அரையா பழங்குடிகளின் தெய்வம் ஐயப்பன்

ஐயப்பன் பாடலை பாடிய பாடகி. இசைவாணி மீது இந்துத்துவவாதிகள் மிரட்டல்கள் தொடர்கின்றன. எனவே இசைவாணியின் உரிமை முழக்கத்துக்கு ஆதரவாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி தனது சமூகவலைதளத்தில் நவம்பர் 26, 2024 அன்று  பதிவு செய்தது.

அய்யப்பன் கோவில் அடிப்படையில் அப்பகுதி பூர்வகுடிகளான அரையர் மக்களுடைய நாட்டார் தெய்வமாக இருந்து வந்துள்ளது. இவர்களது தெய்வமாக இருந்த இக்கோவில் 1942 காலகட்டத்தில் திருவிதாங்கூர் அரசர் அக்கோவிலுக்கு சென்ற போது ‘தாழமண் மடத்தின்‘ குடும்பத்தை சார்ந்த தந்திரிகளை அழைத்து சென்றார். அவர்களது நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் அரசரின் ஆதரவால் மாற்றப்பட்டது. இந்த மடத்தை சார்ந்தவர்கள் ஐய்யப்பன் என பெயரைக்கூட தம் குடும்பத்தினருக்கு வைத்ததில்லை என சுட்டிக்காட்டுகின்றனர் அரையா பழங்குடிகள்.

18 படி என்பது 18 மலைகளுக்கு ‘மால அரையா‘ குடிகள் மரியாதை செலுத்துவதை குறிப்பது. ‘அய்யப்பன்’ எனும் பெயர் அய்யன்+அப்பன் எனும் தமிழ்ச் சொல். அப்பன், ஐய்யன் என்பது மூத்தோர்களை குறிக்க சொல். தமிழர்கள் தம்முடைய முன்னோர்களை வழிபடக்கூடிய மரபு கொண்டவர்கள். இது சமஸ்கிருத சொல்லோ, வேத சொல்லோ அல்ல. இந்துத்துவ-சனாதன தத்துவத்திற்கு நேர் எதிராக உள்ள, தமிழர்களின் ‘முன்னோர்-வழிபாட்டை‘ குறிக்கும் சொல். ஆனால் இம்மடத்தை அரசரின் உதவியால் கைப்பற்றியவர்கள் சனாதனத்தையும், சமஸ்கிருத சடங்குகளையும் புகுத்து பிராமண மயமாக்கியதாக அரையா மக்கள் இப்போதும் குற்றம்சாட்டி, கோவில் தம்வசம் ஒப்படைக்க வேண்டுமென்கின்றனர். அவர்கள் பழங்குடிகளின் மரபான தேன் அபிசேகம் செய்து வந்ததை நெய் அபிசேகமாக மாற்றி தமது வணிகத்தை பெருக்கிக்கொண்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒழிக்கப்பட்ட பின் அரையா மக்களுக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆண்-பெண் பேதம் பார்ப்பதில்லை. பெண்களை அனுமதிக்காததற்கு காரணம் சன்யாசி நிலை என்கிறார்கள். ஆனால் இதை அவர்கள் நுழைக்க காரணமே மனுதர்ம கோட்பாடுகள் என்கின்றனர் அரையா மக்கள். அப்பகுதி மலைகளை பெண்களும் ஆண்டிருக்கிறார்கள் என்பதால் எங்களுக்கு பெண் பேதம் கிடையாது என்கிறார்கள். நம் நாட்டார் கோவில்களில் பெண்கள் நுழைய தடையில்லை. காடுகளுக்குள் சென்று கோவில் கட்டும் வழக்கமோ, துணிச்சலோ பார்ப்பனர்களுக்கு கிடையாது. அடர் காடுகளுக்குள் வசிக்கும் பூர்வகுடி/பழங்குடிகளின் தெய்வங்களையும், கோவிலையும் ஆக்கிரமித்ததன் விளைவே அய்யப்பன் கோவில் பார்ப்பனிய வசமானதன் அடையாளம். இந்நிலையில் பெண்களின் உரிமை குறித்து ‘இசைவாணியின் பாடல்’ எழுவது, அரையா பூர்வகுடிகளின் குரலேயாகும்.

ஐ அம் சாரி அய்யப்பா‘ என பாட வேண்டிய தேவையை உருவாக்கியது சனாதனவாதிகள். பெண்கள் வணங்கினால் கடவுளின் புனிதம் கெட்டுவிடுமென எந்த கடவுளும் சொன்னதில்லை. அப்படியாக கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் பூர்வகுடிகளின் உரிமைக்காக இசைவாணியோடு சேர்ந்து பாடியிருப்பார்.

இசைவாணியின் உரிமை முழக்கத்தை உயர்த்திப் பிடிப்போம். சனாதனவாதிகளை விரட்டியடிப்போம்.

மக்கள் இசை வெள்ளமென பெருகட்டும். இசைவாணியின் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும். அய்யப்பன் கோவில் அரையா மக்கள் வசம் செல்லட்டும்.

https://www.facebook.com/plugins/post.php?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »