பஸ்தர்: ஒரு நக்சல் கதை.
பாலிவுட்டின் மற்றுமொரு இந்துத்துவ அரசியல் சார்ந்த பிரச்சார திரைப்படம். இன்றைய காலகட்டத்தில் பாலிவுட்டில் வெளிவந்து பிரிவினை விதைக்கும் படங்களைப் போலவே, விபுல் அமருலால் ஷா தயாரித்து சுதிப்தோ சென் இயக்கிய பஸ்தர்: தி நக்சல் கதை திரைப்படமும் இருக்கிறது. இவர்களின் முந்தைய படமான தி கேரளா ஸ்டோரியில் இசுலாமியர்களை விரோதிகளாய் சித்தரித்திருப்பார்கள். இந்தப் படத்திலோ மாவோயிஸ்ட்டுகளை தீவிரவாதிகளாக சித்தரித்திருக்கிறார்கள்.
அரசுக்கு எதிராக நின்றாலே அது தீவிரவாதம் என்று சித்தரிக்கும் படம் இது. கதைக் களமோ, காட்சிகளின் கோர்வைகளோ எதுவும் இல்லாமல் மக்கள் மனதில் வெறுப்பை மட்டுமே விதைக்கும் படம். முதலாளித்துவத்திற்கு எதிராக, அரசினால் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும், மனித உரிமைக்கு ஆதரவாக, அரசை விமர்சிப்பவர்களை தேசத் துரோகிகள் என சித்தரிக்கும் இந்துத்துவ சிந்தனையோட்டமே இப்படத்தின் காட்சிகள் அனைத்திலும் பரவிக் கிடக்கிறது.
இந்த படத்தில் மனித உரிமை செயல்பாட்டாளர்களையும், போராளிக் குழுக்களையும், ஆயுதம் ஏந்திய மத அடிப்படைவாத அமைப்புகளையும் மாவோயிஸ்டுகள் உடனாக ஒன்றாக காட்டும்படியான காட்சி ஒன்று உள்ளது.
ஆயுதம் ஏந்தியவர்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்கிற பொதுப் பார்வையை ஊட்டிய திரைப்படங்களில் ஒன்றாக இதுவும் அதே உணர்வை ஊட்டி விடுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து ராஜ்ஜன்னா, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ரேமண்ட் லௌடா, லஷ்கர்-இ-தொய்பாவில் இருந்து டவுபிக் மாலிக், உல்பாவிலிருந்து விகாஸ் தாஸ், ஸ்பானிஷ் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ரொனால்ட் ஜான்சன் மற்றும் இவர்கள் மத்தியில் உலக பிரபலமான எழுத்தாளர் வன்யா ராய் கலந்துரையாடும் காட்சி அது.
இந்த பெயர்களை உற்று கவனித்தால், இங்கு கூடிய அமைப்புகளின் தலைவர்களின் பெயர்களுக்கு ஒட்டியது போலவே உச்சரிப்பு வரும்படியாக, சற்றே மாற்றி வன்மத்துடன் வைத்திருப்பது சுலபமாக புரிந்து விடுகிறது. இதற்கு வன்யா ராவ் என்ற பெயரே ஒரு உதாரணம். மாவோயிஸ்டுகள் பக்கமுள்ள நியாயத்தை எழுதிய எழுத்தாளர் அருந்ததி ராய். அவரையே வன்யா ராவ் என சித்தரித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது காஷ்மீரில் ஆர்டிகிள் 370 குறித்து அவர் பேசிய வசனங்கள் அவரது புத்தகமான வாக்கிங் வித் காம்ரேட்ஸ் இடம்பெற்றிருக்கும். அருந்ததி ராய் மீது உபா சட்டத்தை ஏவுவதற்கு முன் எந்த எதிர்ப்பும் எழாமலிருக்க, அவரைப் பற்றிய மோசமான பிம்பமாக வெகுமக்கள் மனதில் பதிய வைக்கும் படமாக முன்கூட்டியே இப்படம் வெளிவந்துள்ளது.
இவ்வாறு சம்பந்தம் இல்லாத அனைவரையும் ஒன்றாக கொண்டு வருவதன் மூலம் மாவோயிஸ்டுகள் மேல் வெறுப்பை விதைப்பதும், எல்லா அமைப்புகளும் நாட்டை சீர் குலைக்கும் தவறான அமைப்புகள் என்றும் நுட்பமாக, படம் பார்ப்பவர்கள் மத்தியில் திணிக்கும் படியாக இந்த காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்தியாவின் மிகவும் பிரபலமான, இடது சாரி சிந்தனை கொண்ட எழுத்தாளரான வன்யா ராவ், பஸ்தரில் உள்ள மாவோயிஸ்டுகளுக்கு நிதியுதவி செய்து இறுதியில் நாட்டை எப்படி உடைக்கும் சிந்தனைகளை வளர்க்கிறார் என்னும் படியாக உரையாடல்களை அமைத்திருப்பதே இப்படம்.
டெல்லியில், ஆடம்பரமாக வாழ்வதாய் காட்டப்படும் எழுத்தாளர் வன்யா ராய் (ரைமா சென்) மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கான ஆதரவைப் பெறுவதற்காக, தனது வேலையை ஒரு கேடயமாக பயன்படுத்துவது போல இக்கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஊடகத்தில் உள்ள பெண்கள் மது அருந்துவது, தவறான உறவு கொள்வது போன்ற குணங்களுடன்தான் இருப்பார்கள் என்று அடையாளப்படுத்துவது போன்ற காட்சிகள் அவர் மேல் புனையப்பட்டுள்ளது.
மேலும் ஊடகங்கள், கல்லூரிகள், கலை உலகம், திரை உலகம், சிவில் சமூகம் என அனைத்திலும் இடதுசாரி கோட்பாடுகளை பரப்பி, அனைவரையும் நகர்ப்புற தீவிரவாதிகளாக மாற்றுவதாக இப்படம் சித்தரிக்கிறது. அதாவது இந்துத்துவ நஞ்சைப் பரப்பி மதவாதக் காழ்ப்புணர்வு ஊட்ட அனைத்து ஊடகங்களையும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பயன்படுத்தியதை, இடதுசாரிகள் பயன்படுத்தி நகர்ப்புற நக்சல்களாக மாற்றுவதாக உண்மையை தலைகீழாக மாற்றி கொடுத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் கருத்துக்கள் என்று ஏதும் இல்லாமல் வெறும் குற்றசாட்டுகளை அடுக்கி வைப்பதிலேயே கவனத்தை செலுத்தியுள்ளனர். படத்தில் CRPF தலைவராக வரும் நீரஜா மாதவன் மட்டுமே நல்லவர், அவர் எவ்வாறு தனி ஆளாக அதுவும் கர்ப்பிணியாக இருந்து கொண்டு மாவோயிஸ்ட்களையும் இந்திய அரசாங்கத்தையும் (குறிப்பு : தென்னிந்திய உள்துறை அமைச்சர்) எதிர்கொள்கிறார் என்பதே கதை. அவரின் பிரதான எதிரியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் மாவோயிஸ்ட் தலைவரின் பெயர் லங்கா ரெட்டி. இவரை வீரப்பன் மீசையோடும், சேகுவேராவின் சாயலோடும் அடையாளப்படுத்தி இருப்பார்கள். இப்படியே ஒவ்வொரு காட்சியிலும் இந்துத்துவ நஞ்சை விதைத்திருப்பார்கள். லங்கா ரெட்டியின் அறிமுகமே இந்தியக் கொடிக்கு வணக்கம் செலுத்திய ஒருவரை 36 துண்டுகளாக வெட்டுவது போல் இருக்கும். இரத்தம் தெறிக்க, சதைகள் பிளந்து தொங்கும் படியான இந்த காட்சி சென்சாரில் அனுமதி அளித்திருப்பது, சென்சார் குழு பற்றியான கேள்வியையும் எழும்ப வைக்கிறது.
லங்கா ரெட்டியால் விதவையாக்கப்பட்ட ரத்னா, நீரஜா மாதவனின் உதவியால் சிறப்புப்படை காவல் அதிகாரியாக (SPO) ஆபிசராக ஒருபுறம் மாற, மறுபுறம் அவளது மகன் மாவோயிஸ்டுகளால் ஈர்க்கப்பட்டு அவர்களோடு இணைகிறான். SPO வாக மாறிய ரத்னா தனது மகனை CRPF அதிகாரியான நீரஜா உதவியுடன் எவ்வாறு மீட்கிறாள், தனது கணவனின் சாவிற்கு காரணமான லங்கா ரெட்டியை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பது ஒருபக்க கதையாக நகர்கிறது.
மறுபுறம் டெல்லி நீதிமன்றத்தில் மாவோயிஸ்டுகளைப் பற்றி அரசுக்கு துப்பு கொடுக்கும் மக்களை காட்டிக்கொடுப்பது குறித்தும், சல்வா ஜூடும் (அரசினால் உருவாக்கப்பட்ட எதிர்ப் புரட்சிக் குழு, மாவோயிஸ்டுகள் மீது பழி போடுவதற்காக அந்தப் பகுதியிலிருந்து ஆயுதம் கொடுத்து உருவாக்கும் குழுக்கள்) இயக்கத்தை தடை செய்வதற்கான காரணங்கள் குறித்தும் வழக்கு நடக்கிறது. இது வன்யா ராய் மற்றும் அவரது பேராசிரியை தோழிக்கும், அரசுக்கும் நடக்கும் வழக்காக காண்பிக்கப்படும். வன்யா ராய்க்கு எதிரான சாட்சியங்களை நீரஜாவிற்கு வழங்காமல் மறுக்கும் உள்துறை அமைச்சர் கதாபாத்திரத்திற்கு தென்னாட்டு சாயல் கொண்டவரை தேர்ந்தெடுத்த வன்மமும் இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிக்காக ஒதுக்கப்படும் நிதிக்காக அரசு இந்த மாவோயிஸ்ட்டுகளை கண்டு கொள்வதில்லை என்று நீரஜா பேசும் வசனங்கள், பள்ளிக்கூடம் தகர்ப்பு, சாலைகள் தகர்ப்பு போன்ற மக்களின் அன்றாட பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் மாவோயிஸ்ட்டுகள் தான் காரணம் என்று ஆதாரமே இல்லாமல் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் காட்சிகள் என படம் முழுவதும் மாவோயிஸ்டுகள் பற்றியான மோசமான பரப்புரைகள் நிரம்பிய படமாக இருந்தது. அவர்களின் சார்பில் முன்வைக்கும் எந்த கருத்தையும் சொல்லாத ஒரு பக்க சார்பான படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
2010-ல் தாண்டேவாடாவில் கொல்லப்பட்ட 76 CRPF வீரர்களின் மரணத்தால் ஈர்க்கப்பட்டு இந்த படத்திற்கு கதை எழுதியதாக தெரிகிறது. பல பொய்கள் மத்தியில் ஒரு உண்மை இருந்தால் பொய்கள் அனைத்தும் உண்மை ஆகிவிடும் என்கின்ற நம்பிக்கையில் எடுத்த படமாக இருக்கிறது. ஆனால் ‘பச்சை வேட்டை’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை இந்திய அரசாங்கம் கொன்று குவித்த சம்பவங்களால் எல்லாம் இந்த இந்துத்துவ படக்குழுவினர் ஈர்க்கப்படவில்லை.
மாவோயிஸ்ட்டுகளின் வாழ்க்கை வரலாறு புரிந்துகொள்வதென்பது மிகவும் சிக்கலான ஒன்று. விவசாயிகளின் கூலிக்கான போராட்டத்தில் தொடங்கி, தங்கள் நிலங்களில் கொட்டிக் கிடக்கும் லட்சக்கணக்கான கோடிகள் பெறுமானம் உடைய கனிம வளங்களை எடுக்கக் காத்திருக்கும் பெருநிறுவனங்களை எதிர்க்கும் வரை அவர்கள் போராட்டம் தொடர்கிறது. பெருநிறுவனங்களின் தனியார் நலனுக்காக நடக்கும் அரசுகள், அவர்களின் போராட்டத்திற்கான காரணியை வெளிப்படுத்தாமல், அவர்களை குற்றவாளியாய் சித்தரித்து, மக்கள் மனதில் அதே எண்ணத்தை விதைக்கின்றன. அரசின் எண்ணவோட்டத்திற்கு தரகுத்தனம் பார்ப்பதற்காக கலைப் படைப்பு என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது இந்தப் படம்.
இப்படத்தின் முதல் காட்சியே 2013 -இல் படுகொலை செய்யப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் MP-யான மகேந்திர கர்மா இரங்கல் செய்தியுடன் தொடங்கும். இவர் தான் பழங்குடியினருக்கு எதிரான சல்வா ஜூடும்( கோந்தி மொழியில் அமைதிக்கான அணிவகுப்பு) எனும் அமைப்பை கொண்டுவந்தவர். வன்புணர்வு, கொலைகள், கிராமங்களை எரித்தல் மற்றும் நூறாயிரக்கணக்கான மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து விரட்டியடித்தல் மற்றும் SPO எனும் போர்வையில் சிறார்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்களை அரசின் உதவியோடு நிகழ்த்தி விட்டி, அதன் பழியை மாவோயிஸ்டுகள் மேல் போடுவதற்காக உருவாக்கப்பதே சல்வா ஜூடும் ஆகும். ஆனால் இந்த படத்தில் அவர் பழங்குடியினருக்காகவே உயிர் துறந்ததாக அவரை பெருமைப்படுத்தி இருப்பார்கள்.
