இக்கட்டுரை ஐயா வே.ஆனைமுத்து குறித்து தொடராக வரும் கட்டுரையின் இறுதியான கட்டுரை, மூன்றாம் பாகம். முதல் பாகம் , இரண்டாம் பாகம் .
அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் தமிழீழ ஆதரவாளர் என்பதும், தமிழீழத்தின் விடுதலைக்கு தனி ஈழமே தீர்வு என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டவர் என்பதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பெரும் நம்பிக்கையும், நல்லெண்ணமும் கொண்டவர் என்பதும் நினைவுக் கொள்ள வேண்டிய பதிவுகளாகும். இவை தொடர்பான அவரது கருத்துக்கள் ‘திருச்சி வே.ஆனைமுத்து கருத்து கருவூலம்’ தொகுப்பில் ‘தமிழீழ விடுதலை’ என்ற தலைப்பில் ஒரு முழு தொகுதியும் தொகுக்கப்பட்டுள்ளது.
அய்யா ஆனைமுத்து அவர்கள் தந்தை செல்வா அவர்கள் மீது பற்று கொண்டவர். அவரது அமைதி வழிப் போராட்டத்தை சிங்கள-பௌத்த பேரினவாத அரசு சற்றும் மதிப்பதில்லை என்று மனம் வெம்பியவர். இதை தனது ‘இறுதியாக எம் வணக்கம் ஈந்தோம், செல்வா!’ என்ற கவிதை மூலம் வெளிப்படுத்துகிறார்.
“அமைதிக்கு வழியீதென் றவரிடமும் புகன்றாய்
ஆனாலும் ஆணவத்தின் முகட்டின் மேல்நின்று
ஆள்களின் பலம்கொண்ட ஆரியச் சிங்களவர்
அணுவளவும் தம்நிலையில் மாற்றமிலை யென்றார்”
என்று பாடினார். அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு நன்மையும் ஏற்படவில்லை என்பதையும் வெளிப்படுத்தினார்.
“அயந்தாண்டுக் காலத்து அமைதிவழிப் பேச்சால்
அடிப்படையில் அரசியலில் தீர்வுதான் என்ன?
அரசமைப்பில் அரைக்கோடித் தமிழர்க்காய் ஆன
அரசுரிமை தான் என்ன? அரசமைப்பில் உள்ள
அருந்தமிழன் மேன்மைக்கு இடம் என்ன? என்ன?
வடகிழக்கு மாகாண அமைப்பு ஒன்றாய்
வருங்காலத் தமிழர்க்கே என்னும் செய்தி
அரசியலில், அயலுறவில், அலுவல் தம்மில்
அரசமைப்பில் தமிழர்க்கு என்ன பங்கு?”
மேலும் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதலை பற்றி அதே கவிதையில்,
“எல்லாமே பூடகமாய் எழுதிக் கொண்டு
எல்லாமே சிங்களர்க்கே எனும் கருத்தில்
இன்றளவும் அரசமைப்பே எழுதிக் கொண்டு
ஆள்பலமும் அயல்நாட்டார் பலமும் கொண்டு
ஆயுதங்கள் ஆள்படைகள் இவற்றைக் கொண்டு
கிலியூட்டும் கிளிநொச்சிக்குள் புகுந்து
அலை ஓரம் அமைந்துள்ள முல்லைத் தீவு
முகமாலை, அடுத்துள்ள யாழ் நகரம்
இங்கெல்லாம் நூறுநாள் குண்டுவீசி
புலிகளையும் மக்களையும் மழலையையும்
புதைகுழிக்கு அனுப்புவதில் நாட்டங் கொண்டால்
புலிப்படைகள் புறந்தந்தா ஓடு வார்கள்?
புறங்கண்டு புலிப்படையார் வெல்லப் பார்ப்பார்!”
