திராவிட பெருந்தன்மையும், ஆரிய ஆணவமும் – தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் பாஜக ஆளுநர்
தமிழ்நாட்டின் சிறப்பு எதுவென்று கேட்கும் போது ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்றும், தமிழர்கள் பெருந்தன்மைக்கு பெயர் போனவர்கள் என்றும் எவரும் எளிமையாக கூறி விட முடியும். அத்தகைய பேருள்ளம் கொண்ட, பொதுச் சமூகத்தின் நன்மையை சிந்திக்கும் இயல்பான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் அமைதியையும், நடுநிலைமையையும் சிதைக்கும் செயலை பாரதிய ஜனதாவின் அடியாளாக இருந்து, தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டிருக்கும் ஆர்.என். ரவி பலகாலமாக செய்து வருகிறார். தமிழ்நாட்டில் கல்வி சரியில்லை என்றும், மருத்துவ கட்டமைப்பு இல்லை என்றும், சமூக வளர்ச்சி இல்லை என்றும் அடுக்கடுக்காக பொய்களை சொல்லி வரும் ஆளுநர் ரவியின் தற்போதைய செயல்பாடு கீழ்த்தரமாகவும், சட்டத்துக்கு புறம்பாகவும் அமைந்துள்ளது.
‘தமிழ்நாட்டின் ஒவ்வொரு பள்ளியிலும் அரசு அலுவலகங்களிலும் அரசியல் மேடைகளிலும் பாடப்படும் பாடலாக இருப்பது தமிழ் தாய் வாழ்த்து’. திருமிகு மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் இயற்றிய மனோன்மணியம் என்ற நாடகத்தில் சிறப்புப் பாயிரப்பகுதியாக விளங்கிய பாடல் நமது தமிழ் மொழியை தாயாக உருவகப்படுத்தி வாழ்த்துரை வழங்கும் பாடலாக அமைந்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் பிரச்சார் பாரதி அலுவலகத்தில் தமிழில் ‘பொதிகை‘ என்ற பெயருடன் இருந்து, பிறகு பாசிச பாஜகவால் ‘தூர்தர்ஷன்’ என்று பெயர் மாற்றப்பட்ட தொலைக்காட்சி அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தி மாத விழாவில் ஆளுநர் கலந்து கொள்கிறார். அங்கு பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரியை தவிர்த்துவிட்டு பாடியிருக்கிறார்கள். அரசு தொலைக்காட்சியாக செயல்பட்டு வருகின்ற, அதிலும் தமிழுக்காக செயல்பட்டு வரும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் பாடிய பாடலில் தமிழ்த் தேசத்தின் பெருமையை உயர்த்திச் சொல்லும் ஒரு வரியை மறந்து விட்டு பாடியிருப்பார்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களைத் தொடர்ந்து அவமதித்தும், தமிழ்நாட்டை கலவரக் காடாக மாற்றத் துடிக்கும் பாஜக ஆளுநரின் மேற்பார்வையிலும், உத்தரவின் பேரிலுமே இது நடந்திருக்கக் கூடும் என்கிற ஐயம் ஏற்படுகிறது.
1913 ஆம் ஆண்டு முதலே திருமிகு சுந்தரனார் அவர்களின் மனோன்மணியம் நாடகத்தில் இருக்கும் இந்த பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழ் பேசும் நல்லுலகின் அனைத்து மேடைகளிலும் பாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை தமிழ் பெரியோர்கள் முன் வைத்த வண்ணம் இருந்தனர். ‘1967-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு, அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் அமைந்த போது இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் அண்ணா அவர்கள் மறைந்து போன காரணத்தால் இதே கோரிக்கையை கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக பதவியேற்ற உடன் 1970 ஆம் ஆண்டு இந்தப் பாடலை தமிழ் தாய் வாழ்த்தாக அங்கீகரித்து அரசாணை வெளியிட்டார்‘. அன்று முதல் இன்று வரையும் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் பள்ளி கல்லூரிகளில் காலை வேளையிலும் மற்றும் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் முதல் பாடலாக ஒலித்து வருகிறது.
அரசியல் அமைப்புகளை பொறுத்தவரையில் திராவிட, தமிழ்த் தேசிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் முதல் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அமைந்திருக்கிறது. மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இதை ஒரு மரபாக கடைபிடித்து வருகிறோம்.
திருமிகு சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் நாடகத்தின் அமைந்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்து தமிழின் பெருமை கூறுவது மட்டுமல்லாமல், திராவிடத்தின் வரலாற்றை உறுதி செய்யும் வரியையும், ஆரியத்தின் வீழ்ச்சியை எடுத்துரைக்கும் வரிகளையும் கொண்டிருக்கிறது.
திருமிகு சுந்தரனார் இயற்றிய பாடலின் முழு வடிவம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!இந்தப் பாடலின் இரண்டாம் பகுதியில் இருக்கும்
‘பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்’
என்ற வரிகளை நீக்கிவிட்டு தாய் வாழ்த்து பாடலை கலைஞர் கருணாநிதி அவர்கள் அங்கீகரித்தார். அந்த வரிகளின் விளக்கம் பின்வருமாறு,
“ஆயிரக்கணக்கான உயிர்கள் படைக்கப்பட்ட இவ்வுலகில், கன்னடமும், தெலுங்கு, மலையாளம், துளுவும் உன்னிடம் இருந்துதான் உதித்து வந்த நிலையிலும் அம்மொழிகள் தனித்தனியாக இருந்த போதிலும், ஆரிய மொழிகளைப் போல் எவரும் பேச தடை விதிக்கப்பட்டதால் உலக பேச்சு வழக்கில் இருந்து ஒழிந்து போய் அழிந்து போன மொழியாக இல்லாமல் இன்றும் இளமையோடு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த்தாயே உன்னை வாழ்த்துகிறேன்”
இந்த வரிகளில் ஆரிய மொழிகள் குறித்தான தமிழர் மரபு எதிர்ப்பு கருத்தை திருமிகு சுந்தரனார் குறிப்பிடும்போதும் அன்று அமைந்திருந்த தமிழ்நாடு அரசு மற்றும் அதன் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் ‘வாழ்த்தாக பாடும் பாடலில் எதற்காக பிறர் குறித்த எதிர்மறை கருத்து வர வேண்டும்’ என்ற நல்லெண்ணத்திலும் திராவிட பெருந்தன்மையோடும் அவ்வரிகளை நீக்கிவிட்டு பாடும்படி பணித்தார்.
ஆனால் ஆரியமோ ஒவ்வொரு முறையும் நமது பெருந்தன்மையை பலவீனமாகவே கருதிக் கொண்டிருக்கிறது என்பதை ஆளுநர் ரவியின் இந்த உச்சகட்ட தமிழ் அவமதிப்பு எடுத்துரைக்கிறது. “வேப்பமரத்தின் கசப்பு இனிப்பாவது எப்படி இயல்பானது இல்லையோ, அது போல் தான் பார்ப்பனர்கள் தங்கள் மனநிலையிலிருந்து மாறுவதும்” என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டதை ஆரியம் ஆணவத்துடன் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் நாம் முன்னெடுப்பது பார்ப்பன எதிர்ப்பு தானே தவிர பார்ப்பனர் எதிர்ப்பு அல்ல. உத்தரப்பிரதேசத்திலும், குஜராத்திலும் பாஜக செய்கிற கலவரங்களில் இஸ்லாமியர்கள் தேடித்தேடி சென்று கொலை செய்யப்படுவது போல, மாட்டுக்கறி என்ற பெயரால் அப்பாவி மக்களை அடித்துக் கொல்வது போல தமிழ்நாட்டில் இதுவரையிலும் ஒரு பார்ப்பனர் பாதிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. இன்று நேற்றல்லாமல் ஏறத்தாழ 100 ஆண்டு கால திராவிட போராட்டத்தில் ஓரிடத்தில் கூட ஒரு பார்ப்பனருக்கு உடல் ரீதியாக வன்முறை ஏற்பட்டதில்லை என்பது திராவிட தமிழர்களின் பெருந்தன்மைக்கு சீரிய எடுத்துக்காட்டு.
ஆனாலும் கொலை செய்வதற்கென்றே தனித்தனி இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கும் தீவிரவாத சமூக விரோத அமைப்புகளான ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளை போற்றி பாராட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் ரவி போன்ற சங்கிகள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை, பார்ப்பனர்களை ஒழித்துக் கட்ட நினைக்கும் மாநிலம் என்பது போலவே கட்டமைத்து வருகிறார்கள்.
தற்பொழுது சங்கராச்சாரி என்ற பொறுப்பில் இருக்கும் விஜயேந்திரர் முன்பு ஒருமுறை தான் இருந்த மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்தது தமிழ் அறிஞர்களை சினத்துக்கு உள்ளாக்கியது. தமிழை நீச பாஷை என்றும், சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த கயவர் கூட்டம் தமிழை போற்றிப்பாடும் பொழுதுதான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.
இதே மேடையில் பேசிய பாஜக ஆளுநர் ரவி சமஸ்கிருதத்தை உயர்த்திதான் தன்னுடைய உரையை கொண்டு சென்று இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்தை கற்றுக் கொடுத்து வந்ததாகவும், தற்போது அந்த துறைகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியிருக்கிறார். குறிப்பாக சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத துறையை அழித்துவிட்டார்கள் என்றும் பொய்குற்றம் சாட்டியிருக்கிறார்.
சென்னையை பொருத்தவரையிலும் 1868 ஆம் ஆண்டு முதல் மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத துறை இயங்கி வருகின்றது. இன்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்துறை இருக்கிறது. அத்துறையின் தலைவராக பேராசிரியர் முருகன் என்பவர் இருப்பதை பல்கலைக்கழக இணையதளம் சுட்டிக் காட்டுகிறது.
சமஸ்கிருதம் பேச்சு வழக்கு மொழியாக இல்லாமல் ஆரிய கோயில்களில் வழிபாடு நடத்த மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொழியாக இருப்பதினால் பார்ப்பனர்களும், பார்ப்பன கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்ட நபர்கள் மட்டுமே இத்துறையை நாடி வருவது இயற்கையாக அமைந்து விடுகிறது. எனவே இத்துறைகளில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். இதனை காரணம் காட்டி சமஸ்கிருத துறையை அழிந்துவிட்டது என்று ஆளுநர் ரவி கூறுகிறார் என்றால் அதற்கு தமிழர்கள் காரணம் இல்லை.
பன்னெடுங்காலமாக, குறிப்பாக சமஸ்கிருதத்தில் மட்டுமே வேதங்கள் பாடங்களாக ஓதப்பட்டிருந்த காலத்தில், சூத்திரர்களை படிக்க கூடாது என்று தடுத்து வைத்ததன் மூலமாக ஒரு மொழியை பிறர் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் அழித்துவிட்ட பார்ப்பனர்களை வேண்டுமென்றால் இதற்காக குற்றம் சொல்லலாம்.
ஆளுநர் ரவி உள்ளிட்ட பார்ப்பன அடிவருடிகள் அனைவரும் தமிழ்நாட்டின் சிறப்பு பெருமைகளாக இருப்பவற்றை குறிவைத்து அவமதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களை அவமதித்து பேசிய போதெல்லாம் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவாக தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று பேசத் தொடங்கினர். தற்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தையே அவமதித்துள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் இரண்டக வேலையை காட்டத் தொடக்கி விட்டார். பாஜகவையோ, ஆர்.எஸ்.எஸ்-சையோ விமர்சிக்கும் போதெல்லாம் குறுக்கே புகுந்து குட்டையை குழப்பும் வேலையை செய்வதையே வேலையாகக் கொண்டிருப்பவர். தற்போது ஒன்றிய அரசு நிறுவனங்களில் இந்தி மாதம், இந்தி வாரம் என்றெல்லாம் முன்னெடுப்பதை குறித்து எவ்வித போராட்டமும் செய்யாத சீமான் திமுக எதிர்ப்பு என்ற போர்வையில் ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் இளைஞர்களை திராவிட ஒவ்வாமை பக்கம் திசை திருப்பும் சீமான், “தமிழ்த்தாய் வாழ்த்தில் இரண்டு வரிகளை நீக்கிவிட்டால் என்ன ஆகிவிடும்? நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது” என்று கூறியுள்ளார்.
சீமானுக்கு திராவிடத்தின் மேல் இருக்கும் ஒவ்வாமைக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை பலிகொடுக்கவும் தயங்கமாட்டார் என்பதை அவரை நம்பி ஏமாறும் தமிழ் இளைஞர்கள் உணரவேண்டும். தான் தமிழ்நாட்டின் முதல்வர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பதவி ஆசையில் தமிழர்களின் உரிமைகளை இழக்கத் தயாராக இருக்கும் சீமான் “நான் ஆட்சிக்கு வந்தால் தேசிய கீதத்தில் இருக்கும் ‘திராவிட உத்சல வங்கா’ என்ற வரிக்காக தேசியகீதத்தை மறுப்பேன்” என்று சொல்வாரா? சொல்லமாட்டார். அப்படிச்சொன்னால் இந்திய தேர்தல் ஆணையம் அவரது கட்சியின் அங்கீகாரத்தை கூட நீக்க முடியும். அதிகார ஆசையில் இருக்கும் சீமான் அந்த தவறை செய்யமாட்டாரல்லவா!
சீமானின் ஆசானான மணியரசனும் இது குறித்து பேசமாட்டார். தமிழர்களை ‘தமிழ் இந்து’ என்று திரித்து கூறிய மணியரசன் ஆர்.எஸ்.எஸ் – பாஜக குறித்து இதுவரையில் வீரியமான ஒரு போராட்டத்தைக் கூட செய்ததில்லை. ஒரு செயல்திட்டத்தைக் கூட அறிவித்ததும் இல்லை, செயல்படுத்தியதும் இல்லை.
திராவிட ஒவ்வாமை என்பதை சங்கிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும் ஒருங்கி தூக்கிப் பிடித்து வருகின்றனர். திமுக எதிர்ப்பு பேசுவதும் திராவிட எதிர்ப்பு பேசுவதும் ஒன்றல்ல என்பதை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திராவிடம் வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட கருத்து. ஆரிய எதிர்ப்பை அரசியலாக உருவகப்படுத்திய சொல்லாடல். அதனால்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயரைச் சூட்டும் பொழுது “ஒரு பார்ப்பனன் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஒருபோதும் தயங்க மாட்டான். ஆனால் தன்னை திராவிடன் என்று ஒருபோதும் சொல்லிக் கொள்ள மாட்டான். அவர்களை பிரித்தறிய இதுவே சரியான சொல்” என்று முடிவெடுத்தார்.
திராவிட இயக்கங்களும், தமிழ்த்தேசிய இயக்கங்களும் ஆளுநர் ரவியின் இத்தகைய போக்கை இம்முறை எளிமையாக விட்டு விட்டு செல்லக்கூடாது. தொடர்ச்சியான போராட்டங்களும், கண்டனக் குரல்களும் எழும்ப வேண்டும். தன் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வுக்கு ஆளுநர் ரவியும், ஆளுநர் அலுவலகமும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கும் வரையிலும் நாம் ஓயக்கூடாது. குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக அரசு ஆளுநர் ரவியின் மீது சிறப்பு கண்டன தீர்மானத்தை சட்டசபையில் ஏற்ற வேண்டும். மேலும் நீதிமன்றத்தை நாடி ஆளுநர் அலுவலகம் இதற்கு மன்னிப்பு கேட்கும் படி அழுத்தம் தர வேண்டும்.
எப்பொழுதெல்லாம் அடக்கப்படுகிறோமோ அப்பொழுதெல்லாம் அதனை எதிர்த்து நின்றே பழகிய தமிழர் மரபின் அடிப்படையில், இதன் பிறகு அனைத்து இயக்க மேடைகளிலும் தமிழ்நாடு அரசால் தவிர்க்கப்பட்ட வரிகளையும் சேர்த்து முழு தமிழ்த்தாய் வாழ்த்தையுமே பாட வேண்டும். வரும் சந்ததியினருக்கு செத்துப் போன சமஸ்கிருதத்தையும், அதிலிருந்து உருவான இந்தியையும் விட பன்னெடுங்காலமாய் சீரிளமையோடு திராவிட நல்உலகில் பறந்து வாழும் தமிழே உயர்ந்தது என்பதை உணரச் செய்ய வேண்டும்.
மனோன்மணியம் நாடகமே கள்ளம் கபடமற்ற பாண்டிய மன்னன் சீவகனின் பெருந்தன்மையை பயன்படுத்தி நாட்டை அபகரிக்கப் பார்த்த தலைமை அமைச்சர் குடிலனின் சூழ்ச்சியை வீழ்த்திய கதை தானே. தமிழ்த்தாய் வாழ்த்தை நமக்கு தந்த திருமிகு மனோன்மணியம் சுந்தரனாரின் வழியிலேயே சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி தமிழ்த்தாயை பெருமை கொள்ளச் செய்வோம்.