பேரறிஞர் அண்ணாவின் அரசியல் எழுத்துகள் மட்டுமல்ல, இலக்கிய விவரிப்புகளும் பசுமரத்தாணி போல வாசிப்பவரின் உள்ளத்தில் பதிந்து விடும். குறிப்பாக உலகத்தில் நடந்த புரட்சிகளைப் பற்றி கவித்துவமாக அவர் எழுதிய வரிகள், தமிழினமும் இப்புரட்சியை கைக்கொள்ளாதா என்கிற ஏக்கத்தில் பிறந்தவைகளாக இருக்கும். அண்ணா என்கிற பேரிலக்கியவாதியை இழந்ததே, அண்ணா காலத்திற்குப் பின்னர் நடந்த புரட்சிகளின் மாபெரும் இழப்பு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அக்காலத்தின் உலகப் புரட்சியாளர்களின் வீர தீரத்தை வர்ணனைகளில் அழகேற்றி மெருகேற்றியிருப்பார் அண்ணா.
அண்ணா நேசித்த புரட்சியை நாம் விளங்கிக் கொள்வதற்கு, சோவியத் போரில் பங்கேற்ற இளமங்கை குறித்து தீட்டிய எழுத்தோவியம் ஒன்றே சாட்சியாக இருக்கிறது.
“ஜோயா பதினெட்டாண்டு பாவை! காதல் மொழியும், கட்டித் தழுவுவதும், முத்தமும், சரசமும் பெற்று வாழ வேண்டிய வாலிப வனிதை! மாஸ்கோவிலே, படித்துக் கொண்டிருந்தாள் ஜோயா! மாஸ்கோவை நோக்கி ஜெர்மன் பட்டாளங்கள் செந்நாய்க் கூட்டம் போல் சீறிவருவதைக் கேட்டதும், சிந்தனையிலே சிங்கம் குடி புகுந்தது. நாட்டை நாசமாக்க விரோதிகள் முனையும் போது ஏடு தூக்கிக் கிடப்பதா? என் நாட்டினருடன் நானும் சேர்ந்து நாஜியை நசுக்குவேன் என்று கூறினாள். ஜோயா! வாலிபத்தை மறந்தாள், வாழ்க்கையை மறந்தாள். அவள் மனதிலே காதல் மணம் இருந்திருக்கவும் கூடும். யாரறிவார்!
எழில் பூத்த இளமங்கை, நான் மாஸ்கோவுக்கு வெளியே நின்று மாற்றானை எதிர்க்கும் மறவருடன் போய்ச்சேருவேன் என்று கூறினாள். சென்றாள்! பெட்ரிஷ்ஷெவோ என்ற கிராமம், மாஸ்கோ அருகே உள்ளது. அதுதான் ரஷியர்களின் முகாம். பதுங்கிப்பாயும் கொரில்லா வீரர்களின் கூடாரம். ஜோயா அதிலே தங்கினாள்! நாஜிகளைத் தாக்குவது, நாஜிகளின் முகாம்களைக் குலைப்பது, தீயிடுவது, போக்குவரத்துகளைப் பொசுக்குவது, இவை ஜோயாவின் காரியம். பகலெல்லாம் காட்டிலே வாசம். இரவிலே வெளியே நடமாட்டம். ஜோயாவின் நடமாட்டம், நாஜிகளுக்குத் திண்டாட்டம் தந்தது. ‘எவளோ ஒரு பெண்! இளமங்கையாம். அவள் செய்யும் துணிகரம், பயமூட்டுகிறது‘ என்ற பேச்சு நாஜிவட்டாரத்திலே கிளம்பிற்று. சுந்தரி ஜோயா, சுவஸ்திகக் கொடியருக்கு, பயங்கரமான பிரச்னையானாள்.
அவள் தனது தீரத் திருவிளையாடலைச் செய்து கொண்டிருக்கையில், ஜெர்மானியரிடம் ஓர் நாள் பிடிபட்டாள், அன்று ஜெர்மன் போக்குவரத்து வண்டிகளைக் கொளுத்தச் சென்றாள், சிக்கிக்கொண்டாள். சிக்கினது ஜோயா என்று தெரிந்ததும், சீறினர் ஜெர்மானியர். சித்திரவதை செய்தனர். மற்ற கொரில்லா வீரர்கள் பதுங்கியருக்கும் இடம் எது, கூறு, என்று கேட்டனர் ஜெர்மானியர். ஜோயா வாய் திறக்கவில்லை!” – ரசியப் புரட்சியில் நாசிப் படைகளால் கொல்லப்பட்ட, ஜோயா என்ற இளம் வீராங்கனையைப் பற்றி அண்ணா வடித்த வரிகள் இவை.