என்று உரைத்தார். முத்தாய்ப்பாய் தமிழீழம் என்பது தமிழர்களின் தன்மானப் பிரச்சனை என்ற பொருள்பட பாடியிருந்தார்.
“தன்மானம் இனமானம் தவிரார் எல்லாம்
தன்னுரிமைத் தமிழகத்தைச் சமைத்தே நிற்பார்
தன்னுரிமை மாநிலங்கள் தழைக்க இங்கே
தன்னைத்தன் சந்ததியைத் தறுகண் ணோடு
தமிழர்க்காய் ஈந்திடுவார் தயக்க மின்றித்
தமிழீழம் சமைத்திடவும் குரல் கொடுப்பார்
இது உறுதி இது உறுதி என்றே கூறி
இறுதியான எம்வணக்கம் ஈந்தோம் செல்வா!”
2007-ம் ஆண்டு தமிழீழ விடுதலைபுலிகளின் பிரிகேடியர் (அரசியல் பிரிவு) தமிழ்ச்செல்வன் சிங்கள-பௌத்த இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்டபோது அய்யா ஆனைமுத்து அவர்கள் நடத்திய ‘சிந்தனையாளன்’ இதழில் வீரவணக்க உரை எழுதினார். அதில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் தன்னிடம் “தமிழ்நாட்டுத் தமிழ் மக்களில் ஒரு இலட்சம் பேர் எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உண்ணா நோன்பு இருக்க முடியாதா, அய்யா?” என்று கேட்டதையும் நெஞ்சுருகி பதிவு செய்திருந்தார்.
தமிழீழ விடுதலைக்கு எதிராக இந்திய பார்ப்பனர்கள்
தமிழீழ விடுதலைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும், ஈழ இனப்படுகொலைக்கு ஆதரவாகவும் இந்திய பார்ப்பனக் கும்பல் இருப்பதை மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட இடதுசாரி தமிழ்த்தேசிய இயக்கங்களும், பெரியாரிய இயக்கங்களும் பேசி வருகிறோம். இதனை அய்யா ஆனைமுத்து அவர்களும் தனது எழுத்தில் பதிவிடுகிறார்.
குறிப்பாக இந்து பத்திரிக்கையின் தமிழீழ விரோத போக்கை பின்வருமாறு படம் பிடித்து காட்டுகிறார்.
“14.10.2008இல் முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவுகள் இந்திய மத்திய அரசையும், பிரதமரையும் நோக்கியவை. மகிந்த இராசபக்சே, இது பற்றி உடனே இந்தியப் பிரதமரிடம் பேசவேண்டும்; அல்லது ‘இந்து’ இராம் தன் கருத்தை ஏட்டில் எழுதி, இந்தியப் பிரதமருக்கும், இலங்கை அதிபருக்கும் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன?
14.10.2008-இல் சென்னையில் முதலமைச்சர் செய்த முடிவுகள் பற்றி 16.10.2008 காலையில் – இராசபக்சேவும், இராமும் தொலைபேசியில் விரிவாக உரையாடுகிறார்கள். ஓர் ஏட்டின் ஆசிரியராக இராம் உரையாடினாரா? இலங்கை அதிபரின் கையாளாக தமிழரின் எதிரியாக நின்று அவருடன் உரையாடினாரா? அவராக இவரிடம் உரையாடினாரா? இந்த அளவுக்கு ஒரு பார்ப்பனருக்குத் துணிச்சலும் செல்வாக்கும் வரக் காரணம் என்ன?
தமிழரின் பார்ப்பன அடிவருடித்தனமும், மத்திய அரசில் உள்ள தென்னாட்டுப் பார்ப்பனப் பாம்புகளான அதிகாரிகளின் ‘தமிழர் எதிர்ப்பு உணர்வுமே’ இதற்குக் காரணம் ஆகும்.”
மேலும்,
“‘இந்து’ இராம் இடம் இராசபக்சே பேசியது 16.10.2008-இல்: ஆனால் இந்தியப் பிரதமரிடம் இராசபக்சே தொலைபேசியில் பேசியது 18.10.2008இல், இதில் நமக்குப் புரிவது என்ன?
ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தமிழகத் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய உளவுகளைப் கூற, உற்ற கையாளான பார்ப்பனரிகளிடம் முதலில் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்பின்னர் தில்லி அரசுத் தலைமைச் செயலகப் பார்ப்பன அதிகரிகளிடமும் தன் அதிகாரிகள் மூலம் பேசித் தெரிந்துகொண்டு, மிகச் சாவாதனமாக, இந்தியப் பிரதமரிடம் இலங்கை அதிபர் பேசினார்.” என்று எழுதினார்.
மேலும்,
“1949இல் மலையகத்தமிழரைப் புறக்கணித்தது 1987-இல் ஈழத் தமிழரைக் கொன்று குவித்தது 2008-இல் ஈழத்தை அழிக்க எல்லாம் செய்தது இந்திய அரசே! – காங்கிரசு அரசே! காங்கிரசுப் பார்ப்பனக் கூட்டுச் சதியே!”
என்று பிப்ரவரி 2009 தேதியில் வெளிவந்த ‘சிந்தனையாளன்’ இதழில் எழுதினார். அதுமட்டுமல்லாமல்,
“இராஜீவ் காந்தி அரசின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் – படிந்துவிடாமல், இந்திய அரசு இங்கேயே மிரட்டிய போதும் – ஈழத்தில் ஆயுத ஒப்படைப்பை நடத்தியபோதும் – அவற்றை எதிர்கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே!
எனவே, விடுதலைப் புலிகளை இந்திய அரசின் எதிரிகள் என ஆக்கிட, இந்திய உயர் அதிகார வர்க்கப் பார்ப்பனரும், பார்ப்பன உயர் அதிகார வர்க்கத்தையும் காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்களையும் நத்திக் கொண்டே அட்டை போல் ஒட்டிக் கொண்ட மலையாளப் பார்ப்பனர்களும், – மேனன்களும், நாயர்களும், பார்ப்பன ஆங்கில, இந்தி ஊடகக்காரர்களும் வரிந்து கட்டிக்கொண்டு தமிழீழத் தமிழர் அழிப்பை 1987இல் மேற் கொண்டனர்”
என்று இந்திய பார்ப்பன அதிகார முகத்தின் முகத்திரையை கிழித்தார். மேலும் இராஜிவ் காந்தி படுகொலை பற்றி “புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் இராசிவ் கொலையில் இணைப்பது ஓர் ஊகமே ஆகும். இது இந்தியக் குற்றவியல் உளவுத்துறையின் கற்பனையும் ஆகும்.” என்று அறமுரைத்தார்.
2009-ம் ஆண்டு இறுதி யத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே (மார்ச், 2009) அங்கு நடப்பது “தமிழினப் படுகொலையே” என்றவர் அய்யா ஆனைமுத்து அவர்கள். அதை குறித்துக் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதையும் தன் ‘சிந்தனையாளன்’ இதழில் வெளியிட்டார்.
அதுமட்டுமல்லாமல் இராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைபடுத்தப்பட்டிருக்கும் நிரபாராதித் தமிழர்கள் 7 பேரையும் விடுதலை செய்யச் சொல்லியும், 3 தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யச் சொல்லியும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தார்.
அய்யா ஆனைமுத்து அவர்களின் தமிழீழப் பயணம்
2005-ம் ஆண்டு தமிழீழத்தில் இருக்கும் தமிழர்களைப் பற்றியும், மலையகத்தில் வசிக்கும் தமிழர்களைப்பாற்றியும் நேரில் தெரிந்து கொள்வதற்கென 45 நாட்கள் விடுதலைப்புலிகள் ஆட்சி புரிந்த ஈழதேசத்திலும், சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஆட்சி புரிந்த இலங்கையின் மலையகப் பகுதியிலும் சுற்றுபயணம் மேற்கொண்டார். அப்பயணதில் தான் கண்டவற்றை “தமிழீழத் தமிழரை, இலங்கை மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள்! நீங்களும் பாருங்கள்!” என்றொரு நூலாகவே வெளியிட்டார்.
தன் பயணத்திற்கான காரணத்தையும் அவரே கூறுகிறார்.
“1977-இல் கருக்கொண்டு, 1979 முதல் அடக்குமுறைக்கு ஆளாகி, 1981-இல் தீவிரம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் 1983 சூலை 23-க்குப் பிறகு மென்மேலும் தீவிரப்பட்டது. சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி 70,000 தமிழ் மக்களைச் சாகக் கொடுத்துவிட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் 18,000 வீரர்களையும் வீராங்கனைகளையும் களப்பலி கொடுத்துவிட்டனர். ஓர் இருபது ஆண்டுகளில் இவ்வளவு பெரிய இழப்புகளை எதிர்கொண்ட ஒரு நாடும், விடுதலைப் போராட்ட இயக்கமும் உலக வரலாற்றில் காணப்படுவது அரிது.
ஆயினும், “நாம் பெரும்பான்மையினர்; நமக்கு புத்தரால் இலங்கை நாடு வழங்கப்பட்டது; புத்தர் மறைந்த நாளில் இங்கு வந்த விசயனின் வழித்தோன்றல்கள் நாம்; எனவே நாம் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள்; தமிழர் அடங்கி வாழவேண்டியவர்கள்” என்னும் சிங்களவரின் ஆணவத்தை ஆதரித்திடும் போக்கிலும் – தமிழரின் விடுதலைப் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தி இழிவு படுத்தும் போக்கிலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனரும், இந்திய ஆளும் வர்க்கத்தினரும், தமிழகப் பார்ப்பன அடிவருடிகளும் 1991-க்குப்பிறகு பேசத் தலைப்பட்டுவிட்டனர்.
“இலங்கைக்குப் பிழைக்கப்போன தமிழர்களுக்குத் தனிநாடு ஒரு கேடா?” எனப் பாமரப் பொதுமக்களுள் பலரும், படித்த மூடர்களுள் சிலரும் இந்தியாவிலும் தமிழகத்திலும் பேசுவதை;
‘விடுதலைப் போராட்டத்துக்கு ஆயுதம் வாங்குவதற்காக மக்களை மிரட்டிக் கசக்கிப் பணம் பறிக்கிறார்கள் விடுதலைப் புலிகள்’ என்று பலரும் பேசுவதை;
‘விடுதலைப் போராட்டப் படையில் இளஞ்சிறார்களையும் சிறுமிகளையும் விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயப்படுத்திச் சேர்க்கிறார்கள். இது மானிட உரிமைப் பறிப்பானது; கண்டனத்துக்குரியது’ எனப் பலரும் பேசுவதை
இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பவர்களுள் நானும் ஒருவன்.
இவையெல்லாம் உண்மைதானா என்பதை அறிந்திட, தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழப் பகுதிகளுக்கு நேரில் சென்று சில நாள்கள் தங்கிக் கள ஆய்வு செய்யவேண்டும்;
மலையகத் தமிழ் மக்கள் 150 ஆண்டுகளுக்கும் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நிரந்தரமாக வாழ்ந்து, உழைத்து, இலங்கையை வளப்படுத்தியும் கூட, இன்னமும் நாடற்றவர்களாகவும் வீடற்றவர்களாகவும் பல இலக்கம் பேர்கள் வைக்கப்பட்டிருப்பதை நேரில் கண்டு ஆய்வு செய்யவேண்டும்; என இவ்விரண்டு பணிகளை முன்னிட்டே நான் இலங்கைப் பயணத்தை மேற்கொண்டேன்.”
இப்பதில் ஒன்றே அய்யா ஆணைமுத்து அவர்களின் நேர்மைக்கும், பகுத்தறிவுக்கும் சான்று. அங்கே விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பாகத்தின் அனுமதி பற்றுச் சீட்டு பெற்று பின் ஈழ மண்ணில் தான் ஆய்வை தொடங்கினார்.
அய்யா ஆனைமுத்து அவர்கள் கண்ட ஈழம்
விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துறையை பற்றி தான் நூலில் மிக விரிவாக எழுதியுள்ளார். கிளிநொச்சியின் முதன்மைச் சாலையில்,
- தமிழீழ நடுவப்பணியகம்
- தமிழீழக் காவல்துறை
- தமிழீழ வைப்பகம்
- தமிழீழ நீதிமன்றம்
- தமிழீழ சுங்கத்துறை அலுவலகம்
- தமிழீழ போக்குவரத்துக் கழகம்
- சட்டக்கல்லூரி
போன்ற விடுதலைப்புலிகளின் அரசால் உருவாக்கப்பட்ட துறை அலுவலகங்களைக் கண்டதை பதிவிட்டார்.
அங்கிருந்து கனகபுரம் அடுத்துள்ள இரணமடு ஏரியை பார்வையிட்டு, அது எவ்வித பழுதும் இல்லாமல் 1903-1921-ல் கட்டப்பட்ட மதகுகள் வழியே கால்வாயில் நீர் ஒடுவதையும் தனது நூலில் பதிவிட்டுள்ளார். மேலும் விடுதலைப்புலிகளின் தற்சார்பு செயல்திட்டத்தில் ஒன்றான திருவையாறு வேளாண்பண்ணையை பார்த்து அதன் செழிப்பைக் கண்டு வியக்கிறார்.
அதிலும் வியக்க வைக்கும் வண்ணம் இதே பகுதியில்தாம் ‘இலங்கை’ அரசின் நிர்வாகத்துறை அலுவலகங்களும் இருப்பதாக பதிவிட்டுள்ளார். மாவட்ட செயலகம் என்னும் மாவட்ட அதிபர் அலுவலகம் (மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்) மற்றும் அவர்கள் குடியிருப்பும் அங்கே அமைந்திருக்கின்றன எனபதையும், அவர்களின் அலுவல்களுக்கு விடுதலைப்புலிகளால் எந்த முரணும் ஏற்படுவதில்லை என்பதையும் கூறுகிறார்.
அதை தொடர்ந்து முல்லைத் தீவிற்கு பயணம் செய்து அங்கு இருக்கும் தாலுக்கா அலுவலகம் போன்ற அலுவலகங்களை கண்டுள்ளார். இங்கு புலிகள் அரசின் ஓட்டுனர் பயிற்சி பள்ளி இருப்பதையும் பதிவிடுகிறார். மேலும் அங்குள்ள தேராவில் பண்ணையையும் பார்வையிட்டுள்ளார். 104 ஏக்கர் கொண்ட இந்த பண்ணையில் ஏறத்தாழ 11 ஆயிரம் பாக்கு மரங்களும், மா, பாலா, வாழை, திராட்சை, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழ வேளாண்மையும் உள்ளதாகவும், கோழிப்பண்ணைக்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
1997 முதலே இலங்கை அரசால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இந்த பண்ணை விடுதலைப்புலிகளால் உருவாக்கட்ட மின் கட்டமைப்பை வைத்தே இயங்கி வருகிறது என்றும் வியந்து எழுதுகிறார்.
இங்கும் இலங்கை அரசின் மாவட்ட கால்நடை மருத்துவமனை, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கிகளும் முல்லைத் தீவில் எவ்வித இடையூறும் இல்லாமல் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பில் இயங்கிய வண்ணமே இருந்துள்ளது.
மேலும் முல்லைத்தீவின் செந்தளிர் சிறுவர் இல்லாத்தையும் காண்கிறார். மேலும் செஞ்சோலை மகளிர் இல்லத்தையும் பார்வையிடுகிறார். இது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விடுதலைப்புலிகள் நடத்திய ஆதரவு இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்று பல்வேறு ஈழப்பகுதிகளின் நிர்வாக சிறப்பை பற்றி அய்யா ஆனைமுத்து அவர்கள் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது போரில் மாண்ட மாவீரர்களின் கீழ்க்காணும் நினைவிடங்களுக்கும் சென்று அதன் நிலையை பதிவிட்டுள்ளார்.
- கிளிநொச்சி – கனகாபுரம் மாவீரர் துயிலகம்
- முல்லைத்தீவு – விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம்
- முல்லைத்தீவு – அலம்பில் மாவீரர் துயிலும் இல்லம்
- முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்
- வன்னி – விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
- ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
- முழக்காவில் மாவீரர் துயிலும் இல்லம்
- கோப்பாய் மாவீரர் இல்லம்
- வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லம்
- கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்
இந்த 10 மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பத்திருக்கும் மாவீரர்களின் சமாதிகள் மற்றும் நடுகற்களின் எண்ணிக்கைகளையும் தனது இந்த நூலில் பதிவிட்டு 18000 வீரர்கள் தமிழீழ விடுதலைக்காக அதுவரை உயிரீகம் செய்திருப்பதையும் பதிவிட்டுள்ளார்.
அடுத்து இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் நோக்கி சென்றவர் கண்ணில் முதலில் படுவதே இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத கும்பலால் எரித்து அழிக்கபட்ட யாழ்பாண பொது நூலகமே. அப்பொழுது அது மீண்டும் கட்டப்பத்திருந்தாலும், பல அரிய தமிழ் நூல்கள் எரிந்து போனதே என்று மனம் வெதும்பி எழுதியுள்ளார்.
அங்கிருந்து தந்தை செல்வா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று கண்டுவந்தார். அடுத்து தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையில் 9 தமிழர்களின் குருதி சிந்திய நிலத்தை பார்த்துவந்தார். பின் தியாகத்தீபம் ஈகியர் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்தையும் கண்டுவந்தார்.
இவ்வாறு தமிழீழ அரசு பற்றி நேரில் கண்டால் மட்டுமே புரிகின்ற பல தகவல்களை நேரிலேயே சென்று திரட்டி தொகுத்தவர் அய்யா ஆனைமுத்து அவர்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களை புரிந்து அதரக்காக தொடர்ந்து குரல் கொடுத்த தீவிர தமிழீழ ஆதரவாளர் அய்யா ஆனைமுத்து அவர்கள்.
இழப்பன்றோ அய்யா ஆனைமுத்து அவர்களின் மறைவு
கடந்த 06-04-2021 ஆண்டு பெரியாரின் பெருந்தொண்டர் தன் பெரியாரியப் பணிகளை நாம் கையில் ஒப்படைத்து சென்றுவிட்டார். இந்திய அளவில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அடக்கவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றி வடநாடெங்கும் பெரியார் பெயரை உரக்க முழங்கிய சமரசமில்லா சமூகநீதி போராளி, பெரியாரின் பெருந்தொண்டர் அய்யா ஆனைமுத்து அவர்களின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஆழிகடலாலும் அளவிடமுடியா பேரிழப்பே. அதற்கு ஈடு செய்வது பெரும் சிரமமானாலும் அவர் விட்டுச் சென்ற பணிதனை மனதில் ஏற்போம்.
வாழ்க தந்தை பெரியார். வாழ்க அய்யா ஆனைமுத்து! வளர்க அவர்களது புகழ்!!
இக்கட்டுரை ஐயா வே.ஆனைமுத்து குறித்து தொடராக வரும் கட்டுரையின் இறுதியான கட்டுரை, மூன்றாம் பாகம். முதல் பாகம் , இரண்டாம் பாகம் .