படத்தின் இறுதியில் நீதிமன்றம் சல்வா ஜூடுமை தடை செய்ய தீர்ப்பளிக்கும், வன்யா ராயை குற்றமற்றவராக அறிவிக்கும். நீதிமன்றமும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவது போல சித்தரிப்பு இருக்கும். இந்த காட்சி இப்படத்தை பார்ப்பவர்கள் மத்தியில் இந்திய அரசியல் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்னும் உணர்ச்சி ரீதியான தூண்டலுக்கு வழிகாட்டும் நயவஞ்சகத் தன்மையானது. இதன் வாயிலாக இரண்டு மணி நேர படத்தில் எவ்வளவு வன்மத்தை கொட்ட முடியுமோ அவற்றை எல்லாம் மக்கள் மனதில் கொட்டியிருக்கிறார்கள்.
மார்ச், 2024 மாதம் திரையரங்குகளிலும் மே, 2024-ல் ஜீ (ZEE) OTT – தளத்திலும் வெளிவந்த இந்த படத்தின் இந்துத்துவ சார்பு நிலைப்பாட்டை பார்க்கும் போது, இது பாஜகவின் தேர்தலுக்கான பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்திய சினிமாவில் நாம் இதுவரை காணாத கொடூர காட்சிகள் இந்த படத்தில் நிறைய உள்ளன. இந்துத்துவ நஞ்சினால் பாதிக்கப்பட்டதையே தேசபக்தி என நினைத்துக் கொள்பவர்கள் இப்படத்தின் கதையை உண்மை என்றே நம்பும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் போராடும் மனித உரிமை செயல்பாட்டாளர்களை கோவம் கொப்பளிக்கவே அணுகுவார்கள். மக்களுக்காக போராடும் அமைப்புகளை தேசத் துரோகிகளாக பார்க்கும் தன்மையை அடைவார்கள். இவர்களின் மேல் சீற்றம் கொள்வதையே தேச பக்தி என்னும் நிலையை வளர்த்துக் கொள்வார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளில் சேர்ந்து வன்முறைகளில் ஈடுபடுவார்கள். இந்துத்துவவாதிகள் படைப்பாளரர்களானால், வெளிவரும் படைப்புகள் விசத்தையே விதைக்கும் என்பதற்கு இப்படமே சான்று.
ஆனால் இதுபோன்ற படங்களை விமர்சிக்கும் போது கலையை கலையாக மட்டும் பாருங்கள் என்று வன்மத்தை கக்குபவர்கள் வருவார்கள். ஆனால் இதேபோன்று உண்மையாக நடக்கும் நிகழ்வுகளை விளக்கி நாம் படம் எடுத்தால் அதைத் தடை செய்வார்கள். இங்கு அப்படிப்பட்ட படங்கள் ஏராளம். சிறந்த இயக்குனர் என்று பெயர் பெற்ற வெற்றிமாறன், மாரி செல்வராஜ் , கோபி நாயனார் என்று பலர் இதில் அடக்கம். அமெரிக்கா எங்கெல்லாம் இனப்படுகொலை செய்கிறதோ அதற்கு நியாயம் கற்பிக்கும் விதமாக ஜேம்ஸ் பாண்ட் 007 போன்ற பல்வேறு படங்கள் மேற்குலகில் வெளிவரும் அதைப்போலவே இந்தியாவிலும் இந்துத்துவ பாசிசத்தை விதைப்பதற்கான, தவறான வரலாறு பறைசாற்றும் படங்கள் சமீபத்தில் மிக அதிகமாக வெளிவர ஆரம்பித்து இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. சமீப காலங்களில் OTT தளங்களில், இது போன்ற படங்கள் எந்தவித சென்சார் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மிகுந்த பொருட்செலவில் வெளிவருகிறது. அரசின் உதவி இல்லாமல் இந்த படங்கள் எல்லாம் வெளிவர வாய்ப்பு இல்லை என்றே இதிலிருந்து தெரிகிறது.
போராட்டமும் ரத்தமும் இன்றி நாம் எதையும் சுலபமாக பெற்றது இல்லை. ஒடுக்கப்படுபவர் இருக்கும் வரையில் உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்து கொண்டு தான் இருக்கும். முதலாளித்துவத்திற்கு ஆதரவாக நின்று உழைப்பாளர்களை ஒடுக்கும் அரசுக்கு எதிரான குரல் சாமானியரிடம் இருந்தே வெளிவரும். அவர்களுக்கு உற்ற துணையாக மனிதநேயம் மரிக்காத இடதுசாரி கொள்கை கொண்டவர்களே போராடுவார்கள். ஆனால் இப்படம் பாஜக அரசின் சார்பாக நின்று ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான வன்மத்தை விதைத்துச் செல்கிறது.