பணி வாக்குறுதி நிறைவேற்றக் கோரிய மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தியின்  கண்டன உரை

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசுப்பணி குறித்து திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசுப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது. இதன் பின்னர் இந்த அரசாணை மீதும், 2008ல் வெளியிடப்பட்ட அரசுப்பணியாணை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் டிசம்பர் 3, 2025 அன்று நடந்தது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துக்கொண்டு, ஆதரவு தெரிவித்தார். அப்போராட்டத்தில் பங்கேற்ற தோழரின் கண்டன உரையின் தொகுப்பு:

சர்வதேச மாற்றுத்திறாளிகளுடைய உதவிகளுக்கான தினமான டிசம்பர் மூன்றாம் தேதியான இன்றைய தினத்தில், கொட்டும் மழைக்கு நடுவிலே எந்த தடை வந்தாலும் எங்கள் கோரிக்கையிலும் போராட்டத்திலும் நாங்கள் பின்வாங்க போவதில்லை என்கின்ற உறுதியோடு இங்கு திரண்டிருக்கக்கூடிய அனைத்து தோழமைகளுக்கும் நான் சார்ந்திருக்கக்கூடிய மே பதினேழு இயக்கத்தின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து கொண்டிருக்கக்கூடிய மரியாதைக்குரிய தோழர் ஐயனார் அவர்களுக்கும், இணை ஒருங்கணைப்பாளர் தோழர் ஐயப்பன் அவர்களுக்கும் மற்றும் இந்த அமைப்பினுடைய அனைத்து பொறுப்பாளர்களுக்கும், பிற நகரங்களில் இதே நாளில் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கக்கூடிய தோழமைகளுக்கும், எங்களது வாழ்த்துக்கள்.

அன்பான தோழர்களே, மிக நியாயமான சமூக நீதி கோரிக்கையை முன்வைத்து கடந்த 13 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும் கூட செய்துவிடக்கூடிய ஒரு கோரிக்கையை கூட இன்றும் அவர்கள் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. நீங்கள் வெளியிட்டுருக்கக்கூடிய  அறிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் ஏ,பி,சி,டி(A,B,C,D) பிரிவுகளிலே இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகின்ற விதமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்களை கண்டறிந்து உடனே நிரப்ப வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடுவதற்கு முன்பாக அதாவது ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த அரசாணை வெளியிடப்படுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, இதை வாக்குறுதியாக உங்களுக்கு அளித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்துதான் அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பாக 2008-ல் அரசாணை 151ம் மாற்றுத்திறனாளிகளுடைய அரசு பணி நியமனம் குறித்து விரிவாக தெளிவாக எடுத்துரைக்கிறது. அரசாணை 20 மற்றும் அரசாணை 151 ஆகிய இரண்டும் மாற்றுத்திறனாளிகளினுடைய அரசு பணி நியமனம் தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கைகள். மேலும் இந்த அறிக்கை தொடர்பான நடவடிக்கைகள் என அமைச்சர் அவர்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், கிட்டத்தட்ட 2010 பேரை அடையாளம் கண்டிருப்பதாகவும், மேல் அதிகமான பணியிடங்களை கண்டறிந்து உடனே நிரப்புவதாகவும் திமுக கட்சியினர் வாக்களித்திருக்கிறார்கள். இத்தனை நடவடிக்கைகள் இருந்தும் கூட, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அரசாணை 24ன் மூலமாக இதற்கு முன்பு வெளியிட்ட பணிநியமன குறித்தான அரசாணை 20, 2008ல் வெளியிட்ட அரசாணை 151 ஆகியவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக ’அரசாணை 21’ தெரிவிப்பதாக, தோழர்கள் தெரிவிப்பது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசு ஏற்கனவே வெளியிட்ட ஒரு கொள்கை முடிவை ஒரு அரசாணையை ஏன் ரத்து செய்தது? என்ற எந்த விளக்கமும் இல்லை. அல்லது இதற்கு மாற்றான ஒரு அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான வழிமுறையை ஏதேனும் அறிவித்ததா? என்றால் இதுவரை எந்த அறிவிப்பும் அது வரவில்லை. ஆக அரசாணை இதற்கு முன்பு இந்த அரசாணை ரத்து செய்திருக்கிறீர்கள். அதற்கு மாற்றாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வோர் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் கொள்கை முழுவையும் அரசாணையும் திமுக அரசு வெளியிடவில்லை. இந்த நிலை என்பது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது.

சமூக நீதி என்பது சமூகத்தில் நழிவடைந்த பாதுகாப்பற்ற பிரிவினருக்கு, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு, நிராகரிக்கப்பட்ட மக்களுக்கு, வாய்ப்பற்ற மக்களுக்கு, அரசு முன்னுரிமை கொடுப்பதும் அரசு திட்டங்களில் முன்னுரிமை கொடுப்பது என்பதுதான் சமூக நீதிக் கொள்கை.

இதைத்தான் திராவிட இயக்க கொள்கையாக நாம் எல்லாரும் இதை கடைபிடித்து வருகின்றோம். ஆக திராவிட மாடல் என்று சொல்லுகின்ற அரசு, இந்த கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த உடனேயே (அதன் முதல் ஆண்டு காலகட்டத்திற்குள்ளாகவே நிரப்பி இருந்தால்), அவர்கள் கொள்கை வழி நடக்கிறது என்று நாம் வரவேற்றிருப்போம். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அரசாணை வெளியிட்டு, பிறகு அந்த அரசாணையை ரத்து செய்கிறோம் என்கின்ற ஒரு அரசாணை வெளியிடுவதற்கு எதற்கு ஒரு திராவிடமாடல் எதற்கு ஒரு சமூகநீதி அரசு என்று நமக்கு புரியவில்லை.

இப்படியான ஒரு அநீதியை ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த போராட்டத்தினுடைய நியாயத்தை நாங்கள் வெளியில் கொண்டு செல்வோம். இந்த போராட்டத்துக்கு எந்த ஊடகமும் வரவில்லையோ, அதுபோல தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக நடக்கின்ற போராட்டங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த ஊடகமும் வருவதில்லை, செய்திகள் ஆக்கப்படுவதில்லை. ஆக நமக்கான செய்தியை நாம்தான் கொண்டு செல்ல வேண்டிய ஒரு சூழலில் நிர்பந்தத்தில் இருக்கிறோம்.

இந்த மழை வெயில் என பாராமல், ஒரு நெருக்கடியான பேரிடர் காலத்தில் எதையும் பொருட்படுத்தாமல், தனது கோரிக்கைக்காக இந்த நாளில் திரண்ருக்கக்கூடிய தோழர்களுடைய உறுதியை வலுப்படுத்தும் விதமாக ஊடகங்கள் இங்கே வந்திருக்க வேண்டும். இந்த செய்தியை அரசுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். அரசினுடைய தோல்வியை அவர்கள் உலகத்திற்கு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எதிர்கட்சி எந்த போராட்டத்திற்கும் ஆதரவு அளிப்பதில்லை. அறிக்கை வெளியிடுவது கூட இல்லை, சட்டசபையிலும் பேசுவதில்லை. ஆகவே தமிழ்நாட்டில் ஒரு செயலற்ற தன்மை இருப்பதை நாம் கவலையுடன் பார்க்கிறோம். யாரிடம் பேசுவது ஆளும் கட்சி செயல்படுத்தவில்லை என்றால் எதிர்கட்சியோடு பேசலாம். ஆளும் கட்சியும் எதிர்கட்சியுமே இரண்டு தரப்புமே ஒரு கோரிக்கை குறித்து பேச மறுக்கிறார்கள் என்றால், நாம் நமது போராட்டத்தை வலுபடுத்தி வலுபடுத்திதான் நமது கோரிக்கையை உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டிருக்கிறது. கடந்த காலத்தில் இது போன்ற நெருடிக்கள் இருந்திருக்கின்றன. தோழர்களே மனம் தளந்து விடாதீர்கள்.

நாங்கள் பல்வேறு போராட்ட கோரிக்கைகளுக்கு சென்று வருகின்றோம். எங்களுக்கு எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட பற்றும் கிடையாது, அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கின்ற தேவையும் கிடையாது. நாங்கள் எந்த ஆட்சியை பற்றியுமான அக்கறையோடு ஆதரவோடு நாங்கள் இருப்பது அல்ல. நாங்கள் மக்களுக்கு ஆதரவாக கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள்(மே 17 இயக்கம்) எதிர்கட்சிதான். ஏனென்றால், இங்கே மக்கள் சார்பாக இருந்து கேள்வி கேட்கக்கூடிய எதிர்க்கட்சிகளாக, இந்த கட்சிகள் இல்லை என்கின்ற காரணத்தினால்தான்.

கடந்த 16 ஆண்டுகளாக எதிர்கட்சி வேலை செய்து வருகிறோம். நாங்கள் அதிகாரத்தில் வருகின்ற எந்த கட்சிக்கும் நாங்கள் ஆதரவு தெரிவித்தது இல்லை. தெரிவிக்க போவதும் இல்லை. அரசு அதிகாரத்தை பிடிக்கக்கூடிய வலிமை கொண்ட கட்சியிடத்தில் ஆதரவை தெரிவித்து அவர்களை வலுபடுத்துகின்ற பணியை நாங்கள் ஒரு காலத்திலும் செய்ய போவதில்லை. மக்களுடைய கோரிக்கை வழுப்படுத்துவதுதான் நமது வேலை. மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி ஆதரவை திரட்டுவதுதான் நமது கடமை. அதுதான் அரசியல் பணி. அதுதான் தந்தை பெரியார் முன்னெடுத்த பணி. அந்த வகையில் எங்களுக்கு அவர் சொல்லி கொடுத்தது அதுதான்.

