காலநிலை மாற்றம் சர்வதேச அளவில் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகம் முழுக்க இந்த சிக்கலை எதிர்கொள்ளும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், இந்திய மாநிலங்களில் முன்னோடியாக தமிழ் நாடு அரசும் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழுவை (Tamil Nadu Governing Council on Climate Change), தமிழ் நாட்டின் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உருவாக்கியுள்ளது.
இந்த குழுவில் நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர், இலங்கைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002-ம் ஆண்டு நார்வே நாட்டு தலைமையில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்திற்கு சமாதான தூதுவராக செயல்பட்டவர். இருதரப்புக்கும் இடையே நடுநிலையோடு செயல்பட வேண்டியவர், சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார். இறுதியில் அமைதி ஒப்பந்தம் முறிவதற்கு காரணமாக இருந்ததோடு, அதன் பழியை விடுதலை புலிகள் மீது சுமத்தியவர். மேற்குலக நாடுகளின் புவிசார் நலன் அடிப்படையிலான செயல்திட்டங்களை முன்வைத்து ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட துணைபோனவர்.
இந்த எரிக் சொல்ஹெய்ம், தமிழ் நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படுவதற்கு முன்பாக, இலங்கையின் அதிபரான இரணில் விக்ரமசிங்கேவின் காலநிலை மாற்ற சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது மிகவும் குறி்ப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் தூதுவராக இருந்த ஒருவரை, இத்தனை ஆண்டுகள் கழித்து இலங்கை அரசு காலநிலை ஆலோசகராக நியமிக்கிறது என்றால், அமைதிப் பேச்சுவார்த்தை காலகட்டத்தில் இவர் எந்தளவிற்கு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழீழத் தமிழர்களை கொன்று குவிக்க உதவி இருப்பார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட ஒருவர், தமிழ் நாட்டின் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் நியமித்ததற்கு தமிழீழ ஆதரவாளர்களும், பல்வேறு தமிழின ஆர்வலர்களும் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் எரிக் சொல்ஹெய்மின் பின்னணி குறித்து கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
தமிழீழ விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையில் போர் நடைப்பெற்ற காலத்தில் போர்நிறுத்த அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தவும், அதை நடைமுறைப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் இருதரப்புக்கும் இடையே சமாதான தூதுவராக 1998ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை செயற்பட்டவரே நார்வே நாட்டை சேர்ந்த இந்த எரிக் சொல்ஹெய்ம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி என தமிழீழத்தின் பல முக்கிய பகுதிகளை மீட்டு, இலங்கை இராணுவத்திற்கு பலத்த சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த தருணத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த சர்வதேச அளவில் கடும் அழுத்தம் எழுந்தது. சமாதானத்தை விரும்பிய விடுதலைப் புலிகள் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட 2002-ம் ஆண்டு இலங்கையுடன் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை முன்னின்று நடத்தியது ஐரோப்பிய நாடான நார்வே. அதன் சமாதான தூதுவராக இருந்தவர் தான் எரிக் சொல்ஹெய்ம். அப்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக எரிக் சொல்ஹெய்ம் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அமைதி பேச்சுவார்த்தை குழு வந்து சென்ற பின்னரே விடுதலைப் புலிகள் செயல்படுவதற்கு கெடுபிடிகள் அதிகமானது குறிப்பிடத்தக்கது.
ரத்த சாட்சியங்களை நேரில் பார்த்த பின்னரும் ஏன் பெரிதாக எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று எரிக் சொல்ஹெய்ம் மீதும், அவரது குழுவினர் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டதும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.
விடுதலைப் புலிகள் அமைப்பு கருணா என்ற துரோகியினால் சற்றே பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இயக்கத்திலிருந்து கருணா வெளியேறிய பின்பு அவனை தந்திரமாக பாதுகாத்து, அவனிடமிருந்து இராணுவ உத்திகளையும், தகவல்களையும் திரட்டிக் கொண்டு, கருணாவிற்கு விசுவாசமாக இருந்தவர்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்று திரட்டி தூண்டி விட்டது வரை என புலிகளுக்கு எதிரான அத்தனையும் நடந்தேறியது எரிக் சொல்ஹெய்மின் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளின் போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள அரசு மற்றும் அதன் படைத்தரப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள், மேலும் அவற்றால் இயக்கப்பட்ட துணை ஆயுதப் படைகள் மூலமாக அமைதியைக் குலைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது, அதனை அம்பலப்படுத்தி, தங்கள் பக்கத்து நியாயத்தை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்க தவறி விட்டார் எரிக் சொல்ஹெய்ம் என்ற ஏமாற்றம், விடுதலைப் புலிகளிடம் மட்டுமின்றி, தமிழ் மக்களிடமும் இருந்தது.
அதோடு எரிக் சொல்ஹெய்ம் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை முன்னெடுத்த அந்த காலகட்டத்தில் விடுதலை புலிகளை சுற்றிக் கடுமையான புலனாய்வு வலையமைப்பு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பின்னப்பட்டது. அந்த வலையத்திற்குள் சிக்கிக் கொண்டதால் தான் புலிகள் பின்நாட்களில் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது.
எரிக் சொல்ஹெய்மின் செயற்பாடுகள், சிங்கள அரசு தங்களை பலப்படுத்திக் கொண்டு, புலிகளைப் போரில் தோற்கடிப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்கி கொடுக்கும் வகையிலே அமைந்திருந்தது. அவ்வப்போது சில மேடைகளில் எரிக் சொல்ஹெய்ம் தனது அனுபவங்களைப் பகிர்ந்த போதும், விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.
அவர் ராபர்ட் பிளேக் (US Asst. Secretary of State) உடன் தான் வகித்த பதவியில் தான் நேர்மையாக நடப்பதாக காட்டிக் கொண்டார். ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையை தடுக்க தவறிய மேற்குலக அமைப்புகளின் தோல்விகளைப் பற்றி எதுவும் கூறாமல், ஈழத் தமிழர்கள் “சர்வதேச சமூகத்துடன் தகுந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும்” என்றவர். அந்த தோல்வியுற்ற மேற்குலக அமைப்புகளுக்கு எதிராகவும், தோல்விகளை திசைதிருப்புபவர்களுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தக் குரலையும் எழுப்பாமல், அவர்கள் அடிபணிந்து, எல்லாப் பழிகளையும் தங்கள் மீதே சுமத்தி கொண்டு அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற மறைமுகமான செய்தியையும் வலியுறுத்தியவர் இந்த எரிக்.
அதோடு மட்டுமல்லால் அமெரிக்காவின் புவிசார் அரசியலை ஈழ விவகாரத்தில் திணித்ததன் மூலம், அமைதி ஒப்பந்தம் சீர்குலைவதற்கு காரணமாக இருந்தவர். மேலும், அந்த பழியையும் விடுதலைப் புலிகள் மீது சுமத்தியவர். இதன் காரணமாக ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக காரணமாக அமைந்தவர். தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சாட்சியான இவர், அதனை மறைத்து விடுதலைப் புலிகள் மீது அவதூறுகள் பரப்பி வந்தார். இதற்கு தமிழர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மிக முக்கியமாக, தலைவர் பிரபாகரன் ராஜீவ் கொலையை தாங்கள் செய்யவில்லை அது ஒரு துன்பியல் சம்பவம் என்று குறிப்பிட்டிருந்த போதும், எரிக், “நாங்கள் இலங்கையில் பணிபுரியும் போது பிரபாகரன் தான் ராஜீவ் காந்தியை கொன்றார் என்பது எங்களுக்கு தெரியும். அது எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்ற அனைத்தும் எங்களுக்கு தெரியும். இந்திய காங்கிரஸ் கட்சி இதை சாதாரணமாக எடுத்து கொள்ளாது. அவரது மனைவி இந்திய காங்கிரஸ் கட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி. நான் அவரை சந்தித்துள்ளேன். அவர் ராஜீவ் கொலையை அவ்வளவு எளிதாக எடுத்து கொள்ளவில்லை. அவருக்கு இது ஒரு பெரிய தனிப்பட்ட பிரச்சினை.” என்று நார்வே நாட்டில் அவர் ஆற்றிய உரையில் கூறியிருக்கிறார்.
மேலும் அவர், “இந்தியப் பிரதமர் ஒருவர் வெளிநாட்டு சக்தியால் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதுபோல அமெரிக்காவின் ஜனாதிபதி மெக்சிகோவின் படையால் கொல்லப்பட்டதை சற்று நினைத்துப் பாருங்கள். இதற்காக அமெரிக்கர்கள் நிச்சயமாக ஒரு வலுவான வகையில் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகத்தான எதிர்வினையாற்றி இருப்பார்கள்” என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் இவர் மறைமுகமாக கூறுவது இந்தியாவும் ராஜீவ் கொலைக்கு இலங்கையுடன் இணைந்து தமிழீழத் தமிழர்களை கொன்று குவித்தது சரிதானே என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னியில் நடந்த போருக்குப் பின்னரான தனது நேர்காணல்கள் மற்றும் உரைகளின் போதெல்லாம் எரிக் சொல்ஹெய்ம் தலைவர் பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் பழியை சுமத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்கிரமசிங்க எரிக் சொல்ஹெய்மைக் கொண்டு வந்து, அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளை முன்னெடுத்தாரோ இல்லையோ ஆனால் விடுதலை புலிகளை பலவீனப்படுத்தும் வேலைகளுக்கு அவரை நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்பது ஆணித்தரமான உண்மை.
அதன்பிறகு 2016-ல் ஐ.நாவில் சுற்றுச்சூழல் இயக்கத்தின் (UNEP) இயக்குநராக எரிக் சோல்ஹெய்ம் நியமிக்கப்பட்டார். ஆனால், சுற்றுச்சூழல் பேணல் குறித்து சிறிதும் அக்கறையின்றி விதிமுறைகளை மீறி அதிகளவில் பயணங்கள் மேற்கொண்டு சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முறைகேடாக செலவு செய்தது சர்ச்சையானது. மேலும், ஒரு ஐநா தலைவராக இவர் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒரு நார்வே நிறுவனம் இவரது மனைவியை பதவியில் அமர்த்தியதால் ஐநாவிற்கு நெருக்கடி உண்டானது.
அதோடு காலநிலை மாற்றம் குறித்த அடிப்படை அறிவு துளிகூட இல்லாத இவர் மீது சுற்றுபுறச் சூழலை காப்பதற்கான சில அடிப்படை விதிகளைக் கூட பின்பற்றாமல் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் கிளம்பவே தனது பதவியை விட்டு இரண்டே ஆண்டுகளில் விலகினார். இப்படியான ஒருவரை ஒரே நேரத்தில் இலங்கை அரசும், தமிழ்நாடு அரசும் காலநிலை குறித்த ஆலோசகராக நியமிக்கிறது என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு உள்நோக்கம் இருக்க வேண்டும்.
இவரை ஆலோசகராக நியமித்த இரணில் இந்திய அரசுக்கு நெருக்கமானவர். சீன சார்பு இராஜபக்சேவை அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கடி மூலம் நீக்கிவிட்டு, இரணிலை அதிபராக்கினர். எரிக் சொல்ஹெய்ம் அமைதி ஒப்பந்த தூதராக இருந்த காலகட்டத்தில், ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ய அமெரிக்கா-இந்தியாவிற்கு உதவியவர். அதற்கான நன்றியை தான் தற்போது இலங்கையும் இந்தியாவும் செய்கிறது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலும் இப்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நார்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே, எரிக்கிடம் கோரிக்கை விடுத்தததும், அதற்கு நார்வே உதவிகளை வழங்கும் என எரிக் அவரிடம் உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி எரிக் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். இவ்வாறான பின்னணியில் தான், மீண்டும் ரணில் விக்கிரமசிங், எரிக் சொல்ஹெய்ம்க்கு காலநிலை ஆலோசகராகப் பதவி கொடுத்து இருக்கிறார்.
1,46,679 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் சாட்சியமாக இருந்தும், ஏகாதிபத்தியம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடியாக மாறிப்போன எரிக் சொல்ஹெய்ம் எவ்வகையிலும் சூழலியல் நேசனாகி விட முடியாது. மனித நேயமற்ற ஒருவரிடத்தில் சூழலியல் நேசத்தைக் காணவே முடியாது.
ஈழத்து கடற்கரை செந்நீராய் மாறியதை கண்ட பின்பும் கண்மூடிக் கொண்டவர் தமிழகத்தின் சூழலுக்காய் அக்கரை கொள்வார் என்று எண்ணுவது பேதமை அல்லாமல் வேறில்லை. இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் எரிக் சொல்ஹெய்ம் எனும் மானுடகுல விரோதியை ‘தமிழ்நாட்டின் காலநிலை மாற்றம் ஆலோசனைக் குழுவில்’ இணைத்தது கடும் எதிர்ப்புக்கு உரியது. பொய்களையும், வன்மங்களையும் அரசியலாக்கி அப்பாவி தமிழர்களை கைவிட்டு அவர்களை கொன்று குவிக்க துணை போனவரை எதிர்த்து நிற்க வேண்டியது மானமுள்ள தமிழரின் மறுக்க இயலா கடமையாகும்!.