பாஜகவிற்குள் நடக்கும் அதிகாரப்போட்டி கற்றுக்கொடுக்கும் பாடம்

தலையங்கம் – ஆகஸ்ட் 18, 2022

பாஜகவின் நாடாளுமன்ற குழு 17-08-2022 அன்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. பாஜகட்சியின் சட்டங்களை மாற்றவும் திருத்தவும் அதிகாரம் கொண்ட இக்குழுவிற்கு மோடி, அமித்ஷாவிற்கு சாதகமானவர்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, மோடி, அமித்ஷாவிற்கு போட்டியாளர்களாக கருதப்படுகிறவர்கள் இக்குழுவில் இணைக்கப்படவில்லை அல்லது அவர்கள் பொறுப்பு நீக்கப்படவில்லை. இக்குழுவே பாஜகவின் அதிகாரங்களை நிர்ணயிக்கும் உயர்மட்டக்குழு.

மாநில அளவிலான தேர்தல்களில் யாரை முதல்வராக முன்மொழிவு செய்வது, அல்லது முதல்வராக தேர்ந்தெடுப்பது. நாடாளுமன்ற பணிகள், சட்டமன்ற முடிவுகளை கண்கானிப்பது இக்குழுவின் பணிகள். இதுமட்டுமல்ல, நாடாளுமன்ற பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதும் இக்குழுவின் பணியாகும். ஏனெனில் இக்குழுவே பாஜகவின் மைய தேர்தல் கமிட்டியாகவும் செயல்படும். இதனால் இக்குழுவிற்கான நியமனம் என்பது பாஜகவில் முக்கியத்துவம் பெற்ற ஒன்று.

இப்படியான குழுவில் இடம்பெறக்கூடியவர் இந்திய நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றங்களின் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இதுவரை இக்குழுவில் தேசிய அளவிலான பிரதிநிதிகள் உள்ளிட்ட பிராந்திய அளவிலான சமூக பிரதிநிதிகளாக கருதப்படுகிறவர்கள், மாநில முதல்வர்களாக இருக்கக் கூடியவர்கள் முன்னனி செயல்பாட்டாளர்கள் ஆகியோர் நியமனம் பெறுவார்கள். மேலும் 75 வயதிற்கு மேற்பட்டோர் இக்குழுவில் இடம்பெற மாட்டார்கள் என்கிற வழமையை இக்கட்சி வைத்திருந்தது.

இன்னும் இரண்டு வருடங்களில் தேசிய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் நிகழ இருக்கிறது. மேலும், ஒருவேளை பாஜக ஆட்சி அமைக்குமானால், அதன் கொள்கை வரைவை செயல்படுத்தக்கூடிய நபர்களாக கருதப்படக்கூடியவர்கள் அமைச்சர்களாக, இதர பொறுப்புமிக்கப் பணிகளில் நியமனம் பெறுவார்கள். இப்படியான குழுவில் பாஜகவில் அதிகாரம் பெற்றவர்களாகக் கருதப்படக்கூடியவர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பட்டியலில் பெரும்பாலோனோர் இடம்பெறவில்லை.

மோடிக்கு அடுத்தபடியாக இந்துத்துவவாதிகளால் கொண்டாடப்படுகிற உத்திரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், இக்குழுவிற்குள் கொண்டுவரப்படக் கூடியவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் இடம்பெறவில்லை. மேலும் பாஜகவில் மோடி, அமித்ஷாவிற்கு இணையான அதிகாரம் கொண்டவராக கருதப்பட்ட நிதின் கட்கரி இக்குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

யோகி இரண்டாம் முறையாக முதல்வராக பெரும்பான்மையோடு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் செல்வாக்கு பெற்றவராக தேசிய அளவில் முன்னகர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மோடி இலவசங்களுக்கு எதிராக கடந்த வாரத்தில் பேசிய பொழுது அதற்கு பதிலளிக்கும் விதமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தை யோகி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் மோடிக்கு எதிராக யோகி என்றும், பிரதமராக யோகி என்றும் செய்திகள் விரிவாக பகிரப்பட்டன. சமூக வலைதளத்தை ஆக்கிரமித்திருத்திருக்கும் பாஜகவின் இணைய அணிகளை மீறி இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கட்சி சாராத சங்கிகளாக செயல்படுபவர்கள், நபிகளை கொச்சைப்படுத்தி பேசிய நுபுர்சர்மாவை பொறுப்பிலிருந்து நீக்கிய செயலை கண்டித்தும், யோகியே முழுமையான இந்துத்துவவாதி என்றும் செய்திகள் வெகுவேகமாக பகிரப்பட்டன. இந்த போக்குகள் பாஜகவிற்குள் நிகழும் அதிகாரப்போட்டியை அம்பலப்படுத்தியது.

யோகியை தீவிரவாத இந்துத்துவ சந்நியாசியாக சங்கிக்கூட்டம் கொண்டாடுகிறது. அத்வானி-வாஜ்பாய் அதிகாரத்திற்கு வந்தபின்னர் தம்மை மிதவாத போக்குடையவராக, சனநாயகவாதியாக காக்க முயன்றதை தற்போது மோடியும் செய்ய முனைகிறார். அத்வானியின் தீவிரவாத பிம்பத்தை மாநில அளவில் மோடி கையாண்டு தேசிய அரசியலுக்குள் நுழைந்தார். இதே தந்திரத்தை தற்போது யோகியும் கையாண்டு தம்மை தீவிரவாத இந்துத்துவ கும்பல்களின் ஆதரவை வென்றெடுத்தது, தேசிய அரசியலுக்குள் நுழைவதற்குரிய சாவியாக பயன்படுத்துகிறார். யோகியினால் உருவான இந்த சவாலை கையாளவே லக்னோவில் அமித்ஷா தனக்கு மிக நெருக்கமான சுனில் பன்சால் எனும் ஆர்.எஸ்.எஸ். நபரை அமர்த்தினார். இவருக்கும் யோகி ஆதித்யநாத்திற்குமான பகை அனைவரும் அறிந்த ரகசியமாக இருந்த போதிலும், யோகியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவரை சந்திக்குமளவிற்கு வலிமைமிக்கவராக விளங்கியதற்கு அடிப்படை காரணம் மோடி-அமித்ஷாவின் ஆதரவு. இதனாலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் துவக்க நிகழ்வில் அமித்ஷா அழைக்கப்படாமல் தவிர்க்கப்பட்டார். இந்துத்துவ கும்பல்களின் மிகநீண்ட நாள் கனவான இந்த நிகழ்வில் தீவிர இந்துத்துவவாதியான அமித்ஷாவை யோகி தவிர்த்தார். இந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ்சின் தலைவர் மோகன்பகவத்தும், மோடியும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு இரண்டு அதிகார துருவங்கள் பாஜகவின் கோட்டையான இந்தி பேசும் மாநிலங்களில் உருவாகியது.

இந்த சுனில்பன்சால் தற்போது டில்லிக்கு திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார். இது கடந்த வாரம் நடந்தேறியது. இந்நிலையில் யோகி நாடாளுமன்றக் குழுவிற்குள் அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். இதே போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஆர்.எஸ்.எஸ்.சினால் நெருக்கமானவராக கருதப்படும் நிதின்கட்கரியும் தவிர்க்கப்பட்டிருக்கிறார். இதற்கு பதிலாக மராத்தியத்தின் பட்னாவிஸ் இணைக்கப்பட்டிருக்கிறார். ராஜ்நாத்சிங் இக்குழுவில் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். சிவராஜ்சிங் சவுகான் கடந்த 20 ஆண்டுகளாக மத்தியபிரதேசத்தின் முதல்வராக இருக்கிறவர். இவரும் பிரதமர் வேட்பாளாராக போட்டியிடும் தகுதிபடைத்தவராக இந்துத்துவ அமைப்புகள் கருதுகின்றன. ஆனால் இவரும் தடை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தி மாநிலங்களின் முதல்வர்கள் நாடாளுமன்ற குழுவில் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டிருக்கின்றனர். கர்நாடகவின் எட்டியூரப்பா இக்குழுவிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

பட்னாவிஸ், எட்டியூரப்பாவின் இணைப்பு இங்கு வர இருக்கும் மாநில தேர்தல்களை கணக்கில் கொண்டிருக்கிறது. இக்குழுவில் இணைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அசாம் முதல்வர் உட்பட அனைவருமே மோடி-அமித்ஷாவின் அதிகாரபீடத்தை வணங்கி ஏற்கக்கூடியவர்கள். பாஜகவின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தமது கைகளுக்குள் மோடிக்கு துணையாக இருப்பது அவரது மக்கள் ஆதரவு என பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது உண்மையல்ல. அவருக்கு பின்புலமாக இயங்கும் குஜராத்தி மார்வாடிகளின் வணிக நலன்களே அவரை பலம் வாய்ந்தவராக்குகிறது,. குஜராத்தி மார்வாடிகளுக்கான பொருளாதார நலனை கொண்டுவரக்கூடிய மோடி-அமித்ஷா எனும் இரட்டையரை இந்த பெருமுதலாளிகள் எக்காலத்திலும் இழக்க விரும்பமாட்டார்கள். இந்த வணிகக்கூட்டங்களே இந்தியாவின் சுதந்திரப்போராட்ட காலத்தில் காங்கிரஸை இயக்கியது. இவர்களே ஆர்.எஸ்.எஸ். –இந்துமகாசபை வளர உதவியது. இவர்களின் நிதியுதவியைக் கொண்டே இந்தியா முழுவதும் இக்கும்பல்கள் தம்மை விரிவுபடுத்திக் கொண்டன. இந்தக் கும்பல்களே மார்வாடிகள் இந்தியா முழுவதும் தமது வணிகத்தை விரிவுபடுத்த உழைக்கின்றன.

இன்றைய இந்தியாவின் அரசியல் அதிகாரம் மோடி-அமித்ஷாக்களின் கைகளில் இருக்கிறது என்பதைவிட அம்பானி, அதானி, பிர்லா, அனில் அகர்வால், ஜுன் ஜுன்வாலா, டாடா போன்றவர்கலே முடிவு செய்கிறார்கள் என்பதையே இக்குழு உருவாக்கத்தின் பின்னனி அரசியல். இக்குழுக்கள் யோகி ஆதித்தய்நாத்தையோ, சிவராஜ் சவுகானையோ, பசவராஜ் பொம்மையையோ ஆதரிக்கக்கூடியவர்கள் அல்ல என்பதாலேயே இக்கும்பல்கள் அதிகாரமிழந்து போகின்றன. குஜராத்திகளின் கைகளிலேயே இந்தியாவின் அதிகாரம் மையம் கொண்டிக்கிறது என்பதையே இக்குழு உருவாக்கம் தெள்ளத்தெளிவாக்குகிறது. இந்த வணிகக்குழுக்கள் நாளை காங்கிரஸ் தமக்கான கட்சியாக கருதுவார்களேயானால் அவர்களை ஆட்சிக்கு கொண்டுவர தயங்கமாட்டார்கள். இந்த முதலாளிகளின் ஆதரவான கட்சிகள் இந்த அடிப்படையிலேயே அதிகாரத்தை வெல்வதும் வெளியேற்றப்படுவதுமாக இருக்கின்றன எனும் உண்மையே இந்தியாவின் சனநாயக தேர்தலின் வரலாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »