மதுரையை சீரழிக்க வரும் வேதாந்தா டங்க்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து கள ஆய்வு

தூத்துக்குடியில் 15 தமிழர்களைக் கொன்ற கொலைகார ஸ்டர்லைட்டின் துணை நிறுவனமான ‘இந்துஸ்தான் ஜின்க் லிமிடெட்’, மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை பெற்றுள்ளது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் சுமார் 2015.51 ஹெக்டேர் (5,000 ஏக்கர்) அளவுள்ள நிலத்தில் டங்ஸ்டன் சுரங்கம் முன்மொழியப்பட்ட இடத்தில் அரிட்டாபட்டி உட்பட சுமார் 10 கிராமங்கள் உள்ளன. குறிப்பாக இந்த கிராமங்களில் கனிம வளங்களும் இயற்கை வளங்களும் சூழ்ந்த அரிட்டாபட்டி கிராமம் மதுரை மாவட்டத்தில் பல்லுயிர் வளம் மிக்க பகுதியாக திகழ்கிறது.

200க்கும் மேற்பட்ட நீர்நிலைகளும் 3 தடுப்பணைகளும் உள்ள அரிட்டாபட்டி கிராமம் சுற்றுச்சூழல் ரீதியாக மட்டுமன்றி தொல்லியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியை ‘பல்லுயிர் பாரம்பரிய தலமாக’ கடந்த 2022இல் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

இவ்வாறு தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய இடமாக அரசால் அறிவிக்கப்பட்ட நிலத்தைதான் வேதாந்தா எனும் குஜராத்தி மார்வாடி நிறுவனம் குறி வைத்திருக்கிறது. தமிழர்களின் 2000 ஆண்டு கால தொல்லியல் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நோக்கிலேயே ஒன்றிய பாஜக அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செயல்படுகின்றனவோ எனும் கேள்வியும் தமிழர்களிடையே எழும்பியுள்ளது.

இந்நிலையில் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக போராடும் கிராம மக்களை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடையே உரையாடும்போது உலகெங்கிலும் கொலைகார வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரையின் சுருக்கம்:

“இங்கு வளர்ச்சி என்பது கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியாக இருக்கிறது. தூத்துக்குடியில இதே வேதாந்த நிறுவனம் 25 ஆண்டுகளாக நடத்திய ஸ்டெர்லைட் நிறுவனத்தால் அந்தப்பகுதி வளர்ச்சி அடைந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்னால நெய்வேலிக்கோ கடலூருக்கோ எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இவ்வாறு கனிம வளங்களை எடுக்கக்கூடிய நிறுவனங்களால் அந்தப் பகுதி மக்களுக்கு இதுவரை எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதை நாம் சான்றுகளுடன் பார்க்க முடியும்.

இந்தப் பகுதிகளில் கனிமங்களை எடுக்கும் பொழுது அங்கு சுற்று சூழல் பாதிக்கப்படுகிறதே தவிர, மக்களுக்கு எந்த வளர்ச்சியும் இதுவரை ஏற்பட்டதில்லை. இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் மக்களுக்கு எந்த பங்கும் கொடுப்பதில்லை. மாறாக மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைந்திருக்கின்றன, உடல்நல சீர்கேடுகள் நடந்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தை தனியார் மயப்படுத்திக் கொண்டதினால்தான் மக்களுக்கு எந்த லாபமுமில்லை, இன்று தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே நிலக்கரி சுரங்கங்கள், இரும்பு சுரங்கங்கள், கனிம வளச் சுரங்கங்களுக்கு எதிரான போராட்டம் நடக்கிறது.

கார்ப்பரேட் நிறுவன முதலாளி பெரும் பணக்காரராக மாறும் வேளையில் நம் மக்களுக்கு வாட்ச்மேன் வேலை, லேபர் வேலை, டிரைவர் வேலை போன்ற நிரந்தரமற்றா ஒப்பந்த பணி மட்டுமே கிடைக்கிறது. இதற்கு விலையாக தொழிற்சாலையை சுற்றி உள்ள இடங்களில் மக்கள் வாழ இயலாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அங்கு நிலத்தடி நீர், காற்று, மண் என அனைத்தும் கெட்டுப் போகிறது.

வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் இந்திய நாட்டினுடைய குடிமகன் அல்ல, அவர் இங்கிலாந்து குடிமகன். லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் வேதாந்தா. கனிமங்களை எடுப்பது மட்டும்தான் இந்த நிறுவனத்தினுடைய கொள்கையாக இருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கனிம வளங்களை எடுக்கக்கூடிய சுரங்கங்களை வேதாந்தா நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் அச்சுரங்கத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 42 பேர் படுகொலை ஆனார்கள். இங்கிலாந்திலே நடந்த வழக்கில் வேதாந்தா நிறுவனம் அம்மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதேபோல இந்தியாவில் ’சீசா கோவா’ என்கின்ற நிறுவனம் கோவா மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்டது. இதேபோல சட்டீஸ்கர் மாநிலத்தில் வேதாந்த நிறுவனத்தின் அனல்மின் நிலையத்தின் புகை போக்கி இடிந்து விழுந்து 200 பேர் இறந்து போனார்கள். ராஜஸ்தானிலும் இந்நிறுவனத்தால் ஒரு ஆறு பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்ததற்காக 15 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். நம் மக்கள் இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நான் ஐ.நா மன்றத்திலே இந்தக் குற்றத்தைப் பற்றி பதிவு செய்தேன்.

வேதாந்த நிறுவனத்திற்கு எதிராக உலகளாவிய அளவில் ஒரு போராட்டக் குழு இருக்கிறது. அவர்கள் இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ச்சியாக செய்யக்கூடிய சுற்றுப்புறச்சூழல் சீர்கேடுகள் அனைத்தையும் எதிர்த்து  போராடி வருகிறார்கள். அவர்களோடும் நான் உரையாற்றி இருக்கின்றேன். அவர்கள் இங்கிலாந்தில் அன்றைய எதிர்கட்சித் தலைவராக இருந்த ’ஜெர்மி கோர்பின்’னோடு சந்திப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். இப்படியான ஒரு விரிவான ஒரு தளத்தில் இயங்க வேண்டிய போராட்டம் இது.

2018-ல் மோடியுடைய இங்கிலாந்து வருகைக்கான அனைத்து விளம்பரச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டவர் அனில் அகர்வால். தூத்துக்குடி துப்பாக்கி சூடும் தென்னாப்பிரிக்காவில் வேதாந்தா சுரங்கத்தில் நடந்த துப்பாக்கி சூடும் ஒரே மாதிரியானவை. இந்த சமயத்தில் தான் துப்பாக்கி சூடு நடத்துவதற்கான உத்தரவை யார் கொடுத்தார்கள்? என்று நான் ஐ.நா.வில் கேள்வி எழுப்பினேன். இந்தக் கேள்வியை நான் ஐ.நா.வில் எழுப்பியதற்காகத்தான் என் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டது. நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

மேலும் இந்த நிறுவனம் நேரடியாக அரசுகளையும் அதிகாரிகளையும் கட்டுப்படுத்துகிறது. பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் நிதி உதவி அளிக்கிறது வேதாந்த நிறுவனம். இந்தப் பின்னணியில் இருந்து தான் இந்த நிறுவனத்தை பார்க்க வேண்டி இருக்கிறது.

அரிட்டாப்பட்டி என்பது நம் வரலாற்று சின்னம், தமிழனின்  வரலாற்றுக்கு சொந்தமான இடத்திலே எந்தவிதமான வட நாட்டான் நிறுவனத்தை ஒரு காலத்திலும் அனுமதிக்க முடியாது. 15 தமிழர்களை படுகொலை செய்த நிறுவனத்திற்கு எமது மண்ணில் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டின் முதலமைச்சர் இந்த மக்களுக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று சொல்லியிருப்பது வரவேற்பிற்குரியது. இப்படியான நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்க வேண்டும், அவருக்குத் துணையாக நாங்கள் இருப்போம். கட்சி வேறுபாடு  இல்லாமல் இந்த நிலத்தை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது”- என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.

அரிட்டாபட்டி மக்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு டிசம்பர் 9, 2024 அன்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இனியும் கொலைகார வேதாந்தாவிற்கு இடமளியோம் எனும் நிலைப்பாட்டில் தமிழர்கள் உறுதியாக இருப்பதை அரிட்டாபட்டி மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »