முகமது அலி ஜின்னா மற்றும் பெரியாரை மையப்படுத்தி பேசும் தனிநாடு கோரிக்கை குறித்த விளக்கத்தை பெரியாரின் சமகால வரலாற்று நிகழ்வுகளின் மூலமாக எடுத்துக் கூறியுள்ளார் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூகவலைதளத்தில் அக்டோபர் 22, 2024 அன்று பதிவு செய்தவை:
ஜின்னாவை சென்று சந்தித்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்து பெற்றுக்கொள்வோம் என்று சண்டே அப்சர்வர் ஆசிரியர் சொன்னதற்கு பெரியார் இழுத்தடித்தார், ஆகவே பெரியார் தனிநாட்டை பெற்றுத்தர முயலவில்லை என்கிறார்கள்.
இது நான்கு-ஐந்து பேர் பேசி எடுக்கக்கூடிய தேர்தல் கூட்டணி சிக்கலோ, தொகுதி பங்கீடு சிக்கலோ அல்ல.
ஜின்னாவிற்கு சுயராஜ்ஜிய கோரிக்கை என்றுமே கிடையாது. டொமினிகன் அந்தஸ்த்தை போராடி பெறவேண்டுமென்பது அவர் நிலைப்பாடு. இதை காந்தியார் மீறி சுயராஜ்ஜியம் பேசுகிறார் என முதலில் முரண்பட்டார்.
பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கத்தை வைத்த காலத்திலும் கூட ஜின்னா அவர்கள் பாகிஸ்தான் கோரிக்கையை முன்னெடுக்கவில்லை. 1940 லாகூர் கூட்டத்திற்கு பின் அறிவிக்கிறார். ஜின்னாவின் முஸ்லீம் லீக், தேர்தலில் முஸ்லீம்கள் வாக்குகளை பெருமளவில் பெற்று காங்கிரஸுடன் பேரம்பேசவே இந்த முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இரட்டை ஆட்சியின் இறுதி தேர்தலில் முஸ்லீம்லீக் பங்களாதேசத்திலோ(இன்றைய) சிந்து, பஞ்சாப், வசிரிஸ்தான், பலூச்சிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான் பகுதிகள்) ஆகிய இடங்களிலோ பெருவெற்றி பெறவில்லை. எங்கெல்லாம் இந்துக்கள்-முஸ்லீம்கள் அடர்த்தியாக இருக்கிறார்களோ, இந்துமகாசபை முஸ்லீம்களுக்கு எதிராக அரசியல் செய்ததோ அவ்வாறான ‘யுனைட்டட் ப்ராவின்ஸஸ்’ எனப்படும் இன்றைய உ.பி, பீகாரில், தென்னக பகுதிகள் சிலவற்றில் வெற்றி பெற்றார்கள்.
1946 வரை மத்திய மந்திரிசபையில் தமக்கான இடத்தை நேருவிடம் கோருகிறது முஸ்லீம்லீக். பாகிஸ்தானை உருவாக்க வேண்டுமெனும் நோக்கத்தைவிட இந்தியாவிற்குள்ளும், காங்கிரஸுடனும் முஸ்லீம்களுக்கான பங்கை பெற்றுவிட வேண்டுமென ஜின்னா விரும்பினார். நேரு மட்டுமல்ல, பட்டேலும் இதர காங்கிரஸ் சனதானிகளும் முஸ்லீம்லீக்கிற்கு சில அமைச்சர் பதவிகளை கூட கொடுப்பதற்கு ஏற்றுக்கொள்ள மறுத்தபின்பே பாகிஸ்தான் கோரிக்கையை ஆங்கிலேயரிடத்தில் தீவிரமாக முன்னெடுத்தார். இந்தியாவிற்குள் இசுலாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இருக்காதென்று முழுமையாக தெளிவடைந்தார். ஆனால் ஜின்னாவின் கோரிக்கையை பெருமளவு இசுலாமியர்கள் மறுத்தார்கள். இந்துத்துவ அமைப்புகள் சொல்வதை போல அல்லாமல், முஸ்லீம்கள் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார்கள். பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக 3 லட்சம் முஸ்லீம்கள் டில்லி ஜும்மாவில் கூடி எதிர்த்து போராடினார்கள். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் முதல்வர் அல்லாபக்ஷ் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக முழங்கினார், தீர்மானத்தை நகர்த்தினார். பலூசிஸ்தான்-வசிரிஸ்தான் பகுதியின் புகழ்பெற்ற கான்-அப்துல்-கபார்கான் எனும் எல்லை காந்தி பாகிஸ்தான் பிரிவினை கூடாதென்றார். இதற்காக அவர் சாகும்வரை 1970கள் வரை வீட்டுசிறையிலிருந்தார்.
பின் எப்படி பாகிஸ்தான் உருவானது எனலாம். இந்திய விடுதலை போரில், காங்கிரஸ், முஸ்லீம்லீக் ஆகிய இரண்டும் இரண்டு முதலாளிய அமைப்புகள். காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்து பார்ப்பனர்களின் அதிகாரம், பனியாக்களின் தொழில்-மூலதன நலனுக்கான வாய்ப்பினை முன்னிறுத்தியது. இதனாலேயே சுயராஜ்ஜியத்தை கோரவில்லை. இக்கட்சிக்குள்ளாக முஸ்லீம்களுக்கு இடமில்லாத நிலையில் முஸ்லீம்கள் தனி அமைப்பை கொண்டார்கள். பல அமைப்புகள் எழுந்தாலும், முஸ்லீம்லீக் முன்னனி பெறுவதற்கு காரணமாக அமைந்தது முஸ்லீம் சமூகத்தின் பெருமுதலாளிகளின் ஆதரவு. காந்தி கதர் அணிய, நூல்நூற்க போராடினாலும், அவரது காங்கிரஸுக்கு நிதியளித்தது பிர்லா, லால்பாய், பஜாஜ் போன்ற ஆலை முதலாளிகள். இதேபோன்றே ஜின்னாவின் பின்னால் முஸ்லீம் முதலாளிகள் அணிதிரண்டார்கள். இந்த ஒரு தரப்பிற்கான சந்தையாகவே இந்தியா-பாகிஸ்தான் பார்க்கப்பட்டது.
ஆங்கிலேயர்களும் தமக்கான இரு தரகு-(புரோக்கர்) பங்காளி அதிகார வர்க்கம் உருவாவதை வரவேற்று இரண்டு நாடுகள் உருவாவதை ஏற்றார்கள். மேலும் 1946 வரை இந்தியாவில் நடந்த தேர்தலில் ஓட்டுபோடும் உரிமை அனைத்து சாமானிய மக்களுக்கு இல்லை. படித்தவன், பணக்காரன் எனும்வகையில் உயர்தட்டு வர்க்கமும், பார்ப்பன-பனியா உயர்சாதிகளின் பிரதிநிதியே பாராளுமன்றம் சென்றனர். பகத்சிங், இந்த முதலாளிய, தரகு பாராளுமன்றத்தை அம்பலப்படுத்த குண்டுவீசியதும் இதற்கான காரணங்களில் ஒன்று. முஸ்லீம்லீக்கின் அரசியலில் மாறுபட்டு நின்றவர் தென்னகத்தின் காயிதேமில்லத் அவர்கள். சாமானியர்களின் அரசியலை அவர் கைக்கொள்ள காரணம், தென்னகத்தில் இருந்த சுயமரியாதை போராட்ட உணர்வும், தொழிலாளர் எழுச்சியும், அவரது அரசியல் நுண்ணுணர்வு, தமிழுணர்வு ஆகியவை.
ஜின்னா, காந்தி ஆகிய இருவரும் பனியா சமூக பின்னனியை கொண்டவர்கள். ஜின்னாவின் தாத்தா பூஞ்சே-தக்கார் இந்து பனியா சாதியை சேர்ந்தவர், மீன் வணிகம் காரணமாக சாதியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர். இதனால் அவர் இசுலாமியராக மதம் மாறினார்.
அண்ணலும், பெரியாரும் காங்கிரஸின் முதலாளித்துவ, பார்ப்பன-பனியா மனநிலைக்கு எதிரானவர்கள். பார்ப்பன எதிர்ப்பு எனுமளவில் ஜின்னாவோடு அவர்களால் ஒன்றுபட முடிந்ததே ஒழிய, விடுதலைக்கான அரசியலொற்றுமை ஏற்பட வழியில்லை. இதனாலேயே பார்ப்பன காங்கிரஸுக்கு எதிரான திராவிட-தலித்-இசுலாமிய கூட்டணி வலிமையாக எழாமல் போனது எனலாம்.
ஜின்னாவின் முதலாளிய அதிகார பங்கீடு போக்கும், அண்ணல், பெரியாரின் பாதையும் ஒன்றல்ல. இதனாலேயே ஆங்கிலேயரால் ஜின்னாவிடமும், காந்தியிடமும் உரையாடல் நடத்த இயன்றது. மேலும் இந்துசனதானிகள் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலங்கள் உருவாவதை விரும்பவில்லை. உதாரணமாக ஒன்றுபட்ட வங்கத்தில் பார்ப்பனர்களால் தேர்தல் வெற்றி பெரும்பான்மை பெற இயலாமல் போனதற்கான காரணம், முஸ்லீம்-தலித்துகள் விகிதம் அதிகமாக இருந்தது. இந்த விகிதம் அதிகமாக இருந்த கிழக்கு வங்கத்தை பிரிக்கும் செயலை செய்தது இந்துமகாசபை.
இந்த பின்னனியோடுதான் இந்திய பிரிவினை வரலாறை புரிந்துகொள்ள இயலும். இது இரு முதலாளிய ஆதிக்க வர்க்கத்தாரின் அரசியல். இதில் சாமானியர்களின் உரிமைக்காக போராடிய பெரியார், அண்ணலுக்கு இங்கே இடம் கிடையாது. அதனால் ‘..ஜின்னாவை பார்த்திருந்தால் அலமாறியிலிருந்து விடுதலையை எடுத்து பெரியார் கையில் கொடுத்திருப்பார்..’ என்பது போன்ற வாதம் புரிதல்குறைபாடு.
மேலும் அன்றய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பெரும்தலைவர்களான காமராசர், முத்துராமலிங்கதேவர், போன்றோரும், காங்கிரஸ் கட்சியில் ராஜாஜிக்கு பக்கபலமாக இருந்த தமிழர்கள் பலரும் தனித்தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. இவர்கள் ஒன்றுபட்ட இந்தியாவையே முன்னிறுத்தினார்கள். தமிழகத்திற்குள்ளாக கருத்தொற்றுமை இல்லாத நிலையில் மக்கள் ஆதரவுதளத்தைவிட கருத்தியல் தளத்திலேயே தமிழ்நாடு கோரிக்கை நின்றுபோனது. இந்திக்கு எதிரான போராட்டத்தின் போது காங்கிரஸின் அமைச்சரவையிலிருந்த ‘அக்மார்க்’ தமிழர்களை எந்த கணக்கில் வைக்கலாம் என்பதையும் யோசிக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டின் முதலாளிகளோ, தென்னிந்திய முதலாளிகளோ வளர்ச்சி பெற்ற நிலையில் சுதேசி முதலாளிகளாகவோ மாறவில்லை, அப்படியாக இருந்த பெருமுதலாளிகள் சிலரும் தமிழ்நாடு-திராவிடநாடு கோரிக்கைக்கு உதவி செய்யவும் இல்லை.
ஆழமாக ஆய்வு செய்யவேண்டிய இந்திய அரசியல் சூழலோடும், உலகளாவிய அரசியல் நகர்வுகளோடும் பெரியாரை பொறுத்தி பார்த்தே மதிப்பீடுகளை செய்ய இயலும்.
நான் இந்தியாவின் சில சமகால வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே சுட்டி காட்டியுள்ளேன். பெரியார் மார்க்சிய பார்வை கொண்டவர். மார்க்சிய அரசியலை அறியாதவர் அல்ல. மக்கள் திரள் எந்த எல்லைவரை தயாராக உள்ளது என்பதை அறிந்தே தனது அரசியல் செயல்பாடுகளை கட்டி எழுப்பினார். பெரியார் தெலுங்கர், தமிழரல்லாதவர் என பொத்தாம்பொதுவாக குற்றம்சாட்டுபவர்களால் வரலாற்று நோக்கில் அவரை அணுக இயலாது.
1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரியாரை விமர்சிக்கிறவர்கள், அன்று 300க்கும் அதிகமான தமிழர்களை சுட்டுப்படுகொலை செய்த முதல்வரும், அக்மார்க் தமிழர் என்பதை என்றுமே பேசுவதில்லை. ஆக தமிழரா-தமிழரல்லவா என்பது ஒருவரது அரசியலை முடிவு செய்வதில்லை, மாறாக அவரவர் கொள்கை தெளிவே அவரை தமிழ்த்தேசியராகவோ, தமிழின எதிர்ப்பாளராகவோ மாற்றுகிறது. 2009 போரின் போது போரின் அரசியலை வடிவமைத்தவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தை எந்த அணியில் சேர்ப்பார்கள்? தீரன்சின்னமலையை காட்டிக்கொடுத்தவன், மருதுபாண்டியரை ஏற்காமல் வெள்ளையனோடு கைகோர்த்தவன், தமிழர் படையை உடைத்த கருணாவை, ராஜபக்சேவின் கூட்டாளி டக்ளஸை எந்த இனத்தில் சேர்த்துகிறார்கள் இவர்கள்?
அரசியலை கொள்கையும், சித்தாந்தமும் மட்டுமே முடிவு செய்கிறது, பிறப்பு அல்ல. பிறப்பே அனைத்தையும் முடிவு செய்யும் என்பதை இந்து சனாதனம் வலியுறுத்துகிறது. அதை ஏற்பவர்கள் எப்படி தமிழ்தேசியராக இருக்க முடியும்?
(..தேவையெனில் மேலதிகமாக எழுதலாம்..)