தலையங்கம் – ஆகஸ்ட் 19, 2022
2002இல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள் கட்டவிழ்க்கப்பட்டன. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த ஆட்சியில் இந்த வன்முறைகளுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டு அரசு கைகட்டி வேடிக்கை பார்க்க வைக்கப்பட்டது. பாஜக – இந்துத்துவ அமைப்புகள் நடத்திய இந்த வன்முறையில் 2000 இசுலாமியர்கள் படுகொலையானார்கள். இந்த வன்முறையில் சிதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் பில்கிஸ்பானுவும் ஒருவர். இவர், அச்சமயத்தில் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் இந்து மதவெறியர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல், இவரது குடும்பத்தினரில் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூரத்தைச் செய்தவர்கள் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிகழ்வால் பில்கிஸ்பானு முடமாகிப் போனார். இவர் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு 11 பேர் குற்றவாளிகளாக ஆயுட்சிறை பெற்றனர். இக்குற்றவாளிகளை குஜராத் அரசு சில நாட்களுக்கு முன் விடுதலை செய்துள்ளது. இதைப் பற்றி கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பாஜகவின் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. கோத்ரா சட்டமன்ற உறுப்பினர் ராவுல்ஜி, “இக்குற்றவாளிகள் பார்ப்பனர்கள், இவர்கள் நற்பண்புகளை வளர்த்துக்கொண்டவர்கள் அவர்கள் நன்னடத்தையை முன்வைத்து விடுதலை செய்தோம்” என்கிறார்.
“பார்ப்பனராக இருந்தாலே அவர் நல்லவர்!” எனும் கருத்தாக்கம் சனாதன தர்மத்தின் அடிப்படையாக இருக்கிறது. மனுதர்மக் கோட்பாடும், பார்ப்பனர்கள் கொலை செய்தால் கூட அவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுக்கக்கூடாது என்கிறது.
சூத்திரன் ஒருவனை பார்ப்பனர் கொலை செய்தால், அக்கொலையை ஒரு தவளையை கொன்றதற்கு இணையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மனுதர்மம்- அத்தியாயம்11, சுலோகம் 131
இத்தண்டனையும் போதாதெனில், “வருண மந்திரத்தை 3 நாட்கள் ஜெபித்தால் போதுமானது” (அத்தியாயம் 11, சுலோகம் 133) என்று கூறுகிறது. இந்த மனுதர்மக் கோட்பாட்டையே பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதே போன்றதொரு நழுவலான நீதியை காந்தியடிகளின் படுகொலையில் நேரடி தொடர்பு கொண்டு, குற்றம் நிலைநாட்டப்பட்ட நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேவும் அவரது கூட்டாளியும் 13 ஆண்டுகளில் விடுதலை செய்ப்பட்டதில் கவனிக்க முடியும். இதன் அடிப்படைக்காரணம் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதே ஆகும். பார்ப்பனர்கள் எக்காலத்திலும் தீங்கு செய்யமாட்டார்கள் அல்லது அவர்கள் செய்வதை தீங்காகக் கருதக்கூடாது என்கிற பார்ப்பன வெறியே இந்தியாவை ஆள்கிறது. இதுவே சனதானமாக கடைபிடிக்கப்படுகிறது. பில்கிஸ்பானுவை சிதைத்தவர்களை விடுதலை செய்யும் இந்த சனாதனம், ராஜீவ் வழக்கில் பொய்க்குற்றச்சாட்டில் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய மறுக்கிறது.
தமிழ்நாட்டின் ஆளுநர் “சனாதனமே இந்தியாவின் தர்மம்” என்று போற்றுகிறவர். இதனாலேயே இராஜிவ் வழக்கு சிறைவாசிகள், நீண்டநாள் சிறையிலிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் ஆகியோரை விடுதலை செய்ய மறுக்கிறார். இவர்கள் ஒருவேளை பார்ப்பனராக இருப்பார்கள் எனில் விடுதலையை உடனே சாத்தியப்படுத்தி இருப்பார்கள். பாஜக கட்சியின் தேசிய அளவிலான தலைவர்களில் 65% பேர் பார்ப்பனர்கள் என்பது மட்டுமல்ல மாவட்ட அளவிலான 746 பொறுப்புகளில் 487 பேர் உயர்சாதியை சார்ந்தவர்களே. தேசிய அளவிலான பாஜகவின் 50 பொறுப்பாளர்களில் 17 பேர் பார்ப்பனர்கள், 21பேர் இதர உயர்சாதியை சேர்ந்தவர்கள். ஆகமொத்தம், 50 பொறுப்புகளில் 38பேர் உயர்சாதி இந்துக்கள் என்பதே பாஜகவின் சாராம்சம். இப்படியான கட்சி சனாதனத்தை நிலைநிறுத்தும் பணியை செய்து வருவதே அவர்களின் இந்து எழுச்சியாக அமைந்திருக்கிறது.
பூணூல் அணிந்தவர்களை கடவுளுக்கு இணையானவர்களாக கருத வேண்டும். தனது அடுத்த பிறவியில் பூணூல் அணிந்தவராக பிறந்து சபரிமலையில் பூசாரியாக வேண்டும்.
கேரள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி
கேரளாவின் முன்னனி திரைப்பட நடிகராக இருந்த சுரேஷ் கோபி தற்போது பாஜகவின் பொறுப்பாளர்களில் ஒருவர். இவர் 2017 செப்டம்பரில் திருவனந்தபுரத்தில் பேசும்பொழுது, “பூணூல் அணிந்தவர்களை கடவுளுக்கு இணையானவர்களாக கருத வேண்டும். தனது அடுத்த பிறவியில் பூணூல் அணிந்தவராக பிறந்து சபரிமலையில் பூசாரியாக வேண்டும்” என்று பேசினார். இது போன்ற நிலையை தமிழ்நாட்டில் எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் சொன்னபோதும், அவரைக் கைது செய்யாமல் காவல்துறை தவிர்த்ததை நாம் நினைவில் கொள்ளலாம். தற்போது பெரியார் சிலையை உடைக்கவேண்டுமென்று பேசிய கனல்கண்ணன் கைது செய்யப்படுவது போல எச்.ராஜா கடந்த கால அதிமுக – பாஜக ஆட்சியில் கைது செய்யப்படவில்லை.
இவ்வாறான பார்ப்பன மனுதர்மம் ஆட்சிமுறை அநீதியின் பிறப்பிடம். இந்த ஆட்சிக்கு ஆதரவாக பேசும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சாதி தமிழர்கள் தான் தமிழ்நாட்டின் கருங்காலிகள்!