தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி
2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் சிறந்த நாகரீகமடைந்த இனமாக வாழ்ந்து வந்தனர். சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி கீழடி அகழ்வாராய்ச்சி வரை இது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. நாகரிகமடைந்த இனத்திற்கே உரிய கல்வி அறிவு, தொழில்கள், சுகாதாரமான குடியிருப்புகள் என அனைத்து துறையிலும் தமிழர்கள் சிறந்து விளங்கி இருந்தனர். அன்றைய காலத்தில் எழுதப்பட்ட திருக்குறள் இன்றைக்கும் வாழ்க்கைக்கு உதவக்கூடிய கருத்துகளைக் கொண்டிருக்கின்றது என்பதே தமிழர்களின் கல்வியின் மேன்மையை புரிந்து கொள்ள உதவும் சான்றுகள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிவார்ந்த கல்வியை பெற்றிருந்த இனம் கல்வி அறிவு இல்லாத கைநாட்டு வைக்கும் இனமாக மாறிப்போன கொடுமைக்கு ஆளானது எப்படி? நம்மிடம் இருந்த தொழில்களும் திறன்களும் கலையப்பட்டு உணவுக்காக அடிமையாய் மாறிய வரலாறு தான் என்ன?
மத்திய ஆசியாவிலிருந்து நாடோடிகளாக வந்த ஆரிய இனக்குழுவின் வேத மத கருத்துக்களின் ஆதிக்கத்தால் தமிழக மன்னர்களை சூழ்ச்சியால் தன்வயப்படுத்தி, இந்நாட்டின் பூர்வகுடிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு, மன்னர்கள் துணையுடன் அடிமைகளாக்கப்பட்டனர். ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மன்னர்களிடையே ஆட்சிகள் மாறினாலும் திராவிட மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு உடல் உழைப்பு மட்டுமே தொழிலாக நிர்ணயிக்கப்பட்ட அடிமை வாழ்வினையே அனுபவித்தவந்தனர்.
ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பன சூழ்ச்சிக்கு இரையான கல்வி 20-ம் நூற்றாண்டில் நீதிக்கட்சியின் தோற்றத்தால் விடுதலை அடைந்தது. பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் எளிமையாக கல்வி கிடைத்ததை பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பனிய வெறிபிடித்த கூட்டம் அனைவருக்குமான கல்வியை சிதைக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்களை தீட்டியும் தோல்வியுற்றம் அடங்காது தற்போது புதிய கல்விக் கொள்கை எனும் நவீன வடிவமெடுத்து நம் கல்வியை வேட்டையாட கோர பசியோடு வெறிபிடித்து அழைந்துக்கொண்டிருக்கிறது.
குலக்கல்வியும் பொதுக்கல்வியும்
“சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது” என்றும் “பார்ப்பனர்களுக்கு சொந்தமான வேதங்களை சூத்திரன் ஒருவன் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும், வேதத்தை படித்தாலோ அவனுடைய நாக்கை வெட்ட வேண்டும்” என்றும் மநுவின் சனாதன விதிகளை பின்பற்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகப் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு கல்வியும் அரச வேலை வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வந்தது.
19-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்ச் சமூகத்தில் குருகுல கல்வியே நடைமுறையில் இருந்து வந்தது. இக்கல்வி முறையானது சாதி – பொருளாதார அளவை மையமாகக் கொண்டிருந்ததால், அக்கல்வி முறையை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது, கேள்வி கேட்கவும் மாட்டார்கள். பின்னர், ஆங்கிலேய ஆட்சியின் வருகைக்குப் பின் குருகுல கல்வி முறைக்கு மாற்றாக பொதுக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்களின் இந்தக் கல்வி அறிமுகமானது இந்தியத் துணைக்கண்ட கல்வி வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம். நீதிக்கட்சியும் இந்த கல்விமுறை பார்ப்பனரல்லாதோர் அனைவருக்கும் கிடைக்க சட்டவழிவகை செய்தது. ஏனெனில், இது குருகுல- வேத – பார்ப்பனக் கல்வி முறையை முடிவுக்குக் கொண்டு வந்த பொதுக்கல்வி முறை ஆகும்.
நீதிக்கட்சி ஆட்சியில் கல்வி வளர்ச்சி
பிரம்மாவின் தலையில் பிறந்த பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி உரித்தானது என்ற சமூக கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து பழகி, தற்குறிகளாக அடிமைகளாக இந்து சனாதன மதத்தின் பிடிக்குள் சிக்கி அல்லல்பட்டு வந்த பார்ப்பனரல்லாத மக்களுக்கு கல்வியை அளிக்க நீதிக்கட்சி அரசு 09.03.1923 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டது. அது அனைத்து மக்களுக்கும் கட்டாயக் கல்வியை வழங்கும் என்று பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்வில் புதிய வாசலை திறந்து வைத்தது. அனைவருக்கும் கல்வி என்பதே சனாதனத்திற்கு எதிரானதாக இருக்கும் போது கல்வியும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்ற ஆணை சனாதன இந்துமதத்தின் மீது விழுந்த பேரிடியாகும்.
இந்திய துணைக்கண்டத்தில் நீதிக்கட்சி தான் முதன்முதலாக அனைவருக்கும் கல்வி என்பதை சட்டமாக்கியது.
நீதிக்கட்சி ஆட்சி அமையும்வரை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு சமஸ்கிருதம் கட்டாயம் என்ற விதியை மாற்றி அந்நாள் வரை பார்ப்பனிய கோட்டையில் சிறைபட்டுக்கிடந்த மருத்துவக் கல்வி அனைத்து தரப்பினுருக்கும் கிடைத்தது.
சாதியின் கொடூரங்களில் சிக்கித்தவித்த தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தனிப்பள்ளிகளிலிருந்து விடுதலை அளித்து பொதுப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தார்கள்.
வறுமையின் பிடியில் இருந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியை எளிதாக்கும் விதத்தில் அவர்கள் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று எட்டாக்கனியாக இருந்த கல்வியை எளிமையாக கிடைக்கும்படி வழிவகை செய்தது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பள்ளி சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகளுக்கான அரசு வழங்கும் நிதியை நிறுத்த சட்டம் இயற்றியது நீதிக்கட்சி அரசு.
ராஜாஜியின் ‘பார்ப்பனரல்லாதார் கல்வி’ விரோத போக்கு
1952ல் முதல் முறையாக அனைவரும் ஓட்டு உரிமை கிடைத்த பொதுத்தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமலேயே தன் பரம்பரைக்கே உரித்தான குறுக்கு வழியில் முதல்வர் ஆனவர் ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் தொடங்கியது பார்ப்பனிய மநுதர்ம அரசாட்சி.
“ஆரம்பக் கல்வி திட்டம்” எனும் பெயரில் கல்வி திட்டமொன்றை அறிமுகப்படுத்தி கிராமந்தோறும் நீதிக்கட்சியால் பார்ப்பனரல்லாத மக்களும் கல்வியறிவு பெற்று வாழ்க்கையில் மேம்பாடடைய உருவாக்கப்பட்ட தொடக்க, இடைநிலை பள்ளிகளில் 6000 பள்ளிகளை மூடி உத்தரவிட்டார்.
3 மணி நேரம் கல்வி, 3 மணி நேரம் குலத்தொழில் என்று கொடுஞ்சட்டமியற்றினார்.
விவசாய கூலிகளின் குழந்தைகளுக்கு அவர்கள் குழந்தை பருவம் சிதைந்து போக பள்ளி வளாகத்திலே தொழிற்கல்வி உருவாக்கினார்.
இச்சட்டத்திற்கு முன்னதாக சென்னை திருவான்மியூரில் 29-06-1952 அன்று நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசும்போது,
“அவனவன் ஜாதாதொழிலை அவனவன் செய்ய வேண்டும்; வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை; குலத்தொழிலை செய்தால் போதும். எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்” என்பதாக பார்ப்பனிய ஆணவத்தோடு ராஜகோபாலாச்சாரி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குலக்கல்வியை ஒழித்த திராவிட இயக்கம்
ஆரம்பக்கல்வி ஒன்றே சாதி மத கோரப்பிடியில் அடிமைப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாதார் மக்களின் விடுதலையை பெற்றுத்தந்து வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகுக்கும் முதல் படி என்பதை உணர்ந்து கல்வியில் சீர்திருத்தம் செய்த நீதிக்கட்சியின் கல்விப்புரட்சியை ஒரே சட்டத்தால் உடைத்தெறிந்து பார்ப்பனக் கோட்டைக்குள் கல்வியை சிறைபிடிக்கும் சனாதனத்தை நிலை நிறுத்தினார் ராஜாஜி.
குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்க திராவிடர் கழகம் மட்டும் போராடினால் போதாது; அனைத்து தரப்பு மக்களும் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது ஒரு கட்சியின் போராட்டமல்ல; மக்களின் போராட்டம். அதனால் எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த தந்தை பெரியார் பெரும் மக்கள் திரள் போராட்டத்தை வடிவமைத்திருந்தார்.
ராஜாஜிக்கு எதிரான இந்தப் போரை ஆரிய – திராவிட போர் என அடையாளப்படுத்தியது பார்ப்பனக் கூட்டம். பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க “பார்ப்பானே! தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!” என்ற இயக்கத்தை பெரியார் முன்னெடுத்து, “பார்ப்பனர்களை சமூக விலக்கம் செய்யுங்கள்; அவர்களுக்கு யாரும் துணி துவைக்காதீர்கள்; சவரம் செய்யாதீர்கள்; வயலில் உழாதீர்கள்; குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பார்ப்பானை அழைக்காதீர்கள்; பார்ப்பான் பூசாரியாக இருக்கும் கோயிலுக்குப் போகாதீர்கள்; பட்டினி கிடக்க நேரிட்டாலும் பார்ப்பான் உணவு கடைகளை புறக்கணியுங்கள்; பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்காதீர்கள்!” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. இதனால் மக்களிடையே நடமாட முடியாத சூழ்நிலையை பார்ப்பனர்களுக்கு உருவானது. இது ராஜகோபாலாச்சாரி மீதே கோபமாக விடிந்தது.
ராஜாஜியின் மனுதர்ம குலக் கல்வியை எதிர்த்து பெரியார் படைதிரட்டி தெரு தெருவாக நடந்து சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அம்பலப்படுத்தினார்.
குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்க தந்தை பெரியாரின் இடைவிடாத தொடர் போராட்டங்களால் நாடு எங்கும் எழுந்த எதிர்ப்பும் காங்கிரஸ் கட்சியிலும் உருவான எதிர்ப்பும் மக்கள் மன்றத்தில் திரண்ட எதிர்ப்பும் ஒருசேர ஆணவ ராஜாஜி ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்டு குலக்கல்வியும் ஒழிக்கப்பட்டது.
ராஜாஜிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக வந்த காமராஜர், தந்தை பெரியாரின் கோரிக்கைகளை நிறைவேற்றி வந்தார். தந்தை பெரியாரின் கோரிக்கைக்கு இணங்க குலக்கல்வி திட்டத்தை ஒழித்து, ராஜாஜி மூடிய அனைத்து பள்ளிகளையும் திறந்ததோடு, புதிதாக பல பள்ளிகளையும் திறக்க காமராஜர் உத்தவிட்டார். மேலும், பள்ளி மாணவர்கள் வறுமை காரணமாக பள்ளியை விட்டு நின்றுவிடக் கூடாது என்று மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார்.
வரலாறு நெடுக தமிழர்களின் கல்வி உரிமைக்கு எதிரான பார்ப்பன சூழ்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை புதிய புதிய பரிணாமங்களோடு புதிய வடிவத்தோடு பார்ப்பனரல்லாதார் கல்வியை மறுக்க, பறிக்க சமகாலத்தில் குலக்கல்வியை நவீனப்படுத்தி புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் அவதாரம் எடுத்துள்ளது.
நீட் எனும் உயிர்க்கொல்லி ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை எட்டாக்கனியாக்குவதோடல்லாமல் ‘தகுதி’ எனும் பெயரில் இந்தியாவிலே முனனோடியான தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பை பார்ப்பன கோட்டைக்குள் சுவீகரிக்க முயற்சிக்கிறது. அதுவே மருத்துவர் அனிதாவின் மீதான அரச படுகொலை மூலம் அம்பலப்பட்டது.
சமூகநீதிக்கு எதிராக கல்விக் கொள்கையிலும் மாநில உரிமைக்கு எதிராக சகல துறைகளிலும் மாநிலங்களின் பங்களிப்பு ஏதுமின்றி தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து வரும் ஒன்றிய அரசின் பாசிச போக்கை சுட்டெறித்திட தமிழர்களாய் ஒன்றிணைந்து அண்ணா முன்னெடுத்த மாநில சுயாட்சி எனும் சுடர்நெருப்பை ஏந்துவோம்..!