“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து மே 17 இயக்கத்தின் தமிழ்நாடு தழுவிய அளவிலான தேர்தல் பரப்புரை 9/4/24 அன்று கோவைப் பகுதிகளைச் சுற்றிலும் நடைபெற்றது. பாஜகவின் வேட்பாளர் அண்ணாமலையை எதிர்த்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் தோழமை அமைப்புகளான விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் தோழர். குடந்தை அரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தோழர்களுடன் இணைந்து பரப்புரை நடத்தப்பட்டது.
கோவையைச் சுற்றிலும் நடந்த பரப்புரையில் கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசு செய்த மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்த துண்டறிக்கைகளை தோழர்கள் விநியோகித்தனர். அமைதி வழியில் நடந்து கொண்டிருந்த பரப்புரையில் இடையே திடீரென பாஜக குண்டர்கள் கூட்டம் நுழைந்து களேபரமாக்கியது. காவல் துறை அந்த குண்டர்களிடம் மென்மையானப் போக்கையே கையாண்டது. அந்த ரவுடிக்கூட்டம் மே 17 இயக்கத் தோழர்களைப் பார்த்து அவன், இவன் என ஒருமையில் பேசியது. இதனால் கோவமடைந்த தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சங்கி கூட்டம் உடனே ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கூவியது. தோழர்கள் ’பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, ஜெய்பீம்’ என முழக்கங்களை எழுப்பினர். கருத்தியலில் எதிர் நிற்க முடியாமல் கூச்சலில் சாதிக்கும் சங்கிக் கூட்டத்தை நோக்கி தோழர். திருமுருகன் காந்தி ‘தமிழ்நாடு தமிழருக்கே‘ , ‘வடநாட்டானே வெளியேறு’ என முழக்கமிட்டார். உடனிருந்த தோழர்களும் இவ்வாறு முழக்கமிட்டு பாஜக குண்டர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு:
கோவையில் பரப்புரையைத் தடுக்க பாஜகவினர் குவிகின்றனர். பரப்புரை வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டு மிரட்டும் கூட்டத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டு பரப்புரையை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். எமது ஊரில், எமது நாட்டில், எம்மை மிரட்ட எவனும் பிறக்கவில்லை. வீதியில் எதிர்கொள்வோம் பாசிச கும்பலை. பாஜக கும்பலுக்கு ஆதரவாக வந்த காவல்துறையை வாதிட்டு ஒதுக்கி நிறுத்திவிட்டு பரப்புரை வாகனத்தை நிறுத்தி உரையாற்ற ஆரம்பித்துள்ளோம். நேரில் வந்த பாஜக மாவட்ட பொறுப்பாளரையும், பாரத் மாதாகீ ஜே என முழக்கமிட்ட கும்பலை ‘ஜெய் பீம்!’, ‘பெரியார் வாழ்க!’, ‘தமிழ்நாடு தமிழருக்கே!, வெளியேறு வெளியேறு, வட நாட்டானே வெளியேறு!!’ என்கிற முழக்கத்தோடு தோழர்கள் விரட்டியடித்தனர். பரப்புரை நடக்கிறது, காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது, பாஜக கும்பல் குவிந்து கொண்டிருக்கிறது. எதற்கும் அஞ்சாமல் பரப்புரை நடக்கிறது. தோழர் குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயக கட்சியின் அபு, தமிழ் சிறுத்தைகளின் அகத்தியன் ஆகியோர் உடனிருக்கிறார். எதற்கும் அஞ்சப்போவதில்லை. இது பெரியார், பிரபாகரன், அண்ணலின் வழி வந்த படை. எதிர்த்து நிற்போம். துணிந்து வெல்வோம்.
https://www.facebook.com/plugins/video.php?height=316&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthirumurgangandhimay17%2Fvideos%2F413086004818315%2F&show_text=false&width=560&t=0
கோவை பரப்புரையில் தோழர். திருமுருகன் காந்தி ஆற்றிய உரை:
மோடி ஓட்டுக்காக தமிழ்நாட்டுக்கு ஆரேழு முறை வந்து விட்டார். ஆனாலும் இந்த பத்து வருட ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்த ஒரு நல்லதைக் கூட சொல்ல முடியவில்லை. இன்று ரோடு ஷோக்காக தமிழ்நாடு வந்திருக்கிறார் மோடி. நம் உறவுகள் மாண்டபோது, மீனவன் இறந்த பொழுது, விவசாயிகள் இறந்த போது, சென்னை புயல் வெள்ளத்தால் தவித்த போது, வந்து பார்க்காத நரேந்திர மோடி இன்று வருகிறார். தமிழர்கள் இளிச்சவாயர்கள் இல்லை, இதையெல்லாம் மனதில் வைத்திருப்பார்கள்.
மோடி ஆட்சியில் சாப்பாட்டுக்கு வரி, பிறந்தால் வரி, பிறப்பை பதிவு செய்தால் வரி, ஒரு ரூபாய் ஷேம்புக்கும் வரி, 10 ரூபாய் சோப்புக்கும் வரி, தீப்பெட்டிக்கு கூட வரி, சுங்க வரி, சாலை வரி, இன்சூரன்சுக்கு வரி, பெட்ரோலுக்கு வரி, டீசலுக்கு வரி என வரியாகப் போட்டு தமிழர்களை நொந்து நூலாக்கி விட்டார் மோடி. இந்தப் பகுதியை சேர்ந்தவன் நான். 10 வருடத்திற்கு முன்பு இந்த இடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் லேத் பட்டறை ஓடிக் கொண்டிருக்கும். யாராவது நான்கு பேர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இந்த தொழிலாளர்கள் இன்றைக்கு எங்கு போனார்கள்? கோயம்புத்தூரில் உள்ள சின்ன சின்ன லேத் பட்டறைகள் ஏன் மூடப்பட்டது? ஜிஎஸ்டி வரிதான் காரணம். இத்தனைக்குப் பிறகும் கோயம்புத்தூர் தாக்கு பிடித்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் நம் மக்களின் உழைப்பு தானே ஒழிய டெல்லிக்காரன் கொடுத்த காசு அல்ல.
இங்கு வேலைக்காக பீகாரில் இருந்து, உத்தரபிரதேசத்தில் இருந்து தொழிலாளர்கள் வருகிறார்கள். அவர்கள் இந்தி பேசியவர்கள் தானே. நாம் இந்தி வேண்டாம் என்று சொன்னோம். தமிழ்தான் வேண்டுமென்று தமிழோடு ஆங்கிலத்தை கையில் எடுத்தோம், வளர்ந்திருக்கிறோம். அவர்களுக்கும் வேலை கொடுத்து இருக்கிறோம். இதே கோவையிலே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ராணுவத்தால் 300 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கூட ‘இந்தி வீழ்க, தமிழ் வாழ்க’ என்று கூறி உயிர் நீத்தவர்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை அண்ணாமலை பிய்ந்த செருப்பு என்று சொன்னால் மானத்தமிழர்கள் சும்மாவா இருப்பார்கள்?
சொந்தத் தலைவர்களே இல்லாத கட்சி பாஜக. எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் என அடுத்த கட்சித் தலைவர்களுக்கு மோடி வரும் போதெல்லாம் மாலை சூட்டுகிறாரே தவிர, 40 வருடத்தில் மோடியால் தனது கட்சியில் தமிழ்நாட்டில் ஒரு தலைவரையாவது காட்ட முடிந்திருக்கிறதா?
கோவையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கலவரம் செய்தார்கள். இன்று கோவை வீதிகளில் எல்லாம் சேட்டு, மார்வாடி கடைகள் தான் இருக்கிறது. இங்கு ஆர்.எஸ்.புரத்தில் கோயம்புத்தூரே குசராத்தோடு சேர்ப்பேன் என்று நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள். இங்கு மில் நடத்தி, லேத்து பட்டறைகள் நடத்தி, உழைத்து கோயம்புத்தூரை வளர்த்தவர்கள் இம்மக்கள். ஆனால் கோயம்புத்தூரை குசராத்தோடு சேர்க்க வேண்டும் என்று இங்கேயே அச்சடித்து ஒட்டுகிறார்கள் என்றால் எவ்வளவு திமிர் இருக்கும்.
பாஜக-காரன் எங்களைப் பேச வேண்டாம் என்று கத்தி விட்டுப் போகிறான். பெரியாரையும், பிரபாகரனையும் தலைவராக ஏற்றுக் கொண்ட எங்கள் இடத்தில் இந்த பசப்பு வேலைக்காகாது. மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர் பரம்பரை பிரபாகரன் பரம்பரையுடன் மோத முடியுமா?
இன்று கூட பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. மோடி ஆட்சிக்குப் பிறகு மக்களின் வருமானத்தில் 30 சதவிகிதம் குறைந்து இருக்கிறதென்று செய்தி. ஆனால் விலைவாசி மட்டும் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. வங்கியில் சேமிப்பு என்று ஏதாவது வைத்துக் கொள்ள முடிகிறதா இந்த ஆட்சியில்? வங்கியில் பணத்தை போட்டாலும் வரி, எடுத்தாலும் வரி, மாற்றினாலும் வரி, காசே இல்லை என்றாலும் வரி. இவ்வளவு வரிகளை சுமந்து கொண்டே வாழ்கிறோம்.
இங்கு வந்து பிரச்சினை செய்தவர்களுக்கு நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். நமக்கு எதிரிகள் தான் விளம்பரதாரர்கள் என்று பெரியார் சொன்னது போல அமைதியாக பேசிவிட்டு சென்றிருக்கக் கூடிய எங்களை விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். தமிழர்களின் உரிமைக்காக பேசினால், அவர்கள் பேசக்கூடாது என்று சொல்லப்படுகிறது என்றால், இங்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்து இருக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள்.
மே 17 இயக்கத்திற்கென்று ஒரு கர்வம் இருக்கிறது. கருப்பு சட்டை இருக்கிறது. அந்த சட்டையை கழட்ட வேண்டும் என்று சொல்கிறீர்கள். இந்த சட்டைக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. 15 வருடமாக போராடிய வரலாறு, வழக்கு வாங்கிய வரலாறு, அடக்குமுறை எதிர்கொண்ட வரலாறு, தமிழினத்திற்காக போராடி மாண்டு போவோமே ஒழிய ஒரு காலத்திலும் எங்கள் கருப்பு சட்டையைக் கழட்ட முடியாது. எங்கள் மொழிக்காக மாண்டு போன தாளமுத்து, நடராசன், கீழ்பழுவூர் சின்னச்சாமி ஆகியோர் வழி வந்தவர்கள் நாங்கள்.
இந்த மண்ணில் இந்து வேறு, முஸ்லிம் வேறு என்று பிரிக்கிறீர்களா? இந்தக் கோவை கோட்டையில் 200 வருடத்திற்கு முன்பு வெள்ளைக்காரர்களை எதிர்ப்பதற்காக தீரன் சின்னமலை படையில் இருந்த 42 பேரை தூக்கில் ஏற்றியது வெள்ளையர் படை. அதில் 36 பேர் இஸ்லாமியர்கள். அதுதான் கோட்டை மேடு வரலாறு. 200 வருடங்களுக்குப் பிறகு அந்த வரலாறை மீட்டு இதே கோட்டை மேட்டில் மாநாடு நடத்தியது மே 17 இயக்கம். கோவைக்கும், இஸ்லாமியர்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறானே, கோவைக்கும் இந்திக்காரனுக்கும் என்ன தொடர்பு? 42 பேரைக் கொன்றது வெள்ளையர் படை மட்டுமல்ல வடநாட்டான் படையும்தான். இன்று கோட்டை மேட்டை பயங்கரவாத இடம் என்று சொல்கிறானே, தீரன் சின்னமலையோடு, மருது பாண்டியர்களோடு இணைந்து நாட்டு விடுதலைக்காக போராடியவர்கள் அவர்களின் முன்னோர்கள். நாங்களும், முஸ்லிமும் ஒன்று. வடநாட்டான் வேறு.
அனைவருக்கும் குடியுரிமை கொடுப்பதாக சொல்லும் மோடி அரசு, இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்கு மட்டும் குடியுரிமை கொடுக்க மாட்டேன் என்றால், ’தமிழர்கள் இந்து இல்லை’ என்று பாஜகவே சொல்கிறது என்பதே அர்த்தம். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். தமிழன் இந்து அல்ல. அம்மனும், அய்யனாரும் எங்கள் முன்னோர்கள். தங்கள் மூதாதையரை வழிபடும் வழக்கம் வடநாட்டுக்கு கிடையாது. பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போலதான் அம்மன் காலிலும், அய்யனார் காலிலும் விழுகிறோம். அதனால்தான் இந்த பரம்பரை ஆரம்பிப்பதற்கு முன்பே, சென்னையில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோயிலில், இந்த பாஜக எனும் நாச ஆற்றல் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து விடக்கூடாது என வேண்டி ஆட்டை நேர்ந்து விட்டு வந்திருக்கிறோம். இந்த மண்ணில் உள்ள சாமி எல்லாம் நம் முன்னோர்கள். அதை விட்டுவிட்டு எதை எதையோ கொண்டு வந்து நம் மீது திணிக்கிறார்கள். இந்த அம்மனும், அய்யனாரும் உங்களுக்கும் எங்களுக்கும் மூத்தோர். அங்கு தமிழ்தான் வழிபாட்டு மொழி, தமிழன்தான் பூசாரி. இந்த வழிபாட்டு முறை எல்லாம் வடநாட்டவர்களுக்கு கிடையாது. தமிழ் தேசியக் கூட்டணி இதைத்தான் முன்வைத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு ’தமிழ் தமிழர் தமிழ்நாடு’ வளர வேண்டும். இந்தக் கோவை மண் சாதி மதங்களை வீழ்ந்து விடாமல் இருப்பதற்கு சரியான ஆள் யார் என்று தேர்ந்தெடுங்கள். இந்தக் கோவை மண் பாஜக வளர்க்கும் சாதி மதங்களால் வீழ்ந்து விடாமல் இருப்பதற்கு, சரியான ஆள் யார் என்று தேர்ந்தெடுங்கள். மதவெறியால் வடநாடு வீழ்ந்து போனது. அப்படிப்பட்ட நிலைமை இங்கு வர வேண்டாம். ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள்” என திருமுருகன் காந்தி பேசினார்.
மேலும் மே 17 இயக்கத் தோழர்களால் சிதம்பரம் தொகுதியில் உள்ள ஜெயங்கொண்டம், இராங்கியம், கருக்கை, நாகபந்தால், ஸ்ரீராமன், ரெட்டிப்பாளையம் ஆகிய இடங்களிலும் பரப்புரை நடைபெற்றது.
தென்சென்னை பரப்புரை :
தென்சென்னையில் கடந்த ஏப்ரல் 2ந்தேதி தொடங்கிய பரப்புரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி 9/4/2024 அன்று மே 17 இயக்கத் தோழர்களால் கக்கன் பாலம், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் பேருந்து நிலையம், பெசண்ட் நகர் கடற்கரை போன்ற இடங்களில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. பாசகவினற்கான எதிர்ப்புகளை மக்களிடையே பார்க்கின்றோம், பரப்புரையை பலர் வரவேற்கின்றனர், ஒரு முதியவர் கைக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து மே 17 இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.
தொடர்புக்கு : 9884864010 எண்ணை அணுகவும்.