திருவாங்கூர் அரசின் திவானும், காவல்துறை உயர் அதிகாரியும் வரவேற்பதற்காக காத்திருக்க, ‘நான் கிளர்ச்சிக்கு வந்திருக்கிறேன், ஆகையால் உங்கள் வரவேற்பை ஏற்க முடியாது’ என்று நிராகரித்தவர் பெரியார். மூன்று முறை தனக்கு வந்த முதல்வர் பதவி வாய்ப்பை துச்சமென தூக்கியெறிந்தவர் பெரியார். இப்படியான குண இயல்புகளை கொண்டிருந்த பெரியாரை இன்று முதலமைச்சர் பதவிக்காக அலைபாயும் இனவாத கட்சியும், கட்சிப் பதவிக்காக வடநாட்டு மதவாதக் கட்சியிடம் தலைகுனிந்து தன்மானத்தை அடகு வைக்கும் தமிழகப் பிரதிநிதிகளும் மலினப்படுத்தும் பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கின்றனர். இந்தக் கூட்டத்தின் நச்சுப் பரப்புரைக் கட்டமைப்பை ஆதாரங்களுடன் தகர்த்தெறியும் கடமை, பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் இவ்வேளையில் பெரியாரியவாதிகளுக்கு உருவாகியிருக்கிறது.
திருவாங்கூர் அரசர் தனது பயணத்தின் போது பெரியாரின் ஈரோட்டு மாளிகையில் தங்கிச் சென்றவர். அவருக்கும், அவருடன் வரும் பணியாட்களுக்கும் பெரும் உபசரிப்பை செய்தவர்கள் பெரியாரின் குடும்பத்தினர். அதனால் அரசரும், வைக்கம் சென்றிருந்த பெரியாருக்கு பெரும் வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மக்கள் போராட்டத்தை நோக்கமாகக் கொண்டு வந்த பெரியாரின் மனம் அந்த வரவேற்பை நிராகரித்தது. பெரியாரின் இத்தகைய மன நேர்மைக்கு துளியும் பொருத்தமில்லாத நபர்களே இன்று அவரை மலினப்படுத்துகிறார்கள். மேடை தோறும் ஒரு நடிகரை சங்கி என ஏசி விட்டு, அவர் தன்னை அழைத்ததும் சங்கி என்றால் சக நண்பர் தானே எனக் கூடிக் குலாவிய உளவியலைக் கொண்டவர்கள் இன்று பெரியாரை ஏளனப்படுத்துகின்றனர்.
பெரியாரை இகழ்வதற்காக இக்கூட்டம் அவதூறுப் பிரச்சாரமாக, ‘வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் பெரியார் சிறிது நாட்களே கலந்து கொண்டவர், அவரின் தலைமையில் இப்போராட்டம் நடைபெறவில்லை, அவருக்கு வைக்கம் வீரர் பட்டம் எதற்கு’ என நகைப்புடன் கேட்கின்றனர். பெரியாரியவாதிகள் எந்த இடத்திலும் இப்போராட்டத்தை பெரியார் தலைமை ஏற்று நடத்தியதாகக் கூறியதில்லை என்பது கவனத்திற்குரியது. இப்போராட்டம் காங்கிரஸ் கட்சியின் சார்பாகவே நடைபெற்றது. கேரள காங்கிரஸ் தலைமையே முடிவெடுத்தது என்பது அனைவருமே அறிந்தவை.
இப்போராட்டம் துவங்க முக்கியக் காரணமாக, ஒடுக்கப்பட்ட ஈழவ சமூகத்தை சார்ந்த டி.கே. மாதவன் என்னும் வழக்கறிஞரை, திருவாங்கூர் அரண்மணையின் வழியாக நடந்து செல்ல அனுமதிக்காததன் மூலமே ஆரம்பித்தது. திருவாங்கூர் அரசருக்காக எடுக்கப்பட்ட ஒரு விழாவின் போது அரண்மனைக்கு பந்தல் போடப்பட்டது. அதன் அருகில் இருந்த நீதிமன்றமும் பந்தலுக்குள் அடங்கி விட்டதால், அரண்மனைக்குள் நடக்கும் பூஜை காரணமாக நீதிமன்றம் செல்ல இவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் டி.கே. மாதவன் கேரள காங்கிரசின் தலைவர் கேசவ மேனன் அவர்களிடம் முறையிட்டார். அந்த காலகட்டமானது, இந்தியாவின் அனைத்து இடத்திலும் தீண்டாமை ஒழிப்பு சத்தியாகிரகங்கள் இந்திய காங்கிரசின் முடிவெடுத்த காலகட்டமாக இருந்தது. அதே சமயம் வைக்கத்தில் அமைந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்கக் கூட அனுமதியற்ற தீண்டத்தகாதவர்களாக 18 சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். டி.கே மாதவன் அளித்த புகாரும், தீண்டத்தகாதவர் நிலையும் சத்தியாகிரகத்திற்கு ஏற்ற இடமாக வைக்கம் பகுதியினை கேரள காங்கிரஸ் தலைமையை முடிவெடுக்க வைத்தது. அதன் படி 1924ம் ஆண்டு மார்ச் 30 அன்று கிளர்ச்சி தொடங்கியது. ஒவ்வொரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைத்துக் கொண்டே இருந்தது திருவாங்கூர் அரசு. கிளர்ச்சி நடந்த பத்து நாட்களுக்குள், கேரள காங்கிரசின் தலைவராய் இருந்த கே.பி. கேசவமேனன், டி.கே. மாதவன் உள்ளிட்ட19 தலைவர்களும் கைதாகி விடுகின்றனர்.
முதல் நாள் கிளர்ச்சியில் மூன்று பேர் கைதான பின்பே, உயர்சாதிப் பார்ப்பனர்கள் ‘தீண்டப்படாதவர்கள் கோயிலுக்குள் நுழையப் போகின்றனர், கோயில் தீட்டாகப் போகிறது’ எனப் புரளியைக் கிளப்பி விடுகின்றனர். சிவராமன், வாஞ்சீசுவரர் என இரண்டு ஐயர்கள் காந்தியாரை சந்தித்து கிளர்ச்சியைத் தள்ளி வைக்க கோரிக்கை வைக்கின்றனர். காந்தியும், ‘சத்தியாகிரகத்தை இரண்டு மாதம் தள்ளி வைக்கலாம், பார்ப்பனர்களின் சம்மதத்தைப் பெற மாளவியா ஜி-யை அனுப்பி வைக்கிறேன்’ என கேரளக் காங்கிரசிற்கு கடிதம் எழுதுகிறார். இந்த மாளவியா என்பவர் சனாதனத்தையே மூச்சாகக் கொண்ட பார்ப்பனர்.
காந்தியாரின் கடிதத்தை கேரள காங்கிரஸ் தலைவரான கேசவ மேனன் அவர்கள் மறுத்து பதில் எழுதினார். மக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்படும் கோயில் வீதியில் மற்ற பிரிவினர் போல எல்லா சமூக மக்களும் நடப்பதற்கு உரிமை கிடைக்க வேண்டும் என உறுதியுடன் போராட்டத்தை தொடர்வதாக மறுத்து எழுதுகிறார். இதன் பின்னர், அடுத்தடுத்த 10 நாட்களுக்குள் அவர் உட்பட கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த 19 தலைவர்களும் கைதாகின்றனர்.
வைக்கம் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட அனைத்துத் தலைமைகளும் கைதாகி விட்ட நிலையில், போராட்டம் முடிவுக்கு வரும் சூழல் ஏற்படுகிறது. அப்போதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்த பெரியாருக்கு இரண்டு தந்திகள் வருகிறது. சிறையிலிருந்த கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப் ஆகியோரின் கையொப்பமிட்ட அவசரத் தந்திகள் கிருஷ்ணசாமி ஐயர் மற்றும் நீலகண்டன் நம்பூதிரிபாத் ஆகிய இருவரின் மூலமாக ஏப்ரல் 4, 1924 மற்றும் ஏப்ரல் 12ம் தேதிகளில் அனுப்பப்படுகின்றன. இந்தத் தத்தியைக் கண்டதும் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் பெரியார் கிளம்புகிறார். இதைப் பற்றி பெரியார் எழுதும் போது ‘இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை விட்டால் இந்த மாதிரி அருமையான வேலை செய்ய வேறு வாய்ப்பு கிடைக்காது என்று எழுதிவிட்டு இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வைக்கத்திற்கு வந்தேன்’ என எழுதுகிறார்.
பெரியாரின் அனல் பறக்கும் பரப்புரை 10 நாட்கள் நடந்தது. அதற்குப் பின்பே, திருவாங்கூர் அரசர், எங்கும் பேசக்கூடாது என தடையுத்தரவு போட்டார். ஆனால் அதையும் மீறி பெரியார் பேசினார். வைக்கம் தாண்டியும் பல ஊர்களில் பெரியார் எழுச்சி உரையாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த அரசர் பெரியாரையும், பெரியாருடன் வந்திருந்த கோவை அய்யாமுத்து அவர்களையும் ஒரு மாதம் தண்டனை விதித்து அருவிக்குத்தி என்ற ஊரில் சிறையிலிட்டார்கள். பெரியாரை சிறையில் அடைத்ததும், பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாள் அவர்களும், தஞ்சை இராமநாதன் அவர்களுடன் வைக்கத்திற்கு வந்தனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பெண்களை சேர்த்துக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். மதம் கடந்து, இனம் கடந்து பலரும் வைக்கம் போராட்டத்திற்கு நிதி உதவி அளித்தனர். அறக்கிளர்ச்சி தொடர்ந்தது. ஒரு மாத சிறைவாசத்திற்கு பின்பு, மீண்டும் பெரியார் போராட்டங்களில் ஈடுபட்டார். முன்பை விட அதிகமான வேகத்துடன் எழுச்சியுரை ஆற்றினார்.
அந்த சிறையில் பெரியார் இருந்த நிலை பற்றி கேசவமேனன் அவர்கள் குறிப்பிடுகையில், ‘கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் குல்லாய், முழங்காலுக்கு கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை இவற்றோடு ஈ.வெ. இராமசாமி கொலைகாரர்களோடும் கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கிறார். தண்டனை அடைந்த ஒரு சாதாரண கைதி எவ்வளவு வேலை ஒரு நாளைக்கு செய்வானோ அது போல் இரண்டு மடங்கு வேலை செய்கிறார் ஈ.வே.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம் பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகள் எல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்கு காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே, அதை பார்த்து இந்த மாநில மக்கள் யாருக்கும் வெட்கம் ஏற்படவில்லையா?’ என பெரியாரின் சிறைவாசம் குறித்து எழுதி, கேரளாவின் பெரிய மனிதர்களை தூண்டினார்.
பெரியார் சிறையில் இருந்த நிலையைக் கேட்டுத் துடித்த, பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்’ என சிறப்புப் பட்டத்தை அளித்த திரு.வி.க அவர்கள் தமது நவசக்தி இதழில் மே 24, 1924–ல், ‘ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அயர்ந்தவர், உண்டாட்டில் திளைத்தவர், வெயில் படாது வாழ்ந்தவர், ஈரோடு வேந்தர் என விளங்கியவர், ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார்போல் எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்து உள்ளதை எவரே அறியார்?‘ என வேதனையுடனும், வியப்புடனும் எழுதினார்.
இவ்வாறு சாதி இந்துவாக பிறந்தும், செல்வச் சீமானாக வாழ்ந்தும் அதையெல்லாம் துறந்து ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்திய தீண்டாமை ஒழிப்பிற்காக கடும் சிறைவாசம் அனுபவித்த பெரியாரைத்தான், அவரால் விளைந்த பயன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பேர்வழிகள் மலிவாக இகழ்ந்து பேசுகின்றனர்.
பெரியார் சிறையில் இருக்கும் போதே திருவாங்கூர் அரசரான ‘ஸ்ரீ மூலம் திருநாள்’ இறக்கிறார். பார்ப்பனர்களின் சடங்குகளுக்கு அடிமையாகவே வாழ்ந்தவர், வைக்கம் போராட்டத்தை நிறுத்தம் செய்வதற்காக பார்ப்பனர்கள் கூறிய யாகத்தை செய்தவர். பெரியார் சிறையில் இருக்கும் போதே அவர் இறந்து விடுகிறார். அதன் பின்பு மகாராணி சேதுலட்சுமிபாய் ஆட்சிப் பொறுப்பு ஏற்கிறார். அரசருக்கு இரங்கல் நினைவாக, பெரியாரின் ஆறு மாதத் தண்டனை நான்கு மாதத் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. பெரியார் விடுதலையானதும் உடல்நிலை சரியில்லாத தனது தாயாரைக் காண ஈரோட்டிற்கு செல்கிறார்.
அதற்குப் பிறகு அவர் வைக்கம் செல்ல முடியாத சூழலுக்கு காரணம், அவரை செப்டம்பர் 11, 1924-ல், சென்னை மந்தைவெளியில் முன்பு பேசிய ஒரு வழக்கை அடிப்படையைக் கொண்டு 124A அரச வெறுப்பு மற்றும்153A வகுப்பு வெறுப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து சென்னை சிறையில் அடைக்கின்றனர்.
சிறையிலிருந்து சில நாட்கள் கழித்து விடுவித்த பின்பும் வழக்கு தொடர்கிறது. இந்த வழக்கு குறித்து சாமி சிதம்பரனார் அவர்கள், தமது ‘தமிழர் தலைவர்’ என்ற நூலில் குறிப்பிடுகையில், ‘இவர் மறுபடியும் திருவாங்கூருக்கு சென்று அங்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதற்காகவே சென்னை அரசாங்கத்தார் திருவாங்கூர் அரசாங்கத்திற்கு செய்யும் உதவி என்று சொல்லிக் கொள்ளப்பட்டது. ஏனெனில் அச்சமயம் திருவாங்கூர் திவானாக இருந்தவர் ராகவய்யா. சென்னை மாகாணத்திற்கு சட்ட மந்திரியாக இருந்தவர் சர். சி.பி ராமசாமி ஐயர்’ என்று எழுதுகிறார். ‘கன்னியாகுமரி பார்ப்பானுக்கு தேள் கடித்தால் காஷ்மீர் பார்ப்பானுக்கு நெறி கட்டும்’ என்று பிற்காலங்களில் பெரியார் பேசிய பேச்சிற்கே இவைகளே எடுத்துக்காட்டுகள்.
பெரியாரின் கிளர்ச்சி, கோவில் வீதிகளில் நடமாட மட்டுமல்ல, கோவிலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லும்படி செய்து விடுவாரோ என அஞ்சிய பார்ப்பனர்களின் சதியால் பெரியார் மேல் வழக்கு தொடரப்பட்டது. ஏனென்றால் வைக்கம் பகுதி முழுதும் அவரின் உரை, மக்களிடையே உறங்கிக் கிடந்த சுயமரியாதை உணர்ச்சியை கிளர்ந்தெழச் செய்தது. இதனால் அச்சம் கொண்ட அங்கிருந்த பார்ப்பனர்கள் இவரை அனுப்பத் துடித்தனர். இங்கிருந்த பார்ப்பனர்கள் அவரை அழைத்துக் கொண்டே இருந்தனர். முதலில் வைக்கம் களத்திற்கு மனமுவந்து அனுப்பி வைத்த இராஜாஜியும், பெரியாரின் அதிரடியான, பார்ப்பனர்களுக்கு எதிரான உரையைப் பற்றி அறிந்ததும், ‘இன்னொரு நாட்டில் எதற்கு ரகளை செய்கிறீர்கள், இங்கு வரவும், கேரளப் பிரச்சினையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ எனக் கடிதம் எழுதினார். வைக்கம் சத்தியாகிரகப் பகுதிக்கே வந்து தலைமை வழக்குரைஞராக இருந்த சீனிவாசய்யங்கார், சென்னைக்கு வரச் சொல்லி அழைத்த அளவுக்கு பெரியாரின் வேகம் வைக்கம் வீதிகளில் முழங்கியது.
பெரியார் மீதான இங்குள்ள வழக்கு முடிவதற்குள் மகாராணியே, காந்தியாரை அழைத்து வைக்கம் வீதியை திறந்து விடுவதாக அறிவிக்கிறார். பெரியார் சென்னை வந்து ஒரு வருடம் கழித்தே இத்தகைய அறிவிப்பு வருகிறது. அது வரை அங்குள்ளவர்களின் போராட்டம் நிற்காமல் தொடர்ந்தது. ஆனால் வைக்கம் போராட்டம், தொடங்கிய 10 நாட்களுக்குள் முடங்கி விடும் அளவுக்கு அனைத்து தலைமைகளும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போராட்டத் தீ அணையக் காத்திருந்த வேளையில்தான் பெரியாரின் உதவியை நாடுகின்றனர். பெரியார் நெருப்புப் பொறியாகப் போகிறார். காட்டுத் தீயாக மாற்றுகிறார். மக்களின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பிய பேச்சுக் கனல்களை மக்களின் எண்ணத்தில் பற்ற வைத்து விட்டே திரும்ப வந்தார் பெரியார். காட்டுத் தீயான பின்பு, அது அணைப்பதற்கு வழியில்லை. இதனால் வைக்கம் போராட்டம் தொடர்ந்தது, வென்றது.
வைக்கம் போராட்டம் வீதிகளில் தீண்டத்தகாத மக்கள் நடமாடலாம் என்னும் ஒன்றுடன் முடியவில்லை. அதுவே அடுத்தக்கட்டப் போராட்டமான கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது. அடுத்தடுத்து ஆதித்திராவிடர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டங்கள் நடந்தன. அம்பேத்கர் அவர்களே, வைக்கம் போராட்டமே தனக்கு போராட்ட உணர்ச்சியை, எழுச்சியை அளித்தது என்று தனது ‘பகிஷ்கரித் பாரத்’ இதழின் தலையங்கத்திலேயே குறிப்பிட்டார். ஒரு போராட்டத்தின் நோக்கம் நிறைவடைந்தவுடன், அது உரிமை சார்ந்த அதன் அடுத்தப் படிநிலை போராட்டத்தின் தொடர்ச்சியைக் கொண்டிருப்பதே மக்கள் உரிமைப் போராட்டங்களின் சிறப்பு. அந்த சிறப்பான தொடர்ச்சியை தனது எழுச்சி உரைகளால் நிகழ்த்திக் காட்டியவர் பெரியார்.
இன்று காங்கிரசில் இருக்கும் சில ஆளுமைகளும், பெரியாரின் பங்களிப்பை குறைத்துப் பேசுகின்றனர். பெரியார் வைக்கம் போராட்டத்தை துவங்கியவர் அல்ல, அங்கு தொடர்ந்த போராட்டத்தில் நீடித்தவரும் அல்ல, இடையில் வந்து பாதியினில் விட்டுச் சென்றவர் என சிறுமைப்படுத்தி சொல்கின்றனர். ஆனால் காந்தியார் அவர்கள், பார்ப்பனர்களின் கோரிக்கைக்கு இணங்கி வைக்கம் போராட்டத்தை இரண்டு மாதம் தள்ளி வைக்கலாம் என கேரளக் காங்கிரசுக்கு கடிதம் எழுதியதை, மாற்று மதத்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கட்டளை விதித்ததைப் பற்றி விளக்கம் அளித்ததில்லை.
இது தாழ்த்தப்பட்ட மக்களும் கோயில் வீதிகளில் நடந்து செல்லலாம் என்பதற்கான போராட்டமே தவிர, கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல. இப்போராட்டத்தில் தீவிரப் பற்றுடன் இருந்த ஜார்ஜ் ஜோசப் என்னும் அறப்போராளியை வெளியேறச் சொன்னார் காந்தி. அவர் வெளியேறியதை மன்னிப்பு கேட்டு விட்டு வெளியேறியதாக ‘யங் இந்தியா’ இதழில் எழுதினார். ஆனால் அவர் ‘மன்னிப்பு கேட்பதற்கு இதில் என்ன தவறு இருக்கிறது, மனமின்றியே வெளியேறினேனே தவிர மன்னிப்பு கேட்டு வெளியேறவில்லை’ என்று சொன்னார். இது மட்டுமல்ல, இவரின் கட்டளையால் போராட்டத்தில் உணவு சமைத்துக் கொடுத்த சீக்கியர்களும் வெளியேறினர். இதனால் போராட்டம் ஆதரவு சக்திகளை இழந்து நின்றது. அதன் பின்னரே படிப்படியாக வளர்ந்தது. இவற்றைப் பற்றியெல்லாம் காங்கிரசார் விரிவாகப் பேசுவதில்லை. மேலும், பெரியாரை வைக்கத்திலிருந்து கிளம்ப வைக்க சென்னை மற்றும் திருவாங்கூர் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால் பெரியாரை மலினப்படுத்த நினைக்கும் கும்பல்களுக்கு நேர்காணலை தாராளமாக வழங்கி தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
கேரளப் பார்ப்பனிய அதிகார மட்டமும், சென்னையில் காங்கிரசின் பார்ப்பனிய வட்டமும் சேர்ந்து கொண்டு, சனாதன ஆச்சாரத்திற்கு பங்கம் நேர்ந்து விடுமோ என அஞ்சி செய்த அனைத்து செயல்களையும் காண நேர்ந்ததும் 1925-ல் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேற ஒரு காரணமாக இருந்தது என்பது மிகையல்ல. காந்தியாரின் நோக்கம் ’தீண்டாமை கொடுமைகள் அழிந்த இந்து மதம் வேண்டும் என்பதாக இருந்தது. அதனால் பார்ப்பனர்களை அரவணைத்துப் போகும்படி கட்டளையிட்டார்’.
ஆனால் பெரியாரின் பார்வை, ’தீண்டாமையை நிலைநிறுத்தி பார்ப்பனர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உருவாக்கியதே இந்து மதம் தான், அதனால் தீண்டாமை ஒழிய இந்து மதம் ஒழிய வேண்டும்’ என்றவர். அதனால்தான் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு அவரின் பரப்புரை சொற்கள் அனைத்தும், தங்கள் அடித்தளத்தில் இடியென இறங்கியது போலிருந்தது, அவரை விரட்டி விட நினைக்க வைத்ததும், வழக்கு போட்டு பெரியாரை முடக்கியதும் நடந்தது.
வைக்கம் போராட்டத்தில் கேரள காங்கிரசார் செய்த தியாகங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் பெரியாரின் பங்கும் அவர்களுக்கு இணையானது. அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் வேறு யாராக இருந்தாலும், பெரியாரின் அளவுக்கு அங்கு சென்று ஈடுபட்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. பெரியார், தான் சார்ந்திருந்த காங்கிரசு சார்பில் செல்வதை விட தீண்டாமை ஒழிப்புக் கிளர்ச்சிக்காரனாக செல்வதையே மகிழ்ச்சியாகக் கிளம்பியதாகக் குறிப்பிடுகிறார். அதற்கேற்பவே வைக்கம் போராட்டத்தில் செயல்பட்டிருக்கிறார். அவரின் தியாகத்தில் மாசு கற்பிப்பவர்கள் பார்ப்பனிய அடிமை மனோபாவம் வளர்ந்த சுயநல அற்பப் பேர்வழிகளின்றி வேறில்லை.
பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை ஒட்டி, பெரியாருக்கு வைக்கம் நகரில் அமைத்திருந்த நினைவகத்தை தமிழ்நாடு திமுக அரசு புதுப்பித்திருக்கிறது. அதனை திறந்து வைத்து கேரள அரசு பெரியாருக்கு நன்றியுணர்ச்சியைக் காட்டியிருக்கிறது. அங்குள்ள மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, தனது நன்றிகளையும் தெரிவித்தனர்.
பெரியாரின் புகழ் காலம் கடந்தும் நிலைத்திருக்கும். பெரியாரை சிறுமைப்படுத்தும் பேர்வழிகளின் செயல்கள் அனைத்தும் அனலில் விழுந்த சருகாய் கருகும்.