கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனிய மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய இசுரேல், காசாவில் உள்ள 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை அகதிகளாக வெளியேற்றியுள்ளது. தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவில் தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள வேளையில், அங்கும் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறது இசுரேல். இசுரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்கள் அனுப்பி வரும் நிலையில் மே 5, 2024 அன்று, தனது போர்க்குற்றங்களை மறைப்பதற்காக அல்ஜசீரா ஊடகத்தை தடை செய்திருக்கிறார் இசுரேலியப் பிரதமர் நெதன்யாகு.
கடந்த அக்டோபர் 2023இல் போர் தொடங்கியதில் இருந்து இன்று வரை குறைந்தது 141 ஊடகவியலாளர்கள் இசுரேலால் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்களைக் கைது செய்து அடித்தும், சித்திரவதை செய்தும் போர் விதிகளை மீறியிருக்கிறது இசுரேல். ஊடகவியலாளர்களின் ஒளிப்பதிவு கருவிகளை உடைப்பதில் தொடங்கி அவர்களைக் கொடூரமாக சுட்டுக் கொல்வது வரை வன்முறை வெறியாட்டத்தை நடத்தியது. இப்போது அல்ஜஸீராவைத் தடை செய்ததின் மூலம் தனது போர்க்குற்றங்களை மறைப்பதற்காக நமது கண்ணில் கருப்பு திரையிட்டிருக்கிறது இசுரேல்.
இன்று இசுரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், விதிமீறல்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் என பலவற்றை ஆவணப்படுத்தியவர்கள் ஊடகவியலாளர்கள். காசா மீதான தாக்குதலை இடைவிடாமல் ஒளிபரப்பிய ஒரே சர்வதேச செய்தி ஊடகமாக அல்ஜசீரா திகழ்ந்தது. அல்ஜசீராவின் செய்தியாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இரவு பகலாக பணி புரிந்தார்கள். பாலஸ்தீனக் குழந்தைகள் மீது, அகதி முகாம்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை அல்ஜசீரா வெளிஉலகிற்கு அறிவித்தது. அதன் ஊடகவியலாளர்கள் மூலம், காசா குண்டுவெடிப்புகள் முதல் மக்களின் பட்டினிநிலை வரை நமக்குத் தெரிந்தது. இசுரேல் அரசின் கடும் ஒடுக்குமுறைகளை மீறி, தங்களது பணியில் சிறிதும் தொய்வுறாமல், ஊடகவியலாளர்கள் உண்மை செய்திகளை வெளிக்கொணர்ந்தனர்.
எனவேதான் ஊடகவியலாளர்களை முடக்கும் நோக்கில், அவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரையும் குறி வைத்துத் தாக்கியது இசுரேல். மே 11, 2022 அன்று பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் (west bank) செய்தி சேகரித்துக் கொண்டிருந்த அல்ஜசீராவின் மூத்த பெண் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லேவை இஸ்ரேலியப் படைகள் கொன்றன. ‘பாலஸ்தீனத்தின் மகள்’ என்று அழைக்கப்பட்ட ஷிரீன் அக்லேவின் கல்லறையைக் கூட புல்டோசர் மூலம் தகர்க்குமளவிற்கு தனிநபர் விரோதம் கொண்டு செயல்பட்டது இசுரேல்.
2023 டிசம்பரில், தெற்கு காசாவில் செய்தி சேகரித்த அல்ஜசீரா ஒளிப்பதிவாளர் சமர் அபுதாகாவை இசுரேலியப் படையினர் கொன்றனர். ஊடகவியலாளர் தஹ்துவின் குடும்பம், குழந்தைகள் அனைவரையும் இசுரேல் கொன்றது உலகளாவிய வெகுசன மக்களையும், அறிஞர்கள், மாணவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இவ்வாறு ஊடகவியலாளர்களைக் கொன்று குவித்த இசுரேல் மீது சர்வேதச குற்றவியல் நீதிமன்றத்தில் (International criminal court-ICC) வழக்கு தொடுத்தது அல்ஜஸீரா. ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லேவும் அவரது குழுவும் இஸ்ரேலிய படைகளால் நேரடியாகச் சுடப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் சாட்சி ஆதாரங்களைக் கடந்த டிசம்பரில் ICCயில் சமர்ப்பித்தது.
காசாவில் பள்ளி ஒன்றின் அருகில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சமர் அபு, இசுரலால் கொல்லப்பட்டதை ஆதாரங்களுடன் நிரூபித்தது. அல்ஜசீராவின் நிருபர்கள் கார்மென் ஜௌக்கதர் மற்றும் ஏலி ப்ராக்யா இருவரும் இசுரேல் தாக்குதல் குறித்து ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பில் பதிவு செய்தனர்.
அல்ஜஸீராவின் புகைப்படங்கள் மூலம், இஸ்ரேலிய ராணுவம் வேண்டுமென்றே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது அம்பலமானது. மேலும் இவர்கள் சமர்ப்பித்த காணொளிகள் மூலம் இசுரேல் இனப்படுகொலை குற்றங்களில் ஈடுபட்டது நிரூபணமானது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 29, 2023 அன்று இசுரேல் மீது தென்னாபிரிக்கா வழக்கு தொடர்ந்தது.
இசுரேல் அரசு சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் குண்டுமழை வீசி பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைக் கொன்றதை இனப்படுகொலைக்கான அடிப்படைக் குற்றமாக முன்வைத்தார் தென்னாபிரிக்காவின் வழக்கறிஞர். தென்னாபிரிக்காவின் வழக்கறிஞர் ஆதிலா ஹாசிம், “பிறந்த குழந்தைகள் கூட தப்பிக்கவில்லை” என்று கூறி, பாலஸ்தீனியர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளின் புகைப்படங்களை நீதிமன்ற அரங்கில் இருந்த திரைகளில் காட்டினார்.
குழந்தைகள் மீது இராணுவ தாக்குதல் நடத்தக்கூடாது எனும் மனிதநேய நெறிகளை இசுரேல் மீறியது சர்வதேச நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அன்று தென்னாபிரிக்கா எடுத்து வைத்த முதல் அடி, இன்று அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டமாக தொடர்கிறது. தனக்கு சர்வேதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டதை உணர்ந்த நிலையில்தான் அல்ஜஸீரா ஒளிபரப்பை நிறுத்த உத்தரவிட்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் பலமுறை அல்ஜசீராவை முடக்க முயற்சித்துள்ளார் நெதன்யாகு. இசுரேலில் 2019இல் நடந்த நடந்த தேர்தலின் போது, நெதன்யாகு அங்குள்ள ஊடகங்களைக் கட்டுப்படுத்தியது, அவரும் அவரது மனைவி சாராவும் இசுரேலின் முன்னணி வணிகக் குடும்பங்களுடன் இணைந்து செய்த ஊழல்கள் எனப் பலவற்றை அம்பலப்படுத்திய ஊடகம்தான் அல்ஜசீரா. இப்போது இசுரேலுக்கு எதிராக அமெரிக்க மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், அல்ஜசீராவை முடக்குவதேற்கென்றே ஒரு தனி சட்டம் இயற்றி இருக்கிறார் நெதன்யாகு. இனி நெதென்யாகு செய்யும் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்த முடியாதவாறு, அல்ஜசீரா ஒளிபரப்பை தடை செய்திருக்கிறது இசுரேல்.
நெதன்யாகு தடை விதித்த போதிலும், இசுரேலுக்கு வெளியிலிருந்து போர்ச்செய்திகளை வெளியிடுவோம் என்று கூறியுள்ளது அல்ஜசீரா. இதுவரை இசுரேலிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி எழுதிய மேற்குலக ஊடகங்கள் மத்தியில், காசாவின் உண்மைநிலையை படம்பிடித்து காட்டிய ஊடகம் அல்ஜசீரா. அல்ஜஸீராவைத் தடை செய்த நாளை ‘சனநாயகத்தின் கருப்பு நாள்’ என்று உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியிருக்கின்றனர். ஆனால் ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் வலதுசாரிப் பண்பை கொண்ட நெதன்யாகு, தனது போர்க்குற்றங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்களும் காணொளிகளும் மக்களுக்கு உண்மை செய்திகளை உரத்துச் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றன.