“ஆதிக்கம் தலைவிரித்தாடும் இடங்களில் மாற்றானை எதிர்க்கும் மறவருடன் போய்ச் சேருவேன்” என்று ஜோயா பேசியதாக, எழுதிய அண்ணாவின் சொற்களின்படி, உண்மையாகவே முழங்கியவர்கள் தானே நம் தமிழீழப் புலிப் பெண்கள். எவராலும் எளிதில் நெருங்க முடியாத 45 அடி ஆழத்தில் 6300 டன் எடையுடன் நின்றிருந்த சிங்களக் கப்பலைத் தகர்த்த கேணல். அங்கயற்கண்ணியின் வீரத்திற்கு பரிசாக, தமிழ் இலக்கியம் தீட்டியிருக்க வேண்டிய கவித்துவ வரிகள், அண்ணா இருந்திருந்தால் ‘ஜோயாவின் வீர தீரத்தை விட விரிவாய் விரிந்திருக்குமா, இல்லையா? மாலதி, விதுஷா, சோதியா என எத்தனையெத்தனை புலி வீராங்கனைகளின் வீரமும், தியாகமும் அண்ணாவின் கவித்துவ விவரணைகளை இழந்திருக்கின்றன’ என்பதையே, ஜோயாவை விவரித்த விதங்களிலிருந்து நமக்கு ஏக்கமூட்டுகின்றன.
இந்த இளம்பெண்ணை மட்டுமல்ல, சோவியத்தின் தலைநகரான மாஸ்கோவில் ரசிய இளம் வீரர்கள் தோள் தட்டி எழுந்து நிற்பதை விவரிக்கும் போது,
“மாஸ்கோ புதுமையை வரவேற்று உபசரிக்கும் சமதர்மச் சித்திரம்! அதனை மண் மேடாக்கி, அதன் மீதோர் மட அரசு அமைக்கத் துடிக்கும் மதிகேடரை மண் கவ்விடச் செய்ய, மாவீரர் அனைவரும், தோள் தட்டி, கச்சையை வரிந்து கட்டி நிற்கின்றனர். இரண்டாம் போர் முனையிலே இறுதிப் போர் நடத்திடத் தீர்மானித்துள்ளனர். திக்கெட்டும் திகைக்கிறது இன்று! தீரமான போரிடத் துடிக்கின்றது.“ – என பேருணர்ச்சி மேலிட எழுதுகிறார் அண்ணா.
மாஸ்கோவின் மாவீரர்கள் பற்றியே இவ்விதம் விவரிக்கும் போது, தமிழினத்தின் மாவீரர்களான விடுதலைப் புலிகள், சிங்களர்கள் என்னும் மதிகேடரை, மண் கவ்வச் செய்ய எழுந்து நின்ற வீர தீரத்தை வடிக்க வேண்டிய சொற்கள், அண்ணா எனும் இலக்கியவாதியை இழந்து விட்டது என்று சொல்லலாம் தானே!
இன்று அண்ணாவின் வழியில் வந்ததாய் சொல்லிக் கொண்டு, தமிழீழத் தேசியத் தலைவரை மலினமாய் இகழும் மதிகேடர்களுக்கு அண்ணா, செக்கோஸ்லாவியாவின் விடுதலைப் போரை விவரித்தவையே பதில் சொல்வதற்கு உரியவையாக இருக்கிறது.
தங்களின் மொழி வளமை இழந்து ஜெர்மானியரிடம் அடிமைப்பட்டு, பொகீமியா என்கிற தனது நாட்டின் பெயரையும் இழந்து, 300 ஆண்டுகளுக்கு மேல் கிடந்த செக்கோ மக்களிடம், மொழிப் பற்றை தூண்டச் செய்து, புரட்சிக்கு அன்னியமாக்கி, நாஜிப் படைகளை ஓடச் செய்தார் மாசுரீக்-என்ற மாமனிதர். அதன் விளைவாக நடந்த புரட்சியில் செக்கோஸ்லாவியா மக்கள் தனிநாடு பெற்றனர்.
“தாய்மொழிக்கு ஏற்பட்ட தாழ்நிலையைப் போக்கி, மொழிப் பற்றின் மூலம் நாட்டுப் பற்று பெற்று, தாயகத்தைத் தருக்கரின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, மீண்டும் நாட்டுக்கு நல்லநிலை ஏற்படச் செய்தனர், செக்கோ நாட்டு விடுதலை வீரர்கள்” என்று ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து செக்கோஸ்லாவியா மீண்ட நீண்ட வரலாற்றை தீட்டுகிறார் அண்ணா.
உலகின் எங்கோ ஒரு மூலையில் தாய்மொழிப் பற்றால் எழும்பிய போரையே புகழ்ந்தவர், சிங்கள ஆதிக்க வெறியர்களிடமிருந்து தனது மொழி, நில, இன இறையாண்மை வரை அனைத்தையும் மீட்க போர் புரிந்த தமிழினத்தின் ஒப்பற்ற வீரர்களான விடுதலைப் புலிகளை எவ்விதம் புகழ்ந்திருப்பார் என்பது அறிவீனர்கள் உணர்வது கடினம் தானே!
ரசியப் புரட்சிக்கு வழிகாட்டிய லெனினைப் பற்றி குறிப்பிடுகையில், “சோவியத் மக்களின் இரத்தத்தை எண்ணெய்யாக ஊற்றி, அவர்களின் நரம்புகளைத் திரியாக அமைத்து, இலட்சியம் எனும் தீக்குச்சி கொண்டு, புரட்சி வீரர், புத்துலகச் சிற்பி, பாமரரின் ரட்சகர், பாட்டாளி மக்களின் தந்தை, வாலிப உள்ளத்தின் கர்த்தா, லெனின், ஏற்றி வைத்தார்!” – எனப் போற்றுகிறார்.
ரசியப் புரட்சியை முன்னெடுத்துச் சென்ற ஸ்டாலினைப் பற்றிக் கூறுகையில் “மாஸ்கோ வெளிப்புறத்திலே வேட்டொலி, மாஸ்கோ நகர் ரேடியோ நிலையத்திலே மதுரமான கீதம்! இதைவிட, வீரம் வேறு, என்று, எங்கே காண்பது. தொழிற்சாலை மிகுந்த பிரதேசத்திலே போர் என்றால், போர் நடத்திக்கொண்டே ஒரு பகுதியினர், தொழிற்சாலை இயந்திரங்களைக் கழற்றிக்கொண்டு, மற்றோர் பகுதியினர் வேறு பாதுகாப்பான இடங்களிலே அவைகளை அமைக்க எடுத்துச் சென்றபடி இருப்பர், அது முடிந்ததும், எதிரி உள்ளே நுழைவான். காண்பது என்ன! கட்டாந்தரை இடிந்த கட்டடங்கள் இவையே! போர் வீரன் உடை, தொழிலாளி முகம், படிப்பாளி உள்ளம் – இது ஸ்டாலின் சித்திரம்” – என ஸ்டாலின் நடத்திய போர் விதங்களை சித்திரம் என்று அழகுபட கூறுகிறார்.
இந்த சித்திரத்தில் எந்த விதத்தில் குறைந்தது, நம் தமிழீழ தேதியத் தலைவனின் கட்டளையின் கீழ், ஈழத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் பணிபுரிந்த புலிகளின் வேகமும், போர் நடத்தி முன்னேறிய வீரர்களின் துணிவும்? இவற்றையெல்லாம் விடுதலைப் புலிகளின் போர் முறையை ஊன்றிக் கவனித்தவர்கள் அறிவார்கள். அதை அறியும் காலம் வரை அண்ணா உயிரோடு இருந்திருந்தால் “பிரபாகரன் சித்திரம்” அல்லவா உருவாகியிருக்கும். தமிழீழ மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் போரிட்ட தலைவனை தறி கெட்டு ஏசும் மூடர்களின் வாய்க்கும் பூட்டுகள் போடப்பட்டிருக்கும்.
மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு சிங்கள ஆதிக்க வெறியர்களை எதிர்த்து நின்ற தமிழீழ தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தும் பிறவிகள், அவர் விடுதலைப் புலிகளை மூளைச்சலவை செய்தார் என்று கூச்சமில்லாமல் பேசுகின்றன. ஆனால் நாஜிப் படைகளின் ஆதிக்க வெறியைத் தகர்க்க ஸ்டாலினும், லெனினும் மூளைச்சலவை செய்தா படை திரட்டி, நாஜிப் படைகளை விரட்டினர் என்று அந்த வாய்கள் பேசுமா?
“இந்தியாவில் சமூக முன்னேற்றக் கருத்துகள் பரவாமல் புரட்சி என்பது நடப்பதற்கு வாய்ப்பில்லை” என்று கூறிய சோவியத்தின் தலைவர் ஸ்டாலினை எடுத்துக் காட்டி, சமுக முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வுக் கருத்துகளைப் பரப்பப் படை திரட்டினார் பெரியார். அவர் வழிவந்த அண்ணாவும் அந்த வழியில் ஒரு இலக்கியவாதியாக, மாபெரும் அரசியல்வாதியாக கருத்துப் பரப்பலை செய்தார். இதனால் ஆதிக்கத்திற்கு எதிரான ஆயுதப் புரட்சியை நேசிக்காதவரல்ல என்று அர்த்தம் கொள்ள முடியுமா? .
அவர் புரட்சியை நேசித்தார். சமூகப் புரட்சியில், இன்னும் முன்னேறாதவர்களிடம், ஆதிக்கத்திற்கு எதிரான ஆயுதப் புரட்சியை எப்படிப் புரிய வைப்பது என்பதே, திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டதற்குரிய பல காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
“திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிறேன், ஆனால் திராவிட நாட்டுக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன” என்று கூறிய வாசகத்தில், இந்த மண் அன்றைய தினத்தில் புரட்சிக்கு ஏற்றதல்ல என்கிற கண்ணோட்டமே உள்ளதாகவே பார்க்க முடியும். ஆதிக்கவாதிகளின் ஆதிக்கம் உச்சம் பெற்றால் எதிர்காலத்திற்கான எழுச்சியை தனது ஏடுகளில் இருந்து தமிழினம் பெறட்டும் என்பதை உணர்த்துவதற்காகவே, உலகப் புரட்சிகளை அவரின் எழுத்துகள் வீரியமாய் வடித்திருக்கின்றன என்றே சொல்ல முடியும்.
பெரியார், “தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவு படை தொடு, விடுபடு!” என்று கூறினால் தமிழர் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால் “கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம்” என்று கவி பாடும் காட்சியாகும் அது”. – என்ற அண்ணாவின் உளக் காட்சிக்கேற்ப, சிங்கள இனவெறியர்களை உலுக்க கிளம்பியவர்களே புலிகள்.
“சுதந்திரமான சமத்துவமான சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புவோம்” எனப் போரிட்ட புலிகளின் மீது, மலினமான வன்மங்ளை அள்ளி இறைக்கும் கயவர்கள், அண்ணாவின் தொண்டர்கள் என்று சொல்வதற்கே அருகதை அற்றவர்கள். அண்ணா, புரட்சியாளர்களின் பொதுவான நோக்கத்தை பார்த்தவர். அவர்களை ஆதரித்து எழுதிக் கொண்டே இருந்தவர். ஆதிக்க வெறியை எதிர்த்து திரளும் அனைத்துப் புரட்சியாளர்களையும் ஒரே தராசில்தான் வைக்கிறார்.
உலகப் பேரரசாக ஓரரசு அமைக்க விரும்பி, எல்லைகளற்று போரிட்ட நெப்போலியனின் போர்கள், இயற்கைக்கு ஒப்பாமல் போனது பற்றி நாவலாக படைக்கிறார். பாட்டாளி வர்க்க அரசை அமைக்க ஜெர்மானிய நாஜிப் படைகளை எதிர்த்த லெனின், ஸ்டாலின் நடத்திய போர்களை வெகுவாகப் புகழ்கிறார். இயற்கை எனது ஆசிரியர், தத்துவம் எனது வழிகாட்டி எனப் படை திரட்டி சிங்கள இனவெறி எதிர்த்து போரிட்ட தமிழீழ தலைவன் பிரபாகரனை, உயிரோடு இருந்திருந்தால் உச்சி முகர்ந்திருப்பார். தமிழின் அனைத்து இலக்கிய வடிவங்களையும் கோர்த்தெடுத்து வர்ணனை மாலைகளாக சூட்டியிருப்பார்.
அண்ணா நேசித்த புரட்சி வாழ்வினில் வாழ்கிறார் தமிழீழ தலைவர்…