இந்திய சமூக கட்டமைப்பை சீர்திருத்த இடைவிடாமல் போராடிய இந்தியாவின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் அவர். இந்திய அளவில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடத்தை அளித்தவர் அவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடிமைத்தளையை அகற்றிடத் தன் வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்த சமூகப்போராளி. அவர் ஒர் அறிஞர், ஒரு சமூக சீர்திருத்தவாதி, ஒர் அரசியல்வாதி, கல்வியாளர், சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர். இந்திய அரசியலமைப்பின் தந்தை என பல்வேறு முகங்களை கொண்ட ஒரே சகாப்தம் புரட்சியாளர் டாக்டர் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள்.
ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் முக்கிய பங்கான இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுத்ததையும் பின்பு அவரே, “இந்த அரசியலமைப்பைக் கொளுத்தும் முதல் நபராக நான்தான் இருப்பேன் (I shall be the first person to burn it out)” என்று கூறியதன் காரணத்தையும் நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பிரதமராக பொறுப்பேற்றுருந்த ஜவஹர்லால் நேரு, அம்பேத்கரை இந்தியாவின் சட்ட அமைச்சராக பணியாற்ற அழைத்தார். அவர் அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 26, 1949-ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு வரைவுக்குழு, நாடாளுமன்றத்தின் முன் சட்ட வரைவை சமர்ப்பித்தது. 315 சரத்துக்களையும், 8 படிமங்களையும் கொண்ட வரைவு புதிய அரசியல் சட்டமாக ஏற்கப்பட்டது.
இந்த அரசியல் அமைப்பு, இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, 17-வது பிரிவில் தீண்டாமை ஒழிப்பு, 14-வது பிரிவில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் போன்ற பல நற்குணங்களை கொண்டுள்ளது என்றால் அதற்கு அண்ணல் அம்பேத்கரின் தலையீடே காரணம். அதுமட்டுமல்லாமல், 23-வது பிரிவு கொத்தடிமை தடுப்பு, 330-வது பிரிவு பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், 332-வது பிரிவு மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு, 46-வது பிரிவு பட்டியல் மற்றும் பழங்குடியினரின் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துதல் போன்ற சட்டங்களால் குரலற்றவர்களின் குரலாகவே அண்ணல் இருந்தார். ஆனால் இவை எதுவும் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை என்பது அம்பேத்கரின் நாடாளுமன்ற உரையில் தெளிவுபடுத்தியது.
அம்பேத்கார் இருந்த வரைவுக் குழுவில் 4 பேர் பார்ப்பனர்கள் ஒருவர் இஸ்லாமியர் (கோபாலஸ்வாமி ஐய்யங்கார், கிருஷ்ணஸ்வாமி ஐயர், கே.எம். முன்சி, முகமது சாதுல்லா, என். மாதவராவ், டி. பி. கைதான்). பார்பனர்கள் அன்றும் இன்றும் சனாதன தர்மமான மநு தர்மத்தை பின்பற்ற விருப்பமுடையவர்கள். அதாவது, அம்பேத்கர் கொள்கையான அனைவரும் சமம் என்பதற்கு எதிரானது.
அம்பேத்கர் இந்து பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து வழங்கும் உரிமை, தத்தெடுக்கும் உரிமை என இந்து கோட் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதற்கு ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு மோசமாக இருந்தது. எந்தளவு என்றால் பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தால் இந்துச் சமூகம் உடைந்து சிதறி விடும் என்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்று சொல்லப்படும் வல்லபாய் படேல் அவர்களும் புதிய பிரதமரான நேரு அவர்களும் கூறும் அளவுக்கு இருந்தது. தற்போது உள்ள நிலைமையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிலுவையில் தான் உள்ளது என்றால் ஆதிக்கத்தை விரும்பும் சனாதவாதிகள் அன்றைய போக்கு எப்படி இருந்திருக்கும்?
அண்ணல் அம்பேத்கார் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகியதற்கு காரணம் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகிவிட்டார் என்று அன்றைய ‘தி இந்து’ நாளிதழ் பொய்யை கட்டவிழ்த்தது. ஆனால் உண்மை காரணம் என்ன என்பதை அக்டோபர் 10, 1951 நாடாளுமன்றத்தின் முன் அம்பேத்கார் தன் அறிக்கையில் சமர்ப்பித்திருக்கிறார். அதில், முதல் காரணமாக பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மக்களுக்கு தனி ஆணையம் ஒன்று அமைத்து, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அரசியல் ரீதியாக இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அடுத்ததாக காஷ்மீரிகளுக்கு இந்தியா முழு உரிமை குடுக்க வேண்டும் எனவும் வாதிட்டார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த பார்ப்பன காங்கிரஸ் அரசு இவை அனைத்தையும் முற்றிலுமாக எதிர்த்தது. அதிருப்தி கொண்ட அம்பேத்கர், “இங்கு சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது, பாலின ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் சமப்படுத்துவதற்கு சட்டம் இயற்றாமல் மற்றவற்றிற்கு சட்டம் இயற்றினால், அது சாணிக் குவியல்களின் மீது கோட்டை கட்டுவதாகும்” என்று கூறி சட்ட அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். எல்லா தளங்களிலும் ஒரு புரட்சிகரமான சமத்துவத்திற்கு ஆசைப்பட்ட மகத்தான ஆளுமையானவர் அண்ணல் அம்பேத்கர் என்றால் அது மிகையாகாது.
1953 செப்டம்பர் 2-ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், புதிதாக ஆந்திர மாநிலம் உருவாக்கும் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அம்பேத்கர் தன் கருத்தை பதிவு செய்தார். அதாவது, மொழிவாரி மாநிலங்களுக்கான முந்தைய முன்மொழிவு குறித்தும், அதே சமயம், ஆந்திர மாநிலத்தில் ரெட்டி சமூகத்தினரின் கையில் மட்டுமே பெருமளவு நிலமும் தொழில்களும் இருப்பதையும் குறிப்பிட்டு அம்பேத்கர் பேசினார். தொடர்ந்து பேசுகையில்,
“மக்கள் எப்போதும் என்னிடம், நீங்கள்தான் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், நான் ஒரு வாடகை குதிரைக் காரனைப்போல நடத்தப்பட்டேன் என்பதுதான் என் பதில். அவர்கள் என்னை என்ன செய்யச் சொன்னார்களோ, அதை என் எண்ணத்துக்கு விரோதமாக செய்தேன்.”
என்று பதிவு செய்தார். ஆக பார்ப்பனிய ஆதிக்க சக்தி அம்பேத்கருக்கு எதிராக எவ்வளவு வலுவாக இருந்தது என்பது இதில் தெரிகிறது.
“என் நண்பர்கள் பலரும் என்னிடம் சொல்கிறார்கள் நான் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தேன் என்று. ஆனால், இந்த அரசியலமைப்பைக் கொளுத்தும் முதல் நபராக நான்தான் இருப்பேன் என்று சொல்ல நான் தயாராகவே இருக்கிறேன். எனக்கு இது தேவையில்லை. இந்த அரசியலமைப்பு யாருக்கும் பொருந்தாதது. அதேசமயம், இந்த அரசியலமைப்பைக் கொண்டே தொடர மக்கள் நினைத்தால், இங்கு சிறுபான்மையினரும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.”
என்று கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1955-ஆம் ஆண்டு இந்த விவகாரம் மீண்டும் மாநிலங்களவையில் எழுப்பப்பட்டபோது அரசியலமைப்பைக் கொளுத்துவேன் என்று பேசியதற்கு விளக்கத்தை அளிக்கிறார்.
“ஒரு கோயில் கட்டி அதற்குள் தெய்வத்தைக் குடிவைக்கும் முன்பே கெட்ட சக்திகள் குடிகொண்டுவிட்டால், கோயிலை இடிப்பதை விட சிறந்த வழி வேறென்ன? நல்லது நடக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் நாம் கோயில் எழுப்பினோம். இந்த தீயசக்திகளுக்காக அல்ல. அரசியலமைப்பைக் கொளுத்துவேன் என்று பேசியதற்கு இதுதான் காரணம்.”
என்று பதிலளித்திருந்தார். டாக்டர் அம்பேத்கர் இப்படிச் சொல்வது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். சமத்துவ இந்தியாவை காண விரும்பிய தலைவனுக்கு சனாதனவாதிகள் இதைவிட பெரிய கொடுமைகள் இழைத்திருக்க முடியாது.
சரத்துக்கள் சொல்வதென்ன?
சரத்து 25(1): மதத்தை பின்பற்றி பரப்புவதற்கான சுதந்திரம் உண்டு என்று உத்தரவாதம் அளிக்கிறது.
சரத்து 26: அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த பிரிவு மதங்களைப் பற்றிப் பேசுகிறது. கல்வி நிறுவனங்கள் நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மத அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கிறது.
சரத்து 29(2): சாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசினாலோ, அரசின் நிதி உதவியைப் பெற்றோ இயங்கும் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்க்கையை மறுக்கக்கூடாது.
சரத்து 13(2): (மேலே கண்ட சாதியத்தை காப்பாற்றும் சட்டங்கள் இந்திய அரசியலைப்பின் அடிப்படை சட்டமாக அமைதிருக்கின்றன. அந்த சட்டங்களை காப்பாற்றும் சட்டமாக சரத்து 13(2) அமைந்திருக்கிறது.)
இந்த பகுதியால் (அடிப்படைச் சட்டம் பகுதி 3) வழங்கப்பட்ட உரிமைகளை பறிக்கும் அல்லது குறைக்கும் எந்தவொரு சட்டத்தையும் அரசு உருவாக்காது. மேலும் இந்த விதியை மீறி உருவாக்கப்பட்டால் அது செல்லாது.
சரத்து 368: இப்பிரிவு இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களை கூறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் மட்டுமே திருத்தம் செய்ய முடியும். அதாவது மாநிலங்கவையில் மொத்த எண்ணிக்கை 543 அதில் 450 உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள் என்றால் அதில் 300 உறுப்பினர்கள் மேல் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தென்னிந்தியர்கள் அனைவரும் சேர்ந்தாலும் 120 உறுப்பினர்கள்தான் இருக்கிறோம். ஆனால், ஐந்தில் ஒன்று அல்லது நான்கில் ஒன்றாக இருக்கும் நாம் எப்படி மூன்றில் இரண்டு பங்கு பெற்று எப்படி நமக்கான விதிகளை கொண்டு வர முடியும்?
இந்த சாதி முறையை காக்கும் காரணங்களால் தான் அம்பேத்கர் அரசியலைப்பு சட்டத்தை கொளுத்த தயங்கமாட்டேன் எனக் கூறினார். அம்பேத்கர் சொன்னதை பெரியார் செய்தும் காட்டினார்.
பார்ப்பனர்கள்களின் ஆதிக்கம் அரசியல் துறையிலும், நிர்வாகத் துறையிலும் சட்டத்துறையிலும் அன்றும் இன்றும் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. அன்று ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. இன்று நீட், புதிய கல்விக் கொள்கை திட்டம் மூலம் மாணவர்களின் எதிர்காலம் நசுக்கப்படுகிறது. அன்று பெண்கள் உழைப்பு சுரண்டலிருந்து பாலியல் சுரண்டல் வரை பல இன்னல்களுக்கு ஆளாகினர். இன்று பில்கிஸ் பானுவிற்கு நடந்த அநீதியை கண்முன் கண்டோம். அன்று மதக்கலவரம் கொண்டு சிறுபான்மையினரை நசுக்கினார்கள் இன்றும் குடியுரிமை சட்ட மசோதா போன்றவற்றை கொண்டு அடக்க முயல்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் இன்று ஓரளவு காக்கப்படுவதற்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற வார்த்தைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றிருப்பதற்கும் ஒரே காரணம் அண்ணல் அம்பேத்கர். அதனால் தான் சனாதனவாதிகள் வெளியில் அம்பேத்கரை கொண்டாடுவது போல் ஏமாற்றிக்கொண்டும் உள்ளே அவர் எழுதிய இந்த சமத்துவ சட்டப் பிரிவுகளை மாற்றிவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள்.
அண்ணல் சமத்துவத்தை விரும்புபவர். அதற்காக தான் சாதி ஒழிப்பு அவரது வாழ்நாள் போராட்டமாக இருந்தது. மகத் போராட்டம் என சொல்லப்படும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குளத்தில் தண்ணீர் பருக இருந்த தடையை நீக்கி சட்ட வழியில் நீதியை பெற்று தந்தார். பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர்வர்ணாவை நான் நம்பவில்லை என்று மநு தர்ம சாத்திரத்தை எரித்தார். ஒரு கட்டத்தில் இந்து மதத்தில் இருக்கும் வரை ஜாதி இழிவிலிருந்து விடுதலை பெற முடியாது என்ற முடிவில் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, புத்த மார்க்கத்தை பல லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களோடு தழுவினார்.
புரட்சிகர மாற்றத்தைகொண்டு வந்த அண்ணல் அம்பேக்கரை படிக்காமல் அவரை சாதி தலைவராக சித்தரித்து கொண்டும் , கல்வி பெற வைத்தவரின் சிலையை சேதப்படுத்திக்கொண்டும் இருப்போமேயானால் சமூகத்திலோ அரசியலிலோ எந்த தெளிவும் பெற முடியாது என்பதை புரிந்து கொண்டு அண்ணலை படிக்க துவங்குவோம். அண்ணல் சிந்தனைகளை வென்றேடுப்போம்! ஜெய் பீம்.