விடுதலை இரண்டாம் பாகம் என்பது ’நிங்களென்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி…’ என்ற திரைப்படத்தின் இன்னொரு மேம்படுத்தப்பட்ட பதிப்பு எனக் கூறும் பேராசிரியர் மு. இராமசாமி அவர்களின் திரைப்படப் பார்வை.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி நூற்றாண்டிற்கான தமிழ்த் திரையின் செவ்வணக்கம்!
’மனசுக்கு நெருக்கமாயிருக்கிற ஒரு சரியான தமிழ்ப் படம்’ என்று சொல்லிக் கடந்து போய்விட முடியாதபடி, வெற்றிமாறனின் விடுதலை 2 படம் அமைந்திருப்பதற்குக் காரணங்கள் நிறையவே இருக்கின்றன. இடதுசாரியச் சிந்தனையாளர்களின், நல்ல தமிழ்த் திரைப்பட வேட்கைக்குச் சரியாகத் தீனி தந்திருக்கிற ஒரு படம் அது! தத்துவார்த்த அரசியலால் நடைமுறைத் தந்திரோபாயமும், நடைமுறைத் தந்திரோபாய அரசியலால், தத்துவார்த்தமும் ஒன்று மற்றொன்றால் செழுமை பெறுகிற அரசியல் நடவடிக்கையை, கள இழப்புகளுடன் காட்சிவடிவாய்க் கண்முன் காட்டுகிற படம்! அதுவே அதன் பலம்! இளைய தலைமுறைகளுக்குப் பொதுவுடைமை இயக்கத்தின் சமூக அர்பணிப்பை அர்த்தமுடன் காட்சி வடிவாக்கித் தந்திருக்கிற கலைப்புதையல்! அதனாலேயே, சங்கிகளின் குலை நடுங்க ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு, ’விடுதலை’யைத் தடை செய்ய வேண்டுமென்கிற ஒப்பாரி முனகல்கள் அங்கங்குக் கேட்கத் தொடங்கியிருப்பதே அதன் சாட்சியமாயிருக்கின்றன. அவையே, இதை எழுதுவதற்கான உத்வேகத்தை எனக்குத் தந்திருக்கிறது.
இது, குமரேசன் என்கிற, அதிகார வர்க்கத்தின் அனைத்து அடக்குமுறைகளிலும், கூடவே அதன் சாட்சியாயும், சம்பந்தப்பட்டும் இருந்த, ஒரு சாதாரண காவல்துறை வாகன ஓட்டி, அரசின் கருத்திலான ’குற்றமும் தண்டனையும்’ பற்றிய பொதுப் பார்வையை, பக்கத்திலிருந்து பார்த்த தன் அனுபவப் புரிதலில், தான் அதன்மேல் அருவெறுப்பு கொண்டு தன் மனம் மாறிப் போயிருப்பதை, அவர் தன் அம்மாவிடம் மானசீகமாகப் பகிர்ந்து செல்வதாகப் புனையப்பட்டிருக்கிறது. எல்லோரும் சொல்வதுபோல், தோழர் கே.கே.யுடன் தத்துவார்த்தநிலையில் முரண்பட்டு, ’தமிழர் விடுதலைப் படை’க்குத் தலைமையேற்ற பெருமாள் வாத்தியாரின் கதை மட்டும் அல்ல இது!- பெருமாள் வாத்தியாரின் வாழ்க்கையைக் கதையாகக் கேட்கும், உழைக்கும் மக்களுக்கான பணி என்பதிலிருந்து எந்தச் சூழலிலும் பின்வாங்காத அவரின் தத்துவ உறுதியைப் பக்கத்திலிருந்து அவதானித்ததிலிருந்து, குமரேசன் என்கிற அரசு இயந்திரத்தின் ஒரு நட்டு, வருண, வர்க்கத்தால் பிரிந்து கிடக்கிற, அவற்றிற்கிடையிலான முரண் மோதுகைக்கான சமூக உண்மையைப் புரிந்து, அரசு இயந்திரத்திலிருந்து தானே கழன்றுகொண்டு, மக்களைத் திரட்டப் புறப்பட்ட ஒருவனின் கதை என்பதாய்க் கொள்ளலாம்! இந்த உண்மை, வகுப்பறைப் பாடமாகப் பார்வையாளர் எல்லோருக்குள்ளும் ஆழமாய்ப் பதியமிடும் தன்மையில், திரையில் போதிக்கப்பட்டிருக்கிறது என்பதுவே இதில் முக்கியமானது. இது, உண்மைக்கு மிக அணுக்கமாக இருப்பதாலேயே, பொய்யினை மட்டுமே கடை பரப்பிக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு, இது, அடிவயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது!
இந்தப் படம் எதைப் பேசப் போகிறது என்பதை, எழுத்துகள் போடும்போதே, அதன் எழுத்துவரிக் கோடுகள், சிகப்பாய் நின்று, எல்லோருக்கும் புரிய வைத்துவிடுகின்றன. அந்தச் சிகப்பு, திரையின் இறுதிச் சட்டகம் வரைக்குமே, நம் மனக்குள், ’பாகுபாடற்ற சமத்துவ மனித நேயம்’ என்பதாய்ச் சிகப்புக் (வர்க்கம்), கருப்புக் (வர்ணம்) கவிதைகளைப் பாட வைத்துக்கொண்டே இருக்கின்றது.
கிழக்குத் தஞ்சைப் பகுதியில், உழைக்கும் மக்கள் மத்தியில் ஐம்பதுகளில் பறந்து கொண்டிருந்த இரண்டு கொடிகள், சிகப்புக் கொடியும், கருப்புக் கொடியும் மட்டுமேதான். சிகப்பின் விவசாய சங்கமும், கருப்பின் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கமும்தாம்! போகிறபோக்கில், கருப்பு வண்ணம் பற்றிக் கடந்து செல்லும் உரையாடல்களும், திருமணத்தில் பெரியார் படம் அன்பளிப்பாய் வழங்கப்படுவதும், சூசகமாய்க் கருப்பு, சிகப்பிற்கு எப்படி அனுசரணையாக விளங்கியது என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்வது அருமை! வரலாற்றைத் தெரிந்திருப்பவர்களால் வரலாற்றைத் தெரிய ஆயத்தப்படுபவர்களால், அது அறியப்படக்கூடியது! முழுப் படமும் இவர்கள் இருவருக்குமிடையிலான இணைப்பையோ-இடைவெளிகளையோ அதிகம் பேசவில்லை. அது தேவையுமில்லை. ஏனெனில் இது அரசு பயங்கரவாதத்திற்கு இரையான சிகப்புத் தோழர்களின்-சிகப்பிற்கிடையிலான வரலாற்று உள் முரண்களின் கதையாக மட்டுமே விரிகிறது. அழித்தொழிப்பிலிருந்து விடுபட்டு, மக்கள் திரளை அமைப்பாக்க முயல்வதையே இந்தப் படம் பேசுகிறது.
லெனினின் ’தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை’ நூலைத் தமிழில், பெருமாள் வாத்தியாரின் இணையர் ’கிராப்’ வெட்டியிருக்கிற தோழர் மகாலெட்சுமி மொழிபெயர்த்து வெளியிடும் காட்சி, அவர்களின் அரசியலையும் சூசகமாகச் சொல்லிக் கடக்கிறது. தோழர்கள் பெருமாள்/மகாலெட்சுமி-என்னவொரு பெயர்ப் பொருத்தம்! இந்தத் தோழர்களின் தத்துவப் பாதை எது என்பதையும், இருவரும் ஏற்றுக் கொண்டிருக்கிற இயக்கத்திற்காக அவரவர் திறன் வழியில் எவ்விதம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் அந்நூல் வெளியீட்டு நிகழ்வானது, சூசகமான கற்பனையென்றாலும், அழகான பொருள் பொதிந்த காட்சிப்படுத்தலாயிருக்கிறது அது!
இப்படத்தின் விவசாயப் போராட்டக் களத்திற்குள், அவரவர் நினைவுத் தடத்தில் தங்கியிருக்கிற உண்மைப் போராளிகளின் கதையையும் நம் நினைவில் மேல் தடத்திற்கு நகர்த்திக்கொண்டு வருவது இயல்பாக நடக்கிறது. அறிந்தவர்க்கு, இது, ஒரு காலத்திற்குள்/ களத்திற்குள்ளான ஓர் அரசியல் பயணம்-அறிவு! அறியாதவர்க்கு, இது, கருத்தியல் பேசும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம்! இதற்குள், கீழத் தஞ்சையின் சவுக்கடி சாணிப்பால் கொடுமை இருக்கிறது; பெண்ணாடகமும் பொன்பரப்பியும் இருக்கின்றன; தருமபுரியும் (அருமபுரி) இருக்கிறது. தோல்விகள் அவர்களை விரக்தியடைய வைக்காமல், புதியபுதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள, அத்தத்துவமே அவர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுப்பதாய்க் காட்டப்படுவது சிறப்பு!
மார்க்சியம் என்கிற அறிவியல் தத்துவம், சமூகத்தை ஆழமாகப் படிப்பதன் மூலம் தன்னை வளர்த்துக் கொள்கிறது. அதுதான்- அதன் அந்த உண்மைதான்- குமரேசனுக்கு மன மாற்றத்தைத் தருகிறது. நமக்குள்ளும், சிகப்பின் ஈகமும் நெஞ்சுரமும், தமிழர் ’விடுதலை’ப் பயணமும், நம் மனசையும் மெல்ல அசைக்க வைப்பதாய் இருக்கின்றன! குமரேசன், இந்தச் சமூக-அரசியல் உண்மையைப் புரிந்துகொண்ட நிலையில், தன் மனச்சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த ஒரு கைதியாய், விடை கிடைக்காமல் பட்ட அவதிகளிலிருந்து, அவன் ’விடுதலை’ பெற்று, புதிய மனிதனாய்ச் சமூக மாற்றத்திற்கு ஊழியம் செய்யப் புறப்படுவதுதான் கதை! காவல்துறை ஊழியனாயிருந்து, தான் பிடித்துக் கொடுத்த ஒரு போராளி, உழைக்கும் மக்களின் உண்மையான உரிமைப் போராட்டத்தில், அதிகார வர்க்கக் கழுகுகளுக்கு இரையாகிய அவலத்தில், காவல்துறைப் பணியைக் கழற்றி எறிந்து, காட்டிற்குள் சுயசிந்தனையுடன்- சுயமரியாதையுடன் நுழைவதுதான் ’விடுதலை’யின் கதை! குமரேசன் இனி, ஒரு சரியான தத்துவத் தலைமையைத் தேடி அடைந்து, உழைக்கும் மக்கள் ’விடுதலை’க்காக அந்த அமைப்பிற்குள்ளிருந்து அவன் இனி செயல்படுவான் என்று நம்பலாம்! ’விடுதலை 2’ குமரேசனின் அந்தக் கதைக்கான முன்னெடுப்பையே சொல்கிறது.
வெற்றிமாறனின், ’இதிலுள்ள பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே! எவரையும் குறிப்பிடுவன அல்ல! ஒற்றுமைகள் இருந்தால் அது தற்செயலானதே’ என்கிற ‘பொய்மையும் வாய்மை இடத்த’ எனும் பொறுப்புத் துறப்பை, அப்படியே நான் நம்புகிறேன், புரைதீர்ந்த நன்மை பயக்கும்’ என்பதால்! படைப்பு என்பதே, உண்மையின் உருவாக்கக் கற்பனைதான்! உண்மையின் கதகதப்பை உணர்வுபூர்வமாய்ச் சொல்லிக் கடத்துகிற கற்பனைதான் அது! இது, பெருமாள் வாத்தியாரின் உண்மைக் கதை அல்ல! உண்மைக்கு நெருக்கமாய் வாழ்ந்த பல்வேறு மக்கள் போராளிகளின் உண்மைக் கதைகளின் ஊடுபாவல் கற்பனை இழைப்புதான் இது! இப்படியொரு பொறுப்புத் துறப்பு போடப்படாவிட்டாலுமேகூட, எந்தவொரு படைப்புமே, உண்மையை அப்படியே அச்சுப் பிசகாமல் சொல்ல முயல்வதில்லை.
உண்மை, படைப்பாளியிடம் புரிந்த கிரியையின் படைப்பு அவதியே படைப்பாய்ப் பிரசவிக்கப்படுகிறது. உண்மையெனும் நெருப்புப் பொறிக்கு நெருக்கமான உருக்கொடுக்க, படைப்பாளியின் மனசு செய்கிற கற்பனை நெசவும் அதனுள் கலந்தேதான் இருக்கிறது. மேம்போக்காகப் பார்த்தால், பண்ணையார் மகளின் காதலை வைத்து, பண்ணையாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஒரு எம்ஜிஆர் படமாகக்கூடச் சுருக்கிவிடவும்கூடும். அடிதடி ஆக்ஷன் படங்களுக்கு இணையானதாய்ச் சண்டைக் காட்சிகள் வாய்பிளக்க வைத்திருக்கவும்கூடும். ஆனால் இதில் பேசப்பட்டிருக்கிற காதல், ஒரு பொதுவுடைமைப் போராளியின் காதலாயிருக்கிறது. அப்படித்தான் உணர முடிகிறது. அதற்கான அத்தனை நியாயமும் அதில் இருக்கிறது. சண்டையும், சமரசமற்ற வர்க்கச் சமராயிருக்கிறது. அப்படித்தான் உள்வாங்கவும் முடிகிறது. இயக்கச் செயற்பாட்டிற்குக் காதல் எப்படி காத்திரமாய் அமைந்திருக்கிறது என்பதைப் ‘போராட்டமே வாழ்க்கை’ என்பதாய்ப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிற, பெருமாள் தோழரின் குடும்ப வாழ்க்கை உறவு அழகியலாய் விளக்குகிறது. எந்த ஆட்சியில் இது நடக்கிறது என்பதுகூட, தேவையில்லாததாய் இருக்கிறது. யார் ஆட்சியிலிருந்தாலும் உழைக்கும் மக்களுக்கு இதுவேதான் நிகழும்.
அதிகாரிகள்தான் எல்லா ஆட்சிக் காலங்களிலும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறர்கள் என்பதை இவ்வளவு அழகாக, தலைமைச் செயலாளர் வீட்டிலிருந்தே சானக்கிய ராஜாங்கம் நடந்து கொண்டிருப்பதைக் காட்டியிருப்பதும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் அடாவடி உருட்டல் மிரட்டல் தனங்களும், ஆதாயத்திற்காக பிச்சையை எதிர்பார்த்து அடங்கிக் கிடப்பதும், அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாத அதிகார வர்க்கமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் சிறப்பு!
எண்பதுகளில் வெளிவந்த, ’எர்ரா மல்லேலு’ என்கிற தெலுங்குப் படத்தின் மறு ஆக்கமாய் உருவான இராம.நாராயணனின் ‘சிகப்பு மல்லி’, கோமல் சுவாமிநாதனின் ’அனல்காற்று’, மல்லியம் ராஜகோபாலின் ‘என்ன முதலாளி சௌக்கியமா?’ (1972), ஸ்ரீதர் ராஜனின் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ (இது கீழ்வெண்மணியின் பின்னணியைப் பேசியது), பீ.லெனினின் ’பண்ணப்புரத்துப் பாண்டவர்கள்’, டி.செல்வராஜின் ’தேநீர்’, கு.சின்னப்ப பாரதியின் புதிய அடிமைகள் (தாகம்) படங்களும், இந்த விஷயங்களைத் தனிமனித சாகசங்களாய்/ சங்க நடவடிக்கைகளாய், வியாபார முகாந்திரத்தில் மட்டுமே பேசியிருக்கின்றன. ஆனால், வெற்றிமாறனின் ‘விடுதலை’யில், அதை உண்மைக்கு நெருக்கமானதாயும், ரசிக மனநிலையிலிருந்து விடுபட்டு, அமைப்பைப் பின்னிருந்து வழிநடத்தும் தத்துவமானதாகவும் நம்மால் உள்வாங்க முடிகிறது என்பதுதான் இதன் சிறப்பு!
எண்பதுகளில், நடைமுறை அரசியலில், தலைமறைவு அரசியல் இயக்கங்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகின. அரச பயங்கரவாத நடவடிக்கையால், பல இயக்கத் தோழர்கள், ‘மோதல்’ என்கிற கணக்கில், காவல்துறைக் குண்டுகளுக்குப் பலியாகினர். நக்சல்பாரி என்கிற சிந்தனைப் பொறி எங்கும் பகிரப்படாமல், தி.கம்யுனிஸ்டுகள் என்று அதிகார வர்க்கம் சொல்லிக் கொடுத்ததையே, செய்தி ஊடகங்களும் மக்களின் பொதுப்புத்தியைச் ச்லவை செய்திருக்கின்றன. தோழர்கள் அப்பு, சீராளன், பாலன் என்று அந்தப் பட்டியல் நீளும்படியே, வால்டர் தேவாரம் என்கிற காவல் துறை உயர் அதிகாரியும் செய்தி ஊடகங்களை நிரப்பியபடியே அப்பொழுது இருந்தார் என்பது வரலாறு! விடுதலை2 இல் சங்கேதக் குறியீடாகப் பயன்படுத்தப்படும் ‘மைதிலி என்னைக் காதலி’ திரைப்படமும் எண்பதுகளை நினைவுபடுத்தக் கூடியதே!
எண்பதுகளில் வந்த மிக முக்கியமான படம் ‘மாபூமி’ எனும் தெலுங்குப் படமாகும். தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில், அங்குச் செயற்பட்டுக் கொண்டிருந்த ‘மக்கள் யுத்தம்’ அரசியலைத் திரையில் கொண்டு வந்திருந்தனர். தமிழில் தோழர் ஜனநாதனின் படங்களில்/ தோழர் லெனின் பாரதியின் ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ படத்தில், மக்கள் தத்துவமாய் மார்க்சியம் திரையில் விரிந்திருந்தது என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
அறுபதுகளின் பிற்பகுதியில் அல்லது எழுபதுகளின் தொடக்கத்தில் மலையாளத்தில் வர்க்கப் பிரச்சனையைப் பல விதமாய்ப் பேசிய பல படங்கள் வந்திருக்கின்றன. ‘நிங்களென்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி’, ’நீலக்குயில்’, ’மூலதனம்’, ’துலாபாரம்’ போன்ற படங்கள் அதையே அழுத்தமாகப் பேசியிருந்தன. தொன்னூறுகளில், மார்க்சியக் கொள்கைகளில் மனிதம் தொலைந்து போனதாக ‘உத்தராயணம்’, ‘எலிப்பத்தாயம்’, மதிலுகள்’, ’முகாமுகம்’, ‘கதா புருஷன்’ ஆகிய படங்களில் அடூர் கோபாலகிருஷ்ணன் காட்டியிருக்கிறார். அவசரநிலைக் காலக்கொடுமையை ‘பிறவி’ காட்டியது. ஜோன் ஆப்ரஹாமின் ’செறியச்சண்ட க்ரூர க்ருத்யங்கள்’, ’அம்ம அறியான்’ ஆகியவை நடுத்தர வர்க்கத்தின் மனச்சிதைவையும், ஒன்றுபட்ட மார்க்சிய இயக்கத்தின் தேவையையும் வலியுறுத்தும் படங்களாயிருந்தன.
2002-இல் வெளிவந்த பிரியாநந்தனின் ‘நெய்த்துக்காரன்’ படமும்கூட, தோழர் இ.எம்.எஸ் எனும் பொதுவுடைமையாளரை, அவரின் இயக்க ‘வரலாற்றில் தனி நபர் பாத்திர’த்தை உணர்வுபூர்வமாகச் சொல்லக்கூடிய படமாயிருந்தது! தோப்பில் பாசியின் ‘நிங்களென்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி’ (1970), அதில் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது. 1952-இல் கேபிஏசி இதைப் பிரபலமான நாடகமாக்கியிருந்தது. அதுவே பின்னாளில், அதே பெயரில் திரைப்படமாகியது. அது கருப்பு வெள்ளைப்படம்! தமிழில் அதற்கிணையான கம்யூனிஸ்ட் அரசியல் படமாக அழுத்தமாக இதுவரையும் எதுவும் வராதிருந்தது. இப்பொழுது, அந்த இடத்தை, விடுதலை 2, காலத்தின் முதிர்ச்சியால், திரை மேதமையால் இன்னும் அழகுபட நிரப்பி, பொதுவுடைமை இயக்கச் செயற்பாட்டிற்கு நியாயம் செய்ய வந்திருக்கிறது. 1960-இல் தமிழில் நிமாய்கோஷ் நெறியாளுகையில் வெளிவந்த, ‘பாதை தெரியுது பார்’ என்கிற, பொதுவுடைமைப் பாதையைத் திரையில் அடையாளங்காட்டிய திரைப்படத்தின் தொடர்ச்சியாக, ‘பாதையை நீயே உருவாக்குவாய்’ என்கிற சங்கற்பத்தைத் தோழர் கே.கே.யின் மொழியில் வெற்றிமாறன் இங்குள்ளவர்க்குச் சொல்லியிருக்கிறார்.
’விடுதலை 2’ படத்தில் அசட்டுணர்ச்சிக்கு (sentimentalism) இடமில்லாமல், அறிவார்த்த விவாதத் தளத்திலேயே மொத்தக் கதையும் நகர்வதால், படமே புதிய அனுபவத்தைத் தருகிறது. ’தத்துவம் இல்லாத படை மூடத்தனமான படை’ என்கிற மாவோவின் அனுபவ உரையை அடித்தளமாய்க் கொண்டு, தத்துவம்- அதன்மேலான கற்றல் அனுபவம், நடைமுறைக் களத்தில் உரசிப் பார்க்கும் இன்னொரு கற்றல் தளம் என்பதாய்- இந்தப் படம் அறிவார்த்தமாய் விரிகிறது.
இது, இதற்கு முன்னால், வர்க்க/ வருணப் பாகுபாடு பேசிய அனைத்துத் தமிழ்ப் படங்களிலிருந்தும் வேறுபட்டு நிற்கிறது. கதையைத் திரையில் சொல்லியிருக்கிற நேர்த்திக்கு முதலில் வெற்றிமாறனைப் பாராட்ட வேண்டும். இளையராஜாவின் இசையும் மௌனமும், இந்தப் படத்தின் கனத்தை நெஞ்சுக்குள் இலகுவாய் அழகியலாய் இறக்கி வைக்கின்றன. உரையாடல்கள் தத்துவத்தை உரசிக் காட்டும் தகத்தகாயங்களாய் ஒளிர்கின்றன. காட்டை ஒரு கருத்தியலாய் உருவாக்கித் தந்திருக்கிற கலை இயக்குநரும், அதைக் காட்சிக் கவிதையாக்கித் தந்திருக்கிற வேல்ராஜின் ஒளிப்பதிவும், நம்மைக் கதைக்குள் ஒன்றவைக்கும் சூட்சுமத்தை வெகு இலாவகமாகச் செய்துவிடுகின்றன. இணை வெட்டுக்களாய் கதையை நகர்த்தும் எம்.இராமரின் படத்தொகுப்பு மிகச் சிறப்பு! சண்டைப் பயிற்சி, ஒலிப்பதிவு எல்லாமும் துல்லியமாயிருக்கின்றன. நடிகர்கள் அத்தனை பேரும், திரைச் சட்டகத்தைத் தங்கள் கருத்தியல் வெளிப்பாட்டு நடிப்பால், தங்கள் தங்கள் பங்கிற்கு அழகு செய்திருக்கின்றனர். உண்மையில் சொல்லப் போனால், 54 ஆண்டுகளுக்கு முன் 1970 இல் தேவை கருதி வெளியான ‘நிங்களென்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி…’ திரைப்படத்தின் இன்னொரு மேம்படுத்தப்பட்ட பதிப்பு தேவை கருதி வந்திருக்கிறது இது என்று கொண்டாடலாம்!
அதென்ன தேவை? இந்தியப் பொதுவுடமைக் கட்சி தன் நூற்றாண்டிற்குள் நுழைகிற இந்த நிலையில், ஆதிக்கத்திற்கு எதிராகக் களமாடி, இந்த மண்ணில் மிகுதியான தோழர்களின் ஈகத்தை நினைவு கூறும் வகையான நல்ல திரைப்பங்களிப்பு.
பதிவு: பேராசிரியர் மு. இராமசாமி