ஐயப்பன் வரலாறும், சங்கிகளின் அலறலும்

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை தீட்டு என ஒதுக்கி வைத்த தீண்டாமையை கண்டித்து உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை மதிக்காத இந்துத்துவவாதிகள் பெண்கள் சென்றால் கலவரத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் அதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும், பெண்களின் உரிமைகள் சார்ந்தும் கானா பாடகியான இசைவாணி அவர்கள் பாடிய ஒரு பாடலை வைத்து இந்துத்துவ சங்கிகள் சர்ச்சையைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஐயப்ப பக்தர்கள் மாலை போடும் காலம் என்பதால், அவர்களின் கோவ உணர்ச்சிகளைத் தூண்டி விட, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மார்கழியில் மக்களிசை என்னும் நிகழ்ச்சியில் இசைவாணி பாடிய ஐயப்ப பாடலை இப்போது எடுத்து வந்து அவரின் மீது அருவருப்பான தாக்குதலைத் தொடுக்கின்றனர்.I am Sorry ஐயப்பாஎனத் தொடங்கும் அந்தப் பாடலில், எந்த வித கொச்சையான சொற்களும் இடம்பெறவில்லை என்றாலும், மத நம்பிக்கையை புண்படுத்தி விட்டதாக ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர்.

கேரளாவின் சபரிமலை கோவிலுக்கு 18 மலைகளைத் தாண்டியே செல்ல வேண்டும். ஒரு சாதாரண கோயிலைப் போலவே ஆண்கள், பெண்கள் அனைவரும் செல்லும் கோயிலாகவே அது இருந்தது. ஆனால் 1955-ம் ஆண்டுக்கு பின்னரே இந்நிலை மாறியது. ‘ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி கடவுள், அதனால் 10 – 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடாது’ என திருவிதாங்கூர் தேவசம்  நிர்வாகத்தால் கட்டளைகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர், 1965-ம் ஆண்டு கேரள வழிபாட்டுத் தல சட்டப்படி, அங்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றமும் பெண்கள் செல்ல தடை செய்து, கோவிலின் தலைமைப் பூசாரிக்கே எந்த முடிவும் எடுக்கும் அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து இந்த வழக்கானது உச்ச நீதிமன்றம் எடுத்துச் செல்லப்பட்டது. மதம், சாதி, பாலினம் கொண்டு பாகுபாடு காட்டுவதை தடை செய்யும் பிரிவு 14 மற்றும் 15-ன்படி, தீண்டாமை என்பது தண்டனைக்குரிய குற்றம் என்னும் சட்டப்பிரிவு 17-ன்படி, மத சுதந்திரத்திற்கான பிரிவு 25-ன் படி, மற்றும் சில சட்டப்பிரிவுகளின் படியாக, பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல தடையில்லை என 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். மாதவிலக்கு எனும் உயிரியல் காரணங்களால் பெண்கள் கடவுளை வணங்குவதை விலக்க முடியாது என நீதிபதிகள் உறுதியுடன் கூறினர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் துணிச்சலுடன் அங்கு செல்ல முயன்ற பெண்களின் மீது இந்துத்துவ அமைப்புகள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் சட்டப்படியான பாதுகாப்பு இருந்தும் செல்ல முடியவில்லை. அச்சமயத்தில், கேரளாவில் சபரிமலை செல்ல சமத்துவம் வேண்டும் என 2019-ல் சுமார் 50 லட்சம் பெண்கள் திரண்டு மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தினர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பெண்களின் போராட்டங்கள் என அனைத்தும் ஆதரவாக இருப்பினும், பெண்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலையே இன்றும் இருக்கிறது.

இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும், இந்த கோயில் நிர்வாகமும் ஐயப்பனின் பிரம்மச்சரியத்தை காப்பதற்கே பெண்களுக்கான அனுமதியில்லை என்று சொல்கிறது. ஆனால் ஆண், பெண் என்று எந்த பாகுபாடும் இன்றி வழிபடப்பட்ட கோயில் இதுவென்று, இக்கோயிலை உரிமை கொண்டாடும் மாலா அரையா என்னும் பழங்குடி மக்கள் கூறுகிறார்கள். கேரளாவின் கோட்டயம், இடுக்கி மற்றும் பந்தளம் திட்டாவில் வாழும் மிகப்பெரும் பழங்குடி சமூகங்களில் ஒன்றானவர்கள் இவர்கள். இந்தப் பெயர் மலைகளின் மன்னர் என்ற பொருள் பெறக்கூடியது.

