாக தமிழ்நாட்டின் நாட்டுப்புறத் தெய்வங்களை, பழங்குடியின கடவுள்களை அழுத்தும் அரசியல் இது. இந்த அரசியலுக்கு மாற்று அரசியல் தேவை. தமிழர்கள் நாங்கள் அறம் மீறும் எதையும் ஏற்க மாட்டோம் என்ற கர்வம் தேவை. இதற்காகவே திராவிடத் தலைவர்கள் இராவணனைப் போற்றினார்கள். எம் தமிழர் மூதாதை என புகழ்ந்தார்கள்.

“இராவண காவியம் – திடுக்கிறீர்களா? அப்படித்தான் இருக்கும். பன்னெடுங்காலமாக இராமயணம் படித்தும், படிக்கப் படிக்க நின்று கேட்டு வந்த மக்களல்லவா! அவர்களின் செவிக்கு, இராவண காவியம் என்ற ஒலியே சற்றுக் கிலி தருவதாகத்தான் இருக்கும் “ என இராவணக் காவியம் குறித்து அண்ணா கூறியதே இராவணன் திருவிழா கொண்டாடுவதற்கும் பொருத்தமாகும். ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் மதவெறி ஊட்ட இராமனைக் கையிலெடுக்கும் போது, தமிழர் அறம் திசையெட்டும் பரவ இராவணன் திருவிழா கொண்டாடுவோம்.

“ஜெய் ஸ்ரீராம்“ காட்டுக்கூச்சலுக்கு தமிழர்கள் நாம் வைக்க வேண்டிய முழக்கம் “இராவணன் நாமம் வாழ்க” என்பதாகவே இருக்க வேண்டும். ஆரிய திராவிடப் போர் இன்றும் ஓயவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »