வெங்கைய்யா நாயுடு: இருண்டகாலத்தின் சபாநாயகர்

தலையங்கம் – ஆகஸ்ட் 9, 2022

திரு.வெங்கைய்யா நாயுடு அவர்களின் துணை குடியரசுத் தலைவர் காலம் நீட்டிக்கப்படாமல் ஆகஸ்டு 10, 2022-ம் தேதியோடு மோடி அரசால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. டில்லியிலிருக்கும் தனது அரசியல் போட்டியாளர்களை மாநில அரசியலுக்கும், பிராந்தியத்தில் வலிமையாக இருக்கும் போட்டியாளர்களை ஒன்றிய அரசின் அலங்கார பதவிகளுக்கும் கொண்டு சென்று வெற்றிகரமாக தனது சர்வாதிகாரப்பிடியை பாஜகவின் மீது இறுக்கிய குஜராத்தி இரட்டையர்களின் சூழ்ச்சியின் மறக்கவியலா சம்பவத்தில் வெங்கைய்யா நாயுடுவுக்கான துணை குடியரசுத் தலைவர் பதவியும் ஒன்று. பாஜகவின் உள் அரசியல் விளையாட்டுகளுக்கான களமாகவும், அவர்களது அடையாள அரசியலுக்கான பதவிகளாகவும் இப்பதவிகள் அமைந்திருக்கின்றன.

இந்நிலையில் திரு.வெங்கைய்யா நாயுடுவின் காலத்தில் இந்திய சனநாயகத்தின் இருள்மிக்கப் பக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பளபளப்பான பாராட்டுகளால் மூடிமறைக்கப்பட முடியாத நிகழ்வுகளை இவரது காலத்தில் ராஜ்யசபா எனும் மாநிலங்களவை கண்டது. துணைக் குடியரசுத் தலைவராக இவரே மாநிலங்களவைக்கு சபாநாயகர். இந்தியாவின் மிகமோசமான சட்டத்திருத்தங்களை மிக எளிதாக பாஜகவின் விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றிக் கொடுத்தவர் திரு.வெங்கைய்யா நாயுடு. 2019-ம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு எதிர்க்கட்சிகளின் அரசியல்களமாக மாநிலங்களவையே விளங்கியது. இந்த அவையில் பாஜகவை எதிர்கொள்ளக்கூடிய வலிமையை எதிர்க்கட்சிகள் பெற்றிருந்தன. பெரும்பான்மை பலத்தோடும், கடுமையான எதிர்க்கட்சி எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாக்கள் மாநிலங்களவை ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்ட சமயத்தில் தீவிர விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரின.

இவ்வாறான மிகமுக்கிய சட்டமசோதாக்களாக 2019-ல் இரண்டாம் முறையாக பாஜக வெற்றி பெற்ற காலகட்டத்தில் கவனத்திற்குரியவையாக காசுமீர் மாநிலம் குறித்த திருத்த சட்டம், காசுமீரின் சட்டப்பாதுகாப்பு உரிமையாக இருந்த 370 பிரிவு நீக்கம், மற்றும் காசுமீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்படுதல், காசுமீர் மூன்று பாகங்களாக பிரிக்கப்படல் (The Jammu & Kashmir Reorganisation Bill) எனும் இந்தியாவை உலுக்கிய இந்த திருத்தங்கள் மக்களவையில் கடுமையான நெருக்கடியோடு நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையின் விவாதத்தை எதிர்நோக்கி இருந்தது. இம்மசோதா மீதான விவாதத்தின் பொழுது எதிர்ப்பு தெரிவித்த காசுமீரின் பி.டி.பி கட்சியின் நசீர் அகமது, ஃபயாஸ் ஆகிய மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். ஜம்மு-காசுமீர் மாநில மறுஒழுங்கமைப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நசீர் அகமது அரசியல் சாசனத்தை கிழித்து எறிந்தார்.

காசுமீர் முழுமையான ஊரடங்கில் அடக்கிவைக்கப்பட்டு, அம்மாநிலத்தின் மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, பிற அரசியல் தலைவர்களும் சிறைப்படுத்தப்பட்ட பின்னர் இம்மசோதாவின் மீதான சனநாயகரீதியான விவாதத்தினை அனுமதிக்காமல் நிறைவேற திரு.வெங்கைய்யாநாயுடு அனுமதித்தார். இந்தியாவின் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட, ஐ.நா.வின் துவக்கக்காலத்தில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான காசுமீர் மக்களின் உரிமைக்குரல் இவ்வாறு திரு.வெங்கய்யா நாயுடுவின் தலைமையில் மாநிலங்களவையில் நசுக்கப்பட்டது.

இதே போன்ற நிலையை 3 வேளாண் மசோதா விவாதத்தின் பொழுதும் மாநிலங்களவை கண்டது. வேளாண் மசோதா விவாதத்தின் பொழுது மாநிலங்களவையில் திரு.வெங்கய்ய நாயுடு இல்லாமல் போனார். மசோதா விவாதத்தின் பொழுது பல உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரசின் ட்ரேக் ஓ பிரைன் சொன்னதை போல இவரது காலத்தில் ஒருமுறை கூட திரு.மோடி எதிர்க்கட்சி கேள்விகளுக்கு பதில் சொன்னதில்லை. நாட்டை உலுக்கிய உத்திரப்பிரதேசத்தின் உன்னாவ் கூட்டு பாலியல் வன்முறை குறித்த விவாதத்தை அனுமதிக்க மறுத்தார். மிக எளிய காரணங்களை சுட்டிக்காட்டி சனாநாயாக விவாதங்களை மறுத்தவர். இவரது காலத்தில் எதிர்க்கட்சிகள் மாநிலங்கள் அவையில் பாஜகவை நெருக்கடிக்குள்ளாக்கும் விவாதங்களை அனுமதிக்க மறுத்தவர் எனும் புகழ் இவருக்குண்டு.

இதுமட்டுமல்ல, இவரது குடும்பத்தினர் பெருநிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய என்.ஜி.ஓ.வாக இருக்கும் ஸ்வர்ண பாரத் ட்ரஸ்ட் என்பதற்கு அரசின் பல உதவித்திட்டங்கள் கிடைப்பதாக குற்றச்சாட்டும் உண்டு. துணைக் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் இவரது பயணங்களில் பெரும்பாலானவை இவரது சொந்த மாநிலமான ஆந்திராவில் அவரது குடும்பத்தினரின் நிறுவன நிகழ்வில் அரசு பிரமுகராக பங்கேற்கும் பணியை திறம்பட செய்து வந்தார். அரசு பதவியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என இவரது பயணங்களை உற்று நோக்கினால் பிடிப்படலாம். நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக இருந்த சமயத்தில் இவரால் பலனடைந்த நிறுவனங்கள் இவருடைய குடும்பத்தினரினால் நடத்தப்படும் ஸ்வர்ண பாரத் ட்ரஸ்ட்டிற்கு நிதியை ஒதுக்குவதான குற்றச்சாட்டும் எழுந்ததுண்டு. இவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் டொயோட்டா முகவர் நிறுவனத்தின் மூலமாக தெலுங்கானா அரசிற்கு தேவையான வாகனங்கள் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதை பலரும் அறிவர்.

இதுமட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் போதும், ஆந்திர சேஷாசலம் காட்டில் சுட்டுப் படுகொலை செய்யப்படட 20 தமிழர்கள் கொலை சமயத்தின் பொழுதும் இவரது பெயர் தமிழக அரசியல் வட்டத்தில் பெரும் கேள்விகளை எழுப்பியதை மறக்க இயலாது. இப்படியான முழுமையான பாஜக ஆதரவாளராக 2021-ல் 12 மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்களையும், 2022 ஜூலையில் 20 எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்து, இந்திய சனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதில் தன்னால் இயன்ற கைப்பிடி மண்ணை குழியில் போட்ட பெருமையோடு விடைபெறுகிறார் திரு.முப்பவரப்பு வெங்கையா நாயுடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »