ஹமாஸ்-இசுரேல் போர் பற்றி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் அக்டோபர் 8, 2023 அன்று தனது முகநூல் கணக்கில் செய்த பதிவு.
ஹமாஸ் அம்மக்களின் இயக்கம். ஹமாஸ் வேறு பாலஸ்தீன மக்கள் வேறல்ல. பாலஸ்தீன மக்களால் ஆதரிக்கப்படாத இயக்கமெனில் காசாவின் நெருக்கடிக்குள் அந்த இயக்கம் இயங்க இயலாது. ஹமாஸ் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதற்கான புற காரணிகளை இசுரேலும், அமெரிக்காவும், இங்கிலாந்தும், ப்ரான்ஸும் உருவாக்கின. சமரசம் பேசி உரிமைகளை விட்டுக்கொடுத்த யாசர் அராபாத்தின் அரசியல் தோல்வியிலேயே ஹமாஸ் எழும் சூழல் உருவாகிறது. நான் அராபத்-பி.எல்.ஓவின் போராட்ட சித்தாந்த அரசியலை ஆதரிக்கிறவன், ஆனால் அதற்காக ஹமாஸை தனிமைப்படுத்துவதை ஏற்க இயலாது. காரணம் ஓஸ்லோ ஒப்பந்தத்தில் பாலஸ்தீன உரிமைகளை அடகுவைக்கும் நிலையை ஏற்றுக்கொண்டார்.
அது ஒரு தரகு பாலஸ்தீன அரசை உருவாக்கியது. இந்த அரசையும் ஊழல் குற்றத்திற்குள் கொண்டு வந்த மேற்குலகம், யாசர் அராபத்தின் மாளிகை மீது தாக்குதலை நடத்தியது. இதுவே மேற்குலக யுக்தி என்பதை பிரபாகரன் உணர்ந்தே இருந்தார். ஓஸ்லோவின் சதிகளுக்கு இடமளிக்காத அரசியலை மேற்கொண்டு நேரடியாக போருக்கு இலங்கையில் புலிகள் தயாரானார்கள். 1993 பாலஸ்தீன-இசுரேல் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குப் பின்னர் இதுவரை பாலஸ்தீனர்களுக்கு அமைதி கிடைக்கவில்லை, அவர்கள் நிலங்களும் கிடைக்கவில்லை, கொலைகளும் நிற்கவில்லை, தாக்குதலும் நின்றபாடில்லை. காசா-மேற்குகரை என இருபகுதிகளாக பாலஸ்தீனம் துண்டாடப்பட்டது போன்றே இலங்கை அரசும் தமிழர்களை துண்டாடியது. கிழக்கை கைவசப்படுத்த கருணாவை ஏவினார்கள், மேற்குக்கரையை வசப்படுத்த அப்பாஸை பயன்படுத்தினார்கள்.
எகிப்தின் மக்கள் அமைப்புகள் இருந்ததால் காசாவில் ஹமாஸ் பிழைத்து நின்றது. தமிழகம் இதுபோன்ற அரசியல் பங்களிப்பை செய்யாமல், போர் நடக்கும் காலத்தில் புலிகள் மீது சனநாயக ஆய்வு எனும் பெயரில் கையாலாகாத அரசியலை நடத்திக்கொண்டிருந்தது. அமைப்பாக இயங்க வழியில்லாதவர்கள், பெரியாரிஸ்டுகள், வெகுசன தேர்தல் அரசியல் கட்சி செயற்பாட்டாளர்களே இவ்விடத்தை ஓரளவு நிரப்பினார்கள். இந்தியாவின் ராணுவ வாகனத்தை தடுத்து நிறுத்துமளவு போர்க்குணத்தோடு செயற்பட்டார்கள். போலி புரட்சியாளர்கள் எதிர்காலத்தில் திமுகவிற்கு எப்படி காவடி எடுப்பது என பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். இவர்கள் புலிகளை தனிமைப்படுத்த மேற்குலகமும், இந்திய பார்ப்பனியமும், சிங்களமும் முயன்ற போது புலிகள் பாசிஸ்டுகள் என பிரச்சாரம் செய்தனர்.
எஸ்.வி.ஆர்., கீதா போன்றவர்கள் இப்பிரச்சாரத்திற்கு வலு சேர்க்க எக்னாமிக்ஸ் பொலிடிக்கல் வீக்லியில் (EPW) கட்டுரை எழுதி இந்தியா முழுக்க கொண்டு சேர்த்தார்கள். என்.ராம் கும்பலின் அயோக்கியத்தனத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அ.மார்க்ஸ் போன்றவர்கள் இன்றுவரை இந்த பார்ப்பனிய சார்பு அரசியலை மகிழ்ச்சியுடன் தொடர்கிறார்.
புலிகளை ஏற்கவில்லை, ஆனால் நாங்கள் சிங்கள பாசிசத்திற்கு எதிராகவும், ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் இருக்கிறோம் என்பது போன்றே ஹமாசை ஏற்கவில்லை, ஆனால் பாலஸ்தீன மக்களை ஆதரிக்கிறோம் எனும் நிலை மேற்குலகிற்கும், இசுரேலிய இனவெறிக்கும் சாதகமாகவே அமையும். ஆயிரம் குறைகளை பட்டியலிட்டாலும், அந்த அமைப்புகளே மக்களுக்காக எதிர்வினையாற்றுகின்றன, பாசிஸ்டுகளை உயிர் அச்சமில்லாமல் எதிர்கொள்கிறார்கள்.
சோவியத்தின் செம்படை ஜெர்மனிக்குள்ளும், நாஜி போர்க்கைதிகளுக்கும் காட்டிய எதிர்வினையையே இவர்களும் செய்கிறார்கள். பாசிஸ்டுகளில் நல்ல பாசிஸ்டு, கெட்ட பாசிஸ்டு, திருத்தப்படக்கூடிய பாசிஸ்டு என பட்டியல் போட, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்ய நேர அவகாசம் கிடைப்பதில்லை. ஹமாஸோடு சேர்ந்து சனநாயக அரசியலை வலுப்படுத்தும் பொறுப்பே நமக்குள்ளது. இதை புலிகளுக்கு செய்யாமல் வஞ்சித்தது தமிழகத்தின் போலி முற்போக்கு வட்டம். இதை இன்றளவும் தொடர்கிறார்கள். இன்றளவும் புலிகளுக்கு எதிரான நேர்மையற்ற பொய்புனைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாலியல் குற்றம் சாட்டப்பட்ட கோணங்கி முதல், அவரது சகோதரர் சர்வதேச புரட்சி அணியின் சொந்தக்காரர் தமிழ்ச்செல்வன் வரை வெட்கமில்லாமல் பாசிசத்தை வெளிப்படையாக எதிர்க்காமல், புலி போராளிகள் மீது அவதூறு முத்திரைக்குத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மா-லெ அரசியல் பேசுகிறேன் என ’தேர்தல் பாதை திருடர் பாதை’என 40- ஆண்டு முழங்கிவிட்டு திடீர் திமுகவின் பிரச்சார தொண்டரான ரிட்டயர்டு போராளி வரை இந்திய பார்ப்பனியத்தின் ரகசிய காதலர்களாக களத்தில் இயங்கினார்கள். சோ-சுப்பிரமணிய சாமி இவர்களை விட நூறுமடங்கு யோக்கியர்களாக தனது பாசிச அரசியலை வெளிப்படையாக வைத்தார்கள். புரட்சிகரம், இடதுசாரி என தமது வக்கிரத்தை மறைத்துக்கொள்ள புனித நேர்மையான-அக்மார்க் புரட்சிகர அரசியல் என்று மந்திர உச்சாடனங்களை முழங்கிக்கொண்டிருந்தார்கள் இந்த போலிகள். ஈழ மக்களையும், பாலஸ்தீனர்களையும், குர்து மக்களையும் காப்பதைப் பற்றி கவலை கொள்ளாமல் தலையை புதைத்துக் கொண்டார்கள்.
ஏதோ வகையில் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவினார்கள். அவர்கள் ஹமாஸை, ஹிஸ்புல்லாவை, புலிகளை, குர்து போராளிகளை தனிமைப்படுத்தவே விரும்பினார்கள். பயங்கரவாதிகளென முத்திரை குத்தினார்கள். இலங்கை-இசுரேல் பயங்கரவாதத்தினை காந்தி கொண்டு எதிர்கொள்ள இயலாது என்பதை தந்தை செல்வா முதல் பலர் நிரூபித்ததாலேயே பிரபாகரனும், அராபத்தும், ஹமாஸும் எழுகின்றன. இன்றைய சூழலுக்கு காரணமாக இசுரேல்-அமெரிக்க-இங்கிலாந்து அரசுகளும், கைகட்டி வேடிக்கை பார்த்த சவுதி, அமீரகம், துருக்கி, எகிப்து ஆகிய நட்பு நாடுகளுமே காரணம். இதனாலேயே ஹமாஸ் தீவிரவாதத்தினை நடத்துகிறது. ஐநாவும், இந்தியாவும், அணிசேரா நாடுகளும், அரபு கூட்டணியும் யோக்கியமாக இருந்திருந்தால் ஹமாஸ் உருவாகியிருக்காது. பாலஸ்தீனத்தின் மீது 2000 ஆம் வருடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலை விசாரித்த கோல்ட் ஸ்டோன் விசாரணையின் முதல் அறிக்கையை திருத்தினார்கள்.
ஹமாசை குற்றவாளியாக சேர்க்க வேண்டுமென்றார்கள். இதே போல 2009 மார்ச் மாதத்தில் ஐ.நாமனித உரிமை இலங்கை ராணுவத்திற்கு எதிராக வெளியிட இருந்த அறிக்கையை திருத்தி புலிகளுக்கு எதிரான அறிக்கையாக விஜய் நம்பியார் மாற்றினார். இந்த நிலைப்பாட்டை இங்கே போலி-முற்போக்காளர்கள் ஊதிப்பெருக்கினார்கள். இக்காலகட்டத்தில் மே17 இயக்கம் உருவாகவில்லை. 2009 மே மாத அழிவிற்கு பின்னர் இக்கும்பலின் அராஜகவாதத்தை அம்பலப்படுத்துவதை பொறுப்பெடுத்து மேற்குலக அரசியலின் பாசிசத்தையும், இந்திய பாசிசத்தையும் ஆவணப்படுத்தி மே17 இயக்கம் வெளியிட்டது. சர்வதேச தீர்ப்பாயத்தில் இந்தியாவை குற்றவாளியாக அறிவிக்க வைத்தோம். இதை சாமானிய வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த மே17 இயக்கத் தோழன் சாத்தியப்படுத்தினான்.
அறிவுசீவி வர்க்கம் இதை சாதிக்கவில்லை. அவர்கள் தமது பொறுப்பை கைகழுவினார்கள். அதில் அவர்கள் இன்றளவும் வெட்கப்படவில்லை. ஈழ அழிவிற்கு இலங்கை அரசைப்போல இவர்களும் முழு பொறுப்பாளிகள், வன்மம் மிக்கவர்கள், வக்கிர அரசியலுக்கு சொந்தக்காரர்கள். ஆனால் சாமானிய மே 17 தோழன் யார் பக்கம் நிற்க வேண்டுமென்பதில் தெளிவு கொண்டவன். பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவன், போராடுபவன். பாலஸ்தீன படுகொலைக்காக 6 வருடங்களுக்கு முன் நடத்திய போராட்டத்திற்காகத்தான் எங்கள் மீது உபா வழக்கு ஏவப்பட்டது. அடக்குமுறைகளை மீறி இன்றளவும் ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் நிற்கிறோம். அதனாலேயே நாங்கள் பாலஸ்தினத்தின் பக்கமும், அவர்களின் போராட்ட அமைப்பான ஹமாசின் பக்கமும் ஆதரவு தெரிவிக்கிறோம். ஹமாசின் அரசியல் அனைத்தும் எமக்கு ஏற்புடையதல்ல. ஆனால் அதை தீர்த்துக்கொள்வதற்காக காலம் உருவாகும் சமயத்தில் அந்த அரசியலை பேசுவோம். தற்போது பாசிஸ்டை அழிக்கும் போரை முன்னகர்த்தியாக வேண்டும். வீட்டை காத்த பின்னர் தான் சமையல் அறையைப் பற்றி கவலைப்பட முடியும்
பாலஸ்தீன மக்களின் அமைப்பாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்கமாகவும் இருக்கும் ஹமாஸ் உடன் நிற்பதே உரிய அரசியல் நிலைப்பாடு. ஹமாசை ஆதரிக்க இயலாது ஆனால் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறேன் போன்றதொரு நடுநிலையே புலிகளை தனிமைப்படுத்தி இலங்கை தனது இலக்கான இனப்படுகொலையை நிறைவேற்றிக்கொள்ள உதவியது என்பதை மறக்காதீர்கள்.