ஐயப்பன் கோயிலின் தல வரலாற்றைப் பற்றி, ‘ஐக்கிய மாலா அரையா மகா சபையின்’ நிறுவனரான P.K.சஜீவ் என்பவர், கேரவன் இதழில் அளித்த நேர்கேணலில் கூறுகிறார். 1800 – வரை மாலா அரையா மக்களே கோவிலைக் கவனித்து வந்ததாகவும், அதன் பின் பந்தளம் மன்னன் ஆட்சி செய்த போது, ஆண்களுக்கு தலை வரி, பெண்களுக்கு முலை வரி போன்ற சட்டங்கள் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். கடுமையான அடக்குமுறையும், அச்சுறுத்தலும் செய்து இவர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.

1942-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசரால் அழைத்து வரப்பட்ட தாழமோண் என்கிற பிராமண குடும்பம் கோயிலின் அர்ச்சகர் பொறுப்பை ஏற்றிருக்கிறது. 1950-ல் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் (TDB – Travancore Devaswom Board) கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் செல்கிறது. இது நிறுவப்பட்டதும் பறையர், புலவர், சாம்பவர் மற்றும் மலை சார்ந்து வாழும் ஆதிவாசிகளின் பெரும்பான்மை கோயில்கள் பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கிறது. அரையா மக்கள் நிர்வகித்த கரிமலை, நிலக்கல் மகாதேவா, வள்ளியங்காவு தேவு கோயில் போன்ற பலவும் தேசவம் போர்டு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருக்கிறது. 

‘அய்யன் மற்றும் அப்பன் இரண்டும் இணைந்தது அய்யப்பன். ஐயப்பன் என்ற பெயர் எங்கள் சமூகத்தில் பொதுவாகப் புழங்கிய பெயர். அது எங்கள் தாத்தாக்களுக்கு இருந்தது. இன்றும் ஐயப்பன் பெயர் வைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் இந்தக் கோயிலை அபகரித்த பார்ப்பனர்களின் சந்ததிகளில் எவருக்கும் ஏன் இந்தப் பெயர் வைக்கப்படவில்லை’ என P..K. சஜீவ் கேள்வி எழுப்புகிறார்.

பெண்கள் இங்குள்ள மலைப் பகுதியையே ஆண்ட வரலாறு கொண்ட எங்கள் சமூகத்தில், சாமியை வழிபட ஆண் பெண் என்கிற எந்த பேதமும் இருந்ததில்லை என இவர் அழுத்தமாகத் தெரிவிக்கிறார். மாதவிடாய் காலங்களில் மட்டும் இளம் பெண்கள் தவிர்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்கிறார். எவரும் விதித்த கட்டுப்பாடுகளால் அல்ல, விருப்பத்தின் அடிப்படையில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது. இவர் கூறியதிலிருந்து, பார்ப்பனர் கைவசம் இக்கோயில் சென்ற பின்னரே, பல சடங்குகள் திணிக்கப்பட்டு அதில் ஒன்றாக மாதவிலக்காகும் காலம் வரை பெண்கள் கட்டாயமாக ஒதுக்கப்படும் நிலையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறியமுடிகிறது. 

தங்கள் கோயிலை அபகரித்து, வழக்கங்களை ஒடுக்கியதோடு மட்டுமல்லாமல், பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டும், வனத்துறையும் இப்பகுதிகளை ஆக்கிரமித்து தங்களின் பழங்கால அடையாளங்கள், சிலைகள் போன்ற ஆதாரங்களை அழித்து புதிய சிலைகளை வைத்து புதிய ஆதாரமாக நிறுவும் வேலையை செய்து  முடித்ததாகக் கூறுகிறார். கோயிலின் தூண்களில் இருந்த நுணுக்கமான சிற்பங்கள், அங்கிருந்த பல பகுதிகளில் காணப்பட்டதாகவும், இப்போது அவை இடிந்து போன நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

மன்னராட்சியின் அச்சுறுத்தல், ஆங்கில ஆட்சியின் அடக்குமுறையினால் தங்களது முன்னோர்களால் எந்த கேள்வியும் எழுப்ப முடியவில்லை என்றும்,  உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் வாய்ப்பையும், உரிமையை மீட்டெடுக்க வேண்டிய கடமையையும் உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கிறார்.

இந்த ஐயப்பன் கோயிலைப் பற்றி அறிவுக்கு ஒவ்வாத புராணக் கதைகள் பல இருப்பினும், தமிழ்நாட்டின் ஆய்வாளராக மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் ஐயப்பன் வரலாறு பற்றி கூறும்பொழுது,

‘மலையாள நாடு என்று அழைக்கப்படும் கேரளா பண்டைய தமிழ்நாட்டின் ஒரு அங்கமாகும். அது சேர நாடு என்று அழைக்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் வரும் சேரன் நெடுஞ்சேரலாதன் ஆட்சி செய்த இடம். சாத்தன் அல்லது சாத்தனார் என்னும் பெயர் சாஸ்தா என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று. தமிழ்நாட்டில் இருந்த பௌத்தர்கள் பெரும்பாலும் சாத்தன் என்னும் பெயரை கையாண்டனர். கேரளா நாட்டின் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்கு சாத்தன் காவுகள் என்று பெயர். இப்போது அவைகளை இந்துமதக் கோயில்களாக மாற்றி விட்டனர் சாத்தனாருக்கு ஐயப்பன் என்னும் பெயரும் கேரள நாட்டில் வழங்கி வருகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் சாத்தான் கோயில் இருந்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது. சாஸ்தா அல்லது சாத்தன் என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் ஐயன் அல்லது ஐயனார் என்பது ஆகும். ஐயன் என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்த மத கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக் கொண்ட போது வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர்கள் புத்தரைத் திருமாலின் ஒரு அவதாரமாக வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டனர். சைவ சமயத்தினர் சாத்தனாரை திருமாலுக்கும் (ஹரி) சிவபெருமானுக்கும் (ஹரன்) பிறந்த பிள்ளையாக (புத்திரன்) கற்பித்து சாத்தனாரை தமது தெய்வ குலங்களின் ஒருவராக சேர்த்துக் கொண்டனர்.’ – என தனது பௌத்தமும், தமிழும் என்ற நூலில் கூறுகிறார்.

ஐயப்பன் வரலாறு குறித்து மாலா அரையர்கள் கூறும் போது, ஐயப்பனை 12ம் நூற்றாண்டில் முறபகுதியில் சோழப் பேரரசை எதிர்த்து நின்ற போர்வீரன் என்று கூறுகிறார்கள். தந்தை பெயர் கந்தன் என்பதால் சின்ன கந்தன் என்றும் அழைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். சோழர் பேரரசைத் தோற்கடித்த பிறகு இளைப்பாற சபரிமலைக்கு சென்றதாகவும் கூறுகிறார்கள்.

ஐயப்பன் வரலாறு குறித்து, மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் ஆய்வும், மாலா அரையா பழங்குடிகளின ஆய்வும் கொண்டு பார்க்கும் போது, ஐயப்பன் கோவில் என்பது நிச்சயமாக பார்ப்பனர்களுக்கு சொந்தமானதல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. 1955 வரை பெண்கள் சென்று வந்து கொண்டிருந்த கோவிலில் 41 நாள் விரதம், ஐயப்ப பிரம்மச்சரியம் என்கிற கதைகளைக் கட்டி விட்டு, பெண்களைத் காலம் காலமாக தீட்டானவர்கள் என நிறுவியதை நிலைநிறுத்தும் ஒன்றே இந்தக் கோயில் என்பதும் புலனாகிறது.

தமது சந்ததிகளை உருவாக்கும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சி முறையை செழிப்பின் அடையாளமாகவே கண்டார்கள் தமிழர்கள். தாய்த்தெய்வ வழிபாடு கொண்ட தமிழர் பண்பாட்டில், பெண்களைத் தீட்டானவர்களாக்கிய ஆணாதிக்கத்தின் வடிவான பார்ப்பனியம் தந்தை வழி வழிபாட்டை திணித்தன. ‘பழந்தமிழர்களின் தாய் கையிலான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கி அமைந்துள்ளன…பகைப்படை வட திசையிலிருந்து மட்டுமே வர முடியும் தெய்வம் வடக்கு திசை நோக்கி தன் மக்களை காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே சொல் வரலாற்று உண்மையாகும்’ – என தமிழர் பண்பாட்டு, மானுடவியல் ஆய்வாளர் தொ. பரமசிவன் அவர்கள் கூறுவதே தமிழர்களின் வழிபாட்டு முறையாக இருக்கிறது.

ஐயா தொ. பரமசிவன் அவர்களின் கூற்றைப் போல வடதிசையிலிருந்து தான் நமக்கான பகை வருகிறது. அந்தப் பகைக்கு வரவேற்கும் கூறப்படைகளாக இங்குள்ள இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ், பாஜக சங்கிகள் தொடர்ந்து பக்தியை முன்னிறுத்தி கலவர வாய்ப்பை உருவாக்க முனைகின்றனர். தமிழர்கள் தங்களின் உளவியல் தேவையாக பக்தியை நினைக்கிறார்களே ஒழிய, இவர்களின் கலவரத் தேவைக்கு என்றும் இடம் கொடுத்ததில்லை. அந்த வகையில் தோழர். இசைவாணி பாடிய பாடல் பெண்களின் உரிமையை, உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி அளித்த உரிமையைத் தடுக்க முனையும் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கான பதிலடியே தவிர, சாமானிய பக்தர்களின் ஐயப்ப நம்பிக்கையை இழிவுபடுத்துவானதற்கல்ல.

தோழர். இசைவாணியை மட்டுமல்ல, இந்த இந்துத்துவ சங்கி கும்பல்கள்  பரிதாபங்கள் என்னும் யுடியுப் சேனலை  நகைச்சுவையாக நடத்தும் கோபி, சுதாகர் திருப்பதி லட்டு பிரச்சனையை வைத்து செய்த நகைச்சுவைக்கு மிரட்டல், சபரிமலை செல்ல மாலை போட்டவர்கள்கூட ரசிக்கும் வண்ணம் நனகச்சுவையாக பாடலை தந்த டிரெண்டிங் தீவிரவாதிகள் என்னும் யுடியுப் சேனலுக்கு மிரட்டல் என தொடர்ந்து படைப்பாளிகளை மிரட்டுகின்றன. சூர்யா-ஜோதிகா மீது கங்குவா படத்தின் மீது  நடத்தப்பட்ட வன்மம், அமரன் படத்திலிருந்த பொய்யான தகவல்களை சுட்டிக் காட்டியதற்காக, ராணுவத்தையே தவறாக கூறுவதாக பொய்யான பிரச்சாரம் என தொடர்ந்து அவதூறுகளை கட்டமைத்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு வெளிப்படையாக மிரட்டும் அவர்களின் மீது திமுக அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. தி.க. தோழர். மதிவதினி மீதான மிரட்டல், தோழர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஜனநாயக ஆற்றல்களை கொலை செய்ய வெளிநாட்டு மர்ம நபர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு தரப்படும் என வெளிப்படையாக மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்தின் முகநூல் பதிவு போன்றவற்றின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கத் தவறுவதன் விளைவே இப்படி படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடும் அளவிற்கு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த சமூகவிரோத இந்துத்துவ சக்திகளின் போலியான பரப்புரைகளை வெல்லும் ஆற்றல் கொண்ட ஜனநாயகக் கட்டமைப்புகள் வலுவானதாக  அமைக்கப்பட வேண்டும்.

தோழர். இசைவாணி பாடிய முழுமையான பாடல் வரிகள் :

ஐயம் சாரி ஐயப்பா

நா உள்ள வந்தா என்னப்பா?

பயம் காட்டி அடக்கி வைக்க

பழைய காலம் இல்லப்பா

நா தாடிகாரன் பேத்தி

இப்போ காலம் மாறி போச்சு

நீ தள்ளி வச்ச தீட்டா

நா முன்னேறுவேன் மாசா

ஜீன்ஸ் பேன்ட்டா

புடவையானுதான் நானே முடிவு பன்னிக்குவேன்!

நர்சானா டாக்டரானு தான்

நானே வளர்ந்து சொல்லிக்குவேன்!

சிங்குளா கமிடெடா எல்லாம்

நான் எடுக்குற முடிவுல தான்!

திருப்பி அடிக்கவும் இப்போ எனக்கிருக்குது தைரியம் தான்!

ஸ்போர்ட்ஸா டப்பாங்குத்தா

பாத்துடுவோம் ஃப்ரீயா விட்டா!

தீட்டான_துப்பட்டா

உன்_சடங்க_காறி_துப்பட்டா! –

பார்ப்பனிய சடங்குகளை காறித் துப்பியிருக்கிறார் இசைவாணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »