
பஹ்ரைனில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றுள்ளது! அணியின் துணைத் தலைவராக இந்த வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பை தந்த தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகாவுக்கும் உடன் விளையாடிய வீரர்களுக்கும் வாழ்த்துகள்! – மே பதினேழு இயக்கம்
பஹ்ரைனின் ரிஃபா நகரில் 2025ஆம் ஆண்டுக்கான ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய மகளிர் கபடி அணி எதிர்த்து விளையாடிய ஈரான் மகளிர் கபடி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் அணியின் துணைத் தலைவர், தமிழ்நாட்டு வீரரான சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா. அவருக்கு மே பதினேழு இயக்கம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
சென்னை மாநகரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட உழைக்கும் மக்களின் குடியற்றப் பகுதியாக இருக்கிறது சென்னையின் புறநகரான கண்ணகி நகர். கண்ணகி நகர் என்றாலே அங்கு வாழ்பவர்களை சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்பது போல் சமூகம் கட்டமைத்துள்ளது. ஆனால், அங்குள்ள மக்கள் தான் கடும் உழைப்பாளிகளாகவும், விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களாகவும் உள்ளனர். அடிப்படை வசதிகள் கூட சென்றடையாத அரசு நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட பகுதியிலிருந்து தனது சொந்த திறமையால் முன்னேறி வெற்றி கண்டுள்ளார் கார்த்திகா.
கார்த்திகாவின் திறமையை பாராட்டி இந்தியா முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்தாலும், தாய்மண்ணான தமிழ்நாடு அவரை கௌரவிப்பதில் பெருமைகொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பாக அவரை வரவேற்று 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளதை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. அதேவேளை, பிற விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையுடன் ஒப்பிடும் போது, கார்த்திகாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை குறைவானதே! சமீபத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு 5 கோடி வழங்கி பெருமைப்படுத்தியது. அதேபோல், கபடி போட்டியில் வென்ற கார்த்திகாவுக்கும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், அவருக்கு அரசுப் பணி வழங்கி கௌரவிக்க வேண்டுமெனவும் கோருகிறோம்.
கண்ணகி நகர் போன்ற அரசு நிர்வாகத்தால் புறக்கப்பட்ட பகுதியிலுருந்து ஒருவர் வெற்றி வாகை சூடுவது அப்பகுதி மக்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். கார்த்திகா போன்றவர்களின் வெற்றி பலரின் வெற்றிக்கு முன்னுதாரணமாக அமையும். இது அப்பகுதியின் சமூக-பொருளாதார நிலையை மாற்றியமைக்கக் கூடிய காரணிகளாக அமையும். ஆகவே தமிழ்நாடு அரசு கார்த்திகாவின் வெற்றியை தனித்துவமான வெற்றியாக கருத வேண்டும், மேலும், கண்ணகி நகர் மற்றும் அது போன்ற அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, திறமையானவர்களை கண்டறிந்து உலகத்தரத்திற்கு பயிற்சியளித்தால், விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்கும்.
சென்னையில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பயன்படுத்தி வந்த மாநகராட்சியின் விளையாட்டுத் திடல்கள் பல இன்று காணாமல் போய்விட்டன. கல்விக்கு இணையாக விளையாட்டுத்துறையும் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை கட்டுமானங்களை அரசு உருவாக்கித் தர வேண்டும். அந்த வகையில், காணாமல் போன விளையாட்டுத் திடல்களை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிப்பதோடு, மக்கள் தொகையின் வளர்ச்சிக்கேற்ப மேலும் பல விளையாட்டுத்திடல்களை உருவாக்கித் தந்திட வேண்டும். குறிப்பாக கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் வீடுகளுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதோடு, விளையாட்டுத்திடல் உள்ளிட்ட கட்டமைப்பை உருவாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, கார்த்திகா போன்ற பல தலைசிறந்த வீரர்கள் உருவெடுத்திட வழிவகுக்கும். இது தமிழ்நாடு முழுவதும் சிறு நகரங்கள் தோறும் விரிவுபடுத்தப்படுமெனில், தமிழ்நாடு மேற்குலக நாடுகளுக்கு இணையான விளையாட்டு வீரர்களை உற்பத்தி செய்யும் களமாக அமையும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
26/10/2025
வீராங்கனை கார்த்திகாவுக்கு நம்முடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். புறக்கணிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஒரு பெண் எப்படி மற்றவர்களுக்கு ஊக்கப் பொருளாக மாறி நிற்கிறாரோ அது போல் நாமும் வெகுஜன மக்களுக்கு எதிரான அரசியல் சக்திகளை வீழ்த்தி வென்று எளிய மக்களுக்கான மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்று மற்ற மக்கள் அமைப்புகளை உற்சாகப்படுத்த கார்த்திகாவிடமிருந்து பாடம் கற்கலாம் என கருதுகிறேன்..நன்றி