நாங்கள் தந்தை பெரியார் வழியிலும், மேதகு பிரபாகரன் வழியிலும் வந்தவர்கள்.  அவர்கள் இருவரும் அதிகாரத்திற்காக அடிபணிந்து நிற்கக்கூடிய அல்லது அதிகாரத்தின் மீது ஆசை கொண்ட அரசியலை மேற்கொள்ளவில்லை. எளிய மக்களின் கோரிக்கையை முன்னகர்த்துகின்ற ஒரு பெரும் பணியைதான் மே 17 இயக்கத் தோழர்கள் முன்னெடுக்கின்றோம். அந்த வகையில் இதற்கு முன்பாக பல்வேறு கோரிக்கை போராட்டங்களை நாங்கள் தொடர்ச்சியாக பங்கெடுத்து வருகிறோம்.

திமுக அரசு தோல்வி அடைகின்ற பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றாமல், கைவிட்ட வாக்குறுதிகள், நிறைவேற்றாமல் விட்ட திட்டங்கள் என்று அனைத்திலும் நாங்கள் முன்னணியில் நிற்கின்றோம். சமீபத்தில் நடந்த தூய்மை பணியாளர் போராட்டமாக இருந்தாலும் சரி, இதற்கு முன்பு நடந்த ஆசிரியர்கள் போராட்டம், பேராசிரியர் போராட்டம், செவிலியர் போராட்டம், ஒப்பந்த ஊழியர் போராட்டம் என்று தொடர்ச்சியாக போராட்ட களங்களில் மே பதினேழு இயக்கம் நிற்கிறது. இவர்கள் கோரிக்கை வெளிப்படுத்தி வருகிறோம். இதேபோல தமிழ்நாடு முழுவதும் நடக்கக்கூடிய பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன்னுக்கு செலுத்துகின்ற போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையிலே உங்களது கோரிக்கையை நாங்கள் நிச்சயம் வழுப்படுத்துவோம். அனைத்து அமைப்புகளிடத்திலும் கொண்டு செல்வோம். அடுத்த முறை இந்த போராட்டத்தை நடத்துகிறீர்கள் என்றால் நாங்களும் பெருந்தொருளாக உங்களோடு பங்கேற்போம். அது குறித்தான முன்பே தகவல் தெரிவிக்கப்படும் என்றால், நாங்களும் போராட்டத்தில் பங்கெடுக்க தயாராக இருக்கின்றோம். அவசியம் என்றால் இணைந்தே போராட்டத்தை நடத்துவோம். அதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. பிற அமைப்புகள் ஜனநாயக அமைப்புகள் ஆட்சி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகின்ற அமைப்புகளையும் நாங்கள் ஆதரவு கொண்டு வருகின்றோம். அவர்களிடத்தில் நாங்கள் பேசுகின்றோம். அவர்களையும் அடுத்த போராட்டத்தில் உங்களோடு கரம் கோர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுத்து, ஆதரவு தளத்தை விரிவுபடுத்துகின்ற பணியை நாங்களும் பொறுப்பேற்று கொள்கிறோம் என்று இந்த இடத்தில் வாக்குறுதி கொடுக்கின்றேன்.

நாங்கள் கடந்த காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றோம். நான்கு மாதங்களுக்கு முன்பு கூட ஒரு மாற்று திறனாளிகள் நடத்திய போராட்டத்தை காவல்துறை கடுமையாக ஒடுக்குமுறை செய்த பொழுது, காவலர்களை மறித்து அந்த மாற்றுத்திறனாளிகளை பாதுகாத்து, அவர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கின்ற வகையில் எங்கள் தோழர்கள் போராடினோம்.

ஆகவே மே 17 இயக்கம் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி போராட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பங்கெடுத்து வருகிறது. எங்களது போராட்டங்களிலும் பங்கெடுக்க அழைப்பு கொடுக்கின்றோம். அந்த வகையில் எங்களது போராட்டத்திலும் பங்கெடுக்க நீங்களும் வாருங்கள். நாம் ஒன்று சேர்ந்து ஜனநாயக குரலை வலுப்படுத்துவோம். அங்கே உங்களது கோரிக்கையை நீங்கள் தெரிவியுங்கள். பிற இயக்கங்களுக்கும் சேரட்டும்.

வருகின்ற தேர்தலுக்குள்ளாக திமுக அரசு இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அரசு பணியிடங்களை நிரப்பி அரசாணை வெளியிட்டு உறுதி செய்து பெயர் பட்டியல் வெளியிடவில்லை என்றால், அவர்களுக்கு எதிரான போராட்டத்தை அறிவிக்க வேண்டி வரும். நாம் இன்னும் திமுக கட்சி சொல்லக்கூடிய கவர்ச்சிகரமான அறிக்கைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் அடிபணிந்து போக வேண்டிய தேவை கிடையாது.

நமது தேவைக்கு தான் கட்சிகள் இருக்கின்றன ஒழிய, கட்சிகளின் தேவைக்கு நாம் இல்லை. கட்சிகளின் தேவையை நிறைவேற்றுகின்ற வாக்கு வங்கிகள் அல்ல நாம்.

நமது கோரிக்கை நிறைவேற்றதான் அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றோம். நமது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், அந்த கட்சிக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்ற முடிவும் சேர்த்து எடுங்கள். அது தவறில்லை.

இதையெல்லாம் ஆளுகின்ற திமுக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக இந்த தோழர்களுடைய கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கை  என்பது போராட்டத்தில் பங்கெடுத்திருக்க தோழர்களின் நலனுக்காக மட்டும் வரவில்லை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்காகவும் தான். ஒரு சுயநலமற்ற போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.

இந்த கடுமையான மழைக்கு நடுவிலே இத்தனை லட்சம் மாற்றுத்திறனாகளுடைய வாழ்வாதாரத்திற்கும், சுய மரியாதைக்காகவும், இங்கு பங்கெடுத்திருக்கக்கூடிய தோழர்களுடைய போராட்ட குணத்தை நாங்கள் பாராட்டுகிறோம். எங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். என்னெனில் இப்படிப்பட்ட ஒரு அரசு பணி என்பது மாற்ற திறனாளிகளுக்கு சுயமரியாதையோடு வாழ்வதற்கு கிடைத்த ஒரு மாபெரும் பிடி. மாற்றுத்திறனாளிகள் இந்த சமூகத்தில சுயமரியாதையோடு வாழ்வதற்கான ஒரு பிடிப்பு என்பது அரசு பணி.

அந்த அரசு பணியும் அந்த அதிகாரமும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு கையில் கிடைக்கும் என்றால், அவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கக்கூடிய சுயமரியாதையும் உறுதிபடும் என்கின்ற காரணத்தால் தான், அரசு பணி என்பது முதன்மை கடமையாக இருக்கிறது.

அந்த வகையிலே திமுக அரசு உடனடியாக இந்த மாற்று திறாளிகளுக்கான பணியை நிரந்தரம் செய்து கொடுக்க வேண்டும். மாண்புமிகு முதல்வர் அவர்களே நீங்கள் கொடுத்த வாக்குறுதி இந்த தினத்தில் அவர்கள் உங்களுக்கு நினைவுபடுத்துகிறார்கள். இந்த மாற்று திறனாளிகள் நீங்கள் செய்ய வேண்டிய கடமையை நினைவுபடுத்தி இருக்கிறார்கள். ஆகவே இதை நீங்கள் உடனடியாக பணி நிரந்தரம் செய்து, அரசாணை 24 என்கின்ற நேர்மையற்ற அரசாணையை உடனடியாக ரத்து செய்து, நீங்கள் எதற்கு முன்பு அதற்கு முன்பு நீங்கள் வெளியிட்ட அரசாணை 2020 அதற்கு முன்பு வெளியிட்ட அரசாணை 151 கீழ் உடனடியாக அரசு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியராகவோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய பணியோ, தற்காலிக பணியாளராகவோ நியமனம் செய்வது என்பது நேர்மையற்றது. அது சமூக நிதிக்கு எதிரானது. அப்படியான ஒரு பொறுப்பை தமிழ்நாடு அரசு திமுக அரசு செய்யக்கூடாது.

தனியார் மையம் என்பதும் ஒப்பந்த ஊழியர் முறை என்பதும் சமூக நீதிக்கும் திராவிட அரசியலுக்கும் நேர் எதிரானது. ஆகவே அதை செய்யும் என்றால் திமுக அரசு வன்மையான கண்டனத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை இச்சமயத்தில் சொல்லி போராட்டம் வழுபெறட்டும். போராட்டத்தினுடைய கோரிக்கைக்கு துணையாக நாங்கள் என்றைக்கும் துணை நிற்போம் என்கின்ற வாக்குறுதி இச்சமயத்தில் தெரிவித்துக் கொண்டு, போராட்டம் வெல்க! கோரிக்கைகள் வெல்க!! மாற்று திறனாளிகள் ஒற்றுமை வெல்க!!! என்று கூறி நிறைவு செய்கிறேன்.  

நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »