
பாஜக எனும் இன துரோகியோடு கைகோர்க்கும் எவரையும் தமிழர்கள் நிராகரிப்பார்கள் எனும் செய்தியை ஈரோடு மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் மூத்த பெரியாரிய தோழமைகளுக்கும் மே 17 இயக்கத்தின் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பிப்ரவர் 09, 2025 அன்று பதிவு செய்தது.
அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் இருந்த போதிலும் கட்டுத்தொகையை சீமானால் பெறமுடியாமல் போனதற்கும், குறைவான வாக்குகளை பெறுவதற்கும் காரணியாக களத்தில் இயங்கிய அனைத்து பெரியாரிய தோழர்களுக்கும், பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்களுக்கும் வாழ்த்துகள்.
திமுகவின் எதிர்கட்சியாக, எதிரியாக தன்னை காட்டவிரும்பிய சீமானின் அரசியல் தோல்வியில் முடிந்துள்ளது. எதிர்கட்சியாக இயங்க வேண்டுமெனில் மக்களை அணிதிரட்டுவதும், அரசியல்படுத்தி அரசை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவம் முக்கியமானது. ஊடக சந்திப்பில் மட்டுமே திமுக அரசை விமர்சிப்பதாக நாடகமாடி வந்தவர் சீமான் என்பதை மே17 தொடர்ந்து பதிவு செய்துள்ளது. பல முக்கிய அரசியல் கோரிக்கைகளை சீமான் முன்னெடுக்காமல் வாய்சவடாலோடு நிறுத்திக்கொண்டதே அவரது சமரச அரசியலை அம்பலப்படுத்தியதென்று சொல்லி வந்தது மே17 இயக்கம். ஈரோட்டு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில், எதிர்கட்சி எனும் இடத்தை தன்னால் நிரப்பஇயலாதென தெரிந்ததாலும், பலவேறு சமரசங்களாலும் பாஜக ஆதரவு தளத்தை தமதாக்கிக்கொள்ள பெரியாரை இழிவு செய்ய தொடங்கினார். பாஜக வாக்குகள், இந்துத்துவ மனநிலை கொண்ட சாதிய வாக்குகள் தமது வாக்குவிகிதத்தை அதிகரிக்க உதவும், மேலும் அதிமுகவின் உதிரி வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற அவரது திட்டம் அம்பலமாகியது. இதன் அடிப்படை காரணமாக பெரியாரின் மீதான அவதூறும், பெரியாரிய தோழர்களின் அயராத களப்பணியும் அவரது வீழ்ச்சிக்கு வழிகோலியது. கிட்டதட்ட 22 சுயேட்சை வேட்பாளர்கள் மேடையை பெரியாரிய தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். தனது ஆதரவு சக்திகளின் மூலம் 50,000 வாக்குகளை கடக்கலாம் எனும் சீமானது கனவு தகர்ந்ததற்கு பெரியாரிய எதிர்ப்பு அடித்தளமாகிவிட்டது. கடந்த தேர்தலை விட அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம் என சீமான் தனது தம்பிகளுக்கு ஆறுதல் அளிக்கலாம், அல்லது சுயேட்சைகள் வாக்கு வாங்கவில்லையென எள்ளல் செய்யலாம். சுயேட்சைகள் தமக்கான இலக்கான சீமானை அம்பலப்படுத்தி வெற்றிபெற்றுள்ளனர். அதிக வாக்குகள் பெறக்கூடிய சூழலை தனது சீரழிவு அரசியலால் சீமான் இழந்துள்ளார். கிட்டதட்ட குறைந்தபட்சமாக 20,000-30,000 வாக்குகளை இவ்வகையில் இழந்துள்ளார்.
அதிமுக, தேமுதிக, பாமக, எஸ்.டி.பி.ஐ என திமுக எதிர்ப்பு வாக்குகள் கிட்டதட்ட பல்லாயிரம் வாக்குகள் ஈரோடு தொகுதியில் உள்ளது. இந்த எண்ணிக்கையில் சிறுவிகிதம் மட்டுமே சீமானுக்கு கிடைத்துள்ளதெனில், திமுக எதிர்ப்பாளர்கள், திமுக மீதான அதிருப்தி கொண்டவர்கள், திமுகவின் எதிர்கட்சியாளர்கள் என்போர் உட்பட வெகுமக்கள் எவரிடத்திலும் சீமான் எதிர்கட்சிக்கு தகுதியானவர் என்பது எடுபடவில்லை என்பது உறுதியாகிறது. அதிமுக-பாஜக பிரமுகர்கள் சிலரை தோழர்கள் பிரச்சாரத்தில் சந்தித்த பொழுதில் தெரிவித்த எதிர்பார்ப்பில் பாதியளவு வாக்குகளை கூட அவர் பெறவில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ஊடகவியலாளர்கள் தெரிவித்த இலக்கில் பாதியளவு எட்டாமல் இருந்தார். திமுகவின் மீதான அதிருப்தியை மக்கள் சில இடங்களில் வெளிப்படுத்தினார்கள். சொத்துவரி உயர்வு, மின்சார கட்டணம் போன்றவற்றினால் திமுகவின் மீதான எதிர்ப்பு மனநிலை மக்களிடம் வெளிப்பட்டது. இருந்த போதிலும் இவை ஏன் சீமானுக்கான வாக்குகளாக மாறவில்லை? அவருக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை?
சீமான் மீதான அவநம்பிக்கை, அவரது நிலைப்பாடற்ற அரசியல், அநாகரீகமான அரசியல் பேச்சுகள், அவதூறுகள் மக்களிடம் கசப்புணர்வை உண்டாக்கியிருந்தன. இதில் உச்சபட்சமாக பெரியார் மீதான சீமானின் அவதூறுகள் மக்களை அவருக்கு எதிராக மாற்றியது. பிற கட்சிகளும் போட்டியிட்டிருந்தால் சீமானின் வாக்கு விகிதம் மேலும் பலமடங்கு குறைந்திருக்கும். பெரியாரின் ஆதரவாளர்களாக 22பேர் தேர்தலில் சுயேட்சையாக பரப்புரை மேற்கொண்டவர்கள் மொத்தமாக 6000-7000 வாக்குகளை பெற்றுள்ளனர். எவரும் தமக்கான வாக்கு சேகரிப்பை செய்யவில்லை. சம்பிரதாயமாக சின்னங்களை தெரிவித்து, பெரியார் மீதான சீமானின் அவதூறுகளை அம்பலப்படுத்தியே பரப்புரை மேற்கொண்டார்கள்.
சீமான் நடத்திய பெரியார் எதிர்ப்பு எடுபடவில்லை என்பதை அண்ணாமலையின் பேச்சே உறுதிசெய்துள்ளது. சீமானின் பெரியார் எதிர்ப்பு நாம் தமிழரின் வாக்குவிகிதத்தை சிதைத்துள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டணி தனது எதிர்ப்பு போராட்டத்தை ஈரோட்டிற்கும் கொண்டு சென்றது. சீமானை ஈரோட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும், பெரியாரை இழிவு செய்ததற்கு எதிராக பரப்புரை செய்ய வேண்டுமென களம் இறங்கியது. களத்தில் கடுமையான உழைப்பை தோழர்கள் வெளிப்படுத்தி மக்களிடத்தில் சீமானின் பொய்களை அம்பலப்படுத்தி தோற்கடிக்க காரணமாக அமைந்துள்ளனர். இந்த பரப்புரை சாத்தியமாக காரணாக இருந்த விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் Kudanthai Arasan Vtpk மற்றும் அவரது கட்சி தோழமைகள், இப்பரப்புரையில் தம் தோழர்களை ஈடுபடுத்தி, நேரடியாக பரப்புரையில் ஈடுபட்ட தோழர் கே.எம். சரீப் அவர்கள் ஆகிய இருவருமே இப்பரப்புரையை சாத்தியப்படுத்தியவர்கள்.
மூத்த பெரியாரிய தலைவர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள், தோழர் சுந்தரவள்ளி, தோழர் பாண்டியன் மற்றும் எண்ணற்ற பெரியாரிய தோழமைகள் களத்தில் இயங்கி அம்பலப்படுத்தினர்.
வன்முறைகளை தபெ.திக தோழமைகள் எதிர்கொண்டனர். இந்த பரப்புரை நிகழவில்லையெனில் சீமான் பெரியாரை இழிவு செய்தது பெரும்பகுதி மக்களுக்கு சென்று சேராமலேயே போயிருக்கும். இவ்வகையில் பெரியார் மீதான சீமானின் அவதூறு நாம்தமிழரின் அரசியலுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இது பெரியாரை இழிவு செய்யவேண்டும் எனும் நோக்கமுடைய பிறருக்கும் பாடமாக அமையும்.
பாஜக எனும் இன துரோகியோடு கைகோர்க்கும் எவரையும் தமிழர்கள் நிராகரிப்பார்கள் எனும் செய்தியை மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். ஈரோடு மக்களுக்கு எங்களது மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.