வடமாநில தொழிலாளர்கள் விடயத்தில் அம்பலமான பாஜக

தமிழ்நாட்டிற்கு வேலை தேடி  வந்த  புலம்பெயர் தொழிலாளர்களையும் தமிழர்களையும் குறித்து அவதூறு வெளியிட்ட பாஜகவின் கீழ்த்தரமான அரசியல் தற்போது அம்பலமாகியுள்ளது. 

பாஜக ஆட்சி செய்யும் வட மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுவதால், அங்கிருந்து தொழில்வளம் மிகுந்த தமிழ்நாட்டிற்கு வடமாநிலத் தொழிலாளர்கள் வருகிறார்கள். அவர்களின் வருகையால் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது எனப் பரவலாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த சூழலை தனது கீழ்த்தரமான அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்ள நினைத்து மிகவும் மோசமான ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டது பாஜக. 

தமிழ்நாட்டிற்கு வேலை தேடி பீகார், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், உத்திரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருந்து  வரும் புலம்பெயர் தொழிலாளர்களை இங்குள்ள தமிழ்நாட்டு மக்கள் அடிக்கிறார்கள் என்றும், இந்தி பேசியதால் 12 நபர்களை கழுத்தறுத்து கொன்று விட்டார்கள் என்றும் ஒரு கேவலமான, நச்சுத்தனமான பிரச்சாரத்தை பீகாரைச் சார்ந்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா என்பவர் மேற்கொண்டார். இத்தகைய பொய் செய்திகளை பரப்பியதால் தமிழ்நாட்டு காவல்துறை இவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய தனிப்படை பிகாருக்கு விரைந்தது. அவரோ தனக்கு முன் ஜாமீன் தரக்கோரி தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்கி மார்ச் 20 தேதிக்குள் தவறான தகவல் குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

பிஜேபி கும்பலின் இந்தப் பச்சைப் பொய்யினை எப்பொழுதும் தமிழ்நாட்டினைப் பற்றி அவதூறு செய்திகளையே பரப்பும் வட இந்திய ஊடகங்களும், தமிழர்களுக்கு எதிராகவே எழுதும் பார்ப்பனப் பத்திரிக்கையாளர்களும் உடனுக்குடன் பரப்பினர். இதனால் வட மாநில மக்களிடையே கடுமையான பதட்டம் உருவானது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நபர்கள் கலவரத்தைத் தூண்டும் வகையில் மிகவும் வேகமாக 30 போலி வீடியோக்களை சமூக வலைதளங்களிலும் பரப்பி விட்டனர். 

வேறுவேறு காலகட்டத்தில் நடந்த சில தாக்குதல் சம்பவங்களைத் தொகுத்து இந்த போலி வீடியோக்களை உருவாக்கியின்றனர். அவை, 

  • கோயம்புத்தூரில் 2023 பிப்ரவரி 13 தேதி நடந்த இரண்டு ரவுடிகளுக்கு நடந்த சண்டை, இச்செய்தி அப்போது ஜெயா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியது.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் என்ற இடத்தில் பிப்ரவரி 19 தேதி நடந்த வழக்கறிஞர் மீதான தாக்குதல், இச்செய்தி அப்போது டைம் ஆஃப் இந்தியா வந்தது.
  • ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் ஜனவரி 22 தேதி ஒரு கும்பல் இரும்பு கம்பியால் ஒருவரை தாக்குதல், இச்செய்தி அப்போது பல்வேறு செய்தித்தாள்களில் வெளிவந்தது.
  • பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் 2021 ஆகஸ்டு 8ஆம் தேதி ஒரு கும்பல் ஒருவரை கோடாரியின் மூலம் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் வைத்து தான் பாஜகவினர் பல்வேறு மாநிலங்களில் பீகார் தொழிலாளிகள் மிக கொடுமையாக தாக்கப் படுகிறார்கள் என சட்டசபை வரை காண்பித்து அமளியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஸினால் பரப்பப்பட்ட காணொளிகள் போலியானவை எனவும், இந்தப் போலியான செய்தியின் பின்னுள்ள  உண்மையான தகவலையும் Alt news என்கிற சமூக ஊடகவியலாளரான முகம்மது சுபைர் என்பவர் கண்டறிந்து வெளிப்படுத்தினார். ( https://may17kural.com/wp/hindutvas-targeted-zubair/)

பீகார் மாநிலத்தைச் சார்ந்த பவன் யாதவ் என்பவரின் குடும்பமும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த உபேந்திரதாரி என்பவரது குடும்பமும் திருப்பூரில் அருகருகே வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே நடந்த குடும்ப தகராறில் பவன் யாதவை உபேந்திரதாரி வெட்டியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். இந்தத் தகவலை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை உறுதி செய்தது. அதன்படி தப்பியோடிய உபேந்திரதாரியை ஜார்கண்டில் வைத்து கைது செய்துள்ளனர். தனிப்பட்ட முறையில் இரு வடமாநிலத்தவருக்கு இடையே நடந்த சண்டையைத் தான் 12 பீகாரி தொழிலாளிகளை வெட்டி விட்டார்கள் என அவதூறாகப் பரப்பி விட்டது ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவாரக் கும்பல். வேறு கொலை சம்பவங்களில் எடுக்கப்பட்ட காணொளிகளை இந்தப் போலி செய்தியுடன் கோர்த்து விட்டு கலவரங்களை உருவாக்க நினைத்தது. 

ஆளும் பாஜக அரசின் கைக்கூலிகளாக எந்த வித ஊடக அறமுமின்றி செயல்படும் வட இந்திய ஊடகங்கள் இந்தப் போலியினை சிறப்புச் செய்தியாக வெளியிட, அதனை பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களும் உண்மையென நினைக்கும் அளவுக்கு ஒளிபரப்பினர். 

இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பீகார் சட்டமன்றத்தில் விவாதமாகியது. பீகார் மாநில அதிகாரி குழுவினர் தமிழ்நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் உணவகம், வணிகம், தொழில் மற்றும் கட்டுமான சங்க சார்ப்பாளரிடம் இந்நிலைமை குறித்து கேட்டறிந்து “எவ்வித சிக்கலும் இல்லை, இந்தச் செய்தி வதந்தியே” என்றும் அறிக்கை அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு விளக்கமளித்து வீடியோ பதிவும் அளித்துள்ளார்.

மக்களுக்குத் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தைப் பற்றி சிந்திக்காமல் எப்போதும் மனிதர்களை சாதி, மதம், இனம் என மக்களிடையே பிளவை உண்டாக்கி அதில் ஆட்சி செய்வதே வாடிக்கையாக கொண்டிருக்கும் கட்சி தான் பாஜக, இதற்கு உறுதுணையாக இருப்பது ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கும்பல்கள். அதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் வருமானமின்றி தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஒவ்வொருநாளும்  லட்சக்கணக்கானோர் வேலை தேடி வருகின்றனர். அப்படி வந்தவர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டு,  தங்களது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வைத்து, ஏதாவது முக்கிய பண்டிகையின் போது மட்டும் ஊருக்கு போவது என்று வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

பிஜேபி நினைத்தால் பொய் செய்தியைக் கூட உண்மையாக்க முடியும் என உள்துறை அமைச்சர் அமித்சா 28.செப்.2018 ஆம் ஆண்டு இராஜஸ்தானில் நடந்த பிஜேபியின் தகவல் தொழில்நுட்ப அணியின் கூட்டத்தில் பேசினார். பல போலியான செய்திகளைக் கட்டமைத்து ஆட்சியை பிடித்த மோடி கும்பலுக்கு இது எப்படி தெரியாமல் போகும். எப்படியாவது  ஒரு கலவரத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி அதன் மூலம் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்தை பிடித்துவிட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பாஜக. இந்த போலி செய்தி குறித்து இதுவரை வாய்திறக்காமல் கள்ளமவுனம் சாதிப்பதிலிருந்தே இது இவர்களின் திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் மக்களிடத்திலே ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் தான் பிஜேபியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலையும் பிகார் பிஜேபி தலைவர்கள் என்னிடம் தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து பேசினார்கள் என்ற ஒப்புதல் வாக்குமுலத்தை ஊடகங்களின் முன் சொன்னார். மேலும் சமீபத்தில் கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைக் கூட தனது அரசியல் செல்வாக்கை உயர்த்த பய்னபடுத்த நினைத்தது. அதே போன்று ஒரு குழாயடி சண்டையில் ஈடுபட்டு, ஒரு முன்னாள் இராணுவ ஊழியர் இறந்த விடயத்தில், சம்பந்தமேயில்லாமல் தமிழ்நாட்டில் இராணுவ வீர்ர்களுக்கு பாதுகாப்பில்லை என்பது போன்ற ஒரு பொய் பிம்பத்தை கட்டியமைத்தார். அதோடு தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ” நீங்கள் சுடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”  என்று தூண்டி விடும்  தொனியில் மேடைகளில் அண்ணாமலை பேசினார். இப்படி தொடர்ச்சியாக பொய் செய்திகளை பரப்பி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பிஜேபி தான் இப்பொழுது வடநாட்டில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் மீது படுகொலைத் தாக்குதல் நடந்ததாக வதந்திகளையும்  திட்டமிட்டு பரப்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில் சனநாயக சக்திகளின் பணிகளால் வேறு மாநிலங்களைப் போன்று மதரீதியான வன்முறை பெரிதளவில் தலைதூக்காமல் இருக்கிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சூழ்ச்சிகள் உடனுக்குடன் தமிழகத்தில் அம்பலப்பட்டு விடுகிறது. இதனால் எப்படியாவது ஒர் கலவரத்தை உருவாக்கி  மக்களை பதட்டமடைய வைத்து, அதன் மூலம் தங்கள் ஓட்டு அரசியலை வளர்க்க நினைக்கிறது இந்துத்துவ கூட்டம். இந்த கும்பலின் அவதூறுகளை வேரோடு சாய்க்க மிக வேகமாக செயல்பட வேண்டிய தேவையில் இருக்கிறோம். வடநாட்டு மூலதனத்தையும், முதலீடையும் எதிர்க்காத கூட்டம் வடநாட்டுத் தொழிலாளர்களை முதலீடாக வைத்து தங்கள் வன்முறை எண்ணத்தை நிறைவேற்ற நினைக்கிறது. இந்த கும்பலின் சூழ்ச்சிகளை தகர்த்த சனநாயக சக்திகள் அனைவரும் கைக்கோர்த்து பணியாற்றுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »