”தமிழ் நாட்டிலுள்ள மாநில கட்சிகளுக்கு, அக்கட்சியின் அடையாளமாகவோ அல்லது அக்கட்சிக் கொள்கையின் அடையாளமாகவோ சில தலைவர்கள் இருப்பார்கள். ஆனால் பாஜகவிற்கு அவ்வாறு எந்தத் தலைவராவது இருக்கிறார்களா? நாட்டிற்கு நல்லது செய்த ஒரு பாஜக தலைவரையாவது அவர்கள் சுட்டிக்காட்ட இயலுமா?”– இந்த ஆண்டின் தேர்தல் பரப்புரையில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் முன்வைத்த முக்கியமான கேள்வி இது.
மக்களுக்கு நல்லது செய்வதற்கான எந்த கொள்கை கோட்பாடுகளையும் கொண்டிராத பாஜக கட்சி, பிற கட்சித் தலைவர்களை தனக்குரியதாக்கிக் கொள்ள கடும் முயற்சிகளை செய்வது நாம் அறிந்ததே. அந்தவகையில் பாஜகவின் ‘இந்து ராச்சியக்’ கொள்கைக்கு முற்றிலும் நேரெதிர் கருத்துக்களைக் கொண்ட அண்ணல் அம்பேத்கரை தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது பாஜக.
அண்ணல் அம்பேத்கருக்கு மரியாதை செய்வது போல் நடித்து, ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து தனது அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது பாஜக.
இவ்வாறு அண்ணலைக் கவர்ந்து கொள்ள நினைக்கும் பாஜகவையும் அதற்கு முற்றிலும் எதிராக இருந்த அண்ணலின் தத்துவங்களையும் விளக்கும் புத்தகம் ‘அம்பேத்கரும் இந்துத்துவ அரசியலும்’ (‘AMBEDKAR AND HINDUTVA POLITICS’).
இந்தப் புத்தகத்தைப் பற்றிய கருத்துகளுக்குள் செல்லுமுன் இதன் ஆசிரியர் பேராசியர் ராம் புனியானி பற்றிய குறிப்பு:
முன்னாள் ஐஐடி பேராசிரியரான ராம் புனியானி, மத நல்லிணக்கம் குறித்தும் மதச்சார்பின்மை குறித்தும் கட்டுரைகள்/புத்தகங்கள் எழுதியுள்ளவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு வரும் அவர் மனித உரிமை பாதுகாப்பு குறித்தும் எழுதியுள்ளார்.
இனி புத்தகப் பார்வை:
ஒரு திரைக்கதையின் துவக்கத்தில் கதாநாயகனையும் வில்லனையும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்துவதுபோல் அண்ணல் அம்பேத்கரையும் ஆர்.எஸ்.எஸ்-சையும் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். அண்ணலின் அரசியல் மற்றும் அகன்ற கல்வியறிவை விவரிக்கும் முன்னுரையைப் போலவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தோன்றியதையும் தற்போது ஏபிவிபி, விஹச்பி, வனவாசி கல்யாண் ஆஷ்ரம் என்று பல கிளைகளைப் பரப்பியதையும் புத்தகத்தின் பின்னணி விளக்குகிறது.
புத்தகத்தின் பின்னணியை விவரித்த பின் ஆசிரியரின் பதினான்கு கட்டுரைகள் தொகுப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆர்.எஸ்.எஸ் கொள்கை ஒவ்வொன்றையும் கூறி அதற்கு எதிர்வினை புரிந்த அண்ணலின் செயல்பாடுகளையும் (அவரின் உரைகள்/ வாழ்க்கை நிகழ்வுகள் வாயிலாக) விளக்கியிருக்கிறார் ஆசிரியர். இதற்கு சான்றாக அண்ணல் எழுதிய புத்தகங்களையும் பல்வேறு செய்திக் குறிப்புகளையும் ஒவ்வொரு பக்கத்திலும் இணைத்துள்ளது நாம் பாராட்ட வேண்டிய முயற்சி.
சான்றாக ஒரு நிகழ்வைக் கூறலாம். ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மன்மோகன் வைத்யா “அண்ணல் பார்ப்பனியத்திற்கு எதிரானவர் அல்லர்” என்று கூறியிருக்கிறார். இதை ஆசிரியர் மறுத்து எழுதும்போது அண்ணல் எழுதிய ‘RIDDLES IN HINDUISM’ என்ற நூலிலிருந்தே ஆதாரங்களை முன்வைக்கிறார். “பார்ப்பனர்களால் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைத் தெரியப்படுத்துவதே இந்த புத்தகத்தின் நோக்கம்” என்று அண்ணல் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
சமூகத்தில் முன்னேறி வரும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக/எதிர்வினையாக/எதிரியாக உருவாக்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ். எனவேதான் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு ஜன சங்கத்திடம் எந்த வித அரசியல் கூட்டணியையும் தவிர்த்திருக்கிறார் அண்ணல். 1925இல் நாக்பூரில் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது ஏ.பி.வி.பி மூலம் கல்லூரிகளிள் ஊடுருவுவது வரை ஆர்.எஸ்.எஸ்-சின் ஒவ்வொரு அசைவும் மனுஸ்மிருதியின் அடித்தொட்டே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் மனுஸ்மிருதியின் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து அதை எரித்தவர் அண்ணல்.
இட ஒதுக்கீடும் சாதி மறுப்புத் திருமணங்களுமே சாதி ஒழிப்பிற்கான படிகளாகக் கருதினார் அண்ணல். ஆனால் இதற்கு நேரெதிரான விடயங்களை செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
இந்து மதத்தில் இருந்து விலகிய அண்ணல் சாதி ஒழிப்பிற்காக போராடியபோது, ஆர்.எஸ்.எஸ் ‘சாமாஜிக் சாமரஸ்தா மன்ச்’ என்ற பெயரில் சாதி ஊக்குவித்தலுக்காக ஒரு அமைப்பை உருவாகியிருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்காக மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ் ராமர் கோவில் பக்கம் மக்களைத் திருப்பும் வேலையைத் தொடங்கியது . இவ்வாறு இட ஒதிக்கீட்டிற்கு எதிராக 1980களில் குஜராத்தில் வெடித்த வன்முறை, மராத்திய பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்கள் என புத்தகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்-சின் அம்பேத்கரிய எதிர்ப்பு பட்டியலிடப் பட்டிருக்கிறது.
புத்தகத்தின் முதல் சில கட்டுரைகள் ஆர்.எஸ்.எஸ்-சிற்கு எதிரான அம்பேத்கரின் போராட்டங்களைக் கூறுவது போல, இறுதி கட்டுரைகள் தற்போதைய பாஜக எவ்வாறு பட்டியலின மக்களை ஒடுக்குகிறது என்று கூறுகின்றன. ராம்நாத் கோவிந்த் போன்றோரை குடியரசுத் தலைவராக்கிய பாஜக “அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்கிவிட்டு இசுலாமியர் மீதான வன்முறையை ஊக்குவிப்பது போல்” செயல்படுவதாக கூறுகிறார் ஆசிரியர்.
பட்டியலின மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியவர் பாஜகவில் ஒன்றிய அமைச்சர் பொறுப்பிலிருப்பவர். பசுவிற்காக பல பட்டியலின மக்கள் அடித்தே கொல்லப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு பல நேரங்களில் பாஜகவின் பட்டியலின விரோத முகம் வெளிப்பட்டிருக்கிறது.
வாக்கு வங்கி அரசியலுக்காக அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்கிவிட்டு இசுலாமியர் மீதான வன்முறையை நடத்தியது போல், ராம்நாத் கோவிந்த் போன்ற பட்டியலினத்தவரை குடியரசுத் தலைவராக்கிவிட்டு அந்த சமூகத்தின் மீதே வன்முறைகளை கட்டவிழத்து விடுகிறது பாஜக என்று கூறுகிறார் ஆசிரியர். (பாஜகவால், இதுவரை எத்தனை பட்டியலின மக்கள் உயிரிழந்துள்ளனர்? ரோஹித் வெமுலாவில் தொடங்கி வட மாநிலங்களில் உயர்சாதியான தாகூர்களின் வன்முறைகளை இதற்கு பதிலாக விளக்குகிறது இப்புத்தகம்).
பாஜக ஆட்சியில் பட்டியலின/ பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைத்தது, சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் – பெரியார் மாணவர் அமைப்பைத் தடை செய்தது, பீமா கோரேகான் என்று பல நிகழ்வுகளை இறுதிக் கட்டுரைகள் விவரிக்கின்றன.
புத்தகத்தை நிறைவு செய்யும்போது, அண்ணலின் 22 வாக்குறுதிகளை பதிப்பித்துளார்கள். “அண்ணல் அம்பேத்கரை பாஜக இந்துத்துவமயமாக்குவதற்குள் நாம் உண்மையான அம்பேத்கரை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்” என்ற ஆசிரியரின் கூற்று, நம் களப்பணியை இன்னும் வேகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தருவது உண்மை.
புத்தகம் கிடைக்குமிடம்:
திசை புத்தக நிலையம்,
எண்: 5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ் அருகில், காமராஜர் அரங்கம் எதிரில்,
அண்ணாசாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600086
தொலைபேசி: 98840 82823
Location: https://goo.gl/maps/fZXqRjz6n1u461fc7