வரலாற்றில் அமெரிக்கா நிகழ்த்திய மிக மோசமான போர்க்குற்றதிற்கு சான்றாக அமைந்தது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 6-இல் ஹிரோஷிமா மீதும், ஆகஸ்டு 9-இல் நாகசாகி மீதும் தனது அணுகுண்டை வீசி, அங்கிருந்த மக்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொன்றது அமெரிக்கா.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற சிறிது காலத்திலேயே உச்சமடைந்திருந்த பனிப்போரின் வெளிப்பாடாக அமெரிக்கா இந்தத் தாக்குதலை தொடங்கியது. மார்ச் 1945-இல் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் வெடிகுண்டு வீசி ஒரே இரவில் ஓர் லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றது அமெரிக்கா. இந்தத் தாக்குதலினால் ஜப்பானில் பேரழிவு ஏற்பட்டது. ஒசாகாவில் நடந்த விமானத் தாக்குதலில் அந்நகரத்தின் எட்டு சதுர மைல் அளவில் நிலங்கள் அழிக்கப்பட்டன. சுமார் 100 ஜப்பானிய நகரங்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டன.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டினால் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் இந்தப் படுகொலை ஜப்பானின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றவில்லை. ஆகஸ்ட் 9 அன்று ஜப்பானுக்கு எதிராக சோவியத் கூட்டமைப்பு அறிவித்த போர் அறிக்கைதான் அதன் நிலைப்பாட்டை மாற்றியது.
ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டு குறித்த செய்தி அமெரிக்காவில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமெரிக்காவின் போருக்கான செயலாளர் ஹென்ரி எல். ஸ்டிம்சன் (Henry L. Stimson), லட்சக்கணக்கான அமெரிக்கர்களைக் காப்பாற்றவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அந்தத் தாக்குதல் அவசியம் என்று தன் நாட்டின் போர்க்குற்றத்தை நியாயப்படுத்தினார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), “இந்த அணுகுண்டுவெடிப்பு சோவியத்திற்கு எதிரான ஒரு ஆயுதம் (Hammer)” என்று கூறினார்.
அதிபர் ட்ரூமன் அணுகுண்டு தாக்குதல் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது ஜெர்மனியில் நடந்த போட்ஸ்டாம் (Potsdam) மாநாட்டில் வெளிப்படையாகத் தெரிந்தது. ஏனெனில் 1945 ஜூலையில் நடந்த போட்ஸ்டாம் மாநாட்டில் சோவியத் அதிபர் புரட்சியாளர் ஸ்டாலினை நோக்கி, “அமெரிக்காவிடம் அசாதாரணமான அழிவு சக்தியின் புதிய ஆயுதம்” இருப்பதாக கூறியவர் ட்ரூமன்.
ஆகஸ்ட் மாதத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த பேரழிவின் தடம் அழிவதற்குள், அமெரிக்கா போருக்குப் பிந்தைய தனது வலிமையை நிலைநாட்டுவதற்காகவும், ஒரு புவிசார் அரசியல் அதிகார மையமாக தன்னை மாற்றிக் கொள்ளவும் ஒரு எச்சரிக்கை செய்தியாக அணுகுண்டு வீச்சினை பிரகடனப்படுத்தியது.
அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இந்த அதிகாரப் போதையால், ஸ்டாலின்கிராட் முதல் ஷாங்காய் வரையிலான அனைத்து உற்பத்தி ஆலைகளையும் அழிக்க அணுகுண்டை பயன்படுத்தப் போவதாக ட்ரூமன் அச்சுறுத்தினார். இதே போக்கை பின்னர் இங்கிலாந்தும் எதிரொலித்தது. சோவியத் யூனியனுக்கு எதிரான பெரும் போருக்கான திட்டங்களை உருவாக்க இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) உத்தரவிட்டார்.
குறிப்பாக மாஸ்கோவின் மீது அணுகுண்டை வீசும் திட்டத்திற்கு “ஆபரேஷன் அன்திங்கபிள் (Operation Unthinkable)” என்று பெயரிடப்பட்டது. இதுவே அமெரிக்கா-சோவியத் இடையேயான பனிப்போருக்கான தொடக்கமாக அமைந்தது. சில வரலாற்றாசிரியர்கள் இதை “மூன்றாம் உலகப் போர்” என்றும் விவரிக்கின்றனர். “அமெரிக்காவும் சோவியத்தும் நேரடியாகப் போரிடவில்லை என்றாலும், எப்போதும் போர் நடக்கும் என்ற அச்சுறுத்தல், அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை சிதைக்கும்” என்று இத்தாலிய வரலாற்றாசிரியர் டொமினிகோ லோசுர்டோ (Domenico Losurdo) எழுதி உள்ளார். எனவே “நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவில் நடந்த அணுகுண்டுவெடிப்பினால் தொடங்கிய போரை ‘பனிப்போர்’ என்று அழைப்பது பொருத்தமற்றது” என்றும் லோசுர்டோ கூறினார். ஏனெனில் அது பனிப்போரை விட அதிக தாக்கங்களைக் கொண்டதாக இருந்தது.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டு வெடிப்பின் மிச்சங்கள் இன்றும் ஜப்பானிய மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அமெரிக்கா தனது அதிகார மமதையினாலும் ஆயுத வெறியினாலும் இன்னும் அணு ஆயுதங்களைக் கைவிடவில்லை. 2022-இல் கூட, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், “அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் முக்கிய நலன்களைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்கா பரிசீலிக்கும்” என்று கூறினார்.
‘அணு’ என்பது வெறும் அச்சுறுத்தல் அல்ல, அது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான ஆயுதம் என்பதை ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த பேரழிவு நமக்கு நினைவூட்டும். இந்தப் பேரழிவு நடந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகும், உலகெங்கும் அணுஆயுதங்களும் அணு உலைகளும் இன்றும் குறையவில்லை. முன்பு வரலாற்றில் அணு ஆயுதங்களை பயன்படுத்திய ஒரே நாடாக அமெரிக்கா இருந்தது. ஆனால் இப்போது அணு ஆயுதத்தின் வேர்கள் உலகம் முழுவதும் பரவிவிட்டன.
குறிப்பாக, மக்கள் வாழ்விடங்களில் அதிலும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாராத்திற்குப் பெரிதும் நம்பும் கடலுக்கருகில் அணு உலைகளை அமைப்பது, அந்த முழுப்பகுதியையும் வாழத் தகுதியற்றதாக மாற்றும் என்று பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முறையிட்டும் அணு உலைகள் இயக்கப்படுகின்றன. இதே சூழலில் தான் கூடங்குளத்தில் நாசகார அணு உலை இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் முன்னணி விஞ்ஞானிகள் அறுபது பேர் ஆலையின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அரசுக்கு கடிதம் எழுதியதையும் மீறி அது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகில் தகுந்த சோதனை ஓட்டம் இல்லாமல் செயல்படும் ஒரே அணு உலை இதுவே.
இன்றும் வழக்குகளுக்கு அஞ்சாமல் அணு உலைக்கு எதிராகப் போராடும் ஆயிரக்கணக்கான மக்களின் மன உறுதிதான் நம் குழந்தைகளின் பாதுகாப்பான சுற்று சூழலுக்கு அடித்தளம். எனவே மனித குல எதிரியான இந்த அணுசக்தியை அகற்றவும், சுற்று சூழல் காக்கவும் நம் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவோம்.