எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது! முறைகேடுகள் மூலம் அனுமதி பெற முயற்சிக்கும் இந்த அபாயகரமான திட்டத்தை இரத்து செய்க! – மே பதினேழு இயக்கம்
எண்ணூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்த 450 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிவடைந்ததால் கடந்த 2017ம் ஆண்டு மூடப்பட்டது. இதற்கு மாற்றாக, கூடுதலாக 2 அனல் மின் நிலைய அலகுகள் கொண்ட விரிவாக்கப்பட்ட திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) உருவாக்கியது. 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருந்தது.
தற்போது செயல்பட்டு வரும் 3330 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் சுற்றுச்சூழல் அனுமதி (EC) ஜூன் 2, 2019 அன்று காலாவதியானது. இதன் தொடர்ச்சியாக ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் (MoEF) 660 மெகாவாட் அனல் மின் திட்டத்திற்கான புதிய அனுமதியைப் பெற தமிழ்நாட்டின் TANGEDCO நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்காக வரும் டிசம்பர் 20, 2024 அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் கருத்துக் கேட்பிற்காக 2019ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையை மின்சாரத் துறை சமர்ப்பித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையை வைத்து இப்போது கருத்துக் கேட்பது அதிர்ச்சியளிக்கிறது.
எண்ணூர் பகுதியில் ஏற்கனவே 36 சிவப்பு பட்டியல் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் ஆண்டு ஒன்றுக்கு 10 மில்லியன் டன் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யும் நிலையங்களும் உள்ளன. இதற்கு மத்தியில் ஏற்கெனவே எண்ணூரில் 3300 மெகாவாட் அளவிலான 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேலும் புதிய அனல் மின் உற்பத்தி நிலையங்கள் எதற்காக அமைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளில் 50% நாட்களுக்கு மேல் வடசென்னையின் காற்று மாசுபாட்டிற்கு இந்த அனல் மின் நிலையங்கள் காரணமாக அமைந்துள்ளன என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் காட்டுகின்றன.
நிலக்கரி அனல் மின் நிலையத்திலிருந்து வெளியாகும் சாம்பல் தூசுகளில் இருந்து காற்றில் கலக்கும் நுண்துகள்கள், நுரையீரலின் உட்பகுதி வரை சென்று ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும். அதோடு, குழந்தைகள் எடை குறைபாட்டோடு பிறப்பது, குறைப் பிரசவம் நிகழ்வது, குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் தடைகள் ஏற்படுவது என கர்ப்பிணிகளுக்கு பல பாதிப்புகளை இதிலிருந்து வெளியேறும் விஷ வாயுக்கள் ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இது சிறுநீரகம், மூளை, நுரையீரல், கண்கள், தோல், இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், சாம்பல் கழிவு கொட்டப்படும் செப்பாக்கம் கிராம மக்கள், “எங்களுடைய தாய் பூமியின் மண்ணில் சாம்பலைக் கொட்டித்தான் எங்களை அடக்கம் செய்வார்கள்” என்று வேதனையோடு தெரிவிக்கின்றனர். மனிதர்களை மட்டுமல்லாமல், அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சூடான நீரை அப்படியே கழிமுகப் பகுதியில் திறந்துவிடுவதால், மீன் வளம் பெருமளவில் பாதிப்படைகிறது. நுண்ணுயிர்களும் தாவரங்களும் வளர இயலாத நிலையில் உயிர் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை நம்பியிருப்போரின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. நிலம், நீர், காற்று என அனைத்து வளங்களும் மிக மோசமாக பதிப்படைகின்றன.
காற்று மாசுபாட்டால் மகப்பேறு மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுகிறது இதன் அடிப்படையில் எண்ணூரில் முன்மொழியப்பட்டுள்ள 660 மெகாவாட் (MW) நிலக்கரி அனல் மின் நிலையத்தை (ETPS விரிவாக்கம்) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அனல் மின் திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் செயலாளர் சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திற்கும் கடந்த டிசம்பர் 13 அன்று கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்கூறி, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கு இப்பகுதி தகுதியற்றது என இந்திய குழந்தைகள் நல அகாடமி சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திற்கும் கடந்த டிசம்பர் 13 அன்று கடிதம் எழுதியுள்ளது.
புதிய விதிகளின் படி, அனல் மின் நிலையங்களில் வெளியாகும் சல்பர் டை ஆக்சைடு மாசைக் குறைப்பதற்கான FGD (Flue Gas De-sulphurisation) தொழில்நுட்பத்தை 2017க்குள் நிறுவ வேண்டும் என்ற நிலையில், ஏற்கனவே 7 ஆண்டுகள் அவகாசம் பெற்றும் தற்போது மேலும் 3 ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது ஒன்றிய அரசின் எரிசக்தி அமைச்சகம்.
தமிழ்நாட்டில் கடற்கரையோரம் அமைக்கப்படும் திட்டங்களுக்கு வழங்கப்படும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகளில் பல்வேறு அலட்சியங்கள் இருப்பது இந்தியத் தணிக்கைத் தலைவரின் அறிக்கையில் தெரிகிறது. மேலும், CRZ 2011 அறிவிக்கையின்படி, மாவட்ட அளவிலான கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தில் உள்ளூர் பாரம்பரியக் கடற்கரை சமூகங்களைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த அறிவிக்கை வெளியாகி 11 ஆண்டுகளில் கழித்தும் மொத்தமுள்ள 13 கடலோர மாவட்டங்களில் ஜூன் 2023 வரையில் வெறும் 4 மாவட்ட DCZMA-களில் மட்டுமே மீனவ பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனில், இத்திட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது கேள்விக்குறியாகிறது.
இப்படியான சூழலில், டிசம்பர் 20 அன்று காலை 11 மணிக்கு, திருவெற்றியூர் அருகிலுள்ள எர்ணாவூர் மாகலட்சுமி நகர் காமராஜர் மாளிகையில், எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை மின்வாரியத்தின் ஒப்பந்ததாரர்கள் மிரட்டுவார்கள் என எண்ணூர் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், ஏற்கனவே மோசமான சூழலில் உள்ள வடசென்னை பகுதியில் இத்திட்டம் கொண்டு வரக்கூடாது என்றும், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேச விரும்பும் அனைவரையும் மேடையில் பேச அனுமதிக்க வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர், கே. கண்ணன், டி. ஹரிபரந்தாமன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை புவியின் எதிர்காலத்தையும் மானுட வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் பெட்ரோல், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள் ஆற்றலை குறைத்துக்கொண்டு காற்றாலை, சூரிய மின் ஆற்றலை அதிகப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த தொடங்கிவிட்டன. காலநிலை மாற்ற நிர்வாக குழு வைத்திருக்கும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என ஓர் துறையை கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு புதியதாக எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைக்க முற்படுவதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இத்தனை கூற்றுகளை கவனத்தில் கொள்ளும்போது, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் என்பது 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட வடசென்னை பகுதிக்கு மிக ஆபத்தான திட்டமாகவே அமையும் என்ற முடிவுக்கு வர முடிகிறது. இதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை மட்டுமல்ல, இத்திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் ஒரு பகுதி மக்கள், குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் பாதிப்படையக் கூடிய வகையில் திட்டங்களை திணிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. சென்னையின் மின்சாரத் தேவைக்காகவும் அதிகப்படியான நுகர்விற்காகவும் வடசென்னை பலியிடப்படுவதை மே பதினேழு இயக்கம் ஒரு போதும் அனுமதிக்காது.
மே பதினேழு இயக்கம்
9884864010
19/12/2024