வங்கதேசத்தில் நடந்த ஒரு கொலையை ஆதாயமாகக் கொண்டு மேற்கு வங்கத்தில் மதவெறிக் கலவரங்களைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகள் ஊர்வலங்கள் நடத்திக் கொண்டிருக்கும் வேலையில், கிறிஸ்துமஸ் பொம்மைகளை சேதப்படுத்தி சங்கிகள் தங்களின் வெறியைத் தீர்த்துக் கொண்ட சம்பவங்கள் நடந்திருக்கும் இன்றைய சூழலில், பான் மூவிஸ் என்ற பெயரில் மத வெறுப்புணர்வு கொண்ட இந்திப் படங்களாகத் தயாரித்து வட இந்திய மக்களின் மனதில் நஞ்சை தூவிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், மிகவும் சாதாரணமாக ‘சிறை’ என்னும் திரைப்படம் தங்களையும் அறியாமல் மதவாதம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மனங்களைத் திருத்தும் வகையிலான மனிதநேயப் படமாக வெளிவந்திருக்கிறது.
படத்தின் நாயகனான கதிரவன் (விக்ரம் பிரபு) சிறையில் ஒரு காவலர். சிறையிலிருந்து சிறைக் கைதி ஒருவரை நீதி விசாரணைக்காக சிவகங்கையில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணி அவரிடம் கொடுக்கப்படுகிறது. அவரும், அவருடன் இரு காவலர்களும் சேர்ந்து அந்தக் கைதியை பேருந்தில் அழைத்துச் செல்லும் போது நடப்பவை, காவல் துறை, நீதிமன்ற நடைமுறை, விசாரணைக் கைதியான அப்துல் ரவூப் என்னும் இளைஞனின் காதல் கதை என படத்தின் கதையோட்டம் நகர்கிறது.
மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இசுலாமியர்களை இந்த நாட்டின் சிந்தனையில் மட்டுமல்ல, ஒவ்வொரு இசுலாமியரின் சிந்தனை அளவில் கூட தனித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருப்பதன் துயர நிலையை இப்படத்தின் சில காட்சிகள் நம் மனதில் அறைந்து விட்டு செல்கிறது. விசாரணை கைதியாக வரும் ”அப்துல் ரவூஃப்” பாதுகாவலுக்கு வந்த காவலர்கள், பேருந்து பயணத்தின் போது அந்த இளைஞன் தங்களது துப்பாக்கியுடன் தப்பித்து விட்டதாக நினைத்து தேடுகிறார்கள். ஆனால் அவன் தன்னை அழைத்து வந்த காவலர்கள் தவறவிட்டதால், அருகிலிருக்கும் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைகிறான்.
எனினும் தானாக ஆஜாரான விசாரணை கைதியை காவல்நிலைய ஆய்வாளர் பாதுகாக்கிறார். காணாமல் போனதாக நினைத்த அந்த மூன்று காவலர்களும் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு புகார் சென்றபோது தான் விசாரணை கைதி அங்கிருப்பது தெரியவந்தது. அப்போது காவல்நிலைய ஆய்வாளர் அந்த மூன்று காவலரிடமும் விசாரிக்கிறார். சிறைக் கைதிகளை நீண்ட தூரம் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது, துப்பாக்கி ரவைகளை துப்பாக்கியில் நிரப்பக் கூடாதே, ஏன் நிரப்பியிருக்கிறீர்கள் எனக் கேட்கிறார். அதற்கு, ’சிறைக் கைதி ஒரு முஸ்லீம்’ அதனால்தான் என்று ஒரு காவலர் சொல்கிறார். உடனே ஆய்வாளர் முகம் இறுக்கமாகிறது. ’நானும் ஒரு முஸ்லிம்’ தான் என்று ஆய்வாளர் கூறும் அந்த காட்சி, இசுலாமியர்கள் மீது சங்கிகள் கட்டி வைத்திருக்கும் வெறுப்புணர்வு கட்டமைப்பின் ஆழத்தை அறிய வைக்கிறது.
‘1995-இல் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முதல் தமிழன்டா அப்துல் ரவூஃப், நாங்களும் மனிதனா, இந்தியனா, தமிழனா வாழ்ந்துகிட்டுத் தான இருக்கோம். நீங்க ஏன்டா மதத்த வைச்சி மனுசன அளக்கிறீங்க’ – அந்த ஆய்வாளர் கதாபாத்திரம் ஊடாக இயக்குனர் கூறும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனசாட்சி உள்ளவர்களுக்கு வலிப்பவை.
இசுலாமியர்களை எதிரியாகக் காட்டியே தங்களை வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை. இசுலாமியர்கள் மீது கொட்டப்படும் வெறுப்புணர்வு மற்றவர்கள் அறியாமலே அவர்களுக்குள் கலந்து விட்ட சிந்தனையை காவலர்கள் ஊடாக வெளிக்காட்டுகிறது இந்தக் காட்சி.
இதனுடன் அப்துல் ரவூஃப் என்ற இளைஞனின் சிந்தனைக்குள்ளும் அந்த அச்ச உணர்வு ஊன்றியிருப்பதை விளக்கும் இன்னொரு காட்சியும் வருகிறது. அப்துல் பாதுகாப்புக்கு வரும் காவலரான நாயகன் கதிரவன், ‘நீ ஏன் தப்பி ஓடாமல், காவல் நிலையத்துக்கு சென்றாய்’, எனக் கேட்பார். அதற்கு அவன், ‘காதலியோடு வாழ தப்பி ஓடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் ’அப்துல்’ என்கிற பெயரோடு ஒரு குற்றவாளியாக நான் எங்கு போவது?’ என்று சொல்லும் காட்சியில் ஒரு இசுலாமியப் பெயர் கூட, சமூக உளவியல் கண்ணோட்டத்தில் விசாரணையே இன்றி குற்றவாளியாக்கும் தன்மையாக மாற்றப்பட்டிருக்கும் நிலையை எடுத்துக் காட்டுகிறது.
இப்படத்தில் இயக்குநர் ’அப்துல் ரவூஃப்’ என்ற கதாபாத்திரப் பெயரைக் கொண்டு, மக்கள் மனதில் சங்கிகள் நஞ்சாகப் பரப்பியுள்ள மதவாதக் கண்ணோட்டத்தை அகற்றும் அதே நேரத்தில், இன்னொரு பெயராக சமூகநீதியின் குறியீடாக, எளியவர்களின் குரலுக்கு காது கொடுக்கும் நீதிபதி கதாபாத்திரத்திற்கு ’இரத்தினவேல் பாண்டியன்’ என்ற பெயரையும் வைத்திருக்கிறார்.
இரத்தினவேல் பாண்டியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். பல வழக்குகளில் சமூகநீதியின் பக்கம் நின்று தீர்ப்பு கூறியவர். வி.பி.சிங் ஆட்சி காலத்தில் மண்டல் அறிக்கையின் படி உத்தரவிடப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் (BC) வேலைவாய்ப்பிற்கான 27% இடஒதுக்கீட்டை எதிர்த்து பார்ப்பனர்கள் மேல் முறையீடு செய்த போது, அந்த 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தவரே இரத்தினவேல் பாண்டியன்.
சமூக நீதியின் குறியீடான இடஒதுக்கீடு மூலம் பணிக்கு வரும் காவலர்கள், நீதிபதிகள் போன்றோர் எளிய மக்களின் வாழ்வியலைப் புரிந்து உதவுவதற்கு இப்படத்தின் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் கதாபாத்திரமும், காவலர் கதிரவனும் சாட்சி. இருவரும் இன்றைய சூழலில் இஸ்லாமியராக வாழ்வது எவ்வளவு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்பதை ஏதோ ஒரு இடத்தில் உணர்ந்து, அந்த இஸ்லாமிய இளைஞனுக்கு உதவுகின்றனர். சிறை படத்தில் வரும் இந்த கதாபாத்திரங்கள் இந்தியக் கட்டமைப்பில் ஒடுக்கப்பட்டோரின் ஆதரவுக் குரல். இந்த ஆதரவுக் குரல்களே நமது நம்பிக்கையாக இருக்கிறது.
நீதிமன்றம் என்பது நீதி மறுக்கப்பட்டவர்களின் கடைசிப் புகலிடம் என்பதை உணர்ந்து எளிய மக்களின் நீதிக்காக நீதிபதி பதவியைப் பார்க்கும் சமூகநீதி நீதிபதிகளுக்கு நடுவில், எளியவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் சட்டத்தை எந்திரத்தனமாக அணுகும் நீதிபதிகளும் இருக்கின்றனர் என்பதற்கு சாட்சியாக மற்றுமொரு நீதிபதி கதாபாத்திரமும் வருகிறது. விடுதலை கிடைத்து விடும் என்கிற மகிழ்ச்சியுடன் வரும் இளைஞனின் உள்ளத்தை நீதிபதியின் இந்த எந்திரத்தனம் நொறுக்கி விடுகிறது. இன்னமும் நீதி விசாரணையே இல்லாமல் ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் விசாரணைக் கைதிகளாக இருப்பதற்குக் காரணமும் பல நீதிபதிகளின் இந்த எந்திரத்தனம் தான் என்பதற்கு அந்த நீதிபதி கதாபாத்திரம் சாட்சியாகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழும் கைதிகளில் இசுலாமிய சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு பாரபட்சம் காட்டும் நிலை இன்னும் உள்ளது என்பதை இப்படம் உரக்கச் சொல்லி இருக்கிறது.
படத்தில் சாதாரணமாக வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் ஊடாகவும் நுட்பமான பல அரசியல் சொல்லப்படுகிறது. நீண்ட நாள் விசாரணைக் கைதிகளின் நிலை, மதவாதக் கண்ணோட்டத்தை தூர்வாறும் கருத்துகள் ஆகியவற்றோடு அழகிய உணர்வுப் பூர்வமான மதம் கடந்த காதல் கதையைக் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர். அப்துல் ரவூஃப் காதலியாக வரும் கயல்விழி முதற்கொண்ட அனைவரின் நடிப்பும் சிறப்பு. ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தின் மகிழ்ச்சியற்ற தன்மை புரிந்துணர்வுடன் கூடிய குடும்பத்தின் மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளும் நிறைந்த எளிமையான, நிறைவான படம் சிறை. நடிகர் தமிழ் அவர்கள் கதை வசனத்தில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, அக்சய் குமார், அனிஷ்மா, ஆனந்தா எனப் பலரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
பாஜகவின் மதவாதக் கொள்கைப் பரப்பும் வட இந்திய பான் மூவிஸ் படங்களின் இரைச்சல்களுக்கு நடுவே சிறையில் பூத்த நறுமலராக வெளிவந்திருக்கிறது சிறை.