தந்தை பெரியார் 146வது பிறந்தநாளையொட்டி லால்குடியில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் இரண்டாண்டு சிறைப்பட்ட திராவிடர் கழக மூத்த தோழரான ஐயா.மருதையன் அவர்கள் மகிழ்ச்சியோடு கலந்துக்கொண்டார். அக்கூட்டத்தில் ’சாதி ஒழித்தவன்‘ எனும் குரலை பதிவு செய்ததை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது வலைதளத்தில் செப்டம்பர் 30, 2024 அன்று பதிவு செய்தது.
86 வயது ஐயா.மருதையனை சந்திக்கும் வாய்ப்பு நேற்று (29.09.2024) கிடைத்தது. கையில் தடியுடன் அமர்ந்திருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டேன். கைகொடுத்தார். இறுகப்பிடித்த கையில் அவரது கரத்தின் வலிமை தெரிந்தது. தடுமாற்றமில்லாமல் சிரித்துக்கொண்டே ‘ஜாதிய ஒழிச்சவன்‘ என்றார். அவரது இரண்டு கைகளைப் பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தேன். இந்த வயதில் சற்றும் சிரமம் பாராமல் பயணித்து வந்திருக்கிறார்.
அருகிலிருந்த தோழர், ‘சட்ட எரிப்புப் போராட்டத்தில் இரண்டாண்டு சிறைப்பட்ட திராவிடர் கழக மூத்த தோழர்..‘ என்றார். சாதியை பாதுகாக்கும் சட்டப்பிரிவை பெரியார் எரிக்கச் சொன்ன போது, அரசியல்சாசனத்தை எரிப்பவருக்கு என்ன தண்டனை என சட்டத்தில் எழுதிவைக்கவில்லை. சாதியை பாதுகாக்கும் பிரிவை நீக்குவதற்கு பதிலாக அவசர அவசரமாக அரசியல்சாசனத்தை எரிப்பவருக்கான தண்டனை என்னவென்று சட்டத்தைக் கொண்டுவந்தார் நேரு. சாதியை பாதுகாக்கும் பிரிவை நீக்க நேரு முயன்றிருந்தால், சாவர்க்கர் மற்றுமொரு கோட்சேவை நேருவின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பார் என நேருவுக்கு தெரியும். சாவர்க்கரை, சங்கராச்சாரியை எதிர்ப்பதைவிட பெரியாரை எதிர்த்துவிடலாமென நேரு முடிவுசெய்திருப்பார் போல. கடும் சிறைத்தண்டனை கொடுக்கும்படியான சட்டத்தைக் கொண்டுவந்தது மட்டுமல்ல, பெரியாரை எச்சரிக்கும் வகையில் அறிக்கையும் விட்டார்.
அடக்குமுறை என்றவுடன் பெரியாரின் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் தொடங்கும் முன்பே, சிறைசெல்ல விருப்பம் கொண்டோர் பட்டியலை கேட்டார். ஆயிரக்கணக்கில் சிறைசெல்ல விரும்புவோர் பெயர் பட்டியல் நீண்டது. சாதியை ஒழிக்கும் உறுதிகொண்டோர் படையின் பட்டியல் அது. அந்த பட்டியலில் அய்யா ‘மருதையன்‘ தனது பெயரை பதிவு செய்தவர். சட்டத்தை எரித்து இரண்டாண்டு கொடும் சிறைவாசம் அனுபவித்தவர். கருப்புச் சட்டையோடு கம்பீரமாய்ச் சொன்னார், ‘ சாதியை ஒழித்தவன் நான்‘. இந்த செறுக்கு பெரியாரின் தோழர்களுக்கே உண்டு. சாதி ஒழிப்பு ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பு சார்ந்தது. அய்யா மருதையன் தன்னுள் ஊட்டப்பட்டிருந்த சாதி உணர்வை ஒழித்தார், தன் குடும்ப வாழ்வில் ஒழித்தார், தனது சடங்கு-சம்பிரதாயங்களில் ஒழித்தார், தனது பொதுவாழ்வில் ஒழித்தார், தனது உறவுகளில் ஒழித்தார், தனக்கான சாதிய ஆதரவு தளத்தை நிராகரித்தார், சாதியை எதிர்த்து சிறைசென்றவன் என தன் ஊருக்கும், சொந்ததங்களுக்கும், நண்பர்களுக்கும் அடையாளமாய் வழிகாட்டியாய் மாறினார்.
தன்னிலிருந்து மாற்றத்தை முன்னெடுக்க வைத்தார் பெரியார். தனிமனிதனை அரசியல்படுத்தாமல், ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மட்டும் சாதியை ஒழிக்க இயலாது. சாதியை அழிக்க, சட்டத்தை எதிர்த்து, தண்டனை கிடைக்குமென தெரிந்தும் சட்டத்தை எரித்தவன் எனும் அடையாளமே அவரது மன உறுதிக்கும், மகிழ்ச்சியான ‘சாதி ஒழித்தவன்‘ எனும் குரலுக்கும் அடித்தளம். அப்படியான தலைமுறையை உருவாக்கியவர் பெரியார். அதனாலேயே தமிழ்த்தேசியத்தின் அடித்தளமாய் பெரியாரியல் அமைந்தது.
அய்யாவிற்கு மரியாதை செலுத்தி, அனைவரும் எழுந்து நின்று கர ஒலி எழுப்பி மரியாதை செலுத்தினோம். இதைவிட மகிழ்ச்சியும், பெருமையும் வேறென்ன நமக்கு. வாழ்வின் பயனுள்ள நாள் நேற்று(29-09-2024)
நேற்று மே17 இயக்கம் நடத்திய லால்குடி கூட்டத்தின் இறுதிவரை அமர்ந்து ஆதரவும் உற்சாகமும் அளித்தார். இன்றும் உயிரோடு இருக்கிறார்கள் பெரியாரின் படைவீரர்கள் என சொல்லும் குரல் அவருடையது. லால்குடியில் எங்கள் அமைப்பிற்கென கிளைகூட உருவாகவில்லை, ஆனால் பெருந்திரளாய் தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். பெரும்பாலும் இளைஞர்கள். அடக்குமுறை, சிறை, வழக்குகள் என நெருக்கடியை சந்தித்த மூத்த பெரியாரிய தோழர்களைக் கண்டதும் நாங்கள் அடைந்த உற்சாகத்திற்கு எல்லை இல்லை. போராட்ட உணர்வை சற்றும் கைவிடாமல் முன்னகர்ந்த மே17 தோழர்கள் பெற்றெடுத்த பெரும் நம்பிக்கை இது. அடக்குமுறையை எதிர்கொண்டு துணிந்து நின்ற எம் மே17 தோழர்கள் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் பெரியாரிய முழக்கத்தோடு களம் காண்கிறோம்.
வழக்கம் போல நேற்றும் சங்கிகள் சிலர் வந்திருந்தனர். குழப்பம் விளைவிக்க நினைத்திருந்தனர் போலும். ஐயா மருதையன் கையில் கொண்டு வந்திருந்த கைத்தடி பெரியாரின் கைத்தடியை நினைவுகூறியது. தென்காசி சுரண்டையில் திக மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த பெண் தோழரை தடுத்த கும்பலுக்கும், சென்னையில் தோழர் மதிவதனியை மிரட்டிய கோழைகளுக்கும் பதில் சொல்ல விரைவில் தென்காசி சுரண்டையில் பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்குமென்பதை உறுதிபட தெரிவித்தது மே17 இயக்கம்.
சுரண்டையில் சந்திப்போம்.
நாம் வெல்வோம்.