விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய்

சென்னையில் நடைபெறவிருக்கும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இனப்படுகொலை இஸ்ரேல் நாட்டை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்! தமிழ்நாடு பாலஸ்தீனம் பக்கம் நிற்பதை உறுதி செய்! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டில் முதலீடுகளை குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ – TITCO), பிசிஐ ஏரோஸ்பேஸ் (BCI Aerospace) நிறுவனத்துடன் இணைந்து அக்டோபர் 7-9 நாட்களில் சென்னையில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துகிறது. இதில், பாலஸ்தீனம்-காஸாவில் இனப்படுகொலை நடத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அறம் போதிக்கும் சமூக நீதி மண்ணில் இனப்படுகொலை இஸ்ரேல் தொடர்புடைய நிறுவனங்கள் பங்கேற்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. திமுக அரசு உடனடியாக இனப்படுகொலை இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2023-இன் படி, வான்வெளி மற்றும் ராணுவத் துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் மூலம் 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்தல், புத்தாக்கங்களை உருவாக்குவதல், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு விருப்பமான இடமாக தமிழ்நாட்டினை மாற்றுவதற்கு தற்போது சென்னையில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துகிறது. இதில் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பங்கேற்பது தான் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இன்று பாலஸ்தீனத்தை முற்றிலும் கைப்பற்றுவதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் காஸாவில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட 66,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை ஈவு இரக்கமின்றி இனப்படுகொலை செய்து வருகிறது. குறிப்பாக, கொல்லப்பட்ட அல்லது மோசமாக காயமடைந்த குழந்தைகள் மட்டும் 56,000க்கும் அதிகமானோர். அதிலும் பசியால் உணவுக்காக கையேந்தி நிற்கின்றவர்களை வேடிக்கைக்காக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்கிறது இஸ்ரேல் இராணுவம். காஸாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பது இனப்படுகொலை என்று ஐ.நா. மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படியான இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்களை, இராணுவத் தொழில்நுட்பங்களை வழங்கும் நிறுவனங்கள் தான் தமிழ்நாடு அரசின் சார்பாக தற்போது சென்னையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கின்றன. தங்கள் வணிக நோக்கிற்காக போர்களை ஊக்குவித்து அழிவை உண்டாக்கும், அதிலும் குறிப்பாக இனப்படுகொலை இஸ்ரேல் தொடர்புடைய நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதகுலத்திற்கு எதிரான செயல்களிலேயே ஈடுபடுகின்றன. இனப்படுகொலையை சந்தித்த தமிழர்களின் மண்ணில் இப்படியான இனப்படுகொலைக்கு துணைபோகும் செயல்பாடுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்பதே மே பதினேழு இயக்கத்தின் விருப்பம்.

திமுக அரசு இனப்படுகொலை இஸ்ரேலை இந்த மாநாட்டில் அனுமதித்து இனப்படுகொலையின் இரத்தக் கறைகளை தான் கரங்களில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராக இஸ்ரேலை கண்டித்து அறிக்கை விட்டதும், பாலஸ்தீன இனப்படுகொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன உரையாற்றியதும் அரங்கேறிய அதே வேளையில், இந்த மாநாட்டில் இஸ்ரேலை அனுமதிப்பது திமுக அரசு இரட்டை வேடம் பூணுவது போலாகிவிடும். ஆகையால் திமுக அரசு இஸ்ரேல் தொடர்பான நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதை உடனடியாக தடை செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பது தான் தமிழர்களின் அறம். தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் திமுக அரசு, இனப்படுகொலை இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்பை மறுக்க வேண்டும். இதன்மூலம் தமிழ்நாடு பாலஸ்தீனியர்கள் பக்கம் நிற்பதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்

9884864010

06/10/2025

https://www.facebook.com/share/p/1NdJ8HvYFD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »