
‘தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கம்’ (TARATDAC) சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவியை அதிகரிக்கக் கோரியும், நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும், ஏப்ரல், 23, செவ்வாய் அன்று மாற்றுத் திறனாளிகள் சென்னை கோட்டையில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுமார் 10000 க்கும் மேற்பட்டவர்கள், பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதில் 100க்கும் மேற்பட்டோர் தேனாம்பேட்டை சமூக நலக் கூடத்தில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களை காவல்துறையினர் மோசமாக நடத்தப்பட்ட தகவல் அறிந்த மே பதினேழு இயக்கத் தோழர்கள், அங்கு சென்று விவரங்களைக் கேட்டறிந்து, மாற்றுத் திறனாளிகளுக்குத் துணையாக நின்று உதவிகள் செய்தனர்.
ஆந்திராவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர நிதி உதவி ரூ.6,000-லிருந்து தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் ரூ.1,500-லிருந்து மட்டுமே இந்த உதவித்தொகை தொடங்குகிறது. இந்த உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதும் வருவாய் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறைகளின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்பதும் மாற்றுத்திறனாளிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளாக இருந்தது.

மேலும், 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்து, வயது வரம்பு பாராமல் உதவித்தொகை வழங்க வேண்டும், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் இருந்து ஏறத்தாழ 10,000 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் காவல்துறை பல கெடுபிடிகளைக் கடைபிடித்திருக்கிறது.
போராடிய மாற்றுத்தினாளிகளில் சிலரை ராயப்பேட்டை திசை புத்தக நிலையத்திற்கு அருகில் இருந்த சமுதாய நலக்கூடத்தில் கைது செய்து காவல்துறையினர் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். பகலில் உணவு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர். ஆனால் இரவில் அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ கொடுக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். முறையான கழிவறை ஏற்பாடுகள் இல்லாததால் பல மாற்றுத்திறனாளிகளும் இயற்கை உபாதையை கூட கழிக்க முடியாமல் தவித்திருந்தனர். பெண்கள், வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர். கண்பார்வையற்றவர்கள் கூட மிக மோசமாக காவல்துறையினரால் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு தெரியவந்தது. இவர்களை மூன்று பேருந்தில் ஏற்றி உங்கள் சொந்த ஊருக்கு அனுப்புகிறோம் என்று காவல்துறையினர் அவர்களை கட்டாயப்படுத்தி பேருந்து ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களோ “எங்களுடைய சங்கத் தலைவர்கள் வேறு இடத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்லாமல் நாங்கள் செல்ல மாட்டோம்” என்று உறுதியாக கூறி அங்கேயே உட்கார்ந்து போராடத் தொடங்கினார்கள்.

அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றுவதை பார்த்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அந்த இடத்திற்கு வந்து காவல்துறையினரிடம், ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்டார். பிறகு மாற்றுத்திறனாளிகளின் சங்க நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். அவர்கள் வழியாகவே போராட்டத்தை முன்னெடுத்த மாற்றுத்திறனாளி சங்க தலைவர்களிடம் பேசி, அமைச்சர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தைக்கு வர இருப்பதாகவும் அதன் பிறகு இவர்கள் கலைந்து செல்வார்கள் என்றும் தெரிந்து கொண்டார். அதன் அடிப்படையில் காவல்துறையினரிடமும் பேச்சுவார்த்தை முடியும் வரை இவர்கள் இங்கு இருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டதன் பெயரில், அனைவரும் கீழே அமர்ந்து அமைதி காக்கத் தொடங்கினர். மேலும் போராடியவர்கள் அனைவரும் காவல்துறை தங்களை எப்படி நடத்துகிறது என்று கண்ணீர் மல்க தோழர்களிடம் பகிர்ந்தார்கள்.
குறிப்பாக கண் பார்வையற்ற இஸ்லாமிய மாற்றுத்திறனாளி ஒருவரை காவல்துறை அடித்ததாக அவர்கள் மிகவும் வேதனையோடு தெரிவித்தனர். வெகு நேரமாக உணவும், குடிநீரும் இன்றித் தவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இயக்கத் தோழர்கள் முதற்கட்டமாக தண்ணீர் பாட்டில்களும், பின்பு பழங்களும் வழங்கி உதவினர். மே 17 இயக்கத் தோழர்களின் இச்செயலை பார்த்ததற்கு பின்பே காவல்துறை அங்கு உணவு எடுத்து வந்தது. அதையும் மே 17 இயக்கத் தோழர்களே மாற்றுத்திறனாளிகளுக்கு விநியோகித்தனர்.
அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண்பதாக போராட்டத்திற்கு தலைமையேற்ற மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் உறுதி அளித்ததைப் பகிர்ந்த பின்னர், அனைவரும் அவரவர் ஊர்களுக்கு சென்றனர். அவர்களை பத்திரமாக வாகனத்தில் ஏற்றி, கோரிக்கை வெல்லும் வரை துணையிருப்பதாக நம்பிக்கைக் கூறி தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் அனுப்பி வைத்தார். அனைவரும் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளைப் போட்டியின்றி உறுப்பினர்களாக நியமனம் செய்யும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். அதற்கு மனமுவந்து மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர். அதற்குள் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை உயர்வு கோரிக்கைகளுக்கான போராட்டத்தை காவல் துறை கையாண்ட விதம் வருத்தமளிக்கிறது. சாதாரணமானவர்களை கையாள்வதை விட கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டிய மாற்றுத்திறனாளிகளை காவல் துறை நடத்திய விதம் கண்டனத்திற்குரியது. சமூகத்தில் பல நிராகரிப்புகளுக்கு ஆளாக்கி, இயல்பான வாழ்க்கையையும் சிரமத்துடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு நிர்ப்பந்திக்கும் போராட்ட வழிகளில் மே 17 இயக்கம் என்றும் அவர்களுடன் துணை நிற்கும்.