தேடப்படும் ரவுடிகள், கொலை கொள்ளை செய்தவர்கள், குண்டு வைப்பவர்கள், பாலியல் குற்றாவாளிகள் என அனைத்துக் குற்றவாளிகளின் இருப்பிடமாக திகழ்வது பாஜக கட்சிதான், அதுமட்டுமல்லாமல் வட இந்திய ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு நாடு முழுவதும் பொய்களையும் புரட்டுகளையும் பரப்பிக் கொண்டிருக்கிறது இக்கட்சி தான். ஒரு குழாயடிச் சண்டையில் வெவ்வேறு குடும்பத்தினர் மோதலின் காரணமாக, ஒரு இராணுவ வீரர் மரணமடைந்த நிகழ்வை ஒரு கலவர மாநிலமாக, மக்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது போல, பெரியதாக சித்தரித்து காட்சி அளிக்க பாஜகவினர் முயன்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீரில் துணி துவைத்த இராணுவ வீரரின் சகோதரர் பிரபாகரன், குடிக்கும் நீரில் துணி துவைக்கலாமா? என கேட்ட திமுக கவுன்சிலர் சின்னசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிப்போய், இரு தரப்பினரிடையே சண்டையிடுமளவிற்கு சென்று காயங்கள் ஏற்பட்டன. பிறகு இருத்தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். எனினும் சில நாட்களுக்கு பின் இராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிழந்தார். காவல்துறையும் சின்னசாமியை கைது செய்து அடிதடி வழக்கிலிருந்து கொலை வழக்காக மாற்றி உரிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இராணுவ வீரரை திமுக கொலை செய்துவிட்டதாக பாஜகவினர் இந்தியா முழுவதும் செய்தி பரப்பினர். வட இந்திய ஊடகங்கள் எதிரி நாட்டுப்படை இந்தியா மீது போர் தொடுத்தத்து போன்று செய்திகளை வழங்கினார். போலி தேசபக்தர்கள் அனைவரும் கொதித்தெழுந்து திமுக மீதும் தமிழ்நாடு அரசு மீதும் வன்மங்களையும், அவதூறுகளையும் பரப்பி வெறுப்பை விதைத்தனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பாஜக, இறந்த இராணுவ வீரருக்கு நீதி கேட்டு அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தும் என்று அறிவித்தது.
இராணுவ வீரருக்கு நீதிக்கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் இராணுவ வீரர் மற்றும் பாஜகவின் உறுப்பினருமான பாண்டியன், “ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழநாட்டிற்கும், தமிழ்நாட்டு அரசுக்கும் நல்லதல்ல என்றும், எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும், துப்பாக்கியும் சுடத்தெரியும்” என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அங்கு சென்ற பத்திரிக்கையாளர் இது குறித்து கேட்டப்போதும் எச்சரிக்கையாக சொல்கிறேன் என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து பேசினார்.
இப்படி ஆபத்துக்குரிய, பொது அமைதிக்கு குந்தகம் விளைவுக்கும் வகையில் பேசியதனைத் தொடர்ந்து கட்சித்தலைவர்கள், முற்போக்கு இயக்கங்கள், மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர் என பலர் கண்டனங்களும், கைது செய்ய கோரிக்கையும் எழுந்தது, எனவே தமிழ்நாட்டு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர், இன்னும் கைது செய்யப்படவில்லை.
அதுமட்டுமின்றி இராணுவ வீரரின் கொலை குறித்து பாஜகவினர் ஆளுநரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். அதற்கு ஆளுநர் ரவியும் தமிழ்நாடு அரசிடமோ காவல்துறையிடமோ இது குறித்து எந்தவித விளக்கம் கேட்காமல் உடனே சமூகவலைத்தளமான டுவிட்டரில் இது குறித்து கருத்தை தெரிவித்துள்ளார். என்னவெனில் ஆயுத கும்பலால் இராணுவ வீரர் கொடுரமாக கொல்லப்பட்டது வேதனை அளிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு ஆளுநராக இருந்துக்கொண்டு என்ன ஏது என்று தெரிந்தாலும் தெரியாத மாதிரி பாஜக கட்சி உத்தரவு வந்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாக வருத்தம் பதிவு போன்ற ஆளுநர் செயல்படுகிறார்.
தமிழ்நாட்டு உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு எப்போதும் பாஜகவினர் குரல் கொடுத்ததில்லை, மீறி சட்டபேரவையில் சட்டமேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் எந்தவித அசைவும் இல்லாமல், பதிலும் கேட்காமல், கையெழுத்தும் போடாமல், மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் ஆளுநர் வேலையே செய்யாமல் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதாவது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் ஆளுநரை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.
இராணுவ வீரர் கொலை நிகழ்வு என்பது எந்தவித பகையோ, தனிப்பட்ட மோதலோ, திட்டமிட்ட சதிப்போலவோ இருப்பதாக இரு தரப்பினரும் தெரிவிக்கவில்லை, அப்படி ஒன்றும் வழக்கு பதிவில் கூட இல்லை. ஆனால் பாஜகவினர் என்னமோ நாட்டின் எல்லைத் தாண்டிய நிகழ்வுப் போல, இராணுவ வீரர் என்ற உள்நோக்கத்தோடு செயல்பட்டது போல, போராட்டத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள் பங்கேற்று, துப்பாக்கியால் சுடுவோம் குண்டு வைப்போம் என பேசியுள்ளனர். இதுவெல்லாம் ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்தும் இந்துத்துவ அரசியல் கொண்ட பேச்சுக்கள் தான். இதையெல்லாம் வடநாட்டில் பேசி பேசி அப்படியே தென்னாட்டில் பேச்சு வந்துள்ளது.
நீங்கள் தமிழ்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் என்ன சொல்ல வருகிறீர்கள்? யாரை நோக்கி சுடப்போகிறீர்கள்? யார் மீது குண்டு போடப்போகுறீர்கள்? என்ற கேள்வி எழுகிறது. இத்தனை வருடம் வேலைப்பார்த்தும் பக்குவம் அனுபவம் இல்லாமல் பேசுவதை நினைத்தால் இனி 4 வருடம் ‘அக்னிபாத்’ வேலை செய்யும் இளைஞர்களின் வழிக்காட்டல், பக்குவம் எப்படி இருக்கும்? என் நினைக்கும் போது மிகவும் ஆபத்தாக தான் இருக்கிறது.
இதை முன்னாள் இராணுவ அதிகாரிகள் பேச, அதை முன்னாள் ஐபிஸ் அதிகாரியும் கட்சித்தலைவருமான அண்ணாமலையும், மற்ற கட்சி நிர்வாகிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது சட்ட ஒழுங்கை மீறிய பேச்சு என தெரிந்தும் பேசுகின்றனர். இதை அங்குள்ள யாரும் தவறு என தடுக்கவில்லை, இது பாஜக கட்சிக்கு புதிதல்ல, இந்த மாதிரி சர்ச்சை பேச்சுகள் தினசரி பேசி வருகின்றனர். அதற்கு பல உதாரணங்கள் சமூக வளைதளங்களில் கொட்டிக்கிடக்கிறது.
ஒன்றிய அரசின் கையாளாத தனத்தால் வேலையின்மை, பொருளாதார சரிவு, பணவீக்கம் உட்பட நாளுக்கு நாள் பல தற்கொலைகள் நாட்டில் ஏற்ப்படுகிறது. அதாவது 2021-ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணப்படி 1,64,033 தற்கொலைகள் நடந்துள்ளன, இதில் 10,881 விவசாயிகள் அடங்கும், இது 2020-ஆம் ஆண்டைக் காட்டிலும் 7.6% அதிகம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் 2020-ஆம் ஆண்டு 4,28,278 குற்றச்சம்பவங்கள், இது 2020-ஆம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம். குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் 1,49,404 குற்றச்சம்பவங்கள், இது 2020-ஆம் ஆண்டைக் காட்டிலும் 16.2% அதிகம் இதில் 38% போக்ஸோ வழக்குகளாகும்.
சிறுப்பான்மையினருக்கு எதிரான பல அடக்குமுறைகள் பல கொலைகள் நடக்கின்றது (மாட்டுக்காக மனிதர்களை கொல்கின்றனர்) ஆனால் நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகுக்கிறது, பட்டியலின பழங்குடி மக்களுக்கு நாடு முழுவதும் தொடரும் சாதிப்பாகுபாடு மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் அதிகரித்துள்ளன. பசி பட்டிணி இடத்தில் 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் இந்தியா 107 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்தது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசோ பாஜகவினரோ இதற்கெல்லாம் வாய் திறப்பதில்லை அதற்குறிய நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதை தட்டிக்கேட்ட பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர் அல்லது கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
பெண்ணடிமைத்தனம், மூடத்தனம், ஒடுக்கமுறை, சாதிப்பாகுபாடு போன்ற வருணாசிரம கொள்கை கொண்டது தான் இந்த சனாதன கோட்ப்பாடுகள். இந்தியச் சட்டத்தை மதிக்காமல் தான் இந்த சனாதன கோட்பாடுகள் பற்றி ஆளுநர்களும், பாஜகவின் கட்சித் தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ கும்பல்கள் பேசி வருகின்றனர். இப்போது இராணுவ அதிகாரிகள் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்துவ கும்பலை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க துடிக்கிறது.
ஏற்கனவே முப்படை தளபதி பிபின் ராவத் வானூர்தி விபத்தில் உயிரிழந்தப்போது ரங்கராஜ் பாண்டே இது சதியாக கூட இருக்கலாம் என திசை திருப்ப முயன்றனர். இதை இங்குள்ள மக்கள் பெரிதாக எடுக்கத்தால் முயற்சி தோல்வியில் முடிந்தது. தவறு செய்தால் யாராக இருந்தாலும் தக்க தண்டனை விதிக்க வேண்டும் அதற்கு மாற்று கருத்தல்ல. இந்திய சட்டப்படி எல்லாம் மனித உயிர்களும் சமம், அது இராணுவ வீரராக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி. தமிழ்நாடு சமூகநீதி மண், முற்போக்கு சிந்தனைக்கு இடமுண்டு, இங்கு பிற்போக்குக்கு இடமில்லை என்பதால் தான் இங்கு தாமரை மலரவில்லை என ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் செயலில் காட்டியுள்ளனர்.