
அனகாபுத்தூரில் உள்ள 700 வீடுகளை இடிக்க காவல்துறை குவிக்கப்பட்ட செய்தியை அறிந்ததையடுத்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவ்விடத்திற்கு சென்று அம்மக்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைவரும் கைகோர்க்க வாருங்கள் என அழைப்பு விடுத்ததை தனது முகநூல் கணக்கில் மே 10, 2025 அன்று பதிவு செய்தது.
அனகாபுத்தூரில் ஏழைகளின் வீடுகளை வரும் 12ம் தேதி இடிப்பதற்காக கடமை உணர்ச்சியுடன் அதிகாரிகள் அணி திரண்டிருக்கிறார்கள். வேறெப்போதாவது அதிகாரிகள் கடமையுணர்வோடு, காலந்தவறாது வேலைசெய்ததை கவனித்தீர்களென்றால், அது குடிசைகள் இடிக்கப்படுவதாகத் தான் இருக்கும். காரணம் இது லாபம் தரக்கூடியது. ஏழை வீடுகள் அகற்றப்படுவதற்காக அரசு இயந்திரம் சுறுசுறுப்பாகவே வேலை செய்கிறது. அனகாபுத்தூர் வீடுகளை 2023ல் இடிக்க வந்தவர்கள், ஏன் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது?
‘காஸாக்ராண்ட்’ எனும் சென்னையின் பெரிய ரியல்எஸ்டேட் கம்பெனியின் வீடுகள் அனகாபுத்தூர் குடியிருப்பிற்கு எதிர்கரையில் வருகிறது. பல்லாவரம்-குன்றத்தூர் சாலையில் மேலுமொரு மாபெரும் அபார்ட்மெண்ட்டுகளை காஸாக்ராண்ட் கட்டுகிறது. அதே ஆற்றின் ஓரம், சற்று தொலைவில் மேலுமொரு ப்ராஜெக்ட்டை காஸாக்ராண்ட் கட்டுகிறது. இவ்வாறாக இப்பகுதியில் அடுத்தடுத்து ஆற்றின் ஓரம் நடக்கும் காஸாக்ராண்ட்டின் அபார்ட்மெண்ட்டின் சுற்றுச்சுவர், ப்ராஜெக்ட் எல்லை ஏன் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து வருகிறது என கேட்க யாருமில்லை. ஊடகங்கள் கேட்பதில்லை. எதிர்க்கட்சிகள் பேசுவதில்லை. ஊழலுக்கு எதிராக போராடுவோர் எவரும் பெருநிறுவனத்தையோ, வீடு இடிப்பையோ கேட்பதில்லை.
இந்த காஸாக்ராண்ட் திட்டங்களுக்காக மார்க்கெட்டிங் வேலைகள் நடக்கின்றன. ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டினால், வெள்ளநீர் செல்ல வழியில்லாமல் தவிக்கும். இதை சரிசெய்ய எதிர்கரையில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். ஆகவே அனகாபுத்தூர் குடிசைகள் அகற்றப்படுவதில் வியப்பில்லை. 2008ல் பட்டா தருவதற்கு ரசீது கொடுத்திருக்கிறார்கள். CMDA இப்பகுதியை குடியிருப்பு பகுதியென அறிவித்திருக்கிறது. ஆனால், இதுநாள்வரை பட்டா தரவுமில்லை, பதிவு செய்யவுமில்லை, தற்போது புதிய வரைபடத்தை காட்டி வீடுகளை இடிக்க வருகிறார்கள்.

(Blue line- Actual River width, This line was compromised on casagrande area. Yellow marked area is Casagrande’s new upcoming project. The Pink line is the proposed CRRT river compund -none knows the basis of this design. Pink marked area is 60 year old residential area of workers)
திடீரென 2023ல் இந்த புதிய சர்வே மேப் வந்திருக்கிறது. யார் செய்தார்கள்? எந்த துறையின் கீழ் இது நடந்திருக்கிறது? என எந்த கேள்வியையும் ஊடகங்கள் எழுப்பவில்லை.
தனியார் நிறுவனம் இந்த சர்வே-வரைபடத்தை தயார் செய்து, குடியிருப்பு என CMDA அறிவித்த இடத்தில் அடையாறுக்கு கரை எழுப்ப குறித்திருக்கிறது ( Purple-pink color dotted line). இந்த நிறுவனத்தை CRRT எனும் சென்னை நதிநீர் சீரமைப்பு தொண்டு நிறுவனத்தின் கரையெழுப்புதலுக்காக குடியிருப்பு பகுதிகள் குறியிடப்படுகின்றன. புதிய வரைபடத்தின்படி CMDA அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறது இந்த தனியார் தொண்டு நிறுவனங்கள். CMDA அங்கீகரித்த இடத்தில் குடியிருக்கும் மக்களை
இந்த தனியார் நிறுவனம், தொண்டு நிறுவனத்தின் உத்தரவின் கீழ் அரசாங்க அதிகாரிகள் மே12ம் தேதி இடிக்க இருக்கிறார்கள். இது அநியாயமில்லையா? இப்பகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகளிடம் ஏதும் பேச இயலவில்லையென கையை விரித்துவிட்டார். 08 மே காலை இரண்டு மேனாள் எம்.எல்.ஏக்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் பங்கேற்க, அங்கே நடந்த ஆர்பாட்டத்தை ஊடகங்கள் படம்பிடித்தன. ஆனால் செய்தியாக்கவில்லை.

யார் இந்த CRRT? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவரும் இல்லாத, அரசு அதிகாரிகள் மட்டும் பொறுப்பு வகிக்கும் ஒரு தொண்டு நிறுவனம். இந்த நிறுவனம் ஒரு தனியார் சர்வே நிறுவனத்திடம் ஆற்று எல்லைகளை அளவீடு செய்து கரைகளை மறுவரை செய்கிறது. இந்த சர்வே வரைபடங்களை குறித்து எவரும் கேள்வி கேட்க இயலாது. இந்த வரைபடங்கள் மீது சட்டமன்றம் கேள்வி எழுப்பாது. அமைச்சர்-ச.ம.உறுப்பினர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள். ஆனால் இந்த தொண்டு நிறுவனத்தை முன்வைத்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவர்களது வாழ்விடத்திலிருந்து வேரோடு பிடுங்கி சென்னையிலிருந்து 20-30 கி.மீ தொலைவுக்கு வீசப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி வாய்ப்பு நெருக்கடிக்குள்ளாகிறது.
இவர்களின் அராஜகத்தை சொல்ல வேண்டுமானால், தாம்பரம் (கிஷ்கிந்தா சாலை) அஞ்சுகம் நகர் என குடியிருப்பை 5 ஆண்டுகளுக்கு (அதிமுக காலத்தில்) கட்டினார்கள். இதில் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வெளியேறியவர்களை குடியேற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த குடியிருப்பே அடையாறு ஆற்றிலிருந்து 100 அடி தொலைவில் இருக்கிறது. இப்பகுதியில் குடியிருந்த 100க்கும் மேற்பட்ட குடிசைவாசிகளை, ஆற்றை ஆக்கிரமிப்பு செய்கிறார்களென அப்புறப்படுத்தி, அதே இடத்தில் அஞ்சுகம் நகர் கட்டப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியிலும் கேள்வியில்லை. வெளியேற்றப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்களென இதுவரை தெரியவில்லை. அஞ்சுகம் நகர் கடந்த ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிப்போனது, அனகாபுத்தூர் மூழ்கவில்லை.
குடியிருப்பு அகற்றப்படுதலுக்கு பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது. குடியிருப்பை கட்ட பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் குடியேறும் மக்களிடத்தில் ஜி.எஸ்.டியோடு இதற்கான பணம் வசூலிக்கப்படுகிறது.
மக்களை வதைக்கும் அரசாங்கத்தின் அநியாயத்தை யார்தான் கேள்வி கேட்பது?சென்னையில் ஆற்றங்கரையோர மீட்பு எனும் பெயரில் கடந்த 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் என்று குடிசைகள், வீடுகள் அகற்றப்பட்டன. இதை அரசு உத்தரவு எனும் பெயரில் செய்தார்கள், நீதிமன்ற தீர்ப்பு எனும் உத்தரவில் செய்தார்கள். எந்த கட்சியாயினும், இதை அதிகாரிகள் தங்குதடையின்றி புல்டோசர்களுடன் சென்று இடித்து தள்ளினார்கள். கூவம், அடையாறு, கோசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் என அனைத்து நீர் தடங்களில் இதை செய்ததற்கான அதிகாரமும், முடிவுகளும் மக்கள் மன்றத்திலோ, மக்கள் பிரதிநிதிகளிடத்திலோ கலந்தாலோசித்து எடுக்கப்பட்டதில்லை.

சென்னைபெருநகராட்சி, குடிநீர்வடிகால்வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட சில துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் கீழ் ஆற்றுக்கரையின் எல்லை, ஆக்கிரப்பு பகுதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட மனை என பிரிக்கப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான ஊர்வகுடி ஏழை மக்கள் கேட்க நாதியில்லாமல் சென்னைக்கு வெளியே வீசப்படுகிறார்கள். இடிக்கப்படும் இவர்களது குடியிருப்பிற்கு அருகே, ஆக்கிரமிப்பாக உயர்ந்து நிற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த 10-15 ஆண்டுகளில் இடிக்கப்பட்டதில்லை.
அடையாறு கரையில் ஷான்ராயல் ஹோட்டல், ஸ்கைவாக்-அம்பா மால் ,சைதை காஸாக்ராண்ட் என பட்டியலை சொல்லலாம். இவற்றிற்கு அருகே இருந்த வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு என இடிக்கப்பட்ட வீடுகளை விட அதிகமாக ஆற்றின் கரையை ஆக்கிரமித்து மின்சாரவாரிய கட்டிடம் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இந்த பகுதி இடிக்கப்படுவதை தடுக்க முயன்று ஒருவர் தீக்குளித்து தன்னை ஈந்தார். ஆயினும் இடித்தார்கள். மே 17 இயக்கமும் பலவேறு இடங்களில் இதற்கான போராட்ட ஆதரவை முன்னெடுத்த போதெல்லாம் நீதிமன்றம், அரசு உத்தரவுகள் என தடை கொடுக்கப்பட்டதை கண்டோம். இதுகுறித்து நீதிமன்றங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே பெருங்கவலை.

இதை படிக்கும் ஒவ்வொருவரும் கேள்வியெழுப்பினால் 500-700 அனகாபுத்தூர் வீடுகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களின் நியாயங்கள் அம்பலம் ஏறலாம். ஏழை எளிய, வாயில்லா பூச்சிகளாக வஞ்சிக்கப்படும் மக்களுக்கு குரல் கொடுப்பது தேசதுரோகமில்லை. கைகொடுக்க வாருங்களென மே 17 இயக்கம் உரிமையுடன் கோரிக்கை வைக்கிறது.
55 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனர்களின் சாஸ்திரா பல்கலைக்கழகத்தினை இடிக்க துணிவற்றவர்கள் ஏழைகளின் வீடுகளுக்காக புல்டோசரோடு வருகிறார்கள்.
மே12ம் தேதி அனகாபுத்தூர்
ஏழை எளியோருக்காக போராட வாருங்கள்.
மே17 இயக்கம்.
10-05-2025